Dr. MSM. நுஸைர்
Registrar in Medicine
தேசிய சுவாச நோய் வைத்தியசாலை,
வெலிசரை.
நாட்டில் அமுல்படுத்தப்பட் டுள்ள பயணக்கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் சுவாச நோய் கிளினிக் மக்களால் நிரம்பியிருந்தது. வைத்தியர்களும் இயலுமான பாதுகாப்பு முறைமைகளை கடைப்பிடித்த வண்ணம் நோயாளிக்கு சிகிச்சையளித்து கொண்டிருந்தனர். தேசிய சுவாச வைத்தியசாலை என்பதால் அனைத்து நோயாளிகளும் சுவாசப் பிரச்சினைகளுக்காகவே க்ளினிக்குக்கு வருகை தந்திருந்தனர். சிலர் இருமிக்கொண்டும் இன்னும் சிலர் மூச்சு விடுவதில் சிரமத்தோடும் அமர்ந்திருந்தனர். இவர்களில் யார் கொரோனா நோயாளி என்பதை யூகிப்பது சிரம சாத்தியமான விடயம் என்பதால் சற்று பதற்றத்தோடே வைத்தியர்களும் தாதிமாரும் கடமையாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஓர் இளம் பெண் வைத்தியர் ஒருவர் தனது கணவனை அழைத்துக் கொண்டு விஷேட வைத்திய நிபுணரை சந்திப்பதற்காக வருகை தந்திருந்தார்.
மிகவும் வாட்டசாட்டமான உடல் வாக்கை கொண்டிருந்த அந்த வாலிபர் மூச்சு விடுவதில் சற்று சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.
அருகில் அவரது மனைவி பல வைத்திய அறிக்கைகளோடும் X ray படங்களோடும் பதற்றத்தோடு நின்றுகொண்டிருந்தார்.
Good morning sir, this is my husband என பேசத்தொடங்கிய அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தனது கணவனும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று இரு வாரங்களுக்கு முன்னரே வீடு திரும்பியிருந்தார் எனவும் குறிப்பிட்டார்.
சேர், டிக்கட் வெட்டி வந்ததிலிருந்து அவர் வீட்டையே தான் சேர் இருக்கிறார். வேலைக்கும் போகல்ல, ஆனா வந்ததில இருந்து அவர்ர உடம்பு நால்லால்ல, எப்பயும் டயடாவே இருக்கேண்டு சொல்றாரு. இப்ப நாலஞ்சு நாளா மூச்செடுக்க கஷ்டமா இருக்கு என்டு சொல்றாரு. படுத்தாலும், பாத்ரூமுக்கு போக நடந்தாலும் கஸ்டப்படுராரு. எல்லாத்துக்கும் நான்தான் ஹோஸ்பிடல்ல இருந்து கொரானாவ கொண்டுபோய் அவருக்கு குடுத்துட்டெனாக்கும் எனக் கூறி அழத்தொடங்கிவிட்டார் அந்தப் பெண் வைத்தியர்.
அனைத்து சுகாதார துறை ஊழியர்களும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு பிரச்சினைதான் இது என்பதை புரிந்துகொண்ட விஷேட வைத்திய நிபுணர் அந்த வைத்தியரின் கணவரை பரிசோதித்து விட்டு அவரது ரிபோர்ட் களை பார்வையிட்டார். x ray யில் கொவிட் நியூமோனியாவின் தாக்கம் சுவாசப்பைகளை பதம்பார்த்திருந்தது தெளிவாக இருந்தது.
வைத்திய நிபுணர் அப்பெண் வைத்தியரை அமரச் செய்து மெதுவாக பேச ஆரம்பித்தார். இது கொரோனா வைரசினால் சுவாசப்பையில் ஏற்பட்டுள்ள பாதிப்பாகும். கொவிட் நியூமோனியா ஏற்பட்ட ஒருவருக்கு உடலிலிருந்து வைரசுகள் அழிந்த பின்னரும் வைரசுகளால் உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் சரியாவதற்கு நீண்ட நாட்களாகலாம். சிலருக்கு ஆறு வாரங்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமமிருக்கும். இன்னும் சிலருக்கு Post Covid Lung Fibrosis எனும் சுவாசப்பை கனமடைதல் நோய் நிலை ஏற்பலாம். இது சுவாசப்பைகளில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இதனை இப்போது அறிந்து கொள்ள முடியாது. இன்னும் இரு மாதங்களின் பின் CT Scan பரிசோதனை செய்து பார்ப்போம். இப்போதைக்கு நான் தரும் மருந்துகளை பாவித்து ஓய்வாக இருங்கள் என ஆறுதல் கூறி அவர்களை அனுப்பிவைத்தார்.
