எம்.ஏ.எம்.அஹ்ஸன்
கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்ய மட்டுமே முடியும் என இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் சுமார் 11 மாதங்களின் பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் அதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை. இத் தீர்மானம் முஸ்லிம் மக்களையே அதிகம் பாதித்த போதிலும் அதற்கெதிராக நாட்டிலுள்ள சகல இன மக்களும் ஒன்றுபட்டு போராடினர் என்ற செய்தி அழுத்திச் சொல்லப்பட வேண்டியதாகும்.
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது இஸ்லாமிய சமய அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். ஆரம்பத்தில் இந்த விடயத்தை ஒரு சாதாரண விடயமாகவே முஸ்லிமல்லாத நபர்கள் கடந்து சென்றபோதும், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அவர்களது உணர்வுகளையும் உசுப்பியது. குறிப்பாக 20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிக்கப்பட்ட சம்பவம் முஸ்லிம்களை மட்டுமல்லாது ஏனைய தரப்பினரையும் ஆத்திரத்திற்குள்ளாக்கியது. இந்த உணர்வுபூர்வமான நிகழ்வுகள் இலங்கையின் அனைத்து இன மக்களையும் வீதியில் இறங்கிப் போராடச் செய்தன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான பகையுணர்வுகள் வேரூன்றியிருந்த போதிலும் அதனையும் தாண்டி முஸ்லிம்களின் அடிப்படை உரிமை ஒன்றுக்காக சகலரும் வேறுபாடுகளை மறந்து போராடியமை மிகச் சிறந்த முன்மாதிரியாகும்.
கபன் சீலை போராட்டம்
20 நாட்களேயான குழந்தை ஷாயிக்கின் உடல் அவரது பெற்றோரின் விருப்பத்திற்கும் முரணாக எரிக்கப்பட்ட சம்பவம் இளம் சமூக ஆர்வலரான அஞ்சுல ஹெட்டிகேவை கடுமையாகப் பாதித்தது. அதுவரை சமூக வலைத்தளங்களில் மாத்திரமே இதுபற்றிப் பேசி வந்த அஞ்சுல, தனது நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு பொரளை தகனச் சாலையின் வேலியில் வெள்ளைத் துணிகளைக் கட்டி தனது எதிர்ப்பையும் முஸ்லிம்கள் மீதான ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தினார். பல்வேறு வழிகளிலும் போராடி சோர்ந்து போயிருந்த முஸ்லிம்களுக்கும் இந்த வெள்ளைத் துணி போராட்டம் ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. அஞ்சுலவைப் பின்பற்றி மேலும் பல நூற்றுக் கணக்கானோரும் பொரளை தகனச் சாலை வேலியில் வெள்ளைத்துணிகளைக் கட்ட ஆரம்பித்தனர். பௌத்த, கிறிஸ்தவ, இந்து மக்களும் படையெடுத்து வந்தனர். பின்னர் இது நாடளாவிய ரீதியில் ஓர் இயக்கமாகப் பரிணமித்தது. ஆயிரக் கணக்கானோர் பொது இடங்களிலும் தமது வீடுகளிலும் வெள்ளைத்துணிகளைக் கட்டி அவற்றைப் புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரத் தொடங்கினர்.
பொரளை தகன மயானத்தில் வெள்ளைத்துணி ஒன்றை கட்டிய சட்டத்தரனி லிஹினி பெர்னாண்டோ (Women) கருத்து தெரிவிக்கையில், “கொரோனா எல்லோருக்குமான பொதுவான அனர்த்தம், இதை ஒரு சந்தர்ப்பமாக வைத்துக்கொண்டு மோதல்களை தோற்றுவிப்பது நல்லதொரு விடயமல்ல. முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதால் விஞ்ஞான ரீதியான ஆபத்துக்கள் இல்லை என்றே அனைத்து தரப்பினர்களும் ஒப்புவிக்கிறார்கள். அதைத் தடையின்றி அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களாகிய நாம் அதற்காக அரசாங்கத்திற்கு வேண்டுகோள்களை விடுக்க வேண்டும். எல்லா நம்பிக்கையாளர்களின் உணர்வுகளையும் மதிக்கும் ஒரு நாட்டில் வசிக்கத்தான் நான் ஆசைப்படுகிறேன்” என தெரிவித்தார்.
வெள்ளைத் துணி அல்லது கபன் சீலைப் போராட்டத்தை மேலும் விரிவடையச் செய்வதில் பெரிதும் பங்களிப்பு வழங்கியவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா. அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “மதங்களைத் தாண்டி மனித நேயமுள்ள பல மனிதர்கள் பொரளைக்கு வந்து வெள்ளைத் துணிகளைக் கட்டினார்கள். கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் என அனைவரும் இதற்காக களமிறங்கினார்கள். டுவிட்டர் மூலம் இது தொடர்பாக பேசியபோது ஏராளமான முஸ்லிமல்லாத சகோதரர்கள் காத்திரமான கருத்துக்களை முன்வைத்து, முஸ்லிம்களின் உணர்வுகளில் பங்கெடுத்தார்கள். இப்போது தகனம் நிறுத்தப்பட்டாலும் அநீதி இழைக்கப்பட்டவர்களின் மன வேதனைக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கோரிக்கைகளைக் கூட பலர் முன் வைக்கிறார்கள். பிரித்தானிய பாராளுமன்றத்தில் கூட காத்திரமான விவாதங்களை பலர் முன்னெடுத்திருந்தார்கள்” என்றார்.
