கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
சென்ற வார தொடர்ச்சி…
ஈரானியப் புரட்சி ஷீயா முஸ்லிம்கள் நடாத்திய புரட்சி. அவர்கள் மொத்த உலக முஸ்லிம் சனத்தொகையில் 15––20 சதவீதத்தினரே. பெரும்பான்மையான முஸ்லிம்கள் சுன்னிகளாவர்.
சவூதியின் மன்னராட்சி வஹாபிய வைதீக இஸ்லாத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்த ஒன்று. வஹாபித்துவம் ஷீயா இஸ்லாத்தின் பரம எதிரி. அத்துடன் எண்ணெய் வளத்திலும் பண பலத்திலும் ஈரானைவிடவும் பன்மடங்கு வலுவான ஒரு நாடு சவூதி அரேபியா. எல்லாவற்றுக்கும் மேலாக, முஸ்லிம்களின் மிகமுக்கிய வணக்கஸ்தலங்கள் இரண்டும் அங்கேதான் அமைந்துள்ளன. அந்த நாட்டரசனே அவற்றின் பாதுகாவலனுமாவார். எனவேதான் சவூதி அரேபியாவின் வஹாபித்துவத்தைக் கொண்டு ஈரானின் புரட்சி வேட்கையைத் தணிக்கலாமென அமெரிக்கா முடிவு செய்தது. அமெரிக்காவின் இந்த முடிவு வஹாபித்துவத்துக்குக் கிடைத்த எதிர்பாராத ஒரு பரிசு. அரேபிய தீபகற்பத்தைத் தாண்டி வஹாபித்துவம் உலகம் சுற்றியது.
இலங்கையிலே 1980கள் ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் திறந்த பொருளாதாரக் கொள்கையும், தாராள அரசியற் கொள்கையும் நடைமுறைக்கு வந்த காலம். தொழிலும், முதலும், பொருட்களும், சேவைகளும் தடைகளின்றி நாட்டுக்குள் வரலாம் போகலாம். தொழில் மிகையும் முதல் வரட்சியுமுள்ள இலங்கை தனது தொழிலாளர்கள் தொழில் தேடி வெளிநாடுகளுக்குச் செல்வதையும் வெளிநாட்டு முதல் இலங்கைக்குள் நுழைந்து முதலீடாவதையும் வரவேற்றது. முஸ்லிம் ஆண்களும் பெண்களும் அரபு நாடுகளுக்குப் படையெடுத்தனர். அரபுப் பணமும் இலங்கைக்குள் நுழைந்தது. முதலீடாக மட்டுமல்ல நன்கொடைகளாகவும் அது வரலாயிற்று. அத்துடன் ஜெயவர்த்தன அரசு எதிர்பாராத இன்னொன்றும் இலங்கைக்குள் நுழைந்தது. அதுதான் வஹாபித்துவ இஸ்லாமும் அரபுக் கலாசாரச் சின்னங்களும்.
