ஸகாதுல் பித்ர் என்பது வசதியுள்ள அனைவர் மீதும் ரமழானில் கடமையாகும் ஒரு வணக்கமாகும். பெருநாள் தினத்தில் தன் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவு வசதியிருந்தால் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் ஸகாதுல் பித்ரை கொடுப்பது வாஜிபாகும். இலங்கையில் ஸகாதுல் பித்ராக, பிரதான உணவாக உட்கொள்ளக் கூடிய அரிசியிலிருந்து தலா ஒரு நபருக்கு நவீன கால அளவையின் படி 2.3Kg அரிசி கொடுப்பதே வழமையில் உள்ளது. கடமையான ஸகாதுல் பித்ருக்கு தானியம் கொடுப்பதற்கு பகரமாக அதன் பெறுமதியை கொடுப்பது பற்றி அன்றும் இன்றும் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு நிலவுகிறது. இஸ்லாமிய சட்டப்பரப்பில் இது குறித்து மூன்று வகையான சிந்தனைப் பிரிவுகளை நாம் காணலாம்
• எத்தகைய நிலையிலும் பெறுமதியை வழங்கவே முடியாது என்று கூறும் சிந்தனைப் போக்கு. நாட்டின் பிரதான உணவுப் பொருளில் இருந்து மாத்திரமே இது வாஜிபாகும். இமாம்களான மாலிக், ஷாபி, ஹன்பலி ஆகிய மூன்று சிந்தனை முகாம்களின் பிரதான கருத்து அந்தந்த நாட்டில் பிரதான உணவாகக் கொள்ளக் கூடிய தானியங்களில் இருந்து மாத்திரமே ஸகாதுல் பித்ர் வழங்கப்பட வேண்டும். ழாஹிரி (சட்ட வசனத்தின் வெளிப்படையான நேரடிக் கருத்தை மாத்திரம் நோக்கும் அணுகுமுறை கொண்டோர்) சிந்தனையைக் கடைப்பிடிப்போரும் இதே கருத்தையே குறிப்பிடுவர்.
• பெறுமதியை எந்த நிலையிலும் எதுவித நிபந்தனைகளும் இன்றி தாராளமாக கொடுக்கலாம். இது ஹனபி மத்ஹபின் கருத்தாகும். இந்த கருத்தை இமாம் சுப்யானுஸ்ஸௌரி, இரண்டாம் கலீபா என வர்ணிக்கப்படும் கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ், ஹஸனுல் பஸரி போன்ற பல மூத்த ஆரம்பகால அறிஞர்களும் கூறியுள்ளனர். ஷெய்குல் அஸ்ஹர் மஹ்மூத் ஷல்தூத், கலாநிதி யூஸுப் கர்ளாவி என பல அறிஞர்களும் இதே பத்வாவை தான் வழங்கியுள்ளனர். அவ்வாறே சர்வதேச ஸகாத் அமைப்பும் பெறுமானம் கொடுக்க முடியும் என்ற தீர்மானத்தையே கூட்டுப் பிரகடனமாக அறிவித்துள்ளது.
• அந்தந்த நாட்டில் பிரதான உணவாக உட்கொள்ளக் கூடிய தானியத்திலிருந்து கொடுப்பதே அடிப்படையானது. எனினும் மக்கள் தேவையை கருத்தில் கொண்டும் நலன்கள் அடிப்படையிலும் பெறுமதியை வழங்கலாம். தானியங்களை கொடுப்பதை விட பணத்தை கொடுப்பது பயனுள்ளது என்ற நிலை இருந்தால் பொருளாக கொடுக்காமல் பெறுமதியை கொடுப்பதே மிகவும் சிறந்தது என்ற கருத்தை இவர்கள் கூறியுள்ளனர். இதே சிந்தனையை தான் இமாம் அபூ இஸ்ஹாக், இமாம் இப்னு தைமியா போன்ற அறிஞர்களும் தெரிவித்துள்ளனர்.
