வெறுப்புப் பேச்சின் புதிய ஆயுதம் கொரோனா!

0 993

“கொரோனா நோயாளிகள் உள்ளே வரத் தடை”
“……. கொரோனா உள் நுழைய தடை”
“பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது”
“ அவர்கள்தான் கொரோனாவைப் பரப்புகிறார்கள். அவர்களது கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம்”
“ அவர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் நாம் பெருநாள் கொண்டாடியிருக்கலாம்”
“அப் பெண்ணுக்கு வெளிநாட்டவருடன் தொடர்பாம். அதனால்தான் கொரோனா தொற்றியதாம்.”

இது போன்ற ஏராளமான அறிவித்தல்களையும் சமூக வலைத்தள பதிவுகளையும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நாட்டின் சில பகுதிகளில் காண முடிந்தது.
இலங்கையில் கொவிட் 19 தொற்று காரணமாக உருவான பேலியகொடை கொத்தணியைத் தொடர்ந்து மீண்டும் நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. இதன்போது கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள அக்கரைப்பற்று, கல்முனை, காத்தான்குடி ஆகிய நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந் நகரங்களில் வாழும் மக்களுடன் எந்தவித தொடர்பினையும் பேணக் கூடாது என அருகிலுள்ள பிரதேசங்களைச் சேர்ந்தவர்களால் பல வெறுப்பூட்டும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந் நகரங்களை அருகிலுள்ள கிராமங்களுடன் இணைக்கும் வீதிகள் இரவோடிரவாக இனந்தெரியாதவர்களால் கயிறுகள் கட்டி வேறுபடுத்தப்பட்டதுடன் வெறுப்பூட்டும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட மேற்படி நகரங்களைச் சேர்ந்தவர்கள் தமது பிரதேசங்களுக்கு வியாபார நடவடிக்கைகளுக்கு வரக் கூடாது எனவும் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற வரக் கூடாது எனவும் உரிய தரப்புகளால் அறிவிக்கப்பட்டது. இது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வாழும் மக்களை உள ரீதியாக கடுமையாகப் பாதித்தது. இது பற்றி பலரும் தமது மன உளைச்சல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு சிறுபான்மை சமூகங்களினதும் வதிவிட எல்லைகளைப் பிரிக்கும் வீதி ஒன்றில் “சோனி கொரோனா உள் நுழைய தடை” என ஓர் அறிவித்தல் பதாதை தொங்கவிடப்பட்டிருந்ததுடன் குறித்த வீதியூடான போக்குவரத்தும் மரக்குற்றிகளை வீதிக்குக் குறுக்காக இட்டு தடை செய்யப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் வாழும் ஒரு சமூகத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்தே இவ்வாறானதொரு அறிவித்தல் பதாதை அங்கு தொங்கவிடப்பட்டது. இது அப் பகுதியில் வாழும் இரு சமூகங்களிடையே கசப்புணர்வுகளை ஏற்படுத்த வழிவகுத்தது.

அதேபோன்றுதான் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய ஊர்களைப் பிரிக்கும் வீதியின் எல்லையில் “பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது” எனும் அறிவித்தல் இடப்பட்டதுடன் வீதியும் மறிக்கப்பட்டது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்கள் அட்டாளைச்சேனைக்குள் பிரவேசித்துவிடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறான அறிவித்தல் இடப்பட்டதுடன் வீதியும் மூடப்பட்டது. இது இரு ஊர்களையும் சேர்ந்த மக்களிடையே கசப்புணர்வுகளை தோற்றுவிக்கும் முயற்சி என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து சில தினங்களில் குறித்த அறிவித்தல் அகற்றப்பட்டதுடன் வீதியும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.

இவ்வாறு கொவிட் 19 தொற்றுப்பரவலை அடிப்படையாகக் கொண்டு வெறுப்பை வெளிப்படுத்தும் சம்பவங்கள் உலகெங்கும் ஏராளமாகப் பதிவாகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. “ கொரோனா வைரஸ் வெறுப்பு மற்றும் இனவெறி எனும் சுனாமியைக் கட்டவிழ்த்துள்ளது. இதனை ஒழிக்க நாம் போராட வேண்டும்” என ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டானியோ குட்ரஸ் அண்மையில் அழைப்பு விடுத்துள்ளார்.

