தடுப்பூசியே தீர்வு!

0 1,119

கொவிட் 19 தொற்றின் மூன்றாவது அலை இலங்கையில் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. அதற்கமைவாக நாடளாவிய ரீதியில் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த மூன்று தினங்களாக ஊரடங்குக்குச் சமனான முடக்கமும் அமுல்படுத்தப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகள் மூன்றாவது அலையின் பரவலைக் கட்டுப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. மே 31 வரை மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தொடர்வதுடன் அதுவரை வீடுகளிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் வர முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 2000 ஐ தாண்டுகிறது. சராசரியாக தினமும் 20 உயிரிழப்புகளும் பதிவாகின்றன. நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள வைத்தியாசலைகள் கொவிட் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளன. இதுவரை சுகாதார கட்டமைப்பு சீராகவே இயங்கி வருகிறது. ஒட்சிசனும் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

எவ்வாறிருப்பினும் இந்தக் கொரோனா வைரஸ் பரவல் எப்போது முடிவுக்கு வரும்? மீண்டும் நாடும் உலகமும் பழையபடி வழமைக்குத் திரும்புவது எப்போது? என்பதே எல்லோரும் எழுப்புகின்ற கேள்வி. இதற்கு கிடைக்கும் ஒரே பதில் கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதே தீர்வு என்பதாகும்.

உலகின் பல நாடுகள் தமது பிரஜைகளில் கணிசமானோருக்கு தடுப்பூசியை வழங்கிவிட்டன. இதனால் குறித்த நாடுகள் கொவிட் பரவல் அச்சமின்றி தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. சில நாடுகளில் பாரியளவிலான மக்கள் ஒன்றுகூடல்களும் நடக்கின்றன. அந்த வகையில் இலங்கையும் இந்த அச்சுறுத்தலிலிருந்து விடுபட வேண்டுமானால் தனது பிரஜைகள் அனைவருக்கும் தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பது அவசியமாகும்.

அந்த வகையில் இலங்கையில் தற்போது அஸ்ட்ராசெனிக்கா, சினோபாம் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த சில தினங்களாக தடுப்பூசி வழங்கும் செயல்முறை மேல் மாகாணத்தில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உண்மையில் மிகச் சிறிய நாடான இலங்கை சரியாகத் திட்டமிடுமானால் ஒரு வார காலத்திலேயே அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கி முடிக்க முடியும். எனினும் ஆட்சியிலுள்ளவர்கள் போலியான பாணிகளின் பின்னால் அலைந்து காலத்தைக் கடத்தினார்களே தவிர நீண்ட கால தீர்வு குறித்து கவனம் செலுத்தவில்லை. மக்களுக்கு புதுவருட நிவாரணம் என்ற பெயரில் 5000 ரூபா வழங்குவதை விடுத்து அப் பணத்திற்கு தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்திருந்தால் இந்நேரம் கணிசமான மாவட்டங்களுக்கு தடுப்பூசியை வழங்கியிருக்கலாம். அரசாங்கம் இதன் பின்னராவது இது விடயத்தில் தூர நோக்குடன் செயற்பட வேண்டும். எவ்வளவுக்கு விரைவாகவும் வினைத்திறனாகவும் இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக இதனைச் செய்து முடிக்க வேண்டும்.

இதனிடையே முஸ்லிம் சமூகமும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டும். கடந்த சில தினங்களில் கொவிட்டினால் மரணிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கடந்த சனிக்கிழமை மாத்திரம் 19 ஜனாஸாக்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

தடுப்பூசி ஏற்றிக் கொள்வது ஹராம் எனும் கட்டுக்கதைகளும் சமூகத்தில் உலா வருகின்றன. இக் கதைகளின் பின்னால் சமூகம் அள்ளுண்டு செல்லாது உலகின் பல்வேறு நாடுகளின் பத்வா குழுக்களால் ஹலால் என அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதே காலத்தின் தேவையாகும்.

இலங்கையின் பல முன்னணி முஸ்லிம் வைத்தியர்களும் உலமாக்களும் கூட கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் சகலரையும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளனர். அந்த வகையில் இந்தப் பாரிய தொற்று நோயிலிருந்து நம்மையும் நமது உறவுகளையும் பாதுகாக்க அனைவரும் முன்வந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

அரசாங்கமும் தனது அரசியல் வேறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வேண்டுகோள்விடுக்க விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.