நோன்புப் பெருநாள் தொழுகையை பள்ளிவாசல்களிலோ அல்லது பொது இடங்களிலோ கூட்டாக நிறைவேற்ற முடியாது என்றும் வீட்டிலேயே தொழுதுகொள்ளுமாறும் வக்பு சபை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமையவே நோன்புப் பெருநாள் தினத்தன்றும் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
‘‘பள்ளிவாசல்களில் தராவிஹ், ஜும்ஆ, பெருநாள் தொழுகை ஆகிய கூட்டுத்தொழுகைகளை தொழ முடியாது. பள்ளிவாசல்களில் தனித்தனியே ஒரே தடவையில் தொழுவது 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவின் சுற்று நிருபத்தில் இது பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். – Vidivelli