சமூகம் ஒன்றை குற்றவாளிகளாகக் காண்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நீதியை மறுத்தல்
ஷ்ரீன் அப்துல் சரூர்
(பெண்கள் உரிமைகள் மற்றும் சமாதானச் செயற்பாட்டாளர்)
கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று மட்டக்களப்பின் சியோன் இவான்கலிக்கல் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் முப்பத்தியொரு பேர் தமது உயிர்களை இழந்தனர், அவர்களில் 14 சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இன்று வரை மூடப்பட்டுக் காணப்படும் அத்தேவாலயத்தின் கதவுகளில் “இராணுவத்தின் கட்டுமானத் தளம்” என்ற அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. பலியானவர்களின் படங்களைக் கொண்ட பதாதை உட்புறம் நோக்கித் திருப்பப்பட்டுள்ளது, வெளிப்புறமிருந்து அதனைக் காண முடியாது. அரசாங்கம் இது தொடர்பில் சிறிய அளவிலேயே செயற்படும் வேளை தமது குழந்தையை தாக்குதலில் பறிகொடுத்த சுதாவும் பிரபாவும் ஏனைய குடும்பங்களுடன் இணைந்து கல்லடிப் பாலம் அருகே இந்த ஏப்ரல் 21 இல் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பியுள்ளனர். அண்மையில் உள்ள காத்தான்குடியில் தாக்குதலுடன் தொடர்புடைய குடும்பங்கள் என அரச அதிகார சபைகளால் அடையாளப்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 130 முஸ்லிம் சிறுவர் சிறுமியர் சமூக ஒதுக்கலினால் அவதியுறுவதுடன் மிகவும் வறுமையான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் பாடசாலைகளில் இருந்து இடை விலகியுள்ளதுடன் சிலர் உணவுக்கு கூட சிரமப்படும் நிலையில் வாழ்கின்றனர்.
இங்கு ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம் பெற்று இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை, அத்துடன் அவர்களின் துயரம் மோசமான ஆட்சியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பப் பயன்படுத்தப்படுகின்றது. பொறுப்பானவர்களை வகை கூற வைப்பதை அரசு தாமதப்படுத்தும் அதே வேளை உரிய தொடர் செயன்முறைகள் எவையும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் அரசு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தண்டித்து வருகின்றது.
கடந்த மார்ச் 12 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் புதிய ஒழுங்கு விதிகளை அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் வெளியிட்டார். ‘வன்முறையான மட்டுமீறிய மதக்கொள்கைகளைக் கொண்டிருப்பதற்கெதிரான தீவிரமயமற்றதாக்குதல்’ எனத் தலைப்பிடப்பட்ட இவ்வொழுங்கு விதிகளில் “வெவ்வேறு சமுதாயத்தினரிடையே அல்லது இன அல்லது மதத் தொகுதியினரிடையே வன்முறையான அல்லது மத, இன அல்லது சமுதாயச் சுமுகமின்மைச் செயல்கள் புரியப்படுதலை அல்லது தீய எண்ண அல்லது பகைமை உணர்ச்சிகளை” விளைவிக்கின்ற அல்லது விளைவிப்பதற்கு உட்கருதுகின்ற ஆளொருவருக்கு புனர்வாழ்வளிப்பதற்காக “மீள ஒன்றிணைத்தல் நிலையங்களை” உருவாக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி பயங்கரவாதத் தடைச் சட்டம் ஏற்கனவே கொண்டுள்ள கடுமையான ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும்.
இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர் இன மற்றும் மதச் சிறுபான்மையினரை பாரிய அளவில் தடுத்து வைக்கும் நிலையங்களாக அமைந்துள்ள இரகசியமான “மீள் கற்பித்தல் நிலையங்களில் சீனாவின் உய்குர், கஸாகாஸ் மற்றும் ஏனைய முஸ்லிம்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அண்மைய வருடங்களில் முழு உலகும் அவதானித்தது. உய்குர் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் “மதத் தீவிரவாதச் சக்திகளால் மாசுபடுத்தப்பட்டுள்ளனர்” எனவும் அவர்களின் நடவடிக்கைகளுக்காக வெறுமனே தண்டிப்பதற்கு மேலதிகமாக அவர்கள் கோட்பாடு ரீதியாக சுத்தப்படுத்தப்பட வேண்டும் என சீன அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
சீனா அரசு மேற்கொள்ளும் வலிந்த தடுப்புக்காவல்கள், பயணத்தடைகள், மதச் செயற்பாடுகளை ஒடுக்குதல் மற்றும் பலவந்த குடும்ப கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றை ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் ‘இன அழிப்பு’ என வர்ணிக்கின்றன. ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா போன்றன இந்தத் தடுப்புக்காவல் கொள்கையை உருவாக்கிய கம்யூனிசக் கட்சி உறுப்பினர்களுக்கு தடைகளை விதித்துள்ளதுடன் சிங்ஜியாங் பிரதேசத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தக்காளி மற்றும் பருத்தி என்பனவற்றுக்கு தடைகளையும் விதித்துள்ளன.
சிங்ஜியாங் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் கொள்கைகளை இலங்கையின் சிரேஷ்ட அதிகாரிகள் நியாயப்படுத்தும் நிலையில் இலங்கையும் அவ்வழியினைப் பின்பற்றும் எனத் தோன்றுகின்றது. சீனாவின் “மீள் கல்வி வழங்கும் நிலையங்கள்” போன்று புதிய ஒழுங்கு விதிகளின் கீழ் உருவாக்கப்படவுள்ள முகாம்கள் தெளிவான நடவடிக்கைகளுக்கு தண்டனை வழங்குவதற்கும் அப்பாற்சென்று சிந்தனைகளைத் தடை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன. தற்கால தீவிரமயமற்றதாக்குதல் வர்த்தமானி எதனைத் தடை செய்கின்றது என்பதில் தெளிவற்றதாக உள்ளதுடன் ஆதாரங்களற்ற முறையில் காரண காரியமின்றி ஒருவரை குற்றமுள்ளவர்களாக மாற்றுவதற்கு ஏற்றதாக உள்ளது. இது பரந்த பிரயோகம் மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படல் என்பவற்றுக்கு வழிவகுக்கும். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இந்த விடயங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளதுடன் அவ்வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இப்புதிய ஒழுங்குவிதிகள் எவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக தன்னிச்சையாக அமுல்படுத்தப்படும் எனக் காண்பது இலகுவானது. அவர்கள் ஏற்கனவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடியில் மாத்திரம் 15 பெண்கள் மற்றும் 02 குழந்தைகள் உள்ளடங்கலாக 125 முஸ்லிம்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 2019 தாக்குதல்களை அடுத்துக் கைது செய்யப்பட்ட அவர்கள் சன நெரிசல் மிக்க தடுப்புக் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைகள் அல்லது சட்ட உதவிக்கான அணுகல் எவையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னாரில் முஸ்லிம் கவிஞரான அஹ்னாப் ஜெஸீம் ‘தீவிரவாதத்தை’ ஊக்குவித்ததற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்த அதிகாரிகள் அவரின் கவிதையை ஒரு போதும் வாசித்திருக்கவில்லை. அக்கவிதை தீவிரவாதத்தை எதிர்ப்பதாகவே அமைந்திருந்தது. இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து எழுதப்பட்ட அவரது கவிதையுடன் இணைந்திருந்த தலிபான் பாணியில் உடையணிந்திருந்த நபரொருவரின் புகைப்படம் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இன்றுவரை ஜெஸீம் நீதிபதியொருவரின் முன் முன்னிலைப்படுத்தப்படவில்லை. மிகவும் மோசமான சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவர் எலிக் கடிகளுக்கும் உள்ளாகியுள்ளார். தனது சட்டத்தரணியுடன் உரையாடுவதற்கு அவருக்கு 20 நிமிட அவகாசமே வழங்கப்பட்டதுடன் அவ்வுரையாடலை அதிகாரிகள் ஒலிப்பதிவு செய்தனர். இது இலங்கையின் சட்ட வழிமுறைக் கொள்கைகளை மீறும் செயலாகும்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 55 வயது நிரம்பிய ஜுபைதியா தற்போது தங்காலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அவருக்கு சிகிச்சைக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பிரச்சாரத்தை ஒருமுறை செவியுற்றதாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே முகாமில் 15 மாதங்களேயான யூனுஸ் மற்றும் 12 மாதங்கள் நிரம்பிய இமாரா ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமது தாய்மாருடன் மழலைப் பருவத்தை தடுப்புக்காவலில் கழிக்கின்றனர். யூனுஸின் கையில் எரி காயம் ஏற்பட்ட போது அது எவ்வாறு ஏற்பட்டது என அவனது தாயாரினால் தனது உறவினர்களிடம் கூற முடியவில்லை, ஏனெனில் அங்கு வருகை தரும் உறவினர்களுடன் தடுப்புக்காவலில் உள்ளோர் தனியாக உரையாடுவது தடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகத்தின் நிலை மோசமடைந்து காணப்படும் நிலையில் தீவிரமயமற்றதாக்கும் புதிய ஒழுங்குவிதிகள் நிலைமைகளை மேலும் மோசமாக்குகின்றன. இவ்விதிகள் நபர் ஒருவரின் வார்த்தைகளை அல்லது செயற்பாடுகளை அதிகாரி ஒருவர் எதேச்சையாக (அத்துடன் பெரும்பாலும் பிழையாக) புரிந்து கொள்ளும் நிலையில் அவரைத் தடுத்து வைப்பதற்கான அதிகாரத்தை கோவைப்படுத்தி வெளிப்படுத்துகின்றது.
‘புனர்வாழ்வு’ என்பதால் கருதப்படுவது என்ன மற்றும் அதனை அடைவதற்கு பயன்படுத்தப்படும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி இங்கு எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், அபாயகரமாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் காணப்படும் நீதித்துறை மேற்பார்வை மற்றும் முன்பாதுகாப்புகள் என்பன இவ்வொழுங்கு விதிகளினால் அகற்றப்பட்டுள்ளன. பொலிசார், ஒருவரைக் காரணம் தெரிவிக்காமல் கைது செய்ய முடிவதுடன் அவர்கள் விசாரணைகளை அந்நபரைக் கைது செய்ததன் பின்னர் ஆரம்பிக்கலாம். தடுப்புக் காவலில் உள்ளோருக்கு சட்ட ஆலோசனை தடுக்கப்பட முடியும் அல்லது அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சான்றினை பெறுவதற்கான உரிமையும் மறுக்கப்பட முடியும். சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த நபர் புனர்வாழ்வுக்குப் பொருத்தமானவர் எனக் கருதினால் நீதிவான் ஒருவரின் அனுமதியுடன் குறித்த நபர் ஒரு வருடத்துக்கு (அது இன்னொரு வருடத்துக்கு நீடிக்கப்படும் சாத்தியமும் உண்டு) தடுத்து வைக்கப்படலாம். பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவினால் குவான்டனாமோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் கூட எதிரிப் போராளிகள் என்ற தமது நிலையினை சவாலுக்கு உட்படுத்தவும் தமது தொடர்ச்சியான தடுத்து வைப்புக்கு எதிராக ஆட்கொணர்வு எழுத்தாணையைக் கோரவும் உரிமை உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். இலங்கையில் தடுத்து வைக்கப்படும் இலங்கைப் பிரஜைகளுக்கு அவ்வாறான அடிப்படை பாதுகாப்புகள் கூட இல்லாத நிலை உருவாகலாம்.
