(றிப்தி அலி)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதில் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.சஹீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு பிரிவில் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவர் விடுதலை செய்யப்படும் வரை கட்சியின் நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு தேவையான சில அதிகாரங்களை வழங்கும் நோக்கிலேயே இந்த நியமனம் வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர் பீடம் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் கூடிய போதே பதில் தலைவர் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீனின் ஆலோசனையுடனேயே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிகமானது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சட்ட ஆலோசகர் றுஸ்தி ஹபீப் தெரிவித்தார்.
இதனிடையே, விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள துறைமுக நகர் சட்ட மூலத்திற்கு எதிராக கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறித்த உயர்பீட கூட்டத்தின்போது தீர்மானித்துள்ளது.
20ஆவது திருத்தச் சட்ட மூல வாக்கெடுப்பின் போது கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்தது போன்றல்லாமல் இந்த வாக்கெடுப்பின் போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக எதிர்த்து வாக்களித்து துறைமுக நகர் சட்ட மூலத்தினை தோற்கடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
கட்சியின் இந்த தீர்மானத்தினை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தங்களின் விளக்கங்களை தனித் தனியாக எழுத்து மூலம் வழங்குமாறும் கட்சியின் அரசியல் உயர் பீடம் உத்தரவிட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி றஹீம் மற்றும் எம்.எம்.முஷாரப் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.- Vidivelli