நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும் அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின்தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ அதிலிருந்து (அல்லாஹ்வுக்காக) செலவு செய்யுங்கள். ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ அவர்களுக்கு (அவனிடம்) மகத்தான கூலி இருக்கிறது. (57:7)
அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அறிவித்தார்கள்: ‘தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்’ என்று கூறினார்கள். மக்கள், ‘அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ அல்லது ‘அதை அவர் செய்யாவிட்டால்’ (என்ன செய்வது?)’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்’ என்றார்கள். மக்கள், ‘(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்போது அவர் ‘நல்லதை’ அல்லது நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்’ என்றார்கள். ‘(இதையும்) அவர் செய்யாவிட்டால்?’ என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், ‘அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்’ என்றார்கள். நூல் : புகாரி 6022.
தர்மம் செய்தல் என்பது நமது பணத்தால் பொருளாதாரத்தால் பிறருக்கு வழங்குவது மாத்திரமல்ல, அதையும் தாண்டி நமது சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார, அறிவு, ஆன்மிக, பண்பாட்டு வறுமை போன்றவற்றை நீக்க உழைப்பதும் மிகப்பெரும் தர்மமாகும். எல்லோரும் எல்லா நேரங்களிலும் இறைவன் தமக்கு வழங்கிய அருட்கொடைகளை அவனுக்காக பயன்படுத்துவது, அதனை பிறருக்கு பகிர்ந்தளிப்பது மிகப்பெரும் தர்மமாகும்.
கொடை கொடுப்பதிலே மிகச் சிறந்த கொடை கற்ற கல்வியை பிறருக்கு கற்றுக் கொடுப்பதாகும், செல்வத்தைக் கொடையாக கொடுப்பதை விடவும் பிறருக்கு கல்வியூட்டுவதே மிகச் சிறந்த கொடையாகும் என ஷைஹுல் இஸ்லாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். நூல் -மதாரிஜுஸ் ஸாலிஹீன் – (2/281)
ஏனெனில் செல்வங்களில் மிகப் பெரும் செல்வம் கல்விச் செல்வமே..அதிலிருந்து எமக்கு முடியுமான வழிமுறைகளினூடாக பிறருக்கு வழங்க முயற்சிக்க வேண்டும். பிறருக்கு கற்பிக்கப்படும் ஒவ்வொரு அம்சமும் அவர்களது அறிவியல் வறுமையை போக்குமாயின் அது அறிவுக் கொடையே.
இது போலவே அறிவியல் வறுமை மட்டுமல்ல, ஆன்மீக வறுமை நீக்கப்பட்டு அதற்கான தர்மமாகிய வணக்க வழிபாடுகளில் இன்பத்தை ஊட்டுகின்ற பிரதான பணியும் காலத்தின் அவசியாகும்.
நம்மை வந்தடைந்திருக்கின்ற ரமழானுடைய மாதம் இதற்குரிய பயிற்சியைப் பெறுகின்ற, அதனை பிரயோகிக்கின்ற சிறந்த பருவகாலமாகும். இந்த காலங்களில் அறிவியல் வறுமை நீக்கப்பட்டு ஆன்மீக வறுமையும் போக்கப்பட்டால் மாத்திரம் எமது பணி முடிந்து விட்டதாக கருதி விட முடியாது. ஏழை எளிய குடும்பங்கள், வாய் திறந்து தமது தேவைகளை பிறரிடம் கேட்க வெட்கப்படுபவர்கள், குறிப்பாக இப்பொழுது உலகில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிமிக்க சூழலால் அவதிப்படும் குடும்பங்களையும் தேடிச்சென்று அவர்களை இனங்கண்டு அவர்களது கஷ்டங்களை ஒழிக்க முயற்சிப்பதும் ரமழான் எமக்கு சொல்ல வரும் செய்திகளில் மிகப் பிரதானமானதாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமழான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக் காட்டிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.
மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் எனக்கு ஓதிக் காட்டி வந்தார்’ என்று கூறினார்கள்.
இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஃபாத்திமா (ரலி) அவர்களும் அறிவித்தார்கள். நூல் : புகாரி: 3220.