“ கொரோனா வைரஸ் பரவலையடுத்து வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பு உலகெங்கும் சமூக வலைத்தளங்களிலும் தெருக்களிலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக யூத எதிர்ப்பு சதிக் கோட்பாடுகள் பரவியுள்ளன. கொவிட் 19 உடன் தொடர்புபடுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளே தமது நாடுகளுக்குள் வைரஸைக் கொண்டுவந்ததாக கூறி இழிவுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு சிகிச்சையும் மறுக்கப்பட்டுள்ளது” என உலகின் பல நாடுகளிலும் இடம்பெறும் கொவிட் பரவலை அடிப்படையாகக் கொண்ட வெறுப்புப் பேச்சு மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளை ஐ.நா. செயலாளர் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்.

இலங்கையிலும் சீனர்கள் மீது வெறுப்புகளை வெளிப்படுத்த கொரோனா வைரஸ் பரவல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. இலங்கையில் முதலாவது கொவிட் வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்டவர் 44 வயதான சீனப் பெண்மணியே. இதனையடுத்து சீனர்களே இலங்கையில் திட்டமிட்டு வைரஸைப் பரப்பியதாக சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் இலங்கையில் வாழும் சீனர்கள் வெளியில் நடமாடுவதற்குக் கூட அச்சமுற்ற நிலை நீடித்தது.

அதேபோன்று “ முஸ்லிம்கள்தான் இலங்கையில் கொரோனாவைப் பரப்புகிறார்கள். அவர்களது வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம்” எனக் கோரும் ஒலிப்பதிவொன்று இலங்கையில் கொவிட் பரவ ஆரம்பித்த நாட்களில் அதிகமாக வட்ஸ்அப் வழியாக பகிரப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்ட பல பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வலம்வந்தன. இந் நிலையில் இவ்வாறான திட்டமிட்ட வெறுப்புப் பிரசாரங்கள் இலங்கையில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை மென்மேலும் அதிகரிப்பதாகவும் இவற்றைத் தடுத்து நிறுத்துமாறும் முஸ்லிம் கவுன்சில் மற்றும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்பன பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தன.

“அரசாங்கம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழு வீச்சில் செயற்பட்டு வருகின்ற நிலையில், நாட்டு மக்கள் மத்தியில் வெறுப்பையும் குரோதத்தையும் விதைக்கும் வகையில் சில சக்திகள் திட்டமிட்டு இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனவா என நீங்கள் தீவிர விசாரணைகளை நடாத்தி சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய வேண்டும்” என்றும் குறித்த அமைப்புகள் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தன.

அதேபோன்றுதான் கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன “ முஸ்லிம்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் சிங்களவர்களும் தமிழர்களும் இம்முறை புத்தாண்டை தடையின்றிக் கொண்டாடியிருப்பார்கள்” என பகிரங்கமாகத் தெரிவித்த கருத்தும் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது. இது முஸ்லிம்கள்தான் இலங்கையில் கொவிட் தொற்று நோய் பரவ காரணமாக இருந்தார்கள் என்ற தவறான அபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க காரணமாக அமைந்தது.
மேலும் மினுவாங்கொட கொத்தணியில் முதலாவது தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பி.ரத்நாயக்க எனும் 39 வயதான பெண் மீதும் பாரிய வெறுப்புப் பேச்சுக்கள் கட்டவிழ்க்கப்பட்டன. இது குறித்து அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் “ எனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியதும் எமது அயலவர்களும் சக பணியாளர்களும் என்னை தீண்டத்தகாதவள் போன்றே நோக்கினார்கள். எங்கள் வீட்டுக்கு அருகே கூடி நின்று தேவையற்ற கதைகளைப் பேசினார்கள். பொலிசார் எனது வீட்டுக்கு வந்து என்னை ஒரு குற்றவாளியைப் போன்றே நடத்தினார்கள். எனது கணவரையும் பிள்ளைகளையும் அச்சுறுத்தினார்கள். நான் எச்.ஐ.வி போன்ற கொடிய நோயைப் பரப்பியது போன்றே என்னிடம் கேள்வி கேட்டார்கள். ஒரு கட்டத்தில் நான் வெளிநாட்டவர் ஒருவருடன் தொடர்பிலிருந்ததாகவும் அதன் மூலமே எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் கதை பரப்பினார்கள். நான் ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எனது சக பணியாளர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு இக் கதை உண்மையா என வினவினார்கள். இது எனக்கு பாரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. கொவிட் தொற்றாளர்கள் மீது நாம் அனுதாபம் காட்ட வேண்டுமே தவிர இவ்வாறு வெறுப்பைத் தோற்றுவிக்கக் கூடாது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது” என குறிப்பிட்டிருந்தார்.