இலங்கை முஸ்லிம்களின் மதவழிபாடுகளும் அவர்களின் நடை உடை பாவனையும் பல நூற்றாண்டு காலமாக பௌத்த மக்களுக்குப் பரிச்சயமானதொன்று. அந்த வழிபாடுகளும் நடை உடை பாவனையும் பெரும்பாலும் இந்தியக் கலாசாரக் கலப்பைக் கொண்டிருந்தமையும் அதே கலாசாரத்துடன் பௌத்தமும் தொடர்புபட்டிருந்தமையும் இலங்கையில் இஸ்லாம் பரவுவதற்கு ஏதுவாகிற்று. ஆனால் 1980களுக்குப்பின் அரபு நாட்டு உடைகளும் வஹாபித்துவ வழிபாட்டு முறைகளும் ஒரு புதிய தோற்றத்தை முஸ்லிம்களிடையே அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனால் முஸ்லிம்களுக்குள்ளேயே பல சச்சரவுகளும் பிரிவினைகளும் தோன்றி சமூக அமைதியைக் குலைக்கலாயின. அரபுப் பணத்தினால் புதுப்புதுப் பள்ளிவாசல்களும், மத்ரசாக்களும் சொற்ப காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, காத்தான்குடி போன்ற சில முஸ்லிம் வதிவிடங்கள் அரபு நாட்டுச் சாயலைக் கொண்டதாகவும் மாறின. இவை எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமான ஒரு மாற்றம் என்னவெனில், முஸ்லிம்கள் கலாசாரத் தனித்துவம் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற இனங்களுடன் அண்டிப் பழகுவதைக் குறைக்கலாயினர். தேவை ஏற்பட்டால் ஒழிய மற்ற நேரங்களில் தாமும், தமது தொழிலும், வீடும் என்ற நிலையில் ஒதுங்கத் தொடங்கினர். முதன் முதலாக முஸ்லிம்களுக்கென்று தனிப்பட்ட அரசியல் கட்சியொன்று 1990களில் உருவானது இம்மாற்றங்களின் உச்சக்கட்டமாகும். இந்த மாற்றங்களைப்பற்றி முஸ்லிம்களின் அரசியல் தலைவர்களும் மதபீடங்களும் எந்தக் கவலையுமின்றி, அவற்றை தமது அரசியல் அல்லது தலைமைத்துவ இலாபங்களுக்காகப் பயன்படுத்தியமை எந்த அளவுக்கு அவர்களுக்கும் சமூகவியலுக்கும் தொடர்பு இருக்கவில்லை என்பதைக் காட்டிற்று. ஒரு பல்லின சமூகத்தில் ஒரு குறிப்பட்ட இனம் சொற்ப காலத்துக்குள் அதுவும் அந்நியநாட்டுத் தாக்கத்தால் தனிமையை நாடுவதை மற்ற இனங்கள் எவ்வாறு கருதும் என்பதைப்பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை.
இஸ்லாமோபோபியாவின் வளர்ச்சி
பௌத்த மக்களின் பார்வையில் அதுவும் அரசியல் பௌத்தத்தின் நோக்கில் அந்த மாற்றங்களெல்லாம் பல சந்தேகங்களை உருவாக்கின. முக்கியமாக, அரபுப் பணமும் கலாசாரமும், வஹாபியக் கொள்கைகளும், தனிப்பட்ட அரசியற் கட்சியும், வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு மாகாண சபையில் முஸ்லிம்களுக்கென ஒரு தனி அலகு வேண்டுமென்ற கோரிக்கையும், அவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல் முஸ்லிம்கள் தனித்துவத்தை நாடியமையும், ஈற்றில் அவர்களும் நாட்டையே பங்குபோடத் தூண்டுவார்களோ என்ற ஒரு சந்தேகத்தை பௌத்த அரசியல்வாதிகளின் மத்தியில் துளிர்விடச் செய்தது. தமிழர்களின் பிரிவினைவாதத்தை முறியடித்த களை ஆறுவதற்கு முன்னர் இன்னுமொரு பிரிவினைக்கு முஸ்லிம்கள் வித்திடுகிறார்களா என்ற சந்தேகம் பொது பல சேனா போன்ற தீவிரவாத பௌத்த இயக்கங்களை ஆட்கொண்டது. ஆண்டாண்டு காலமாக அந்நியோன்னியமாக பௌத்த மக்களுடன் இணைந்து வாழ்ந்த முஸ்லிம்கள் ஏன் சடுதியாக இப்படியானார்கள்? இதற்குப் பின்னால் வெளிநாட்டுச் சக்திகளும் அவற்றின் தூண்டுதல்களும் உண்டா? என்ற கேள்விகள் எழுந்தன. அதனால் இஸ்லாமோபோபியா என்ற மேற்கின் வியாதி பௌத்த மக்களில் ஒரு பகுதியினரை பீடிக்கத் தொடங்கியது. தூரநோக்கற்ற முஸ்லிம் தலைவர்களுக்கு இது புரியவே இல்லை.
