(எம்.ஐ.அப்துல் நஸார்)
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலுள்ள உள்ளூர் நிருவாகம் நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி நூற்றாண்டுகால பழமையான பள்ளிவாசல் இடிக்கப்பட்டமை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தி நகரில் அமைந்திருந்த 16 ஆம் நூற்றாண்டின் பாபரி மஸ்ஜித்தை கும்பலொன்றினால் 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டதன் பின்னர் பராபங்கி மாவட்டத்தில் உள்ள ராம் சனேஹி காட் நகரில் 112 ஆண்டுகள் பழமையான பள்ளிவாயலொன்று இடிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான மிக மோசமான நடவடிக்கையாகும்.
மே 31 வரை எந்த விதமான இடிப்புச் செயற்பாடுகளும் இடம்பெறக் கூடாது என உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்த போதிலும், உள்ளூர் நிர்வாகம் திங்கட்கிழமையன்று ‘சட்டவிரோத நிர்மாணம்’ எனத் தெரிவித்து புல்டேசரினால் கட்டடத்தினை இடித்துத் தள்ளியது.
‘இது பல தசாப்தங்களாக மக்கள் தொழுகையில் ஈடுபட்டுவந்த ஒரு பள்ளிவாயலாகும், இந்த இடிப்பு நடவடிக்கையை எதிர்த்தால் நிருவாகத்தினால் கைது செய்யப்பட்டு பழிவாங்கப்படுவோம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது’ என பள்ளிவாயலின் குழு உறுப்பினர்களில் ஒருவரான முகமது நாசிம் அரப் நியூஸுக்குத் தெரிவித்தார்.
‘ஒட்டுமொத்த மாநிலமும் உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிரான கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது பள்ளிவாயலை இடிக்க வேண்டிய அவசரம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம், முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுக்கு பெயர் பெற்ற நாட்டின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) அரசியல்வாதியான யோகி ஆதித்யநாத்தால் நிருவகிக்கப்படுகிறது.
எந்தத் தவறும் நிகழவில்லை எனத் தெரிவித்திருக்கும் உள்ளூர் நிருவாகம், இடிக்கப்பட்ட இடத்தில் பள்ளிவாயல் எதுவும் இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
‘பள்ளிவாயல் எதுவும் இடிக்கப்பட்டது தொடர்பில் எனக்குத் தெரியாது’ என பராபங்கி மாவட்ட நீதவான் டாக்டர் ஆதர்ஷ் சிங் அரப் நியுஸிற்குத் தெரிவித்தார். ‘இது ஒரு சட்டவிரோத குடியிருப்புப் பகுதி’ எனவும் அவர் தெரிவித்தார்.
‘பள்ளிவாயல் பல ஆண்டுகளாக உபபிரிவு மாவட்ட நீதவான் இல்லத்திற்கு முன்னால் பல ஆண்டுகளாக இருந்துள்ளது, அதனை மறுக்க முடியாது. அப்பள்ளிவாயல் எப்படி திடீரென சட்டவிரோத கட்டடமாக மாறியது? இது சுன்னி வக்ப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என சுன்னி வக்ப் சபையின் தலைவரான ஸுபர் பாரூக்கி தெரிவித்தார்.
கடந்த மார்ச் 15 ஆம் திகதி மாவட்ட நிர்வாகம் பள்ளிவாயல் நிருவாக சபையிடம் அதன் உரிமையைப் பற்றி தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டது. தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்ததாகவும், பள்ளிவாயல் ‘இடிக்கப்படும் ஆபத்தினை’ எதிர்நோக்கியுள்ளதை உணர்ந்து அதே தினத்தில் உயர் நீதிமன்றத்தை நாடியதாகவும் நிருவாக சபை தெரிவித்தது. மாவட்ட நிர்வாகம் ஆவணங்களை மட்டுமே கோருவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
அடுத்த மாதம், மாநிலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்றுகள் துரிதமாக அதிகரித்ததன் அடிப்படையில், வெளியேற்றப்படுதல், அகற்றப்படுதல் அல்லது இடிக்கும் எந்தவொரு உத்தரவும் மே 31 வரை இடைநிறுத்தப்பட வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி தீர்ப்பளித்தது,
‘தொற்றுநோயை கட்டுப்படுத்தத் தவறியமை பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியினைப் பாதித்துள்ளது, அடுத்த தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்களைத் திசைதிருப்ப அவர்கள் மீண்டும் பிரித்தாளும் அரசியலை நாடுகின்றனர்’ என்று லக்னோ மாநில தலைநகரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான தீபக் கபீர் தெரிவித்தார்.
இந்த இடிப்பு சம்பவம் ‘பள்ளிவாயல் மீதான திட்டமிட்ட தாக்குதல்’, ஏனெனில் அயோத்தி மற்றும் பராபங்கி அண்டை மாவட்டங்களாகும் என லக்னோவை தளமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர் அசாத் ரிஸ்வி தெரிவித்தார்,
‘கொவிட் -19 இன் இரண்டாவது அலைகளை கையாண்ட விதம் தொடர்பில் மத்திய மற்றும் மாநிலத்தில் உள்ள பாஜக அரசு முன்னொருபோதும் இல்லாத வகையில் விமர்சனங்களை எதிர்கொள்கிறது,’ என அவர் குறிப்பிட்டார். ‘இன்னும் ஒன்பது மாதங்களில் மாநிலத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளமையை அவர்கள் அறிந்துள்ளதால், தோல்வியைத் தவிர்ப்பதற்காக மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது’ எனவும் அவர் தெரிவித்தார்.- Vidivelli