பி.2.பி போராட்டம்
தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை மையப்படுத்தி பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஒரு நடைப்பேரணி பெப்ரவரி நான்கில் ஆரம்பித்து ஏழாம் திகதி நிறைவடைந்தது. இதில் கட்டாய தகனத்தினை நிறுத்தும் கோரிக்கையும் பிரதான அம்சமாகும். இப் போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முன்னெடுத்திருந்தார்.
இந்தப் பேரணியில் பங்கேற்ற தமிழ் மக்கள் கட்டாய தகனத்தினை எதிர்த்து குரல் கொடுத்தமை வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் உறவில் புதிய அத்தியாயத்திற்கு வித்திட்டது எனலாம்.
இந்த கவனயீர்ப்புப் போராட்டம் காத்தான்குடியை கடந்துசெல்லும் போது எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. இஸ்லாமிய சகோதரர்கள் செறிந்து வாழும் காத்தான்குடியில் திரளாக வந்து ஆதரவளித்தமைக்காக நன்றி தெரிவித்ததோடு “எப்படியாக ஜனாஸா எரிப்பிற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்கின்றோமோ அதே போல தமிழ் மக்களுடைய எல்லா அரசியல் உரிமைகளும் மீறப்படுவதற்கு எதிராக நீங்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
‘எரிக்காதே எரிக்காதே, ஜனாஸாக்களை எரிக்காதே’ என்ற கோஷத்துடன் புறப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யக்கூடாது என்று உரத்த குரலில் பேசினார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “முஸ்லிம்கள் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன, வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் வாழுகின்ற தமிழர்கள் உரிமை இழந்தவர்களாக இருக்கிறார்கள். இவற்றுக்கு எதிராக இந்தப்போராட்டங்கள் தொடரும்” என்றார். அதுமாத்திரமன்றி பாராளுமன்றத்திலும் அவர் ஜனாஸா எரிப்புக்கு எதிராக குரல் கொடுத்தார். முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றில் ஆற்றிய உரைகளும் முக்கியத்துவம்வாய்ந்தவை.
மதகுருக்களின் குரல்
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷத்தை முன்னிறுத்தி பெளத்த பிக்குகளில் ஒருசாரார் சகலரின் உடல்களும் எரிக்கப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கு மாத்திரம் விதிவிலக்களிக்க முடியாது என போர்க் கொடி தூக்கியிருந்தனர். இதற்காக பல ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தினர். அரச உயர்மட்டத்திற்கு அழுத்தங்களையும் வழங்கினர். எனினும் ஒரு பௌத்த மதகுரு முஸ்லிம்களுக்காக மனமிரங்கிக் குரல் கொடுத்தார். பொகவந்தலாவை ராஹுல தேரர் எனும் இளம் மதகுருவே இவ்வாறு முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவர் ஆவார்.
இவர் எங்களிடம் கருத்து தெரிவிக்கையில், “இறந்தவர்களின் உடலை உரிய முறையில் அடக்கம் செய்வது அவர்களது கடமை. அந்த உரிமையை இல்லாமலாக்குவது பாவமான செயலாகும். நான் இதற்காக குரல் கொடுத்தபோது எனக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் வந்தன. நான் அதைப்பற்றியெல்லாம் கணக்கில் கொள்ளவில்லை. எனது மனதை ஒருவர் நோகடிக்கும்போது எனக்கு எப்படி வலிக்குமோ அதே போலதான் இன்னொரு சகோதரரின் மனதை நோகடிக்கும்போது எனக்கு வலிக்கும். புத்த தர்மத்தின் போதனைகளை புரிந்து கொள்ளாமல் யாராவது பேசினால் எப்படி எனக்கு வலிக்குமோ, அதேபோல்தான் யாராவது முஹம்மது நபியின் போதனைகளைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்டால் அவர்களுக்கு வலிக்கும்’ என்றார்.
கட்டாய தகனத்திற்கு எதிராக ராஹுல தேரர் பேஸ்புக்கில பிரசாரம் மேற்கொள்ளும்போது, பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். வெவ்வேறு மதகுமார்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தனர். ஆனால், அவற்றை எல்லாம் துச்சமாக மதித்து ராஹுல தேரர் தொடர்ச்சியாக பிரசாரங்களை முன்னெடுத்தார். இதனூடாக தமிழ் பேசும் சமூகத்தின் மத்தியில் ராஹுல தேரர் அதிகமாக பேசப்பட்டதுடன் அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார்.
இந்து மதகுருவான தவத்திருவேலன் சுவாமி பி2பி போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்ற ஒருவராவார். இவர் போராட்டத்தின் பல இடங்களிலும் ஜனாஸா எரிப்புக்கு எதிராக குரல் கொடுத்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது நியாயமற்ற செயலாகும்” என தெரிவித்தார்.
