நிறைவேற்று அதிகாரம்: சூனியக்காரனின் மந்திரக்கோல்

0 3,069
  • றாஸி முஹம்மத்

உங்கள் வீட்டுக்கு அருகே அழுக்கான, ஆபத்தான, விழுந்தால் புதைந்துவிடக்கூடிய, துர்நாற்றம் வீசக்கூடிய, நோய்களைப் பரப்பும் ஒரு புதைகுழி இருக்கின்றது  என்று வைத்துக் கொள்வோம்.

அதன் தீங்குகளிலிருந்து நீங்கள் எப்படித் தப்புவீர்கள்? நடக்கும்போது அதன் அருகே நடக்காமல் அதை விட்டு விலகி நடப்பீர்கள். விழுந்துவிடாமல் அதைச் சுற்றித் தடைகளை அமைப்பீர்கள், துர்நாற்றம் உங்கள் வீட்டுக்குள் புகாமல் வீட்டு ஜன்னல்களை மூடிவைப்பீர்கள். அதையும் தாண்டி நோய் வந்தால் வைத்தியரை நாடுவீர்கள்.

இவைகள் எல்லாம் தீர்வுகளல்ல, தடுப்புகள். ஒரு தீங்கிலிருந்து மீள்வதற்கான தற்காலிகத் தடுப்புகள். பிரச்சினைகளை மேலோட்டமாக ஆராய்ந்து தற்காலிகத் தடுப்புகளை இடுவதை விட பிரச்சினை எங்கிருந்து உருவாகிறது என்பதைக் கண்டறிந்து பிரச்சினையின் ரிஷி மூலத்தை அகற்றவேண்டும்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியிலிருந்து இந்நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஆட்சிக் கவிழ்ப்பின் ரிஷி மூலத்தைத் தேடிப்பார்க்க  வேண்டும். இவைகள்  ஏன் நடக்கின்றன என்று பார்ப்பதைவிட, இவை எங்கிருந்து  ஆரம்பிக்கின்றன என்பதை நாம் அடையாளம் காணவேண்டும்.

ஒரு மாதத்திற்கு முன்னர் நடந்த அனைத்துப் பிரச்சினைகளின் ஆரம்பகர்த்தா மைத்திரிபால சிறிசேன என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பிரச்சினைகளுக்கு காரணம் மைத்திரிபால சிறிசேன எனும் ஒரு மனிதனல்ல.

பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் மைத்திரிபால என்ற மனிதனின் கையில் இருக்கும் அந்த மந்திரக்கோல். அந்தக் கோல் எவர் கைகளில் எல்லாம் கிடைக்கிறதோ அவர்கள் அனைவரும் இலங்கை அரசியல் வரலாற்று நெடுகிலும் பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தக்கோல் அப்படிப்பட்டது. அதுதான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை.

இதுவரைக்கும் ஆறு பேர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்கள். ஜூனியர் ரிச்சட் ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டிங்கிரி பண்டா விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக் ஷ, மைத்திரிபால சிறிசேன. பிரேமதாசவின் மரணத்தைத் தொடர்ந்து அவரது காலத்தை பூர்த்தி செய்வதற்காக டி.பி விஜேதுங்க சுமார் ஒன்றரை வருடங்கள் மாத்திரம் ஜனாதிபதியாக இருந்தார்.

இவர்கள் அனைவரும் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை அகங்காரத்தோடு பாவித்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால்  இந்த நிறைவேற்று  அதிகாரம் கொண்டமுறை ஜே.ஆர்.     ஜயவர்தனவினால்  உருவாக்கப்பட்டதே.  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் கசந்து  நொந்துபோன மக்கள் 1977ஆம்  ஆண்டைய தேர்தலில் ஐ.தே.கட்சிக்கு  ஜனநாயகத் தேர்தல்களில் யாருக்கும் கிட்டாத அபரிமிதமான வெற்றியைக்  கொடுத்து ஸ்ரீமாவை வஞ்சம் தீர்த்துக் கொண்டார்கள். பாராளுமன்றத்தில்  மிகப்பெரும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்ட ஜே.ஆர். 1978 பெப்ரவரி 4ஆம்  திகதி இலங்கையின் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பை  நிறைவேற்றினார். அந்த அரசியல் யாப்பு இலங்கையின் முழு அரசியல் வரலாற்றையும்  புரட்டிப்போட்டுவிட்டது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைப் பற்றி ஜே.ஆரே ஒரு வசனத்தில் இப்படிக் கூறினார். ’என்னால் ஆணைப் பெண்ணாக மாற்றமுடியாது; பெண்ணை ஆணாக மாற்ற முடியாது. அதைத்தவிர அனைத்தும் முடியும்.’ இன்னொரு வார்த்தையில் சொல்லப்போனால், ‘என்னால் செய்ய முடியாதது எதுவும் இல்லை’.

தனக்கு 5\6 பெரும்பான்மை கிடைத்துவிட்டது என்ற அதிகாரச் செருக்கில் ஜே.ஆர். தொடர்பேயில்லாத யுபெடழ ளுயஒழn பாராளுமன்ற முறையையும் யுஅநசiஉயn Pசநளனைநவெயைடளைஅ த்தையும் இணைத்ததே நிறைவேற்று அதிகார முறை. பிரித்தானியாவைச் சேர்ந்த பாராளுமன்ற முறையின் சில பண்புகளையும் அமெரிக்க ஜனாதிபதி முறையின்  பண்புகளையும் சேர்த்து உலகில் மிகப்பெரும் அதிகாரம் பொருந்திய பதவியாக  இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுறையை உருவாக்கினார் ஜே.ஆர்.

ஓர் அரசின் மூன்று பிரதான நிறுவனங்களான சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பன சீராக இயங்க வேண்டுமாக இருந்தால் அவை மூன்றும் பிரிந்து  வெவ்வேறாக காணப்பட வேண்டும். அதேநேரம் ஒரு நிறுவனம் இன்னொரு  நிறுவனத்தை ஆக்கிரமிக்காதவாறு ஒன்றுக்கொன்றைக் கட்டுப்படுத்த தடைகளும் சமனிலைகளும் பேணப்பட வேண்டும். இதுதான் அரசறியிவியலில் அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டின் சுருக்கம். ஆனால் இலங்கையில் இருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஏனைய நிறுவனங்களான சட்டத்துறையையும், நீதித்துறையையும் தனது காலுக்குக் கீழே கொத்தடிமைகளாக வைத்திருக்க வல்லது.

1978ஆம் ஆண்டைய அரசியல் யாப்பின் பிரகாரம் இலங்கையின் ஜனாதிபதி சட்டத்துறையைக் கூட்டலாம், கலைக்கலாம், பிற்போடலாம். அடுத்தது உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிப்பதும் அவரே. நாட்டிலுள்ள அத்தனை நிர்வாக அமைப்பினதும் தலைவர்களை நியமிப்பதும் ஜனாதிபதியே. ஒரு ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அவரை பதவி விலக்குவதற்குப் பதிலாக ஒரு முடவன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இலகுவானது. இந்த நாட்டின் அனைத்துக் கடிவாளத்தையும் ஒரு தனிமனிதனின் கைகளில்  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை கொடுத்து விடுகிறது.

இந்தப் பதவியிலிருந்த அனைத்து ஜனாதிபதிகளும் எல்லை மீறியே நடந்து கொண்டார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு முற்றிலும் முரணாக, நடப்பிலிருந்த பாராளுமன்றத்தை ஆறு வருடங்கள் முடிந்தவுடன் பொதுத் தேர்தலை நடத்தாமல் இன்னொரு 6 வருடங்களுக்கு நீட்டுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார் ஜே.ஆர். பாரியளவில் மோசடிகள் நடைபெற்ற தேர்தலாக அது சொல்லப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீமா மீண்டும் தேர்தல் கேட்டால் தான் தோற்றுவிடுவேன் என்பதற்காக ஸ்ரீமாவின் குடியுரிமையைப்  பறித்தார் ஜே.ஆர். தனக்கெதிராகப் பேசிய அரசியல்வாதிகளை நக்சலைட்டுகள் என்று குற்றம் சுமத்தி சிறையில் அடைத்தார். அவர்களுள் சந்திரிகாவின் கணவர் குமாரதுங்கவும் ஒருவர்.

சரி, ஜே.ஆர்தான் அப்படி என்றால் பிரேமதாச என்ன செய்தார்?1991 ஆகஸ்ட்டில் அன்றைய சபாநாயகராக இருந்த எம்.எச். முஹம்மதால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தனக்கெதிராகக் கொண்டுவரப்படப் போகிறது என்பதை அறிந்த பிரேமதாச முதலில் செய்த வேலை பாராளுமன்றத்தை செப்டம்பர் 24ஆம் திகதி வரைக்கும் ஒத்தி வைத்ததுதான்.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்த காலத்தில் பல விடயங்கள் நடந்தேறின.  கையெழுத்திட்ட பாராளுமன்ற  உறுப்பினர்கள் சிலர் தாம்  வேறு ஒரு மசோதா  என்று  நினைத்து கையெழுத்திட்டதாகவும்  நம்பிகையில்லாப் பிரேரணையில் தாம் கையெழுத்திட்டது தெரியாது எனவும் கூறினர். இன்னொரு உறுப்பினர் தான் தூக்கக் கலக்கத்தில் கையெழுத்திட்டதாக கூறினார். இன்னும் சிலர் அது தமது கையெழுத்தில்லை என்று சபாநாயகருக்குக்  கடிதம் அனுப்பினர். பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட காலத்திற்குள் நடக்கவேண்டிய அனைத்தும் நடந்துவிட்டன.

செப்டெம்பர் 25ஆம் திகதி எம்.எச். முஹம்மதால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையிலுள்ள  கையெழுத்துகளின் உண்மைத்தன்மையில் சந்தேகமிருப்பதாக தான் அறிந்து கொண்டதாகவும்  அவற்றைப் பரிசீலிக்கப் போவதாகவும் கூறினார். 1991ஒக்டோபர் 8ஆம் திகதி  பாராளுமன்றம்  கூடியபோது ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு போதிய  கையெழுத்துக்கள் இல்லாமையால் அதனைக் கைவிடுவதாக  சபாநாயகர் தெரிவித்தார். நிறைவேற்று அதிகார முறையின் சக்தி இதுதான்.

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது என்ன நடந்தது? அவராவது தனது அதிகாரத்தை மக்கள் ஆணைக்கு ஆதரவாகப் பயன்படுத்தினாரா? ல்லை.

2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில்  ஆட்சியமைத்த  பொதுஜன முன்னணியிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகியதையடுத்து சந்திரிகாவின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததது. சந்திரிகா ஜே.வி.பியினரின் உதவியை நாடினார். அதனால் அதிருப்தியுற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவினார்கள். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியினை சந்திரிகா தெரிந்துகொண்டார். ஒரே ஒரு வருடம்  பூர்த்தியான நிலையிலிருந்த பாராளுமன்றத்தை தனது நிறைவேற்று  அதிகாரத்தைப் பாவித்துக் கலைத்துவிட்டு மீண்டும் பொதுத் தேர்தலுக்கு  அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து 2001இல் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டது. அத்தேர்தலில் ஐ.தே.முன்னணி பெரும்பான்மை பெற்றது. ஜனாதிபதி ஒரு கட்சியும் பிரதமர் இன்னுமொரு கட்சியும் என்ற நிலைப்பாட்டில் நாடு போய்க்கொண்டிருந்தது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு இடையில் சரியாக ஒத்துப்போகவில்லை. ஜனாதிபதி மீண்டும் பாராளுமன்றத்தைக் கலைத்தார். 2004இல் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடந்தது. 3வருடங்களில் மூன்று பொதுத் தேர்தலை கண்ட ஒரே நாடு இலங்கையாகத்தான் இருக்கும்.

சரி, மஹிந்த என்ன செய்தார்? மஹிந்த என்ன செய்தார் என்று கேட்பதைவிட தனது நிறைவேற்று அதிகாரத்தை வைத்து அவர்  என்ன செய்யவில்லை  என்றுதான்  கேட்கவேண்டும்.  சூனியக் கிழவியின்  கையில் கிடைத்த  மந்திரக்கோல் போலானது மஹிந்தவின் கையில்  கிடைத்த நிறைவேற்று  அதிகாரம். யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில்  யுத்தத்தின்  வடுக்களைக்  களைந்து  நாட்டை கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மஹிந்த  தனது குடும்பம் ராஜ்யத்தை உருவாக்க ஆரம்பித்தார். நிறைவேற்று அதிகாரம்  அவரின் அனைத்தும் குற்றங்களையும் தண்டனைகளிலிருந்து தடுத்துவிட்டது.

நிறைவேற்று அதிகாரம் நாட்டை படுகுழியில் தள்ளுகிறது. இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது அறவே பொருத்தமில்லாதது என்ற உண்மையைப் பலர் உணர ஆரம்பித்தார்கள். நிறைவேற்று அதிகார முறையை இல்லாமல் ஆக்குவது என்ற கருப்பொருளோடு 2015 இல் தேர்தலில் வென்றார் மைத்திரிபால சிறிசேன.

தேர்தலை வென்றதும் ஐக்கிய தேசிய முன்னணி 19ஆவது சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தது. 19ஆவது சீர்திருத்தம் இலங்கைக்குக் கிடைத்த வரப்பிரசாதமென்பேன் நான். தறிகெட்டு ஓடும் ஜனாதிபதிகளின் மூக்கினுள் செருகப்பட்ட  மூக்கணாங் கயிறுதான் 19ஆவது சீர்திருத்தம். அரசியலமைப்பு சபையை உருவாக்கியிருக்கிறது 19ஆவது சீர்திருத்தம். நாட்டின் மிக முக்கியமான பதவிகளுக்கு தனது அடிவருடிகளையும் விசுவாசிகளையும் தனித்து ஜனாதிபதியால்  நியமிக்க முடியாது. அரசியலமைப்பு  சபையின் அனுமதியுடனே நியமிக்க முடியும். இதுவரைக்கும் தனது அடிமைகளை மாத்திரமே உச்ச நீதிமன்றத்திற்கு நியமித்த ஜனாதிபதிகள், அவர்களின் செயற்பாடுகள் நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தப்படும்போது ஜனாதிபதிக்கு சார்பாகவே தீர்ப்பு வந்தன. இன்றைய சூழ்நிலையில் 19ஆவது சீர்திருத்தம் இல்லாமலிருந்திருந்தால் நீதிமன்றத் தீர்ப்புகள் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தீர்ப்பில் 19ஆவது சீர்திருத்தம்  வருவதற்கு முன்னர் மஹிந்தவினால் நியமித்த நீதிபதிகள் நியாயமாக நடந்து கொள்வார்களா என்ற பயம் எல்லோருக்கும் இருக்கிறது.

நல்லவர், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யாதவர் என்றெல்லாம் அறியப்பட்டவர் சிறிசேன. பத்தொன்பதாவது சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தவரே மைத்திரிதான். பிரதமரை ஜனாதிபதி விலக்கும் அதிகாரத்தை, நாலரை  வருடங்கள்  பூர்த்தியாகாமல் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கும்  அதிகாரத்தை, சுயமாக நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை எல்லாம் 19ஆவது சீர்திருத்தம்  இல்லாமலாக்கியிருக்கிறது என்று சிறிசேன நன்கறிவார். அப்படியிருந்தும் நிறைவேற்று அதிகார ஆசை அவரையும் விட்டுவிடவில்லை.

தான் இரண்டாவது முறை ஜனாதிபதி தேர்தல் கேட்கமாட்டேன் என்றார் சிறிசேன. நிறைவேற்று அதிகாரக் கதிரை அதில் உட்கார்ந்த யாரைத்தான் விட்டுவைத்தது. இன்னொரு முறை அதிகாரத்தைச் சுவைக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக தனது பரம எதிரியான  மஹிந்தவைப்  பிரதமராக்கினார். ரணிலை பிரதமர் பதவியிலிருந்து விலக்க முடியாது என்று தெரிந்தும்  மைத்திரிபால ரணிலை விலக்கினார். பெரும்பான்மை காட்ட வேண்டும்  என்பதற்காக மஹிந்த தரப்பினருக்கு கால அவகாசம் கொடுத்து  எப்படி தனது முன்னோடிகள் செய்தார்களோ அவர்களின் அதே வழியில்  மைத்திரியும்  செயற்பட்டு பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். நினைத்தவை நடக்காதபோது கலைத்துவிட்டார். இவைகளை  செய்யும் அதிகாரம் தனக்கு  19ஆவது சீர்திருத்தத்தின் பின்னர்  இல்லையென்று தெரிந்தும்கூட அந்தப் பதவி ஆசை அரசியல் யாப்பையே மீறுமளவிற்கு அவரை இட்டுச் சென்றுவிட்டது.