தொற்றாளர்கள் இன ரீதியாக வகைப்படுத்தப்படுகின்றனரா?

பொதுவாக எந்தவொரு நோய்த் தொற்றுக்குள்ளானவர்களும் இன ரீதியான அடிப்படையில் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. மனிதர்கள் என்ற ரீதியிலேயே அனைவருக்கும் நாட்லுள்ள எந்தவொரு வைத்தியசாலையிலும் சமமான சிகிச்சையே வழங்கப்படுகிறது. ஆனால் கொவிட் தொற்றுப் பரவல் காலத்தில் மாத்திரம் தொற்றாளர்கள் ஏன் இன, மத ரீதியாக நோக்கப்படுகின்றார்கள் என்ற கேள்வி எழுவது நியாயமானது. அந்த வகையில் தொற்றாளர்களின் விபரங்கள் இன ரீதியாக சேகரிக்கப்படுகின்றனவா என கேள்வி எழுப்பியதற்கு பொத்துவில் பிரதேச சுகாதார அதிகாரி அலுவலகத்தின் கீழ் பொதுச் சுகாதார பரிசோதகராக பணியாற்றும் ஹனீபா எம். பைறூஸ் பின்வருமாறு பதிலளித்தார்.

“ கொவிட் தொற்றாளர்களைப் பதிவு செய்வதற்கென பிரத்தியேகமான படிவம் ஒன்றை நாம் பயன்படுத்துவதில்லை. ஏற்கனவே தொற்று நோய்கள் தொடர்பில் பதிவு செய்வதற்கான படிவம் ஒன்று உள்ளது. அதில் தொற்றாளரின் பெயர், முகவரியுடன் அவரது இனம் பற்றிய விபரமும் கோரப்பட்டுள்ளது. சிங்களவரா , தமிழரா முஸ்லிமா அல்லது பிறரா என குறித்த விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இருப்பினும் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்களை பூர்த்தி செய்ய இந்த விண்ணப்பத்தை பயன்படுத்துவது கட்டாயப்படுத்தப்படவில்லை” என்றார்.

இது தொடர்பில் காத்தான்குடி பதில் பொது சுகாதார அதிகாரி ஆசாத் ஹசன் குறிப்பிடுகையில், “எமது பிரதேசங்களைப் பொறுத்தவரை மக்கள் இன ரீதியாக தனித்தனியாக பிரிந்தே வாழ்கிறார்கள். அல்லது கலந்துதான் வாழ்ந்தாலும் பெயர் மற்றும் கலாசாரம் காரணமாக அவர்களை இலகுவில் பிரித்தறிய முடியும். எனவே நாம் பிரத்தியேகமாக அவர்களது இன விபரங்களைத் திரட்ட வேண்டிய அவசியம் இல்லை. தொற்றாளர் இனங்காணப்பட்ட பகுதியை அடிப்படையாக வைத்து அவர்களது இனத்தை அடையாளம் காணலாம். எனினும் கொவிட் தொற்றைப் பொறுத்தவரை இனம் ஒரு பொருட்டல்ல. இலங்கை சுகாதாரத்துறையைப் பொறுத்தவரை எந்தவொரு நோயாளரையும் இன ரீதியாகவோ மத ரீதியாகவோ பாகுபடுத்தி மருத்துவம் பார்ப்பதில்லை” என்றார்.

