பௌத்த சிங்கள சினேக மனோபாவம் இஸ்லாமோபோபியாவாகியது ஏன்?

0 555

கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

இது ஒரு வர­லாற்றுக் கதையைக் கூறும் கட்­டுரை. இயற்­கை­யா­கவே சினேக மனப்­பான்­மை­யுள்ள ஒரு சமூகம் வர­லாறு இழைத்த காயங்­களாற் புண்­பட்டு, சிலரின் தூண்­டு­தல்­க­ளுக்கும் விஷமப் பிர­சா­ரங்­க­ளுக்கும் ஆளாகி, ஈற்றில் தன்­னோடு ஒட்டி வாழ்ந்த இன்­னொரு சமூ­கத்­தினைப் பழி­வாங்கத் துணிந்த ஒரு கதை. அன்பும் சகிப்பும் மனித உறவும் மலிந்து காணப்­பட்ட பௌத்த சிங்­கள சமூகம் தம்­மி­டையே ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக அன்­னி­யோ­னி­யமாய் வாழ்ந்த முயற்­சி­யா­ளர்­க­ளான முஸ்­லிம்­கள்மேல் வெறுப்பும் அச்­சமும் கொண்ட ஒரு சோக மாற்­றத்தின் வர­லாற்றுச் சுருக்கம். அதனை விப­ரிக்­குமுன், இஸ்­லா­மோ­போ­பியா என்றால் என்ன அது எங்­கி­ருந்து உரு­வா­கி­யது என்­பதன் சுருக்­கத்தை அறி­ய­வேண்டும்.

தமிழ் மொழியில் வெறுப்பு என்ற வார்த்தை உண்டு. அதே­போன்று அச்சம் என்ற வார்த்­தையும் உண்டு. அவை இரண்­டுக்­கு­மி­டையே நேர­டி­யான உறவு கிடை­யாது. வெறுப்பு ஏற்­ப­டு­வதால் அச்சம் உண்­டா­வதும், அச்சம் உண்­டா­வதால் வெறுப்பு ஏற்­ப­டு­வதும் ஒரு நிய­தி­யல்ல. ஆனால், அவை இரண்டும் சேர்ந்து உரு­வாக்கும் மனோ­நி­லையை உணர்த்­தக்­கூ­டிய ஒரு வார்த்தை தமிழில் இல்லை. அக­ரா­தியைப் புரட்­டினேன், காண முடி­ய­வில்லை. பல பண்­டி­தர்­க­ளிடம் கேட்டேன், கையை விரித்­தார்கள். எனவே ஆங்­கி­லத்தில் அந்த உணர்வை வெளிப்­ப­டுத்தும் ஒரு வார்த்­தை­யாக போபியா என்ற சொல்லை பல விற்­பன்­னர்கள் உப­யோ­கிக்­கின்­றனர். அந்தச் சொல்­லையே தமி­ழாக்கி, இஸ்­லாத்­தின்­மே­லுள்ள வெறுப்­பையும் அச்­சத்­தையும் வெளிப்­ப­டுத்தும் இஸ்­லா­மோ­போ­பியா என்ற ஆங்­கிலப் பெய­ரையே இங்கு நுழைத்­துள்ளேன். இஸ்­லாத்தைப் பின்­பற்­று­ப­வர்­க­ளெல்லாம் முஸ்­லிம்கள். ஆகவே இஸ்­லா­மோ­போ­பியா என்றால் இஸ்­லாத்­தின்­மீதும் அதனைப் பின்­பற்றும் முஸ்­லிம்­கள்­மீதும் உள்ள வெறுப்பும் அச்­சமும் என்­பதே பொருள்.

இஸ்­லா­மோ­போ­பி­யாவின் தோற்றம்
இஸ்­லா­மோ­போ­பியா என்­பது உண்­மை­யி­லேயே ஓர் ஐரோப்­பிய நோய். அது ஏழாம் நூற்­றாண்டில் உத­ய­மாகி ஒரு நூற்­றாண்­டுக்குள் பிரான்சின் எல்­லை­வரை பரந்­து­விட்ட இஸ்­லாத்தைக் கண்டு கதி­க­லங்­கி­யதால் கிறிஸ்து இரா­ஜி­யத்­துக்கு இப்­பு­திய மதத்­தின்மேல் ஏற்­பட்ட வெறுப்­பி­னாலும் அச்­சத்­தி­னாலும் உண்­டா­னது. இத­னோடு சேர்ந்த இன்­னு­மொரு உண்மை என்­ன­வெனில் இஸ்லாம் தோன்­று­வ­தற்கு முன்னர் ஐரோப்பா என்ற ஒரு பெயர் இருக்­கவே இல்லை. எனவே இஸ்லாம் தோன்­றி­யி­ரா­தி­ருந்தால் ஐரோப்­பாவும் தோன்­றி­யி­ருக்­கா­தென்றும் கரு­தலாம். வேறொரு கோணத்­தி­லி­ருந்து நோக்­கினால் இஸ்­லாத்தை எதிர்ப்­ப­தற்­கா­கவே ஐரோப்­பாவும் உரு­வாக்­கப்­பட்­டது. என­வேதான் முஸ்­லிம்­க­ளுக்கும் ஐரோப்­பி­ய­ருக்கும் இடையே வளர்ந்த உறவு போரும், குரு­தியும் கலந்த ஓர் உறவு. இடை­யி­டையே பொரு­ளா­தார நல­னுக்­கா­கவும் ராஜ­தந்­தி­ரத்­துக்­கா­கவும் காலத்­துக்குக் காலம் நட்­பு­றவு நில­வி­ய­போதும் ஒட்­டு­மொத்­த­மாக நோக்கின் ஐரோப்பா இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் எதி­ரி­யா­கவே கணித்து வந்­துள்­ளது.

அந்த எதிர்ப்பு பதி­னெட்டாம், பத்­தொன்­பதாம் நூற்­றாண்­டு­க­ளுக்குப் பிறகு, அதா­வது முஸ்லிம் நாடுகள் ஐரோப்­பி­யரின் குடி­யேற்ற நாடு­க­ளாக மாறி­ய­பின்னர் ஒரு புதிய தோற்­றத்தில் வெளிப்­ப­ட­லா­யிற்று. அந்தக் காலப்­ப­கு­தி­யி­லேதான் ஐரோப்பா என்ற பெயர் ஒரு குறிப்­பிட்ட நிலப்­ப­ரப்பின் பெய­ராக மட்டும் இருக்க, ஐரோப்பா அது­வரை வகித்த இடத்தை மேற்கு என்ற பெயர் பற்­றிக்­கொண்­டது. ஐரோப்­பா­வுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையே இருந்த உறவு அதற்குப் பிறகு மேற்­குக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையே உள்ள உற­வாகத் தோற்றம் பெற்­றது. அது­மட்­டு­மல்ல, பதி­னெட்டாம் நூற்­றாண்­டுக்­குப்பின் மேற்கின் குடி­யேற்ற நாடு­க­ளாக முஸ்லிம் நாடுகள் மாறத் தொடங்­கி­யதும் இஸ்­லா­மோ­போ­பி­யாவின் வெளித்­தோற்­றமும் மாற­லா­யிற்று. போரும் குரு­தி­யு­மாக வளர்ந்த உறவு இப்­போது முதல் எஜமான் அடிமை உற­வாக மாறி, இஸ்­லா­மோ­போ­பியா கீழைத்­தே­ய­வா­தி­களின் எழுத்துப் படைப்­பு­க­ளிலும், அவர்கள் தீட்­டிய வண்ண ஓவி­யங்­க­ளிலும், ஏனைய கலை வடி­வங்­க­ளிலும் ஓர் இழி­வு­சி­றப்­புடன் மிளிரத் தொடங்­கி­யது.

அதன்பின் இரு­பதாம் நூற்­றாண்டில் முஸ்லிம் நாடுகள் அர­சியல் விடு­த­லை­ய­டைந்து தமது பொரு­ளா­தா­ரங்­களைக் கட்­டி­யெ­ழுப்ப முற்­ப­டு­கையில் இஸ்­லா­மோ­போ­பியா தொடர்ந்து செயற்­பட்டு அந்த நாடு­களை எழும்­ப­வி­டா­வண்ணம் பல வழி­களில் தடுத்­தது. பசியும், பட்­டி­னியும், வறு­மையும், நோயும், இலட்­சோ­ப­லட்சம் சாதா­ரண முஸ்­லிம்­களைக் கௌவத் தொடங்க அதி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காகத் தாய்­நாட்டை விட்டு வெளி­யேறி மேற்கு நாடு­க­ளுக்குள் முஸ்­லிம்கள் தொழில் தேடியும் புக­லிடம் கேட்டும் நுழையத் தொடங்­கி­ய­போது இஸ்­லா­மோ­போ­பியா மீண்டும் அதன் கோர­வ­டி­வத்தைக் காட்­ட­லா­யிற்று. ஐரோப்­பாவின் நோயாகத் தோன்­றிய இஸ்­லா­மோ­போ­பியா மேற்கின் நோயாக மாறி இன்னும் அது தொடர்­கின்­றது.

