இனநல்லுறவுடன் மேற்குசார் மீட்சியா? இனமோதலுடன் சீனம்சார் சூழ்ச்சியா?

ஜெனிவாவின் விஷப் பரீட்சை

0 472

கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

கடந்த மாத இறு­தியில் ஜெனி­வாவில் நடை­பெற்ற ஐ. நா. மனித உரி­மைகள் சபையின் இலங்கை மீதான தீர்­மானம் 22 நாடு­களின் ஆத­ர­வு­டனும் 11 நாடு­களின் எதிர்ப்­பு­டனும் 14 நாடு­களின் நடு­நி­லை­மை­யு­டனும் நிறை­வே­றி­யது. இரு­பத்­தைந்து நாடுகள் அந்தத் தீர்­மா­னத்­துக்குச் சார்­பாக வாக்­க­ளிக்­கா­த­தனால் அது இலங்­கைக்குக் கிடைத்த வெற்­றி­யென வெளி­நாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஒரு வினோ­த­மான கணக்குப் போட்­டுள்ளார். அந்தக் கணக்­கின்­படி பார்த்தால் கடந்த ஜனா­தி­பதித் தேர்தலில் வெற்­றி­பெற்றவர் கோத்­தா­பய ராஜ­பக்ச அல்ல சஜித் பிரே­ம­தாச என்­ப­தையும் அவர் ஏற்­றுக்­கொள்­வாரா? எனினும், குணவர்த்தனவைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் பீரிஸ் அந்தத் தீர்­மானம் சட்­டத்­துக்கு முர­ணா­னது என்றும், அதே பாணியில் ஜனா­தி­பதி கோத்­தா­பய அந்தத் தீர்­மா­னத்­துக்குச் சுதந்­திர நாடான இலங்கை மசியத் தேவை­யில்லை என்றும் வீராப்புப் பேசினார். இவை­யெல்லாம் பௌத்த சிங்­கள வாக்கு வங்­கியைக் குறி­வைத்துக் கொட்­டிய வார்த்­தைகள் என்­பதை விஷ­ய­ம­றிந்த வட்­டா­ரங்கள் நன்­கு­ணரும். என­வேதான் சர்வதேச அர­சியல் விவ­கா­ரங்­களில் ஈடு­பட்ட அனு­ப­வ­சா­லி­களும் அந்­தத்­து­றையில் தேர்ச்சி பெற்ற அர­ச­றி­வி­ய­லாளர்களும் அந்தத் தீர்­மா­னத்தை உதா­சீனம் செய்­வது நாட்­டுக்கு ஆபத்­தா­னது என்று எச்­ச­ரித்­துள்­ளனர்.

இந்தத் தீர்­மா­னத்தின் மொத்தம் பதி­னாறு சரத்­து­களில் ஆறா­வது சரத்து இலங்­கையின் போர்க்­கால மனித உரிமை மீறல்­க­ளுக்­கான பொறுப்­புக்­கூறல், அவை­பற்­றிய தக­வல்­களை ஐ.நா. மனித உரி­மைகள் கண்­கா­ணிப்புச் சபை திரட்­டுதல், அவ்­வாறு மீறி­யவர்களை நீதி­யின்முன் கொண்­டு­வ­ருதல் ஆகிய முக்­கிய அம்­சங்கள் அடங்கும். போர் முடி­வ­டைந்து பன்­னி­ரண்டு வரு­டங்­க­ளா­கியும் இந்தப் பொறுப்­புக்­களை இலங்கை அரசு தட்­டிக்­க­ழித்­துக்­கொண்டே வந்­துள்­ளது. அது­மட்­டு­மல்ல, மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஜன­நா­யக உரி­மைகள் படிப்­ப­டி­யாகப் பறிக்­கப்­பட்டு, நீதித்­து­றையும் அர­சியல் மய­மாக்­கப்­பட்டு, இரா­ணுவம் சார்ந்த எதேச்­ச­தி­கார ஆட்­சியே உரு­வாகும் தோர­ணையில் நாடு நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இதனால் சிறு­பான்மை இனங்கள் நசுக்­கப்­பட்டுக் கொண்டே வரு­கின்­றன. ஆகை­யினால், மனித உரி­மைகள் சபையின் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­ப­டும்­பட்­சத்தில் இன­நல்­லி­ணக்கம் ஏற்­பட்டுப் பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்­கைக்கு சுய­மா­கவே மீட்­சி­பெ­றக்­கூ­டிய ஒரு வாய்ப்பும், அதற்­கான மேற்கின் ஆத­ரவும், மீண்டும் ஜன­நா­யகம் மல­ரக்­கூ­டிய ஒரு சூழலும் உரு­வாகும் என்று பல­ராலும் நம்­பப்­ப­டுகிறது.