எவ்வாறு முஸ்லிம் தலைவர்கள் தமது சமூக மாற்றங்களை அரசியல் லாபத்துக்காக வளரவிட்டார்களோ அதேபோன்று சிங்கள பௌத்த அரசியல்வாதிகளும் அதே லாபத்துக்காகப் பொது பல சேனா போன்ற தீவிரவாத இயக்கங்களின் இஸ்லாமோபோபியா பிரசாரங்களை வளரவிட்டார்கள். முஸ்லிம் தலைவர்களின் தூர சிந்தனையற்ற அரசியல் முஸ்லிம் தீவிரவாதம் வளர்வதற்கு வழிவகுக்க, அந்தத் தலைவர்களின் ஆதரவை நாடிய பௌத்த சிங்கள அரசியல் தலைவர்கள் இஸ்லாமோபோபியா வளர்வதற்கு வழிவகுத்தனர். முஸ்லிம் தீவிரவாதிகளின் 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் இஸ்லாமோபோபியாவுக்குக் கிடைத்த ஓர் அருட்கொடை. இன்று இஸ்லாமோபோபியாவின் ஆதரவால் ஆட்சிபீடமேறிய பௌத்த அரசியல்வாதிகள் புலி வாலைப் பிடித்த கதைபோல அதனை தவிர்க்க முடியாது அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே இஸ்லாமோபோபியாவை வளர்க்கின்றனர். இது இந்த நாட்டின் ஒரு சாபக்கேடு. (தொடரும்) – Vidivelli
கலாநிதி அமீர் அலிக்கு நன்றி. கடந்த பத்தாண்டுகளாக நான் சிங்களவரின் இன்றைய இஸ்லாமிய எதிர்ப்பு 1990 களின் முன்னர் போல பொத்தாம் பொதுவான முஸ்லிம்
எதிர்ப்பல்ல சித்தாந்த ரீதியானது, அமைப்புரீதியாக மாறுபட்டது என கூறிவந்தேன். சிங்களவர் சூபிகளை பாரம்பரிய முஸ்லிம்கள் என்கிறார்கள். சிங்களவர் அரேபிய செல்வாக்கால் உருவான பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் என குறிப்பிட்டு தெளிவாகவே வகாபி, சலாபி சிந்தனை பிரிவினரையே தனிமைப் படுத்தி எதிர்க்கிறார்கள். சிங்கள பெள்த்த இனவாதிகளின் ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றிய விமர்சனங்களும் இந்த போக்கிலேயே அமைகிறது. அதனால்தான் பாரம்பரிய முஸ்லிம்கள் ஏனையோர் என்னும் பதங்களை தவிர்த்துவிட்டு சிங்களவரோடு பிரச்சினையை பேசி தீர்க்க முடியாதென வலியுறுத்தினேன். அதேசமயம் முஸ்லிம்கள் மத்தியில் வஹாபிகள் தனிமைப்படாமல் சூபிகளோடு பேசி ஜனநாயக அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என வலியுறுத்திவந்தேன். அதற்க்குப் பரிசாக முனாபிக் கபீர் பட்டங்களையே வாங்கிக் கட்டினேன். முஸ்லிம் அறிஞர்களும் தலைவர்களும் உள்வாரி எதிர்புகளுக்கு அஞ்சி வாஹாபிகள் தனிமைப்படும்/தனிமைப் படுத்தப்படும் பூதாகரமான பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை. சிங்களவரின் சமகால இஸ்லாமிய எதிர்ப்பின் அடிப்படையாக பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் என குறிப்பிட்டி வஹாபிகளை தனிமைபடுத்தும் கோட்பாட்டை கண்டுகொள்ளவில்லை. இது வரலாற்று தவறாகும். இதனால்தான் பிரச்சினை புரிந்துகொள்ளப்படவில்லை. நீங்கள் அடிபடை பிரச்சினையை தொட்டு எழுதுவது இலங்கை முஸ்லிம் மக்களுக்கும் அமைப்புகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தெளிவை ஏற்படுத்துமென நம்புகிறேன். வாழ்த்துக்கள் நண்பரே
எனது முகவரி விசாரித்த வாசகர்களுக்காக தகவல் : எனது முகநூல் Jaya Palan மினஞ்சல் visjayapalan@gmail.com
http://www.jaffnamuslim.com/2021/05/blog-post_894.html
இங்கு குறிப்பிட்ட கருத்தை அடியொற்றி எழுதப்பட்ட கட்டுரை