இருந்த போதிலும் ஸகாதுல் பித்ரை பணமாகவோ அல்லது வேறு பொருட்களாகவோ கொடுக்க முடியாது, மாறாக நபியவர்கள் ஹதீஸில் குறிப்பிட்டு கூறிய பொருட்களை மட்டுமே ஸகாதுல் பித்ராவாக கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டோர் கீழ்வரும் ஆதாரங்களை முன்வைப்பதை பார்க்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாஃ அளவு பேரீச்சம் பழத்தை அல்லது ஒரு ஸாஃ அளவு வாற் கோதுமையை ஸகாதுல் பித்ராகக் கடமையாக்கினார்கள் என்ற செய்தியை இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புஹாரி)
இந்த ஹதீஸில் அதன் பெறுமதியை கொடுப்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. பெறுமானத்தை கொடுப்பது ஆகும் என்றிருந்தால் நிச்சயமாக இறை தூதர் அதனை தெளிவாக கூறியிருப்பார்கள். எனவே பெறுமானத்தை வழங்குவது ரஸூல் (ஸல்) அவர்கள் ஏவியதை நிறைவேற்றியதாக அமையாது என்ற நியாயத்தை முதல் தரப்பினர் முன்வைக்கின்றனர். அவ்வாறே ஸகாதுல் பித்ர் ஒரு இபாதத். அதில் மாற்றங்கள் பற்றி ஆய்வு செய்யாமல், உள்ளதை உள்ளவாறே பின்பற்றுவதே அடிப்படை விதியாகும். இதுவும் முதல் தரப்பினர் முன்வைக்கும் மற்றொரு நியாயமாகும்.
இந்த ஆதாரத்தை மறுதலிக்கும் அறிஞர்கள், மேலே குறிப்பிட்ட ஹதீஸ் ஆதாரத்தில் நபி (ஸல்) அவர்கள் நேரடியாக பேரீச்சம் பழம் அல்லது கோதுமையை ஸகாதுல் பித்ராக கொடுப்பதை கடமையாக்கவில்லை என்றும் அது நபித் தோழரான இப்னு உமரின் கூற்றாகவே உள்ளது என குறிப்பிடுவர். குறிப்பிட்ட தானியங்கள் மாத்திரம் தான் கொடுக்க வேண்டும் அதற்கு பகரமாக வேறு எந்த தானியமும் கொடுக்கலாகாது எனவும் நபி (ஸல்) தெளிவாக நேரடியாக கூறியதாக எந்த ஒரு ஹதீஸ் வசனமும் ஸுன்னாவில் காணமுடியாது.
இந்த ஹதீஸின் அடிப்படையில் நோக்கும் போது அந்தந்த நாட்டு தானியங்கள் கூட கொடுக்க முடியாது என்பதே உண்மையாகும். அதில் அரிசி போன்ற தானியம் குறித்து நபி (ஸல்) பேசியதே கிடையாது. இருந்தும் பெறுமதி கொடுக்க மறுக்கும் அறிஞர்கள் கோதுமைக்கு பகரமாக பிரதான உணவாக கொடுக்கும் தானியங்களை கொடுப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். இதுவும் ஹதீஸின் நேரடிக் கருத்துக்கு முரணானதே. கோதுமை அல்லது பேரீத்தம் பழத்துக்கு பகரமாக எமது நாட்டில் அரிசி கொடுப்பது பொருத்தமானது என ஒப்பீட்டு அடிப்படையில் அவர்களுக்கு சிந்திக்க முடியுமாயின், அரிசி கொடுப்பதற்கு பதிலாக பெறுமானம் கொடுப்பதையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதே அடுத்த தரப்பினரின் வாதமாக உள்ளது.
உண்மையில் ஸகாதுல் பித்ர் என்ற கடமை அறிவை பயன்படுத்தி ஆய்வு செய்வதை தடுக்கும் ஒரு வணக்க வழிபாடு அல்ல. ஸகாதுல் பித்ர் ஒரு இபாதத் போலவே அதில் சமூக நலன்களும் இணைந்துள்ளன. எனவே அந்த வணக்கத்தை இருப்பதை உள்ளவாறே பின்பற்றும் கடமையாக நோக்க முடியாது. காரணம் அந்த வணக்கத்தை நிறைவேற்றுவது ஏழைகளின் தேவையோடு தொடர்புபட்டுள்ளது. இது அடுத்த சகோதரனின் உரிமையுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.
ஸகாதுல் பித்ரின் பிரதான நோக்கங்களில் ஒன்று பெருநாள் தினத்தில் இல்லாதோருக்கு கொடுத்துதவுவதாகும். அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் ஏழைகளின் விழியில் ஆனந்தக் கண்ணீரை காண்பதே அதன் ஒரு இலக்காக உள்ளது. எல்லோரும் உணவுப் பொருட்களை அள்ளி அள்ளி கொடுப்பதன் மூலம் இலக்கை அடையவே முடியாது என்பது மிகவும் தெளிவு. எனவே காலமாற்றத்தை கருத்திற் கொண்டு பணத்தை கொடுப்பதன் மூலமே அவர்களின் தேவைகள் நிறைவேறும். இந்த உண்மையை புரிந்த ஸஹாபாக்கள் அன்றே பகுத்தறிவை பயன்படுத்தி இதில் பல மாற்றங்களை செய்தார்கள். இல்லாதோருக்கு பொருத்தமான தேவையான உணவுகளை ஹதீஸ் சொல்லாவிட்டாலும் அவர்கள் பொருத்தமானதை தேர்ந்து எடுத்தார்கள். கொடுக்கும் அளவு போதாது என்று கருதிய போது அதன் அளவைவிடக் கூட்டிக் கொடுத்தார்கள். முஆவியா (ரழி) அவர்கள் மதீனாவின் பேரீத்தம் பழத்தின் நிறையானது ஷாமின் கோதுமைக்கு நிகராக இருக்க வேண்டுமானால் அளவை கூட்ட வேண்டும் என்று கருதியபோது அபூ ஸஈத் குத்ரி (ரழி) அந்த மாற்றத்தை செய்ய அனுமதித்தார்கள்.
இது வணக்க வழிபாட்டை நடைமுறைப்படுத்தும் போது சமூகக் காரணிக்கும் இடம் கொடுத்தே ஸஹாபாக்கள் யோசித்துள்ளார்கள். இங்கு அவர்கள் அறிவுக்கு வேலை கொடுத்து கடமையை நிறைவேற்றியுள்ளர்கள்.
ஒரு முறை ஸகாத் பொருட்களை வசூலிப்பதற்காக யமன் தேசத்திற்கு முஆத் (ரழி) அவர்கள் அனுப்பிவைக்கப்பட்ட போது தானியங்களுக்கு பதிலாக அதன் பெறுமதிக்குரிய ஆடைகளை தருமாறு கேட்டார்கள். அது சுமப்பதற்கும் இலகுவானது. மதீனா வாழ் மக்களுக்கும் தேவையாக உள்ளது. இத்தகைய பொருள் பரிமாற்றத்தை நபிகளார் அங்கீகரித்துள்ளாகள். பணப் பெறுமானம் பார்க்காமல் இதனை செய்ய முடியாது. எனவே இன்றைய எமது தேவைக்கு ஏற்ப அதன் பெறுமானத்தை கொடுப்பது ஸஹாபாக்களின் சிந்தனையுடன் ஒத்துப் போகும் முறையாகவும் உள்ளது. இது தவிர நல்லாட்சி புரிந்த நான்கு கலீபாக்களும் கடமையான ஸகாத் பொருட்களை வசூலிக்கும் போது பணப் பெறுமானங்களை கணித்து பரிமாற்றம் செய்த வரலாற்று நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக ஒட்டகத்தின் ஸகாத்தை பெறும்போது அதன் வயது வித்தியாசத்தை சரி செய்வதற்காக பணப் பெறுமானம் பெறப்பட்டுள்ளது. அல்லது அதற்கு நிகராக ஆடுகள் பெறப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் மிகவும் பிரபல்யமானவை.
அறிஞர்களின் கருத்தாடல்களை அவதானிக்கும் போது ஸகாதுல் பித்ரை பெறுமானமாகக் கொடுக்க முடியும் என்பது தெளிவாகிறது. வரலாற்றில் வலுவான கருத்தாகவும் காணப்படுகிறது. எனவே பொருளாக கொடுக்க முடியும் என்பது அடிப்படையாக இருந்தாலும் எந்த வழிமுறை ஏழைகளுக் மிகுந்த பயனளிக்குமோ அதனை தேர்ந்தெடுப்பதே அறிவார்ந்த செயலாகும். மேற்கூறிய அறிஞர்களின் கருத்தாடல்களை அவதானிக்கும் போது பின்வரும் உண்மைகள் புலனாகின்றன.