இருந்தும், அந்தத் தீர்­மா­னத்தை உதா­சீனம் செய்தால் என்ன நடக்கும் என்­ப­தையும் உண­ர­வேண்டும். இந்­தத் ­தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்குத் தலைமை தாங்­கிய நாடுகள் அமெ­ரிக்­காவும், பிரித்­தா­னி­யாவும், கன­டாவும், ஐரோப்­பிய ஒன்­றி­ய­முமே. அதே­போன்று எதிர்ப்பைத் தெரி­வித்த நாடு­களுள் ரஷ்­யாவும் சீனாவும் முக்­கி­ய­மா­னவை. ராஜ­பக்­சாக்­களின் ஆட்­சியில் இலங்கை சீனாவின் செல்லப் பிள்­ளை­யாக வளர்ந்ததை மேற்­கினால் தாங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை. அது­மட்­டு­மல்­லாமல் மேற்கு நாடுகள் இலங்­கைக்குக் கொடுக்கும் அழுத்­தங்­க­ளுக்குப் பின்னால் அதே நாடு­களின் அர­சு­க­ளுக்குப் புலம்­பெயர்ந்த தமிழர் கொடுக்கும் அழுத்­தங்­க­ளையும் மறந்­து­வி­ட­லா­காது. புலி­களின் ஆத­ர­வாளர்கள் இதனை நாடு­ க­டந்த தமி­ழீழம் என அழைக்­கின்­றனர். புலம்­பெயர்ந்த தமிழர்களின் சர்வதேச ரீதி­யி­லான செல்­வாக்கை இலங்கை அரசு குறை­வாக மதிப்­பி­டு­மானால் அது அறி­வீனம். எவ்­வாறு இரண்­டா­வது உல­கப்­போ­ருக்­குமுன் யூதர்கள் மேற்கு நாட்டு அர­சு­களில் செல்­வாக்குப் பெற்­றி­ருந்­தார்­களோ அதே செல்­வாக்கை இப்­போது புலம்­பெயர்ந்த தமிழர்கள் அடையத் தொடங்­கி­யுள்­ளனர். 1983 ஜூலை கல­வ­ரத்தின் எதிர்­பா­ராத விளை­வு­களுள் இதுவும் ஒன்று. இதைப்­பற்றி விரி­வாக வேறோர் சந்தர்ப்பத்தில் விளக்­குவோம்.

இதற்கு மத்­தியில் இன்­னு­மொரு உண்­மை­யையும் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. மனித உரிமை மீற­லுக்­காக இலங்­கை­மீது குற்றஞ் சுமத்தும் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆப்­கா­னிஸ்­தா­னிலும், ஈராக்­கிலும், அல்­ஜீ­ரி­யா­விலும், வியட்­னா­மிலும், கம்­போ­டி­யா­விலும், ருவண்­டா­விலும் மீறிய மனித உரி­மை­களை உலகு மறக்­குமா? அதே­போன்று இலங்­கைக்குச் சார்­பாக வாக்­க­ளித்த ரஷ்யா, செச்­னிய முஸ்­லிம்­களின் மனித உரி­மை­களை மீறி­ய­மை­யையும், சீனா இப்­போது உய்குர் முஸ்­லிம்­களின் மனித உரி­மை­களைப் பறிப்­ப­தையும் மறக்­கத்தான் முடி­யுமா? உய்குர் விட­யத்தில் அமெ­ரிக்கா இப்­போது சீனாவைக் குற்­றஞ்­சாட்­டு­கி­றது. ஆனால் கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கும் மேலாக நடை­பெற்­று­வரும் சீனாவின் மீறல்கள் இப்­போ­து­தானா அமெ­ரிக்­காவின் கண்­களில் பட்­டது? இது­வெல்லாம் வல்­ல­ர­சு­களின் எடு­பிடி நாடகம். இதனை ஒரு புதிய பனிப்போர் என்­று­கூடக் கரு­தலாம். என்­றாலும் இன்­றைய சர்வதேச ஆதிக்கம் மேற்கின் பிடிக்­குள்­ளேயே இருக்­கி­றது என்­ப­துதான் யதார்த்தம். அந்த ஆதிக்­கத்தைப் பிடுங்­கு­வ­தற்குப் பல வழி­க­ளிலும் முயற்­சிக்­கி­றது சீனா. அந்த முயற்­சிக்கு சீனா­வுக்கு ஆத­ர­வாகச் செயற்­ப­டு­கி­றது இலங்கை. என­வேதான் இலங்­கை­மீது மேற்கின் இந்தச் சீறல் என்­பதை மறுக்க முடி­யாது.