இலங்­கையில் இஸ்லாம்
அன்­றைய ஐரோப்­பா­வுக்கும் இஸ்­லாத்­துக்கும் இடையே நில­விய போரும் குரு­தியும் நிறைந்த உற­வுடன் மத்­தி­ய­கால பௌத்த இலங்கை எவ்­வாறு முஸ்­லிம்­க­ளையும் அவர்கள் பின்­பற்­றிய இஸ்­லாத்­தையும் நேசக்­கரம் நீட்டி அர­வ­ணைத்­தது என்­பதை ஒப்­பி­டும்­போது உலக வர­லாற்­றி­லேயே இலங்­கையின் புகழ் இம­யத்தைத் தொட்டு நிற்­கி­றது. ஒரு சிறு­பான்மை முஸ்லிம் இனத்­த­வரை முஸ்லிம் அல்­லாத பெரும்­பான்மை இன­மொன்று எந்த அள­வுக்கு மதிப்­பு­டனும் கௌர­வத்­து­டனும் தம்­முடன் இணைத்துக் கொண்­டது என்­ப­தற்கு வர­லாற்றில் வேறு உதா­ர­ணங்­களே இல்­லை­யெனத் துணிந்து கூறலாம்.

இலங்­கையின் வாசனைத் திர­வி­யங்­களை ஐரோப்­பி­யரின் சமையற் கூடங்­க­ளுக்குள் நுழைத்­த­வர்கள் முஸ்­லிம்கள். இலங்­கையின் நவ­ரத்­தி­னங்­களும் மாணிக்­கங்­களும் கலீ­பாக்­களின் மாளி­கை­க­ளையும் மன்னர் குலத்­தி­னரின் ஆடை அணி­க­லன்­க­ளையும் அலங்­க­ரித்­ததும் முஸ்­லிம்­க­ளா­லேயே. சம­ன­ல­கந்தை மலைக்­குன்றின் பாதச் சுவ­டு­களை ஆதி­ம­னிதன் ஆதமின் சுவ­டு­க­ளெனக் கருதி அதனைத் தரி­சிக்கப் படை­யெ­டுத்த முஸ்லிம் சூபி இறை­நே­சர்­களே இலங்­கையின் முத­லா­வது வெளி­நாட்டுச் சுற்­று­லாப்­ப­ய­ணி­க­ளாவர். இவ்­வாறு அன்­றைய வல்­ல­ர­சாக விளங்­கிய இஸ்­லா­மிய கிலா­பத்­துடன் இலங்­கையின் உறவை வளர்க்­க­வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான் மன்னன் புவ­னே­க­பா­குவும் எகிப்தின் ஆளு­ன­ருக்கு எழு­திய ஓலை­யொன்றில், “இலங்­கைதான் எகிப்து, எகிப்­துதான் இலங்கை” என்று குறிப்­பிட்டான்.

பொருட்­செல்வம் தேடி வியா­பா­ரி­க­ளாக வந்த முஸ்­லிம்­களை நிரந்­த­ர­மா­கவே குடி­ய­மர்த்தி அவர்­களை இலங்­கை­ய­ராக மாறு­வ­தற்கு வழி­ச­மைத்­தனர் இந்­நாட்டின் பௌத்த மன்­னர்­களும் அவர்­களின் குடி­மக்­களும். எவ்­வாறு அப்­பா­சியக் கலீபா ஹாறுன் அல் றஷீத் பரா­ம­கியர் என்ற பௌத்த குடும்­பத்­துக்கு அவ­ரது ஆட்­சி­யிலே மிக உயர்ந்த பத­வி­களைக் கொடுத்­தாரோ அதே­போன்று இலங்­கையின் பௌத்த மன்­னர்­களும் முஸ்லிம் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு அரச பதவிகள் வழங்கினர். இவ்வாறு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்களுக்கு நேசக்கரம் நீட்டி அவர்களுடன் இணைந்து வாழ்ந்த பௌத்த இனம் ஏன் அண்மைக்காலத்தில் அதுவும் குறிப்பாக 2009க்குப் பின் அவர்களை எதிரிகளாகக் கருதி ஐரோப்பிய இஸ்லாமோபோபியா வியாதிக்கு ஆளாகிற்று? அவ்வாறானமைக்கு முஸ்லிம்களும் ஒரு காரணமா? இது தொடர்பாக, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதாவது, 1915 இல் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தையும் ஆயிரம் வருட சினேக உறவில் ஏற்பட்ட ஒரு கீறலாகத்தான் கருதவேண்டும். ஏனெனில் அதனால் ஏற்பட்ட காயங்கள் ஒரு நொடியில் மாறி வழமையான உறவு புதியதோர் உத்வேகத்தடன் வளரலாயிற்று. அவ்வாறாயின் ஏன் இந்த மாற்றம்?
(தொடரும்) – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.