இவ்வாறான பாரிய எண்ணிக்கையான தடுத்து வைப்புகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கும் இடையில் எவ்விதத் தொடர்புகளுமில்லை. முஹம்மது நவ்பர், முஹம்மது றிஸ்கான் மற்றும் அஹமது மில்ஹான் ஆகிய மூன்று பேரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தூண்டியதாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கடந்த நவம்பர் 12, 2020 அன்று அமெரிக்க லொஸ் ஏன்ஜல்ஸ் பெடரல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இம்மூவரும் இலங்கைப் பொலிசாரின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் (TID) தடுத்து வைக்கப்பட்டுள்ளமை பரவலாக அறியப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஏப்ரல் 20, 2021 அன்றே முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அரசாங்கம் வெளியிட்ட பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவோர் பட்டியலில் 400 இற்கும் மேற்பட்ட மனித உரிமை சார்ந்து வாதிடலில் ஈடுபடும் புலம் பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ள நிலையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என அமெரிக்காவினால் சுட்டிக்காட்டப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட மூவரினது பெயர்களும் உள்ளடக்கப்படாமல் இருப்பது வியப்புக்குரியதாகும். இது இவ்வாறிருக்க, கடந்த வாரம் காத்தான்குடியில் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த முஹம்மது இர்பான் என்ற பெயர் கொண்ட நபர் பிரதான தற்கொலைத் தாக்குதல் நபர்களில் ஒருவருக்கு தனது முச்சக்கர வண்டியில் உணவு கொண்டு சென்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் இதற்கு முன்னரும் புனர்வாழ்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன, அவை எமக்கு வழங்கியுள்ள உதாரணங்கள் ஆழ்ந்த கரிசனை கொண்டனவாக அமைந்துள்ளன. யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஒரு நாளாவது LTTE அமைப்பின் உறுப்பினராக இருந்த எவரும், அவர் வலுக்கட்டாயமாக ஆட்சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்படும் நிலை காணப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் மற்றும் சிறுவர்கள் அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் பலர் காணாமற் போயினர். ஜெயக்குமாரி என்ற தமிழ்த்தாய் காணாமற் போன தனது மகன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் LTTE போராளிகள் உள்ள புகைப்படம் ஒன்றில் தோன்றியதைக் கண்டறிந்தார். அவர் அதற்கான பதில்களைக் கோரினார், தனது மகன் அரசாங்க புனர்வாழ்வு முகாம் ஒன்றில் இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார், அவர் அப்போதைய ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையையும் சந்தித்தார். ஜெயக்குமாரி பயங்கரவாத சந்தேக நபர் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து அரசாங்கம் அவரைக் கைது செய்து அமைதியாக்கியது. ஒரு வருடத்தை சிறையில் கழித்த ஜெயக்குமாரியின் பதின்ம வயது மகள் அநாதை இல்லம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டார். பல குடும்பங்களுக்கு “புனர்வாழ்வு” என்பது காணாமல் ஆக்கப்படுவதற்கு ஒத்ததாகவே அமைந்திருந்தது. அவற்றுக்கான விடைகளைத் தேடுவது தண்டனைக்கு உள்ளாக்கப்படும் விடயமாக அமைந்திருந்தது.
பல தமிழ்ப் பெண்கள் அறிந்து கொண்டதன் படி புனர்வாழ்வு முகாம்களுக்கு செல்பவர்கள் இன்னுமொரு விலையினையும் கொடுக்க வேண்டியுள்ளது. பெண்கள் குழுக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வடக்கிலும் கிழக்கிலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண் போராளிகளின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவும் நோக்கில் அவர்களுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றனர். இது விசேடமாக 2010 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதிகளில் நிகழ்ந்தது. அதிகமான பெண்களுக்கு, விசேடமாக யுத்தத்தினால் அங்கவீனமுற்றவர்களுக்கு பாரம்பரியமான தமிழ் சமூகத்துடன் மீளிணைவதற்கான வழிகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. பாரம்பரிய பால்நிலை நெறிமுறைகளை சவாலுக்கு உட்படுத்தும் பாதையைத் தெரிவு செய்த அவர்களுக்கு சமூக வாழ்வு சவால் மிக்கதாகவே அமைந்துள்ளது. சமூகத்தினால் ஒதுக்கப்படும் அவர்கள் திருமணம் செய்தல், பிள்ளைகளை வளர்த்தல் மற்றும் கலாச்சாரத்தினால் ஏற்கப்படாத வேலைகளைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். புனர்வாழ்வுக் கொள்கைகள் உண்மையில் அவர்களின் சவால்களை மேலும் கடினமாக்கியுள்ளது. முன்னாள் பெண் போராளிகளை இளம் இராணுவ வீரர்கள் எப்போதும் சந்திக்க வருவதால் சமூகம் அவர்களை ஒழுக்கமற்றவர்களாக நோக்குவதுடன் எதிர்காலத்தில் தாமும் உளவு பார்த்தலுக்கு உட்படுத்தப்படுவோம் என்ற அச்சத்தினால் எவரும் அவர்களுடன் நெருங்காத நிலையும் காணப்படுகின்றது. “புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்” என்ற அடையாளம் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதுடன் ஏற்கனவே ஓரங்கட்டப்பட்ட சமுதாயத்தினுள் மேலும் பிரிவினைகளையும் ஏற்படுத்துகின்றது, இது குடும்பங்கள் மற்றும் சமூகத்தை பிளவுபடுத்துகின்றது.
நேற்று தமிழர்கள் இலக்கு வைக்கப்பட்டனர், இன்று முஸ்லிம்களுக்கு அந்நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவின் உய்குர் பிரதேசத்தைச் சேர்ந்த அனார் சாபித், தான் சீனாவின் மீள் கல்வி வழங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட போது எவ்வாறு தனது குடும்பம் “கவனிக்கப்படும் நபர்கள்” என முத்திரை குத்தப்பட்டது என விபரிக்கின்றார். அவரது உறவினர்கள் அதிகாரிகளுக்கு மதுபான விருந்து வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் (இது முஸ்லிம்களின் வழக்காறுகளுக்கு முரணானது) அத்துடன் வாராந்த கொடியேற்ற நிகழ்வுகளுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர் (தமது நாட்டுப்பற்றை காண்பிப்பதற்கு). சாபித் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவளின் முன்னாள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவளுடன் இடைவெளியைப் பேணினர், அவளுடன் சேர்வது தம்மையும் முகாம்களுக்குள் தள்ளி விடும் என அவர்கள் அஞ்சினர் (New Yorker (Feb. 26, 2001), supra). இதையொத்த போக்குகளை இங்கும் அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம் சமூகம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களை ஒதுக்குகின்றது. அவ்வாறானவர்கள் மதத் தீவிரவாதத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக அல்லது குற்றப் புலனாய்வுத் துறையின் தேவையற்ற பார்வைகள் தம்மீது விழுவதைத் தவிர்க்கும் நோக்கில் மக்கள் இவ்வாறு செயற்படுகின்றனர். மாவனல்லையில் (கேகாலை மாவட்டம்) அதிக எண்ணிக்கையான முஸ்லிம்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்கள் குரலற்ற நிலை மற்றும் தனிமைப்படுத்தல் என்பவற்றால் துயருறுகின்றன. அவர்களின் சொந்தச் சமூக மக்கள் கூட அவர்களைப் பற்றிப் பேசுவதற்கோ அல்லது அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க விரும்புவோருக்கு வீடுகளைக் காண்பிக்கவோ அச்சத்தினால் பின்வாங்கினர். இந்த வகையில் புனர்வாழ்வு முகாம்கள் தடுப்புக்காவலில் உள்ளவரை மாத்திரமன்றி அவனது அல்லது அவளது பரந்த சமூகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. அத்துடன், நீண்ட கால தடுப்பு வைப்புகள் காணாமல் ஆக்கப்படுதலையும் ஏற்படுத்துகின்றன, இதன் விளைவாக சில குடும்பங்கள் உடைவதுடன் அவர்கள் எப்போதும் விடைகளைத் தேடிக்கொண்டிருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தீவிரமயமற்றதாக்குதல் முதலாவது படிநிலை மாத்திரமே. கடந்த ஏப்ரல் 13 அன்று அரசாங்கம் 11 நிறுவனங்களை தேசிய பாதுகாப்பு அடிப்படையில் தடை செய்யும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்ட ஒழுங்கு விதிகளை அறிமுகம் செய்தது. ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் குவைதா அமைப்புகளுடன் வேறுபட்ட தவ்ஹீத் ஜமாத் குழுக்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புள்ளவை எனக் கருதப்படும் கொடை நிறுவனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இக்குழுக்களில் சில பயங்கரவாதத்துடன் நிச்சயமான தொடர்புகளைக் கொண்டிருக்கக் கூடும், அத்துடன் அவ்வாறான தொடர்புகள் பற்றி ஒழுங்கான மற்றும் சட்ட ரீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எவ்வாறாயினும், 11 முஸ்லிம் நிறுவனங்கள் தடை செய்யப்பட்டமை அவற்றினைப் பின்பற்றிய பலர் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படும் அச்சுறுத்தலையும் உருவாக்கியுள்ளது. உள்ளூர் மதக் குழுக்களை சர்வதேச பயங்கரவாத அமைப்புகளான ISIS மற்றும் அல் குவைதா போன்றவற்றுடன் ஒன்றாகக் கருதுவது மேற்குலகில் வளர்ந்து வரும் இஸ்லாத்தின் மீதான வெறுப்புணர்வை (இஸ்லாமோபோபியா) இலங்கையிலும் வளர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் உத்தியொன்றாகவே நோக்க வேண்டியுள்ளது. மேலும், இப்பட்டியலின் உள்ளடக்கம் மாறுவதற்கும் இடமுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 16 தமிழர் புலம் பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 தனி நபர்கள் “பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல்” என்ற அடிப்படையில் தடை செய்யப்பட்டன. அடுத்து வந்த அரசாங்கத்தினால் பல பெயர்கள் அப்பட்டியலில் இருந்து அகற்றப்பட்டன. அவை மீண்டும் இவ்வருடம் மீள பட்டியலில் உட்புகுத்தப்பட்டன. இவ்வருடம் வெளிவந்த ஆவணத்தில் முதல் தடவையாக 50 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பெயர்கள் இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டன. அவ்வாறு தடை செய்யப்பட்ட பின்னர் தனிநபர்கள் தமது தடையை சவாலுக்கு உட்படுத்துவதற்கு, பட்டியல்படுத்தப்பட்ட நிறுனங்களுடனான தமது உறுப்புரிமையை மறுப்பதற்கு, அல்லது உண்மையில் குறித்த குழு பயங்கரவாதத் தொடர்புகளைக் கொண்டுள்ளதா எனக் கேள்விகளை எழுப்புவதற்கு சில வழிகள் மாத்திரமே காணப்படுகின்றன. எந்தவித நீதி மேற்பார்வையுமின்றி அவர்களின் சுதந்திர நடமாட்டம் மற்றும் ஒருங்கிணைதல் என்பவற்றுக்கான உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்றது. இந்நிலை ஏற்படுவதற்கு அரசாங்கம் தேசிய பாதுகாப்பை மேம்படுத்தல் என்ற கூற்றே போதுமானதாக உள்ளது.
தற்காலத்தில் ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் அல்லது சுய தணிக்கையினைப் பின்பற்றுதல் போன்ற தெரிவுகளையே மேற்கொள்கின்றனர். விசாரணையாளர்கள், அரசியல், சமூக மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பரந்த தடை செய்யும் அதிகாரங்கள் எதிர்ப்புகளை இல்லாமலாக்க பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியம் தென்படுகின்றது. குழுவொன்றின் தடையை சவாலுக்கு உட்படுத்த, அல்லது குற்றம் சாட்டப்பட்ட உறுப்புரிமைக்கு எதிராக வாதிட குறைந்த சிவில் தளம் அல்லது உத்தியோக பூர்வ பொறிமுறைகள் காணப்படாத நிலையில் அண்மைய ஒழுங்கு விதிகள் அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளை மட்டுப்படுத்தல் என்பவற்றுக்கான வழிகளாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது.
சுருக்கமாகக் கூறுவதாயின், பயங்கரவாதத் தடைச் சட்டம் மோசமானது, மேலும் அண்மைய தீவிரமயமற்றதாக்கல் ஒழுங்குவிதிகள் அதை இன்னும் மோசமாக்கியுள்ளது. இலங்கை அபாயகரமான வழியொன்றில் பயணிக்கின்றது, உண்மையான பயங்கரவாத சந்தேக நபர்கள் வகைப் பொறுப்புக் கூறுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டு சிறுபான்மைச் சனத்தொகை ஒன்று பாரிய அளவில் தண்டிக்கப்படுகின்றது.
மோசமான தாக்குதல் நடந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கெளரவத்துடன் நடத்தப்படுவதுடன் முறையான நீதி துரிதமாக வழங்கப்படவும் வேண்டும்.- Vidivelli