முபிஸால் அபூபக்கர்
சிரேஷ்ட விரிவுரையாளர்
மெய்யியல் துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முஸ்லிம்களுக்கே உரித்தான பல்வேறு இருப்பியல் அடையாளங்கள் சமய மற்றும் சமூக தளங்களில் முக்கியமானவையாக கருதப்பட்டு வந்திருக்கின்றன. அந்த வகையில் “தப்தர் ஜெய்லானி “என அழைக்கப்படும் ஜெய்லானியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பான பதிவே இதுவாகும்.
தப்தர் ஜெய்லானி
இலங்கை முஸ்லிம்களுக்கு பாவா ஆதம் மலைக்குப் பிந்திய மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு இருப்பியல் அடையாளம் இதுவாகும். முகைதீன்அப்துல் காதர் ஜீலானி (கிபி 1078-–1166) அவர்கள் பாவா ஆதம் மலையை தரிசிப்பதற்காக வந்த போது இங்கு விஜயம் செய்ததாகவும் அவர்கள் நீண்ட காலம் தியானத்தில் இருந்ததாகவும் இந்த இடம் அறியப்பட்டு வந்திருக்கிறது. பிரிட்டிஷ் கால பல ஆதாரங்களும் இந்த வரலாறுகளைக் குறிப்பிடுகிறது. அதேபோல் இங்கு நீண்ட காலமாக முஸ்லிம்கள் தமது வரலாற்று தளத்திற்கான சமயசார் புனித பயணங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.
அண்மைக்கால போக்குகள்
குறித்த இந்த இடத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த சிங்கள முஸ்லிம் வரலாற்று ஆதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அண்மைக்காலமாக ஒரு சில தீர்வுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது பௌத்த அடையாளம் உடைய இடமாக இதை மாற்றுவதற்கான நீண்டகால முயற்சியின் விளைவாக கண்டியில் உள்ள நெல்லிகல பன்சலவில் ஜம்மியத்துல் உலமா சபையுடன் ஏற்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சில தீர்வுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டு வருகின்றது.
அதில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மற்றும் சியாரம் என்பவற்றை பாதுகாப்பதுடன் பௌத்த சமய அடையாளமாக ஒரு உயரமான புத்தர் சிலை தாதுகோபுரம் அமைப்பதும் பௌத்தர்களின் சமய கலாசார நிகழ்வுகளை இங்கு தொடர்ச்சியாக இடம் பெறச் செய்வதற்கான ஏற்பாடுகளுக்கும் பௌத்த புனித யாத்திரிகர்கள் தமது விசேட நிகழ்வுகளை இங்கு வந்து கொண்டாடவும் உடன்பாடு பெறப்பட்டதாக அறிய முடிகின்றது. ஆனால் இதனை முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகளாக கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவோ முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமோ எங்கும் பகிரங்கமாக அறிவித்ததாக காண முடியவில்லை.
வெசாக் நிகழ்வுகள்
குறித்த இடத்தில் இம்முறை இடம்பெற்ற வெசாக் நிகழ்வுக்கான கொடிகளையும் ஒரு சிலர் பள்ளிவாசலிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கட்டியதாக கூறப்பட்டு வருகின்றது. ஆனாலும் இது சமய இணக்கப்பாட்டு உறவின் அடையாளமாக இருதரப்பும் இணைந்து செய்திருப்பின் ஏற்றுக்கொள்ள முடியும். மாறாக இது பலவந்தமாக இடம்பெற்றிருந்தால் இது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு விடயம் அல்ல. இது இந் நாட்டின் சமய பாரம்பரியத்துக்கான அச்சுறுத்தலாகவே கருதப்படும். இது எதிர்காலத்தில் இன்னும் தீவிரமடையும் வாய்ப்பும் உள்ளது.
குறித்த நெல்லிகல பன்சலையில் இடம்பெற்ற ஒப்பந்தம் தொடர்பாக ஜம்மியதுல் உலமாவோ ஏனைய அமைப்புகளோ இதுவரை பகிரங்கமாக தெளிவான அறிக்கையை விடுக்காததும் பொது மக்களிடையே இவ்விடயம் பற்றிய தப்பபிப்பிராயமும் அச்சமும் தொடர்ந்து நிலவுவதற்கான காரணங்களில் ஒன்றாகும். அதனை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல் குறித்த வெசாக் சம்பவம் தொடர்பாக இதுவரை எதுவித அறிக்கையும் பொறுப்பு வாய்ந்த அமைப்புக்களால் வெளி வந்ததாகவும் தெரியவில்லை
பின்னணி சம்பவங்கள்
பல்வேறு வகையான இருப்பியல் சான்றுகளாக தொல்லியல் ஆதாரங்களாக இருக்கின்ற தர்காக்கள், பள்ளிவாசல்களையும் சியாரங்களையும் அதனோடு இணைந்த பல விடயங்களையும் முஸ்லிம்கள் இடையே ஏற்பட்ட பல்வேறு இயக்க வாத சிந்தனை அமைப்புகள் புறக்கணித்ததும் அவற்றை தமது கரங்களாலேயே உடைப்பதற்கான பல்வேறு வகையான பிரசாரங்களை கடந்த 30 வருடங்களாக மேற்கொண்டு வந்தார்கள்.
இதன் விளைவுகளால் இவ்வாறான புராதன அடையாளங்களைக் கொண்ட பல இடங்கள் உடைக்கப்பட்டும். புறக்கணிக்கப்பட்டும் வந்ததோடு ஒரு சில பாரம்பரிய ஆர்வலர்களால் மட்டுமே இவை பராமரிக்கப்பட்டு வந்தன.