நோன்பு நோற்பதிலும் குர்ஆனை ஓதுவதிலும் இரவு வணக்கங்களில் திளைத்து இருப்பதிலும் இன்பம் காண்கின்ற பலர் வறிய மக்களின் துயர் துடைப்பதில் இன்பம் காண முயற்சிப்பதில்லை, அதற்கிருக்கின்ற கீர்த்தியையும் மகிமையையும் உணர்ந்து கொள்வதில்லை. ஏனைய காலங்களை விட ரமழானில் வரிந்து கட்டிக் கொண்டு புயல்காற்றை விட பல்வேறு நன்மைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் நபிகளாரின் உம்மத் தன்னுடைய ரப்பின் உண்மையான அன்பு எதிலிருக்கிறது என்பதனை கண்டடைவதில் அலட்சியப் போக்கிலே உள்ளனர்.
ரமழானில் ஐந்தாவது விடுத்தம் உம்ரா செய்ய எண்ணம் கொள்ளும் மனிதர் பக்கத்து வீட்டில் உண்ண உணவின்றி வாடிக் கொண்டிருக்கும் குடும்பத்திற்கு ஒரு வேளை உணவு கொடுக்க மனதில் அவருக்கு இடமில்லையென்றால் அவரது ஈமானில் பலத்த கோளாறு உள்ளது என்பதாகவே நாம் புரிந்து கொள்ள முடிகிறது. மார்க்கத்தைப் பொய்ப்பிப்பவன் எவனோ அவனே அநாதைகளுக்கும் ஏழை எளியவருக்கும் உணவளிக்கத் தூண்டுவதில்லை என்ற தோரணையில் சூரா மாஊன் இதன் உண்மைத்தன்மையை தெளிவாகவே எமக்கு எடுத்துரைக்கிறது.
தர்மம் செய்ய முடியாது என்று எவரும் சொல்ல முடியாத அளவுக்கு இஸ்லாம் அதனை மிக இலகுவாகவே ஆக்கி வைத்திருக்கிறது.
“உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும். நீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும். பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும். பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும். பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும். உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி 1956, இப்னு ஹிப்பான் 2/287.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள். பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது சாய்ந்துகொண்டு, இறையச்சத்தைக் கடைப் பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மார்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, ‘தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்” என்று கூறினார்கள்.
அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து ‘அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள் (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆடையில் போட்டனர். நூல்: முஸ்லிம் 885.
அபூ மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்ய வேண்டும் என ஏவினால் எங்களில் ஒருவர் கடைத் தெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து, இரண்டு கையளவு தானியம் சம்பாதித்து (அதைத் தர்மம் செய்து) விடுவார். ஆனால் இன்றோ எங்களில் சிலரிடம் ஓர் இலட்சம் (திர்கம்/ தீனார்) வரை உள்ளன. நூல் : புகாரி 1416.
இந்நிகழ்வுகள் யாவுமே ஈமானிய இதயங்களின் ஆழத்திலிருந்து வெளிப்படும் தர்ம உணர்வை தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது. ஸஹாபாக்கள், ஸஹாபிய பெண்களிடம் காணப்பட்ட தர்ம உணர்வினை நம்மிடமும் ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கவேண்டும்.
ரமழான் காலங்களில் தாய்மார்கள் மிக இலகுவாக செய்ய முடியுமான, கணவன், மனைவி இருவரது நன்மையின் தட்டுக்களையும் கனக்கச் செய்யக்கூடிய மனிதர்களால் அலட்சியமாக கருதப்படுகின்ற ஓர் அமலையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது.’ நூல் : புகாரி 1425.
தர்மம் செய்வதனால் எமக்கு கிடைக்கும் மகத்தான கூலிகளையே பின்வரும் அல்குர்ஆன் வசனங்களும் நபிமொழியும் தெளிவுபடுத்துகின்றன.
யார் தங்கள் பொருள்களால் (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:274)
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”(2:215)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!” என்று கூறுவார். இன்னொருவர், “அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 1442
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மறுமை நாளில் ஏழு பேருக்கு நிழலே இல்லாத மஹ்ஷர் மைதானத்தில் தன்னுடைய நிழலான (அர்ஷின் நிழலை) அளிக்கிறான். அதில் ஒரு நபர் அவருடைய வலக்கையால் தர்மம் செய்ததை அவரது இடது கை அறிந்து கொள்ளாதவாறு இரகசியமாக தர்மம் செய்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 660,1423,6806.
இந்த புனிதமிகு மாதத்தில் நாமும் தான தர்மங்கள் செய்து அடுத்தவர்களையும் செய்யத்தூண்டி அதனை இம்மைக்குரிய பாதுகாப்பாகவும் மறுமையின் வெற்றிக்கு வழியாகவும் ஆக்கிக் கொள்ள முயற்சிப்போம்.- Vidivelli