1. ஸகாதுல் பித்ர் பற்றி பேசும் ஹதீஸின் நேரடிக் கருத்தை அவதானிக்கும் போது பொருளாக கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையை அது சுட்டுகிறது. இந்தக் கருத்தை யாருமே மறுக்கவில்லை.
2. பெறுமானத்தை கொடுப்பது ஆகும் என்ற சிந்தனை ஒரு பலமான கருத்தாகும். அன்று தொட்டு இன்று வரை நியாயமான அறிஞர்கள் அக்கருத்தை தெரிவித்துள்ளார்கள். எனவே அந்தக் கருத்தை குறைத்து மதிப்பிடவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது. அதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தி மோதல்களை உருவாக்கவும் தேவையில்லை. மாற்றுக் கருத்துக்களை சீரணிக்க பழகுவதே இன்றைய தேவையாகும். வித்தியசாமான சிந்தனைகளை பக்குவமாக கலந்துரையாடும் போது முன்பு புரியாத பல உண்மைகள் புரியும். அப்போது அது அருள் என்று தெரியும்.
3. இஸ்லாம் நடைமுறைக்கு இலகுவான ஒரு மார்க்கம். கடமைகளை செய்யும் போது கஷ்டத்தை நீக்குவது அதன் சிறப்பம்சமாகும். பணப் பெறுமானத்தை அங்கீகரிப்பதானது பித்ராவை திரட்டுவதற்கும் விநியோகிப்பதற்கும் இலகுவானதே. பொதுவாக எல்லோரும் அரிசை அள்ளி அள்ளிக் கொடுத்தால் பாவம் அந்த ஏழைகள் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். ஆனால் ஸஹாபாக்கள் இத்தகைய கடினமா போக்கை கடைப்பிடிக்கவில்லை. எளிமைப்படுத்தினார்கள். உரியது பொருள் வடிவில் கிடைக்காத போது அதன் பெறுமானத்தை பெறுவதற்கு வழிகாட்டினார்கள்.
4. ஸகாதுல் பித்ரின் நோக்கம் மிகவும் தெளிவானது. ஏழைகளின் தேவையை நிறைவேற்றுவதே முதன்மையான நோக்கமாகும். எனவே பணமாக கொடுக்கும் போது அவர்கள் தங்களுடைய பல்வகை தேவைகளையும் நிறைவு செய்து கொள்வார்கள்.
5. சில போது பணப் பெறுமானம் கொடுக்க முடியும் என்பது ஹனபி அறிஞர்கள் மாத்திரம் முன்வைத்த சிந்தனை என தவறாக எண்ணுவதுண்டு. அதனால் அந்த சிந்தனை பெரும்பான்மை அறிஞர்களுக்கு மாற்றமான கருத்தாக கற்பிதம் செய்யப்படுகிறது. ஸகாதுல் பித்ராக பணப் பெறுமானத்தை வழங்க முடியும் என்பதை ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களை தொடர்ந்து வந்த அறிஞர்கள், ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த ஒரு சிலர், இப்னு தீனார், இப்னு வஹாப் போன்ற சில மாலிக் மத்ஹப் அறிஞர்கள் மற்றும் ஸைதீக்கள் என பலரும் இந்த கருத்தை ஆதரித்து, நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளனர். அவ்வாறே ஐந்தாம் கலீபா உமர் பின் அப்துல் அஸீஸ், ஹஸனுல் பஸரீ போன்ற ஆரம்ப கால அறிஞர்கள் என பல இமாம்கள் இந்த சிந்தனையை தான் மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்தியுள்ளார்கள்.
பெரும்பான்மையான நவீன கால அறிஞர்களும் பெறுமதியை கொடுக்க முடியும் என்ற சிந்தனையே காலத்திற்கு பொருத்தமானது என சான்று பகர்ந்துள்ளனர்.
1996ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற ஸகாத் தொடர்பான மாநாட்டில் அறிஞர்கள் ஒன்றிணைந்து பணப் பெறுமானம் கொடுப்பது ஆகும் என கூட்டாக ஒரு தீர்மானத்தை பிரகடனப்படுத்தியிருந்தனர்.- Vidivelli