அதேபோன்று பல கிறிஸ்தவ பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் கூட பொரளை தகனச் சாலைக்குச் சென்று வெள்ளைத் துணிகளை கட்டியதையும் இந்த இடத்தில் நினைவுப் படுத்த வேண்டும்.
மனித உரிமை ஆர்வலர்
தெரிவிப்பது என்ன?
கட்டாய தகனங்களை அரசாங்கம் அறிமுகம் செய்தபோது அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை முதன் முதலாக பதிவு செய்தவர் மனித உரிமை ஆர்வலர் ஷிரீன் ஸரூர் ஆவார். அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது முதல் கட்டாய தகனம் முடிவுக்கு கொண்டுவரும் வரை பல்வேறு சமயவத்தவர்களுடன் இணைந்து உயிரிழந்த ஜனாஸாக்களின் குடும்பத்தினர்களுக்கு உதவிகளைச் செய்தார். ருகி பெர்னாண்டோ மற்றும் இளங்கோவன் போன்ற மனித உரிமை ஆர்வலர்களை இணைத்துக்கொண்டு அடிப்படை உரிமை தொடர்பான வேலைகளில் ஈடுபட்டார்.
“வெள்ளைத்துணிகளை கட்டுவதற்கு முற்படும்போது, அதிகமாக சிங்களவர்களே எங்களோடு கைகோர்த்தார்கள். சிங்கள இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இதுபற்றிய தமது கருத்துக்களை ஊடகங்களுக்கு பகிரங்கமாக முன்வைத்தார்கள். சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்புகளை செய்தார்கள். இவை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தைச் செலுத்தின” என ஷிரீன் தெரிவிக்கிறார்.
“முஸ்லிம்களுக்கு அநீதி நடக்கிறது என்பதை தெரிந்து கொண்ட சிங்கள வைத்தியர்கள் எங்களோடு இணைந்து செயற்பட்டார்கள். அத்துடன் முஸ்லிமல்லாத சட்டதரணிகள்தான் மனுக்களை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்ற கடமைகளைச் சரிவர செய்யவும் துணையாக இருந்தார்கள். சுமந்திரன், புலஸ்தி ஹேமமாலி, விரான் கொரியா போன்ற சட்டத்தரணிகள் இன, மத வேறுபாடுகள் எதுவுமின்றி இலவசமாக செயற்பட முன்வந்தார்கள் என ஷிரீன் தெரிவிக்கிறார்.
அதேபோன்று உயிரியல் நிபுணர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, பேராசிரியர் மலிக் பீரிஸ் போன்ற நிபுணர்கள் கொவிட் தொற்றுக்குள்ளான சடலங்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீர் மாசடையாது என விஞ்ஞான ரீதியாக முன்வைத்த காரணங்களும் தேசிய ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்தன. இவ்வாறான நிபுணர்களின் துணிச்சலான கருத்துக்களும் அரசாங்கத்தின் நிபுணர் குழுவுக்கு பாரிய அழுத்தங்களைப் பிரயோகித்தன. இதுவும் அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குவதில் செல்வாக்குச் செலுத்தியதை மறுக்க முடியாது.
முன்மாதிரி தொடர வேண்டும்
கட்டாய தகனத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டது முஸ்லிம்களாக இருந்த போதிலும் முஸ்லிம்களுக்கு அடக்கம் செய்யும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க சகல சமய, சமூகத்தவர்களும் ஒன்றுபட்டுப் போராடினர். இது தற்போதைய இனவாத சூழலில் மிகச் சிறந்த முன்மாதிரியாகும். இதுவரை ஓட்டமாவடி பிரதேசத்தில் 70க்கும் அதிகமான சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் 2 கத்தோலிக்கர்களின் சடலங்களும் 1 பெளத்தரின் சடலமும் உள்ளடங்குகின்றன என்பது இப் போராட்டம் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி தமது உறவுகளை அடக்கம் செய்ய விரும்பிய சக மத்தவர்களுக்கும் கிடைத்த வெற்றியுமாகும்.
ஒரு சமூகத்திற்கு நெருக்கடி ஏற்படும்போது பாதிக்கப்பட்ட சமூகம் மாத்திரமே தனித்து நின்று போராட வேண்டும் என்ற நியதியில்லை. மாறாக அநீதிக்கு எதிராக சகலரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க கொடுக்க வேண்டும் என்ற செய்தியையே கட்டாய தகனத்திற்கு எதிரான போராட்டம் நமக்குச் சொல்கிறது.
அதேபோன்று முஸ்லிம் சமூகத்திற்கும் இதில் ஒரு முக்கிய செய்தி இருக்கிறது. அதுதான் அடுத்த சமூகங்களின் உரிமைசார் பிரச்சினைகளின்போது ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்காது அவர்களோடு கைகோர்த்து போராட வேண்டும் என்பதாகும். அந்த செய்தியை முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள், உலமாக்கள், அரசியல் தலைவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறோம்.- Vidivelli