உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பாரிய சதிகள் நெளபர் மெளலவியே பிரதான சூத்திரதாரி என கூற முடியாது
பதவிக் காலம் முடிந்து செல்லும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கூறுகிறார்
ஏ.ஆர்.ஏ.பரீல்
2019.04.21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பின்னணியில் பாரிய சதித்திட்டமொன்று இடம்பெற்றுள்ளது. சாட்சியங்கள், உளவுத் தகவல்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஏனைய தகவல்கள் என்பன மிகவும் கவனமாக மதிப்பீடு செய்யப்பட்டு இத்தாக்குதலின் தலைமைத்துவம் தொடர்பான தீர்மானத்தினை எட்டவேண்டும் என சட்டமா அதிபர் தப்புல டிலிவேரா தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ‘ அரச உளவுச் சேவையின் தகவல்களின்படி தாக்குதல் இடம் பெற்ற நேரம் தாக்குதலின் இலக்கு, தாக்குதல் நடத்தப்பட்ட முறை மற்றும் மேலும் தகவல்களின்படி பாரிய சதித்திட்டமொன்று இடம்பெற்றதற்கான சாட்சியங்கள் உள்ளன.
இத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள நெளபர் மெளலவி மாத்திரம் பிரதான சூத்திரதாரியல்ல. இன்னும் பலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இந்த சதித்திட்டத்தில் தொடர்புபட்டவர்களின் அடையாளங்கள் கட்டாயமாக சாட்சியங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது இச்சதித்திட்டத்தின் சூழ்நிலை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர 2019 ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலை குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நெளபர் மெளலவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நெளபர் மெளலவி இந்த தாக்குதலுக்கான சதித்திட்டத்தின் ஒரு பிரதான நபராவார். என்றாலும் அவர்தான் பிரதான சூத்திரதாரி என உறுதி செய்ய முடியாது. அவர்தான் பிரதான சூத்திரதாரியாக இருந்திருக்க வேண்டும். இதுபற்றி முழுமையாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அப்போது உண்மை வெளிவரும். தற்போது இந்தத் தாக்குதலைத் திட்டமிடுவதில் பங்குகொண்ட ஒரு குழுவினரைப் பற்றியே புலன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றிய தற்கொலை குண்டுதாரிகள் தற்போது உயிருடனில்லை. ஆனால் தற்கொலை குண்டுதாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் புலனாய்வாளர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இத்தாக்குதலை மேற்கொள்ள சதி செய்தவர்கள் பல்வேறு தரப்பினராவர். சஹ்ரான் ஹாசிம் (தாக்குதலை மேற்கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கியவர்) போன்றவர்கள் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைத்தானே வெடிக்கச் செய்வதற்கு தீர்மானித்துள்ளனர். இந்தப் பாரிய சதித்திட்டம் தொடர்பான புலன் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளதாக எம்மால் கூற முடியாது.
சிலர் தாக்குதலைத் திட்டமிட்டார்கள், சிலர் தற்கொலை குண்டுதாரிகளை வழி நடத்தினார்கள். இந்த இரு தரப்பினரும் இச்சதித்திட்டத்தின் பங்குதாரர்களாவர். எனவே அதற்கான சாட்சியங்கள் மிகவும் கவனமாக நோக்கப்படவேண்டும்.
புலன்விசாரணை அதிகாரிகள் இத்தாக்குதலுடன் தொடர்புபட்ட வெளிநாட்டுத் தொடர்பாளர்களின் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை. என்றாலும் வெளிநாடுகளில் வாழும் மூவர் தொடர்பில் புலன்விசாரணைகள் தொடர்கின்றன. அவர்கள் லுக்மான் தாலிப் , அவரது மகன் (அவுஸ்திரேலியா) மற்றும் அபு ஹின்த் (இந்தியா) என்போராவர்.
