ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து ரிஷாத்திடம் விசாரிக்கவில்லை
சி.ஐ.டி.க்கு சென்று பார்வையிட்ட பின்னர் அவரது சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஊடக சந்திப்பில் தெரிவிப்பு
(எம்.எப்.எம்.பஸீர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு 13 நாட்களாக ( நேற்று வரை) சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும், அவரிடம் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்கள், அது சார்ந்த விடயங்கள் தொடர்பில் எந்த விசாரணைகளும் நடாத்தப்படவில்லை என அவரது சட்டத்தரணியும், கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.
கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம் சஹீட் தலைமையில், வெள்ளவத்தையில் விஷேட செய்தியாளர் சந்திப்பை நடாத்தியே அவர் இதனை வெளிப்படுத்தினார். ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய குண்டுதாரிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக கூறி ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட போதும், இதுவரை அவரிடம் அது தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரிக்கவில்லை என அவர் தெரிவித்தார். நேற்று முற்பகல் சி.ஐ.டி.க்கு சென்று தான் ரிஷாத் பதியுதீனை சந்தித்ததாக கூறிய அவர், சி.ஐ.டி. அதிகாரிகளையும் சந்தித்து குறித்த கைது தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொண்டதாக கூறினார்.
இது தொடர்பில் தகவல்களை அறிவிக்க ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பை தொடங்கி, கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், கட்சித் தலைவர் ரிஷாத்தின் கைது, தடுத்து வைப்பு, பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதித்தமை ஆகியன அடிப்படை உரிமை மீறல் மட்டுமல்லாது ஜனநாயகத்துக்கு விரோதமான சட்ட விரோத செயல் என குறிப்பிட்டார்.
இதனையடுத்து, கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் சட்ட பிரிவின் பிரதானியுமான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஊடகவியலாளர்களுக்கு ரிஷாத்தை சந்தித்து பேசியவை தொடர்பில் விளக்கினார்.
‘ இன்று ( நேற்று) நான் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனை சி.ஐ.டி.யில் சந்தித்தேன். அவர் தனியான ஒரு சிறை அறையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்படுத்தி பொலிசாரால் அறிக்கை வெளியிடப்பட்டது. எனினும் அவரிடம் இதுவரை குறித்த தாக்குதல் விவகாரம் தொடர்பில் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனவும், வாக்கு மூலம் பெறப்படவில்லை எனவும் அவர் என்னிடம் கூறினார். இத்தனை நாட்களில் மூன்று நாட்கள் மட்டும் விசாரிக்கப்பட்டதாகவும், அதன் போது தனிப்பட்ட விடயங்கள் குறித்தே வினவப்பட்டதாகவும் அவர் கூறினார்.
உண்மையில் இது அரசியல் கைது. பொலிஸ் பேச்சாளர் கூறுவதைப் போன்று அறிவியல், தொழில்நுட்ப சான்றுகள் இருப்பின் ஏன் அது குறித்து சி.ஐ.டி. சம்பிரதாயப் படி சட்ட மா அதிபருக்கு வழங்கி ஆலோசனை பெற்றுக்கொள்ளாது கைது செய்ய வேண்டும்.
இதுவரை எந்த நீதிமன்றிலும் எந்த அறிக்கையும் ரிஷாத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவில்லை. அது ஏன்? பாராளுமன்ற தெரிவுக் குழு, ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுக்களின் இறுதி அறிக்கையில் ரிஷாத்துக்கு எதிராக குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி எந்த குற்றச்சாட்டுக்களும் பரிந்துரைகளும் இல்லை.
தற்போதைய பொலிஸ் மா அதிபர், முன்னர் பதில் பொலிஸ் மா அதிபராக இருந்த போது ரிஷாத் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபடவில்லை என விசாரித்து சான்றிதழ் அளித்துள்ளார். அவ்வாறிருக்கையில் இந்த கைதினை நாம் அரசியல் கைதாகவே பார்க்கின்றோம்.
பல்வேறு அரசியல் தேவைகளுக்காக எங்கள் கட்சியின் தலைவர் கைது செய்யப்பட்டிருக்கலாம். அது தொடர்பில் சில ஊகங்கள் எனக்கு உள்ளது. குறிப்பாக துறைமுக நகர சட்ட மூலம் தொடர்பில் பரந்த பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. 20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்த கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள், நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியிலேயே இந்த அரசியல் கைது நிகழ்ந்துள்ளமை பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.
ரிஷாத்தை பாராளுமன்றுக்கு அழைத்து செல்லாது சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்காதது கூட அரசியல் தேவைக்காக புரியப்பட்ட நடவடிக்கைகளே. எது எவ்வாறயினும் துறைமுக நகர சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை என எமது கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளது. ‘ என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் சுபைர் தீன், பாராளுமன்ற உறுப்பினர் முஸர்ரப், கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோரும் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர்.- Vidivelli