மார்க்கம் என்பது நன்மையை நாடுவதாகும்

0 8,010

“நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூ­லி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அவருக்குக் கூறுவோம்.” – அல்குர்ஆன் (18:88)

நபி (ஸல்) அவர்கள் “மார்க்கம் என்பது (பிறருக்கு) நன்மையை நாடுவது” என்று கூறியபோது, “யாருக்கு?” என நாங்கள் கேட்டோம்; அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

ஈமான் கொண்ட மனிதர்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களை சரியாக செய்து பிற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை பரிபூரணமாக நிறைவேற்றுவதன் மூலமே இம்மை மறுமை ஈருலகிலும் வெற்றிபெற முடியும். இந்த இரண்டில் ஏதாவதொன்றில் சிறு குறை ஏற்பட்டாலும் அல்லாஹ்வும் பிற மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் பிற மனிதர்களும் மன்னிக்காத வரை அவர்களால் விமோசனம் பெறமுடியாது.

பிற மனிதர்களின் உரிமைகள், கடமைகள் விடயத்தில் இஸ்லாம் மிகவும் கண்டிப்பாக இருக்கும் அதே வேளை, அந்த விடயத்தில் வலுவான கட்டளைகளையும் மனிதர்களுக்கு விதித்துள்ளது. பிற மனிதர்களை மகிழ்விப்பதையும் அவர்களுக்கு உதவுவதையும் அவர்களுக்கு நன்மையை நாடுவதையும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான அமல்களாகவும் ஆக்கியிருக்கின்றது.

நன்மையை நாடுதல், பிறர் நலம் பேணல், பிறருக்கு உதவுதல் என்பது ஈமானிய உள்ளத்திலிருந்து வெளிப்படும் மிக உயர்ந்த உன்னத பண்புகளாகும். இதற்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தவர் நம் உயிரிலும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்களும் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட நபித்தோழர்களுமாவர்.

பிற மனிதர்களின் நலவுகளில் கவனம் செலுத்துவதை இறை விசுவாசத்தின் வெளிப்பாடகவும் இஸ்லாத்தின் அடிப்படை அம்சமாகவும் ஆக்கி வைத்திருப்பதே இந்த மார்க்கத்தின் சிறப்பம்சமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அல் பஜலி  (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் கொடுப்பது, அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுவது ஆகியவற்றின் மீது சத்தியப் பிரமாணம் செய்துகொண்டேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதர் தனது சகோதரருக்கு உதவி செய்யட்டும்! அவர் அநீதியிழைப்பவராக, அல்லது அநீதியிழைக்கப்படுபவராக இருந்தாலும் சரியே. அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், அவரைத் தடுக்கட்டும். அது அவருக்கு உதவியாகும். அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால் அவருக்கு உதவி செய்யட்டும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

மேலுள்ள மூன்று நபிமொழிகளும் பிறர் விடயத்தில் கவனம் செலுத்தாதவர்களின் ஈமானில் குறையுள்ளது என்பதனையே எமக்கு சுட்டிக்காட்டுகிறது, ஏனெனில், ஈமான் கொண்டவர்கள் பிறருக்கு நலவு நாடுகின்ற, நலவு செய்கின்ற விடயத்தில் எவ்வித குறையும் செய்யமாட்டார்கள்.

ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்(டு அதை எடுத்து அப்புறப்படுத்திவிட்)டார். அ(தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த)து, அவரைத் (தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழவிடாமல்) தாமதப்படுத்திவிட்டது. அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி) அவர்கள், நூல் : புகாரி

நபி (ஸல்) அவர்கள் ”தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்று கூறினார்கள். அப்போது ”(தர்மம் செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ”அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்” என்று சொன்னார்கள். ”அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ”பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்” என்றார்கள். ”(அதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ”அவர் ‘நல்லதை’ அல்லது ‘நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்” என்றார்கள். ”(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?” என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், ”அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூசா அல்அஷ்அரீ (ர­ழி) அவர்கள் நூல் : முஸ்லி­ம்.

