நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலான நிலைமை, ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு தீர்வுகண்டு நாட்டில் ஜனநாயகத்தையும், அமைதியையும் நிலைநாட்டும் நோக்கில் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான சிறப்புப் பூஜை நேற்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
மேற்படி சிறப்புப் பூஜை நிகழ்வானது விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள விகாரையில் ஆரம்பமாகியதுடன், தேரர்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து மகாசங்க தேரர்களின் பங்குபற்றுதலுடன் விசேட பூஜை ஆரம்பமாகியது.
இந்நிகழ்வு தொடர்பில் பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த ஏற்பாட்டுக் குழுவினர் குறிப்பிடுகையில், தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள சவால் நிலையிலிருந்து நாட்டை மீட்கும் நோக்கிலேயே இதனை ஏற்பாடு செய்திருக்கின்றோம். மூன்று தசாப்தகால யுத்தம் நிறைவடைந்து, நாட்டில் அரசியல் ஒழுக்கம் இல்லாது போயுள்ளது. பௌத்த தேரர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறாத அரசியல்வாதிகளே அரசியல் ஒழுக்கமின்றி செயற்படுகின்றனர்.
மேலும் தற்போது நாட்டில் பெரும்பான்மை மக்களின் தேவையாக உள்ளது தமது ஜனநாயக உரிமை மூலம் உகந்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதேயாகும். இத்தகைய நிலையில் ஜனநாயகக் கோட்பாடுகளை மாத்திரம் முதன்மைப்படுத்துவதுடன், ஏனைய பொருத்தமற்ற விடயங்களைப் புறந்தள்ள வேண்டும். இவற்றை மேம்படுத்தும் வகையிலும், நாட்டைப் பாதுகாப்பதற்குமே விசேட பூஜை நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.