ஆனால் இன்று இவை முற்றாக எமது கரங்களில் இருந்து நழுவிச் செல்லக் கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் முழு மொத்த சமூகத்தின் வரலாற்று அடையாளமாக பார்க்கப்பட வேண்டிய இவ்வாறான இடங்கள் ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் இடமாகவும். இஸ்லாத்துக்கு எதிரானதாகவும் ஏகத்துவத்திற்கு எதிரானதாகவும் கூறி புறக்கணிக்கப்பட்டு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களில் கூட இவ்வாறான பாரம்பரிய வரலாற்று இடங்கள் உடைக்கப்படும் எரிக்கப்படும் பராமரிப்பு இல்லாமலும் ஆக்கப்பட்டதன் விளைவையே இன்று அனுபவிக்கின்றோம். அதனால் இன்று எமது பாரம்பரியமான இடங்களை முற்றாக விட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இது முழு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இருப்பிற்கும் ஆரோக்கியமான விடயம் அல்ல.
முகையதீன் அடையாளங்கள்
இலங்கையில் முகைதீன் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் வருகை தந்த 800 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றை பறை சாற்றுகின்ற பிரதான இடமாக தப்தர் ஜெய்லானி மற்றும் முஸ்லிம்களிடையே காணப்பட்ட “முகைதீன் பள்ளிவாசல்” பெயர்முறையும் இன்னும் பல இடங்களும் காணப்பட்டுவந்தன. ஆனால் இன்று முஸ்லிம்கள் தம்முடைய பள்ளிவாசல்களை முகைதீன் பள்ளிவாசல் என்ற பெயர்களில் இருந்து மாற்றி வேண்டுமென்றே அவற்றை பல்வேறு நவீன பெயர்களால் அழைக்கின்றனர். அதேபோல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் கூட இவ்வாறான புராதன தொல்லியல் இடங்கள் ஒழுங்காக பராமரிப்பு செய்யப்படுவதில்லை.
வரலாற்று ஆவண சேகரிப்பாளரான நஷீரின் கருத்துப்படி காரைதீவில் அமைந்துள்ள சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான “பக்கீர் சேனை என்ற இடமும் முஹ்யித்தீன் அப்துல்காதர் ஜீலானி அவர்களின் விஜயத்துடன் தொடர்புபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஆனால் குறித்த பக்கீர் சேனை கைவிடப்பட்டு மிக மோசமான நிலையில் உள்ளது. அதுபோல் அதன் அருகில் உள்ள மாவடிப்பள்ளி” செயின் மௌலானா” சியாரமும் வேண்டுமென்று திட்டமிட்டு முஸ்லிம்களால் அழிக்கப்படுகிறது. இவற்றுக்கு பின்னால் உள்ள சக்திகள் எவை?
அந்தவகையில் ஏனைய சமூகத்தை விட முஸ்லிம்களே தமது எஞ்சியிருந்த பல சமூக தொல்லியல் அடையாளங்களைச் சிதைப்பவர்களாகவும் இருக்கின்ற அதேவேளை இந்த தப்தர் ஜெய்லானியும் இன்று எமது கைகளில் இருந்து நழுவிச் செல்வதற்கான காரணங்களில் ஒன்று முஸ்லிம்கள் இடையே காணப்பட்ட சமய இயக்கவாதம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எனவே தான் சமய ரீதியான பிரச்சினைகள் உள்ளக முரண்பாடுகள் காரணமாக எம்மில் ஒரு சிலரால் அழிக்கப்பட்டும் நிறுத்தப்பட்டும் வருகின்ற எமது பாரம்பரிய நிகழ்வுகள், விழாக்கள், பண்பாட்டு அம்சங்கள் எமது நீண்ட கால இருப்பியல் அடையாளத்தை இல்லாமல் செய்கின்ற ஒரு நிலையை ஏற்படுத்தும். ஆகவே சமய உள்ளக வேறுபாடுகள் இயக்கவாத சிந்தனைகளுக்கு அப்பால் எமது வரலாற்றுத் தலங்களை பாதுகாக்காதுவிடின் அது வேறு நபர்களின் கைகளுக்குச் சென்றுவிடும் என்பதற்கான ஒரு சிறந்த சம்பவமே இதுவும் இதனோடு தொடர்புடைய விடயங்களாகவும் கருதப்படுகின்றது
என்ன செய்யலாம்?
முஸ்லிம்களின் இருப்பியலுக்கான நீண்டகாலமாக அடையாளமாக இருக்கின்ற இவ்வாறான பாரம்பரிய இடங்களுக்கு அடிக்கடி செல்வதும் ஏனைய இனங்கள் உடனான இன உறவை பேணுவதும் எமது பண்பாட்டு அம்சங்களை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதும் தமது பாரம்பரிய நடைமுறைகளை இவ்வாறான இடங்களில் தொடர்ச்சியாக செய்து வருவதும்தான் தீர்வாக அமையும். இவ்வாறான இடங்களை முஸ்லிம்களின் பாரம்பரிய இடங்களாக எதிர்காலத்திலும் அடையாளப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக அமையும். இனியாவது இடங்களை இலங்கை முஸ்லிம்களின் பொது அடையாளமாக கருதி எமது பாரம்பரியங்களையும் பண்பாடுகளையும் நிகழ்வுகளையும் தொடர்ந்து செய்வதற்கு முயற்சிப்போம். அதுவே இன்றைய நிலையில் பொருத்தமான தீர்வாகும். மாறாக உள் பிணக்குகள் தொடருமானால் பலவீனமான சமூகமாக இது போன்ற பல இடங்களை இழக்க வேண்டி ஏற்படும்.- Vidivelli