இந்த நிலையில், வல்­ல­ர­சு­களின் எடு­பி­டிக்குள் மாட்டிக் கொள்­ளாமல் சர்வதேச அமைப்­பு­க­ளி­லி­ருந்தும் வில­காமல் இலங்கை போன்ற சிறிய நாடுகள் நன்­மை­ய­டைய வேண்­டு­மாயின் அவற்­றுக்­குள்ள ஒரே­யொரு ஆயுதம் சிறந்த ராஜ­தந்­திரம் மட்­டுமே. இந்­தத்­ தி­றமை ஜெனி­வா­வுக்கு இலங்கை அரசு அனுப்­பிய அனு­ப­வ­மற்ற ராஜ­தந்­தி­ரி­க­ளுக்கு இருக்­க­வில்லை என்­பது அவர்கள் இழைத்த தவ­று­களால் நிரூ­பிக்­கப்­பட்­டு­விட்­டன. அத்­துடன் இலங்கை அரசு கடந்த இரண்டு மாதங்­க­ளுக்குள் உள்­நாட்டில் எடுத்த விவே­க­மற்ற சில முடி­வு­களும் ஜெனி­வாவில் தோல்­வி­ய­டை­வதை உறு­தி­யாக்­கிற்று. ஆனால், அர­சாங்­கமோ விழுந்­தாலும் மீசையில் மண் ஒட்­ட­வில்லை என்­ப­துபோல் வீராப்புப் பேசு­கி­றது.

எனவே ஐ.நா.வின் தீர்­மா­னத்தை உதா­சீனம் செய்தால் மேலே சுட்­டிக்­காட்­டப்­பட்ட அழுத்­தங்கள் இலங்­கையின் மீது வர்த்தக, முத­லீட்டுத் தடை­க­ளையும் குறிப்­பிட்ட சில இலங்கை முக்­கி­யஸ்தர்களின்­ மீது போக்­கு­வ­ரத்துத் தடை­க­ளையும் அவர்களது வெளி­நாட்டுச் சொத்­துக்­களால் பயன்­பெற முடி­யா­த­வா­றான கட்­டுப்­பா­டு­க­ளையும் மேற்கு நாடுகள் ஏற்­ப­டுத்­தலாம். மேற்கின் செல்­வாக்­கி­னுக்­குட்­பட்ட அரபு நாடுகள் ஒன்­றி­ரண்டும் சில ஏற்­று­மதி இறக்­கு­மதித் தடை­களைக் கொண்­டு­வ­ரலாம். இலங்­கையின் ஏற்­று­ம­தியில் ஏறத்­தாழ 30 சத­வீதம் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்குச் செல்­கின்­றது. ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்­கையின் ஏற்­று­ம­திக்கு வழங்­கி­யுள்ள சில வரிச்­ச­லு­கைகள் இந்த ஏற்­று­ம­தி­களை வசீ­க­ரிக்கும் ஒரு காந்­த­சக்தி. அந்தச் சலு­கைகள் நீக்­கப்­ப­டு­மானால் ஏற்­படும் வரு­மான நஷ்­டத்தை இலங்­கை­யினால் தாங்க முடி­யுமா? அதே போன்று வெளி­நாட்டு முத­லீ­டு­களை நம்பி இருக்கும் இலங்கைப் பொரு­ளா­தாரம் மீட்­சி­பெற முடி­யுமா? இவை­யெல்லாம் சேர்ந்து இலங்­கையின் ரூபாவின் பெறு­ம­தியைக் குறைக்­கும்­போது அத­னா­லேற்­படும் இறக்­கு­ம­தி­களின் விலை­வாசி ஏற்­றத்தை எவ்­வாறு சமா­ளிப்­பது? மக்­களின் பொரு­ளா­தாரக் கஷ்­டங்கள் எல்­லை­மீறிச் செல்­லாதா? இவை­யெல்லாம் ஆட்­சி­யாளர்களுக்குத் தெரி­யாமல் இல்லை. அப்­ப­டி­யானால் ஏன் இந்த வீராப்பும் வெட்டிப் பேச்சும்?

இதற்கு ஒரே காரணம் சீனாவின் தயவு உள்­ள­வரை வரப்­போகும் நெருக்­க­டி­களைத் தாக்குப் பிடிக்­கலாம் என்று ராஜ­பக்­சாக்கள் நம்பி இருப்­பதே. சில தினங்­க­ளுக்­கு முன் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச அவரின் சீனச்­சகா சீ ஜின்­பிங்­குடன் தொலை­பே­சி­மூலம் தொடர்பு கொண்டு ஜெனி­வாவில் இலங்­கைக்குச் சார்­பாக வாக்­க­ளித்­த­மைக்கு நன்­றி­கூற, அதற்குப் பதி­லாக சீனத் தலைவர் தொடர்ந்தும் சீனா இலங்­கைக்குப் பொரு­ளா­தார ரீதி­யிலும் வெளி­நாட்டு ராஜ­தந்­திர உற­வு­க­ளிலும் தொழில்­நுட்ப ரீதி­யிலும் ஏனைய வழி­க­ளிலும் உதவி செய்யும் என்று உறுதி அளித்­தமை அவரின் தயவை மேலும் உறு­திப்­ப­டுத்­திற்று. ஆனால் சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்­ப­து­போல இதன் அந்­த­ரங்­கத்­தையும் அதி­லுள்ள ஆபத்­தையும் விளங்கிக் கொள்­வது அவ­சியம்.