கொரோனா வைரசின் தாக்கம் இன்றுவரை பல்லாயிரம் உயிர்களை பலிவாங்கியுள்ளது. தற்போது எமது நாட்டிலும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆரம்பத்தில் பாரிய அறிகுறிகளோ நோய் நிலைமைகளோ ஏற்படாமலேயே குணமடைந்துவிடுவார்கள். ஆனால் சிலருக்கு தொற்றிலிருந்து குணமான பின்னரும் பல்வேறு பிரச்சினைகள் நீண்ட நாட்களுக்கு தொடரும் என அமெரிக்காவின் Mayo Clinic சஞ்சிகை உட்பட பல வைத்திய நிபுணர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். வயோதிபர்களும் தொற்றின் போது அதிக நோய் அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் மட்டுமன்றி இளம்வயதினருக்கும் நீண்டநாள் பாதிப்புகள் ஏற்படலாம் என Mayo Clinic சஞ்சிகை எச்சரிக்கின்றது.
இதை இலகுவாக சொல்வதானால் சில வருடங்களுக்கு முன்னர் பரவிய சிக்கன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதும் மூட்டுவலியால் அவஸ்தைப்படுவதை உதாரணமாக குறிப்பிடலாம்.
பொதுவாக கொரோனா தொற்றுக்கு பின்னர் தொடர்ச்சியான களைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், இருமல், மூட்டு வலி, நெஞ்சுவலி, ஞாபக மறதி, தூக்கமின்மை, மன அழுத்தம் என்பன ஏற்படலாம்.
கொரோனா வைரசின் நீண்ட கால பாதிப்பாக உள் உறுப்புகள் பாதிக்கப்படலாம். இதயத்தசைகள் பாதிக்கப்பட்டு- இதயம் பலவீனமடையலாம், நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம் போன்றவை ஏற்படலாம், இரத்தம் உறைவடைதல் மூலம் சிறுநீரகம், ஈரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படலாம். அவ்வாறே ஏற்கனவே குறிப்பிட்டது போன்று Post Covid Lung fibrosis எனப்படும் சுவாசப்பை கனமடைதல் நோய் ஏற்படலாம். இதன்போது சுவாசப்பை தான் சுருங்கி விரியக்கூடிய மென்மை தன்மையை இழந்து தடிப்படைவதனால் சுவாசம் தடைப்படும். எப்படி தோலில் ஏற்படும் காயங்கள் குணமடையும் போது தழும்புகள் ஏற்படுகிறதோ அவ்வாறே சுவாசப்பையின் காற்றறைகளில் ஏற்படும் தழும்புகளால் (fibrosis) இந்நிலை ஏற்படுகிறது. இவர்களுக்கு தொடர்ச்சியாக வீட்டில் ஒக்சிஜன் பாவிக்க வேண்டியோ அல்லது சுவாசப்பை மாற்று அறுவை சிகிச்சையோ செய்யவேண்டி ஏற்படலாம். (இலங்கையில் செய்யப்படுவதில்லை).
இவ்வாறான பல பிரச்சினைகள் குறைந்த சதவீதமானவர்களுக்கே ஏற்படக்கூடியதாக இருப்பினும் இலட்சக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும்போது ஒரு பாரிய தொகையினர் Post Covid Complications – கொவிட்டிற்கு பின்னரான சிக்கல் நிலைக்கு ஆளாக நேரிடும். இதனை முகம்கொடுக்க வேண்டிய பாரிய சிக்கல் நிலை சுகாதாரத்துறைக்கும் அரசாங்கத்திற்கும் பெரும் தலைவலியாக விரைவில் உருவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாடுகள் இதற்கு முகம் கொடுக்குமுகமாக post Covid Clinic களை ஆரம்பித்து நோயாளிகளை கண்காணித்து சிகிச்சையளிக்க ஆரம்பித்துள்ளனர்.
எமது நாட்டை பொறுத்தவரை தொற்றை கட்டுப்படுத்துவதிலேயே இன்னும் நாம் வெற்றி காணாத ஒரு சூழ்நிலையில் Post Covid Clinic களை பற்றி சிந்திப்பதற்கான சந்தர்ப்பம் தற்போதைக்கு இல்லை என்றே கூற வேண்டும்.
ஆரம்பத்தில் கொரோனா தாக்கம் ஏற்பட்ட போது பல மேலைத்தேய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அறிவியலுக்கு முக்கியத்துவம் அளித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அந்நாடுகள் தடுப்பூசிகளை கண்டறிந்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வைத்திய ஆலோசனைக்கு புறம்பாக மூடநம்பிக்கைகளின் பின்னால் சென்றதன் விளைவை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே எதிர்கால இலங்கை யின் ஆரோக்கியத்தை ஓரளவேனும் பாதுகாப்பதில் ஒவ்வொரு இலங்கை பிரஜையாகிய நீங்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதே தினமும் கொரோனா வைரசோடு போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சுகாதாரத்துறை ஊழியர்களதும் பணிவான வேண்டுகோளாகும்.- Vidivelli