தடுப்பூசி வேலைத்திட்டத்தில் வடக்கு கிழக்கிற்கு பாரிய பாகுபாடு : சுமந்திரன்

0 556

தடுப்பூசிகள் பகிரும் வேலைத்திட்டத்தில் பாகுபாடு காட்டப்படுகின்றது, யாழ்ப்பாணத்திற்கு 50 ஆயிரம் தடுப்பூசி அனுப்பியுள்ள அதே வேளையில் மட்டக்களப்பிற்கு 5 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தடுப்பூசிகளை ஏற்றும் வேலைத்திட்டத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பாகுபாடு காட்டவேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் பரிசோதனைகளை செய்யும் பி.சி.ஆர் இயந்திரங்கள் கூட வவுனியாவிற்கு கொடுப்பதாக கூறியும் இன்னமும் அதனை வழங்கவில்லை. கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் மிகவும் மோசமான நிலையொன்று காணப்படுகின்றது.

அங்கு ஒரேயொரு பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரமே உள்ளது. வடக்கில் இரண்டு இயந்திரங்கள் இருந்தாலும் அதில் ஒன்று இயங்கவில்லை. எனவே வடக்கு கிழக்கிற்கு பாரிய பாகுபாடு காட்டப்படுகின்றது. ஆகவே வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு தேவையான பி.சி.ஆர் இயந்திரங்களை நாமே வாங்கிக்கொள்ள தயராக உள்ளோம். அதற்காக அரசாங்கம் எமக்கு அனுமதியை வழங்க வேண்டும்.

எனவே இந்த விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு உதவத் தயார். விசேடமாக எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சகலரும் அரசாங்கத்துடன், அரச அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட தயார். எமது மக்களின் உயிரை பாதுகாக்க நாம் ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள எமது உறவுகள் அவர்களின் செல்வாக்கினை பயன்படுத்தி இலவசமாக தடுப்பூசிகளை பெற்றுத்தருவதாக கூறுகின்றனர். அவ்வாறு வழங்கும் தடுப்பூசிகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்து பாகுபாடு இன்றி அவசியமான நபர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும்.

சுகாதார அதிகாரிகள் எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய இதனை செய்ய முடியும். அவ்வாறு அல்லாது தடுப்பூசிகளை வாங்குவதற்கு போதுமான பணம் அரசாங்கத்திடம் இல்லையென்றால், தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அளவிற்கான பணத்தை பெற்றுக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.