புலஸ்தினி ராஜேந்திரன் அல்லது சாரா ஜெஸ்மின் தொடர்பிலும் தப்புல டி லிவேரா கருத்துத் தெரிவித்தார். சாரா சாய்ந்தமருது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினையடுத்து ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பலியானதாகக் கூறப்பட்டாலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.அவர் இந்தியாவுக்கு தப்பிச்சென்று விட்டதாக நாம் நினைக்கிறோம். என்றாலும் அதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. உண்மையில் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
தாக்குதலுக்கு வெளிநாட்டு பங்களிப்பு இருந்ததற்கான சாட்சியங்கள் இல்லை. வெளிநாட்டு தீவிரவாதம், வன்செயல், சமய கொள்கைகள் இவ்விடத்தில் முக்கியமானதாகும். இக்கொள்கைகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பெரும் பாத்திரமேற்றிருக்கலாம். இத்தாக்குதலுக்கு மேலும் பல சம்பவங்கள் தொடர்புடையவைகளாக இருந்துள்ளன.அவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தப்புல டி லிவேரா தெரிவித்தார். இச்சம்பவங்கள்
* 2019.04.16ஆம் திகதி கிழக்குமாகாணம் காத்தான்குடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் வெடிப்புச் சம்பவம்.
* பாரிய சதித்திட்டம்
* சாய்ந்தமருது துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிப்புச் சம்பவம்
* பாதுகாப்பு மற்றும் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை.
* முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள்.
இந்தச் சம்பவங்கள் விசாரணை செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவது அவசியம் என அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வு எதிர்பார்த்ததை விட சிக்கலானதாகும் எனவும் அவர் கூறினார். சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா முன்பு பொது அறிவிப்பொன்றினையும் விருத்திருந்தார். சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்கு என்னால் முடியாமலிருக்கிறது. ஏனென்றால் 2019.04.21 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இன்னும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் பூரணப்படுத்தப்படவில்லை. அதனால் எனது பதவிக் காலத்தில் இதனைச் செய்ய முடியாமலுள்ளது. இந்த அறிவிப்பு சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாரா ஜயரத்னவினால் 2021.05.15 ஆம் திகதி விடுக்கப்பட்டது. ஏப்ரல் தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் மீதான விசாரணைகள் சிஐடியினால் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் நிஸாரா ஜயரத்னவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபரிடம் நிலுவையிலுள்ள விசாரணைகள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ஏற்கனவே கோரியிருந்தார். ஏப்ரல் 21 தாக்குதல் சந்தேக நபர்கள் 42 பேருக்கு எதிராக வழங்கப்பட்ட 130 சாட்சியங்களை பொலிஸ்மாஅதிபர் உறுதி செய்திருந்தார். இவர்களில் 5 சந்தேக நபர்களின் சாட்சியங்கள் பூரணப்படுத்தப்படாதிருந்தமையை அவதானித்த சட்டமா அதிபர் விசாரணை மேலும் நிலுவையில் உள்ளதா என பொலிஸ்மா அதிபரிடம் வினவியிருந்தார். மொஹமட் ஆசிம், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வாகர் யூனுஸ், மொஹமட் பர்ஸான் மற்றும் சாஹூல் ஹமீட் என்போரே குறிப்பிட்ட 5 சந்தேக நபர்களாவர். அத்தோடு மேலும் 29 சந்தேக நபர்களின் மீதான விசாரணைகள் தொடர்பிலும் சட்டமா அதிபர் விளக்கங்களைக் கோரினார்.
விசாரணைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. அதனால் வழக்குகளை முன் நகர்த்த முடியவில்லை என தப்புல டி லிவேரா கடந்த 12 ஆம் திகதி தெரிவித்திருக்கிறார். சில சந்தேக நபர்களின் விசாரணைகள் பூரணப்படுத்தப்படாததால் நீதிமன்று மூலம் நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது எனவும் அவர்கூறியுள்ளார்.
விசாரணைகளின் தாமதம் காரணமாகவே எனது பதவிக்காலத்தில் இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாமலிருக்கிறேன். விசாரணைகள் முற்றுப் பெற்றிருந்தால் எனது பதவிக்காலத்திலே இந்த வழக்குகளை முன்னெடுத்திருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த மாத இறுதியில் தனது பதவிக் காலத்தை முடித்து ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli