நோன்பு நோற்ற நிலையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்த இந்துக்களின் இறுதிச் சடங்கை நிறைவேற்றும் முஸ்லிம்கள்
புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் குழுவொன்று கொவிட்- 19 தொற்றினால் உயிரிழந்த இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் இறுதி சடங்குகளை நிறைவேற்றி வருவதாக டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
33 வயதுடைய இம்தாத் இமாமும் அவரது 22 பேர் கொண்ட குழுவினரும் இதுவரை ஏழு இந்துக்களின் சடலங்களை தகனம் செய்துள்ளதோடு 30 ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கும் உதவியுள்ளனர்.
இக் குழுவிலுள்ளவர்கள் 30–-35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதோடு மெஹ்தி ராஸா, காசிம் அப்பாஸ், ஆஷிர் ஆக்ஹா, அஹ்ஸன் நசீர் மற்றும் மெராஜ் ஹுசைன் ஆகியோர் மிகவும் துடிப்புமிக்கவர்களாகக் காணப்படுகின்றனர்.
கவச ஆடையினை அணிவதால் ஏற்படும் அசௌகரியத்தை சகித்துக்கொண்டு, தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருந்தபோதிலும் அவர்கள் தன்னலமற்ற சேவையைச் செய்து வருகின்றனர்.
ரமழான் காலத்தில் இந்த பணி கடினமாக இல்லையா என வினவியபோது அதற்கு பதிலளித்த இம்தாத் இமாம் ‘சில நேரங்களில், கவச ஆடையில் காற்றோட்டம் இல்லாததால் அது கடினமாக இருப்பதோடு மூச்சுத் திணறலும் ஏற்படத் தொடங்குகிறது. எங்களுள் ஒருவர் இன்று சரிந்து விழுந்தார்; எனினும் பின்னர் எழுந்து தனது பணியினைத் தொடர்ந்தார்’ எனத் தெரிவித்தார்.
‘பெரும்பாலானவர்களுக்கு குடும்பம் இல்லை, அல்லது அவர்களது உறவினர்கள் ஊரில் இல்லை. சில சந்தர்ப்பங்களில், குடும்ப உறுப்பினர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தனர், ஒரு சந்தர்ப்பத்தில் அண்டை வீட்டாரால் ஒரு உடல் பற்றி எங்களுக்கு அறிவிக்கப்பட்டது’ என கடந்த வருடம் தனது கொவிட் -19 தட்பீன் (அடக்கம்) குழுவுடன் கண்ணியமான இறுதிச் சடங்குகளை உறுதிப்படுத்த ஆரம்பித்த இமாம் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 21 அன்று, தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் கொவிட்- 19 தொற்று காரணமாக இறந்துவிட்டதாகவும், உடல் மூன்று நாட்கள் கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும் வந்தது. பாரத் நகரின் சீதாபூர் வீதியில் இருந்து அவர்களுக்கு அழைப்பொன்று வந்தது.
மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தவர்கள் கடந்த மூன்று நாட்களாக அப் பெண்மணியைக் காணவில்லை என்றும் எந்த வித சத்தமும் வரவில்லை என்றும் துர்வாடை வீச ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
‘குடும்ப உறுப்பினர்கள் எவரும் இல்லை. எனவே, அயலவர் ஒருவரின் உதவியுடன், உடலை ஒரு பிரேதப் பையில் பொதி செய்து பைக்கூந்த் தாமிற்கு எடுத்துச் சென்று லக்னோ மாநகர சபை ஊழியர்களிடம் தகனத்திற்காக ஒப்படைத்தோம்’ என இமாம் மேலும் தெரிவித்தார்.- Vidivelli