சிறுபான்மை மக்களை இலக்குவைத்து பயங்கரவாத சட்டத்தை பயன்படுத்தாதீர்
சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. எனினும் சிறுபான்மையினரை இலக்குவைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்று சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் இடம்பெற்று இருவருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதனை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச்சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் சுமார் 250 இற்கும் அதிகமானோரைக் காவுகொண்ட ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் இடம்பெற்று இருவருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. அந்தக் குண்டுத்தாக்குதல்களில் தமது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எமது இரங்கலைத் தெரிவிக்கின்றோம். அதேவேளை எந்தவொரு சமூகத்தையும் அடக்குமுறைக்கு உட்படுத்தக்கூடிய வெறுப்புணர்விற்கு எதிராக ஒன்றுபட வேண்டும்.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அவ்விசாரணை சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை விமர்சகர்களையும் சிறுபான்மையினரையும் இலக்குவைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எவ்வித விசாரணைகளுமின்றி அவர்களைத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் போன்ற மிகவும் மோசமான சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தக்கூடாது. அதனை மறுபரிசீலனை செய்வதற்கும் முடிவிற்குக் கொண்டுவருவதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.- Vidivelli