பிறர் நலம் பேணுதல், பிறருக்கு உதவுதல், அனைவருக்கும் நன்மையை நாடுதல் போன்ற செயற்பாடுகள் மன்னிப்பையும் சுவனத்தையும் எமக்குப் பெற்றுத்தரும் அமல்கள் என்பதனையும் அவை மிகப்பெரும் தர்மங்கள் என்பதனையும் மேலுள்ள செய்திகள் எமக்கு விளக்குகின்றன. எந்த அமலை அல்லாஹ் பொருந்திக்கொண்டு அதன்மூலம் எம்மை மன்னித்து சுவனம் நுழைவிப்பான் என்பது எமக்குத் தெரியாது. அதனால் சிறிய அமல்களாயினும் மக்களுக்கு அது பயனளிக்குமாயின் அதனை செய்வதற்கு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே நேரம் பிறருக்கு உதவும்போதும் அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதும் எம்மிடம் உள்ளவற்றில் மிக நல்லதைக்கொண்டு அவர்களுக்கு உதவ முயற்சிப்பதே நம்மை அல்லாஹ்வின் பக்கம் நெருங்கவைக்கும் என்பதனை பின்வரும் வசனங்களும் செய்திகளும் எமக்கு உணர்த்துகின்றன.

“நீங்கள் விரும்புவதை செலவிடாதவரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்தவனாகவே இருக்கிறான்.” (3:92)

“தாம் எதைச் செலவிட வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் நன்மைதான் எனக் கூறுவீராக.” (அல்குர்ஆன் 2:215)

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ளமாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!” (அல்குர்ஆன் 2:267)

மேலே கூறிய 2:267 வசனம் அருளப்பட்டது தொடர்பாக நபித்தோழர் பராஃ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்,

பேரீத்த‌ மரத்திலிருந்து பேரீத்த‌ம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்து வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்கவிடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள்.

ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்டமான காய்ந்த பேரீத்த‌ம் குலையைத் தொங்கவிட முற்பட்டார். அது அனுமதிக்கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார். (அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு) அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: இப்னு மாஜா)

ஓர் இறைவிசுவாசி அவன் எந்த சந்தர்ப்பத்திலும் எப்படிப்பட்ட உயர்ந்த பதவியில் இருந்தபோதிலும் குடும்ப உறவினர்கள், அண்டை அயலவர்கள், சக மனிதர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சி செயற்படுவான். அப்படி செயற்படாதவரின் ஈமானின் உண்மை நிலையையும் அவரது இறுதி முடிவையுமே பின்வரும் இரண்டு செய்திகளும் விளக்குகின்றன.

அபூ ஷுரைஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளனல்ல, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல, அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல என்று (மூன்று முறை) இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், “எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்” என்று பதிலளித்தார்கள். இந்த நபி மொழி வேறு பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. (ஆதாரம்: புஹாரி)

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (நபித் தோழர்) மஃகில் இப்னு யஸார் (ரழி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியாளர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் அவர்கள் சென்றார்கள். அவரிடம் மஃகில் (ரழி) அவர்கள், “நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தியொன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் நுகரமாட்டான்’ என்று சொல்லக் கேட்டேன்“ எனக் கூறினார்கள். ஸஹீஹுல் புஹாரி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நேர்மையோடு (நடுநிலையாக) செயற்படுங்கள். நிதானமாக செயற்படுங்கள் (வரம்பு மீறிவிடாதீகள்.) அறிந்துகொள்ளுங்கள்: உங்கள் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையினாலேயே அவரால் சொர்க்கம் நுழையமுடியும்.” அறிவிப்பாளர்: ஆயிஷா (ரழி) அவர்கள்,  நூல்: புகாரி

நாம் இவ்வுலகில் எவ்வளவுதான் நல்லமல்கள் செய்தாலும் அந்த நல்லமல்கள் எம்மை சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையினாலே நாம் சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறோம். எனினும், நல்லமல்களின் மூலமே நாம் அல்லாஹ்வின கருணையைப் பெற்றுக்கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக பிறருக்கு உதவுவதும் அவர்களது நலனுக்காக உழைத்தலும் அவர்களை மகிழ்விப்பதுமே அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்துக்குரிய செயல்களாகும். இவ்வாறான செயற்பாடுகளில் நமது அதிக நேரங்களை செலவிடுவதன் மூலம் நாமும் பிறரது பிரார்த்தனைகளையும் அந்த ரப்புல் ஆலமீனின் கருணையையும் பெற்று ஈருலகிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.