(ஏ.ஆர்.பரீல்)
ஞானசார தேரரின் செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிரதான காரணமாக அமைந்தது என நீங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளீர்கள். அது தவறாகும். இவ்வாறு ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டில்லை. ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இல்லாத விடயத்தை இருப்பதாக கூறியுள்ளமை ஆணைக்குழுவுக்கு இழைக்கப்பட்ட அவமானமாகும் என பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் மனைவி ஆயிஷா பதியுதீனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் பிரதி ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக் ஷவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரிசாத் பதியுதீனின் மனைவி ஆயிஷா பதியுதீன் தனது கணவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ஞானசார தேரர் பற்றியும் குறிப்பிட்டிருந்ததால் அதற்குப் பதிலளிக்கும் வகையில் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘உங்களது கணவரான ரிசாத் பதியுதீன் தேர்தல் காலங்களில் உங்களுடன் வாக்களிப்பதற்கு செல்லும் சந்தர்ப்பங்களில் உங்களை தொலைக்காட்சியில் மற்றும் பத்திரிகைகளில் கண்டிருக்கிறோம். அந்தக் காட்சிகளில் ரிசாத் பதியுதீனின் மனைவி என குறிப்பிடப்பட்டிருந்தது. அது நீங்களாக இருக்கலாம்.
ஜனாதிபதிக்கு உங்களால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதத்தை எழுதியவர் ஞானசார தேரர் பற்றி குறிப்பிட்டுள்ள விடயங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் தொடர்பில் தெரிவித்துள்ளமை விமர்சனத்துக்குரியதாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படாத விடயங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு உதவிகள் வழங்கியது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள ரிசாத் பதியுதீனை விடுதலை செய்து கொள்வதற்கு தயாராவதென்றால் குறைந்தது கடிதத்தை எழுதியவராவது ஆணைக்குழுவின் அறிக்கையை வாசித்திருக்க வேண்டுமென்பதை நாம் ஞாபகப்படுத்துகிறோம்.
நீங்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில் ‘ஞானசார தேரரும் அவரது செயற்பாடுகளும் குண்டுத் தாக்குதல்களுக்கு பிரதான காரணியாக அமைந்தது. ஆனால் அவரோ அல்லது இதற்குப் பொறுப்புகூறவேண்டியவர்கள் என இனங் காணப்பட்டவர்களோ இதுவரை கைது செய்யப்படவோ விசாரணைக்கு உட்படுத்தப்படவோ இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் எந்த இடத்திலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டில்லை.
உங்களது கணவரின் நண்பர்கள், அரசியல் ஆதரவாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தப்லீக் ஜமாஅத், இஹ்வான் முஸ்லிம், ஜமாஅத்தே இஸ்லாம் மற்றும் தெளஹீத் குழுவினர் இந்நாட்டில் மேற்கொண்ட அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து ஆணைக்குழுவின் அறிக்கையில் பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கைகள், தாக்குதல்கள் உட்பட விடயங்களை நீங்கள் கடிதத்தில் தவிர்த்திருப்பது விந்தையாகவுள்ளது.
இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடாத்துவதை நியாயப்படுத்தி சஹ்ரான் தெரிவித்த 10 காரணங்களில் 8 காரணங்களை நீங்கள் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளீர்கள். சஹ்ரான் கடைசியாக வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்த 10 காரணங்களில் இரு காரணங்களை நீங்கள் வேண்டுமென்றே குறிப்பிடுவதற்கு தவறியிருக்கிறீர்கள்.
குர்ஆனின் போதனைகளின்படி சஹ்ரான் தற்கொலை தாக்குதலை மேற்கொள்வதாக தெரிவித்த கருத்துகளை குறிப்பிட நீங்கள் தவறியிருக்கிறீர்கள். “இஸ்லாத்தை பின்பற்றாதவர்களை கண்ட இடங்களில் கொலை செய்வதற்கு அல்லாஹ்வினால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது’’ என சஹ்ரான் கூறியுள்ளார்.
அல்லாஹ் மீண்டும் பிறப்பாரென ஞானசார தேரர் தெரிவித்ததாக கூறியுள்ளமை முழுப் பொய்யானதாகும். ஞானசார தேரர் எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறு தெரிவிக்கவில்லை.உங்களது சமூகத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ள அடிப்படைவாதத்தை அழிப்பதற்கு உங்கள் கணவர் ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளாரா? அதைவிடுத்து உங்கள் கணவர் இஸ்லாமிய அடிப்படைவாதம் இல்லை என பிரசாரம் செய்து சஹ்ரான்கள் நாட்டுக்குள் சுதந்திரமாக உருவாகுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளார். தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இஸ்லாமிய தீவிரவாதிகளை இலங்கையிலிருந்து அழிப்பதற்காக அவர்களுக்கு உதவிகள் மற்றும் வாய்ப்புகள் வழங்குபவர்களை கைது செய்வதற்கு நீங்கள் பாதுகாப்பு பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும். இல்லையேல் உங்கள் பிள்ளைகளும் என்றோ ஒருநாள் சமயத்தின் பெயரால் தற்கொலைக் குண்டுதாரிகளாக மாற்றம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli