சவூதி: பள்ளிவாசலின் வெளிப்புற ஒலிபெருக்கிகளை அதான், இகாமத்துக்கு மட்டும் பயன்படுத்த தீர்மானம்
(எம்.ஐ.அப்துல் நஸார்)
பள்ளிவாயல்களில் உள்ள வெளிப்புற ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துமாறு சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சர் ஷேக் டாக்டர் அப்துல்லதீப் பின் அப்துல்அஸீஸ் அல்-ஷேக் நாட்டிலுள்ள அனைத்து அமைச்சுக் கிளைகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டதன் மூலம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும், ஒலிபெருக்கிகளின் சத்தம் முழுமையான ஒலியளவின் மூன்றில் ஒரு பகுதியை தாண்டக்கூடாது. இந்த சுற்றறிக்கையை மீறுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்திருந்தார்.
தொழுகை நடத்தும் போது வெளிப்புற ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவது அமைச்சினால் அவதானிக்கப்பட்டதையடுத்து, அமைச்சரால் இச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இது பள்ளிவாயல்களுக்கு அருகிலுள்ள வீடுகளில் உள்ள நோயாளிகள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.
இது தவிர, பள்ளிவாயல்களின் இமாம்களின் ஓதல் மற்றும் பாராயணங்கள் தொந்தரவுக்குட்படுகின்றன. இது பள்ளிவாயல்களில் உள்ள தொழுகையாளிகளுக்கும் பள்ளிவாயல்களின் சுற்றுப்புறங்களில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது,
இந்த சுற்றறிக்கை ஷரியாவிலிருந்து பெறப்பட்ட சான்றுகளின் அடிப்படையிலும் காணப்படுகின்றது, அவற்றில் மிக முக்கியமானது, அனைத்து தொழுகையாளிகளும் சர்வவல்லமையுள்ள அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறார்கள், எனவே அவர்கள் தொழுகையில் ஈடுபடும்போது உரத்த பாராயணங்களால் அவர்கள் தொந்தரவுக்குட்படுத்தப்படக் கூடாது.
‘மற்றவர்களுக்கு நீங்கள் தீங்கு செய்யவோ அல்லது மற்றவர்களால் நீங்கள் தீங்கு செய்யப்படவோ கூடாது’ என்ற நீதித்துறை (பிக்ஹ்) கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக இது காணப்படுகின்றது.
தொழுகையின் போது இமாமின் குரல் பள்ளிவாயலுக்குள் உள்ள அனைவராலும் கேட்கப்பட வேண்டும், ஆனால் இஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம், இமாமின் குரல் வெளியில் உள்ள அயல் வீடுகளுக்கும் கேட்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.
மேலும், புனித குர்ஆனை வெளிப்புற ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி சத்தமாக ஓதும்போது, அந்த வசனங்களை யாரும் கேட்காமலும், சிந்திக்காமலும் இருக்கும்போது அதற்கு அவமரியாதை ஏற்படுத்தப்படுகின்றது.
இந்த சுற்றறிக்கை மறைந்த இஸ்லாமிய அறிஞர் ஷேக் முஹம்மது பின் சலேஹ் அல்-ஒத்தெய்மீன் அவர்கள் வழங்கிய ‘அதான் மற்றும் இகாமத்-உல்-சலாவைத் தவிர வெளிப்புற ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படக்கூடாது என்ற மார்க்கத் தீர்ப்புக்கு (பத்வா) அமைவாகக் காணப்படுகின்றது,
இது தவிர இந்த சுற்றறிக்கை சிரேஷ்ட மார்க்க அறிஞர்கள் சபை உறுப்பினரும் நிரந்தரக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் சலே அல்-பௌஸான் மற்றும் பல அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.- Vidivelli