இலங்கையின் சுகாதாரத் துறையிடம் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் இன ரீதியான விபரங்கள் இருக்கின்ற போதிலும் அவற்றை தாம் பகிரங்கப்படுத்துவதில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிடுகிறார். அண்மையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் விபரங்களைத் தருமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் எழுத்துமூல வினாவொன்றினை சமர்ப்பித்திருந்தார்.

அதில் கொவிட் 19 காரணமாக இலங்கையில் இதுவரை உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை யாது? உயிரிழந்தவரின் பெயர், முகவரி, உயிரிழந்த திகதி, உயிரிழக்கும் போது வயது, உயிரிழந்த இடம், உடலை இனங்கண்டுள்ள நெருங்கிய உறவினர், தகனம் செய்யப்பட்ட இடம் மற்றும் திகதி, மரணம் பதிவு செய்யப்பட்ட திகதி, பதிவு இலக்கம் மற்றும் பிரிவு, உயிரிழந்தோரின் மரணச் சான்றிதழ் ஒரு பிரதி வீதம் சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்படுமா? எனும் வினாக்களையே அவர் முன்வைத்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர், 2021.03.19 வரை கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 546 ஆகும். நீங்கள் கேட்ட ஏனைய தகவல்கள் மற்றும் ஆவணங்களில் மரணித்தவர்களின் தனிப்பட்ட தகவல்கள் உள்ளடங்கியுள்ளது. அவை இரகசியத் தகவல்கள் ஆகும். அவற்றை வெளியிட முடியாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆக சுகாதார அமைச்சரினதும் பொது சுகாதார பரிசோதர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆகியோரின் கருத்தின்படி தொற்றாளர்கள் இன ரீதியாக அடையாளப்படுத்தப்படுவதில்லை. அவர்களது அடிப்படை விபரங்களில் இனம் பற்றிய விபரம் சேகரிக்கப்படுகின்ற போதிலும் அவை பகிரங்கப்படுத்தப்படுவதில்லை. அதனை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சைகளில் பாகுபாடுகள் காட்டப்படுவதுமில்லை.

நாளொன்றில் அடையாளப்படுத்தப்படுகின்ற அல்லது குணமடைகின்ற தொற்றாளர்களின் எண்ணிக்கை மாத்திரமே பகிரங்கப்படுத்தப்படுகிறது. அதேபோன்று கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் விபரங்களில் வயது, பால், விதிவிடம் மற்றும் உயிரிழப்புக்கான காரணம் என்பன மாத்திரமே வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் அரசாங்கம் எந்தவொரு இடத்திலும் தொற்றாளர்களின் இன, மத விபரங்களை வெளிப்படுத்துவதில்லை என்பது தெளிவாகிறது. அரசாங்க தகவல் திணைக்களம் தினமும் வெளியிடும் ஊடக அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

எனினும் “தொற்றாளர்கள் வசிக்கும் இடங்களை அடிப்படையாகக் கொண்டும் குறித்த பிரதேசங்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டும் மக்கள் தாமாகவே இனத்தை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்” என வெலிசர தேசிய சுவாச நோய் வைத்தியசாலையில் கடமையாற்றும் டாக்டர் எம்.எஸ்.எம். நுஸைர் குறிப்பிடுகிறார்.
“ இலங்கை மக்கள் மத்தியில் எந்தவொரு விடயத்தையும் இன, மத கண்கொண்டு பார்க்கின்ற போக்கு பல தசாப்தங்களாக நீடிக்கிறது. பரீட்சையில் ஒருவர் வெற்றி பெற்றாலும் சரி, விபத்தில் ஒருவர் மரணமடைந்தாலும் சரி அல்லது கொரோனா தொற்றுக்குள்ளாகினாலும் சரி அவர் சிங்களமா, தமிழா, முஸ்லிமா எனக் கேள்வி கேட்கின்ற மனோநிலை மாறாத வரை இவ்வாறான வெறுப்புப் பேச்சுக்களையும் இனப் பாகுபாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.