இதுவரைக்கும் ஆட்சியிலிருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் எவரும் யாப்பினை மீறிச் செயற்படவில்லை. அரசியல் யாப்பு தங்களுக்கு வாரி வழங்கியிருந்த நிறைவேற்று அதிகாரங்களை தங்கள் அரசியல் சுயநல நன்மைகளுக்காகப் பயன்படுத்தினார்கள். ஆனால்,  முன்னைய ஜனாதிபதிகளுக்கு இருந்த அதிகாரங்கள் கூட பத்தென்பதாம் சீர்திருத்தத்தின் பின்னர் சிறிசேனவிற்கு இல்லை. அதனை இல்லாமலாக்கியவரும் அவரே. அப்படியிருந்தும்கூட யாப்பை வெளிப்படையாக மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் சிறிசேன.

தனக்கு யாப்பில் கொடுக்கப்படாத அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரதமராக இருந்த ரணிலை பதவி விலக்கிவிட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒருவரைப் பிரதமராக்கினார். யாப்பில் தனக்கில்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைத்தார். 4 முறை பாராளுமன்றம் மஹிந்தவிற்கு பெரும்பான்மை இல்லை என்று அடித்துக் கூறியது. சட்டப்படி சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்தும் அதனை ஏற்க மறுத்தார் மைத்திரி. உச்ச நீதிமன்றமும் மேன் முறையீட்டு நீதிமன்றமும் மஹிந்தவினதும் மைத்திரியினதும் முகங்களில் எட்டி உதைத்தன. பாராளுமன்றம் அமைச்சுக்களுக்கான நிதியை முடக்கியது. ஒரு மாதத்தைத் தாண்டிச்செல்கிறது. நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் செல்கிறது. என்றாலும் பாராளுமன்றத்தின் 225 பேரும் ரணிலைப் பிரதமராகப் பிரேரித்தாலும் நியமிக்கமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் மைத்திரி. அரசியல் யாப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பவரை பிரதமராக ஜனாதிபதி நியமித்தேயாக வேண்டும். அவர் தனக்குப் பிடித்தவரா இல்லையா என்பதல்ல.ச ந்திரிகாவின் ஆட்சியில் பிரதமாராக நியமிப்பதற்கு சந்திரிக்கா விரும்பியது கதிர்காமரை. ஆனால் பெரும்பான்மை இருந்தது மஹிந்தவிற்கு. இறுதியில் மஹிந்தவே பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இவை அத்தனைக்கும் காரணமாக இருக்கும் ஜனாதிபதியை சட்டத்திற்கு முன் கொண்டுவர முடியாது. சரி, இவரை விலக்கிவிடலாம் என்றால் அது மிக மிகக் கடினமானது. இலங்கை வரலாற்றில் ஜனாதிபதிகளுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் புஸ்வாணமாகிப் போயிருக்கின்றன.

நிறைவேற்று அதிகார  ஜனாதிபதி முறை இலங்கைக்கு ஒரு சாபக்கேடு.  ‘இந்தப் பதவிக்கு ஒரு பைத்தியக்காரன் எதிர்காலத்தில் வந்துவிட்டால் நாடே சீரழிந்துவிடும்’ என்று கலாநிதி என்.எம் பெரேரா அன்று சொன்னது எவ்வளவு சரியானது எனபதை நாம் இன்று உணர்கிறோம்.

இன்னும் சிலர் சொல்கிறார்கள் நிறைவேற்று அதிகார முறை சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு என்று. மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் தொடரும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளிலிருந்து நிறைவேற்று அதிகார முறை சிறுபான்மை மக்களை எப்படிப் பாதுகாத்தது என்று அவர்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் சொல்லப்போனால் இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகவே, அதிகாரம் ஓரிடத்தில் அபரிமிதமாகக் குவிக்கப்பட்டிருப்பது ஆபத்தானது. அது ஒரு கூட்டத்தினரிடமிருந்தாலும் சற்றுப் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் நாட்டின் அத்தனை அதிகாரங்களும் ஒரு தனிமனிதனிடம் குவிக்கப்பட்டிருப்பது நாட்டை சீரழித்துவிடும் என்ற உண்மையையாவது நாம் இந்த ஒரு மாத காலத்திற்குள் புரிந்திருப்போம்.

எதிர்வரும் பாராளுமன்றங்கள் இந்த நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபடுவதே அனைத்திற்கும் மேலால் அவர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.