சீனாவின் தலை­யாய நோக்கம் இலங்கை செழிக்க வேண்டும் என்­ப­தல்ல, உள்­நாட்டுப் போருக்­குப்பின் கடன் சுமையால் தன் பிடிக்குள் சிக்­கிய இலங்­கையை மீண்டும் நழு­வ­வி­டாமல் பாது­காப்­பதே அதன் ராஜ­தந்­திர நோக்கம். உலக வல்­ல­ர­சாக மாறத்­து­டிக்கும் சீனா­வுக்கு இந்து சமுத்­தி­ரத்தில் வலு­வான ஓர் இடத்தைப் பிடிப்­பது முக்­கியம். அன்­றைய பட்­டுப்­பா­தைக்குப் பதி­லாக இந்து சமுத்­தி­ரத்­தி­னூ­டாக வகுக்­கப்­படும் இன்­றைய ஒரே பட்டுப் பாதையில் இலங்கை ஒரு கேந்­திர ஸ்தானத்தை வகிக்­கி­றதை உலகே அறியும். இது இந்­தி­யாவின் பாது­காப்­புக்கு ஏற்­பட்ட ஒரு பேரிடி. அது ஒரு­பு­ற­மி­ருக்க, ஏற்­க­னவே அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தை 99 வருட குத்­த­கைக்குப் பெற்­றுக்­கொண்ட சீனா இப்­போது கொழும்புத் துறை­முக நக­ரையும் பாரிய முத­லீட்­டுடன் கட்­டி­யெ­ழுப்ப முன்­வந்­துள்­ளது. அம்­பாந்­தோட்­டையில் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றையும் அது அமைத்­துக்­கொ­டுக்­கவும் இணங்­கி­யுள்­ளது. இவற்­றை­விட இன்னும் பல துறை­க­ளிலும் சீனாவின் முத­லீ­டுகள் இலங்­கையில் பெரு­கிக்­கொண்டே வரு­கின்­றன.

அமெ­ரிக்­கா­வைப்­போன்று படை­க­ளையும் கடற்­படைத் தளங்­க­ளையும் மைய­மாக வைத்து சீனா மற்ற நாடு­க­ளுக்குள் ஊடு­ரு­வு­வ­தில்லை. மாறாக அதன் ஊடு­ருவல் மென்­மை­யா­னது. பணச்­ச­லு­கை­க­ளையும், பொரு­ளா­தார உத­வி­க­ளையும், முத­லீ­டு­க­ளையும், தொழில்­நுட்ப வச­தி­க­ளையும் கொண்டே அது ஊடு­ரு­வு­கின்­றது. அதைத்தான் இலங்­கை­யிலும் காண்­கிறோம். அண்­மையில் 1.5 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான நாண­யப்­ப­ரி­மாற்றம் சீனாவின் மக்கள் வங்கிக்கும் இலங்கையின் மத்திய வங்கிக்கும் இடையே இடம்பெற்றது. இதனை ஒரு குறுங்காலக் கடனாகக் கருதலாம். ஆனால் அதனை ஒரு மத்தியகாலக் கடனாக மாற்றும்படி இலங்கை கேட்டால் அதை வழங்குவதற்கும் சீனா தயங்காது. ஏனெனில் இலங்கையின் கடன் சுமை ஏற ஏற சீனாவின் பிடியும் இறுகும் என்பது சீனாவுக்குத் தெரியும். இவ்வாறான ஊடுருவல் தொடருமானால் ஈற்றில் இலங்கை சீனாவின் ஒரு குடியேற்ற நாடு என்ற நிலைக்குத் தள்ளப்படாதா? வருங்காலச் சந்ததிகளுக்கு இவ்வாறான ஒரு நாட்டையா இந்த அரசாங்கம் விட்டுச்செல்லப் போகிறது? இந்த ஆபத்தை மேற்கு நாடுகள் நன்குணரும்.

எனவேதான் ஜெனிவாவின் தீர்மானம் இலங்கைக்கு ஒரு விஷப் பரீட்சை. இன்று நாடு இருக்கும் சிக்கலில் ஆட்சியாளர்கள் முடிவுசெய்ய வேண்டிய பிரச்சினை இதுதான். ஜெனிவாவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தி மேற்கின் ஆதரவுடன் நாட்டைக் கட்டியெழுப்புவது. அல்லது இனங்களை மோதவிட்டு சீன உதவிக்காக நாட்டையே ஈடுவைத்தல். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.