எப்.எம்.பைரூஸ் என்ற பெயர் ஊடகத்துறையில் இலகுவில் மறக்க முடியாத ஒரு பெயராகும். 1965 முதல் 2019 வரை ஊடக மற்றும் இலக்கியத் துறையில் பணிபுரிந்த அல்ஹாஜ் எப்.எம். பைரூஸ் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சரியாக மூன்று ஆண்டுகளாகின்றன. 1952 பெப்ரவரி 21 இல் கொழும்பில் பிறந்த இவர், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி காலமானார்.
முகம்மது காஸிம் சித்தி பரீதா தம்பதியருக்குப் பிறந்த இவர், கொழும்பு அல் – இக்பால் மகா வித்தியாலயத்தில் பயின்றதோடு, பத்திரிகைத் துறையில் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றவராவார்.
தினபதி, சிந்தாமணி, தினகரன் பத்திரிகைகளில் பணிபுரிந்த இவர், மும்மொழி ஆற்றல்மிக்க ஒருவராகத் திகழ்ந்தார்.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள பொது வசதிகள் சபையில் ஆளணி உதவியாளர், சிரேஷ்ட முகாமையாளராகப் பணிபுரிந்த வேளை ஊடகத்துறையிலும் ஈடுபட்டார். ஆரம்பத்தில் தினபதியில் பணிபுரிந்த இவர், தினபதி இஸ்லாமிய பூங்காவை நடாத்தினார். தினபதி மூடப்பட்ட பின் தினகரனில் இணைந்த இவர், இறக்கும் வரை தினகரனில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார்.
பத்திரிகைத் துறையில் மிக விரைவாகச் செய்திகளை வழங்கும் ஒரு பத்திரிகையாளராக மர்ஹூம் பைரூஸ் பெயர் பெற்றிருந்தார். செய்திகளைத் தேடிப் பெறுவதில் வல்லவராக இவர் திகழ்ந்தார். இதற்காக முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் இவருக்கு ‘பராண்டி’ என்ற பட்டப் பெயரைச் சூட்டி இருந்தார். செய்திகளைத் துருவித்துருவி தேடிப் பெறும் திறமை இவருக்கு இருந்தது. எப்போதும் செய்தியை முறையாக எழுதுவதில் இவருக்கு இருந்த திறமை காரணமாக இவரது செய்தியை செம்மைப்படுத்த வேண்டிய தேவையே இருக்கவில்லை. ஒரு பஸ் டிக்கட்டில் கூட குறிப்புகளை எழுதி, செய்திகளை அறிக்கையிடும் வல்லமை மிக்கவராக பைரூஸ் திகழ்ந்தார். இவருக்கு இருந்த மும்மொழி ஆற்றலும் இதற்குக் காரணமாகும். தினபதி, சிந்தாமணிக்கு மட்டுமன்றி, ‘தவச வீகன்ட்’ பத்திரிகைகளுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார். இது தவிர, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழநாடு பத்திரிகையின் கொழும்பு செய்தியாளராகவும் பல வருடங்கள் இவர் பணிபுரிந்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சவூதி அரேபிய அரசுக்கு விடுத்த கோரிக்கைப்படி ரியாத் இப்னு சவூத் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை கற்கை நெறியை மேற்கொள்வதற்கு அப்போதைய ஊடக அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரினால் தெரிவுசெய்யப்பட்ட 10 ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவராவார். இதன்படி ரியாத் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். 3 முறை புனித ஹஜ் கடமையையும் நிறைவேற்றியுள்ளார்.
மர்ஹூம் பைரூஸ் நாட்டுக்காக பங்களிப்புச் செய்த சிங்கள – தமிழ் முஸ்லிம் தலைவர்களைப் பற்றி நினைவுக் கட்டுரைகளை வெளியிடுவதில் விஷேடமாக கவனம் செலுத்தினார். அவ்வாறான தலைவர்கள் மற்றும் சிறப்புக்குரியவர்கள் பற்றிஅவர்களது நினைவு தினங்களில் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.
மர்ஹூம் பைரூஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக அங்கத்தவராக இருந்ததோடு, அதன் செயலாளர், தேசிய அமைப்பாளர், உப தலைவர் பதவிகளை வகித்து ஊடகத்துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஊடகப் பயிற்சி கருத்தரங்குகளில் வளவாளராகப் பணிபுரிந்து இளைய தலைமுறைக்கு ஊடகக் கல்வியை போதிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.
பத்திரிகைத் துறைக்கு மேலதிகமாக இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ‘சுட்டும் சுடர், உலக வலம், தீன் பயிர் வளர்க்கும் மத்ரஸாக்கள்’ உட்பட பல போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி வானொலித் துறையிலும் பங்களிப்புச் செய்தார்.
சபாநாயகர்களான எம்.எச். முஹம்மத், எம்.ஏ. பாக்கீர் மாக்கார் ஆகியோருடன் நெருங்கிச் செயற்பட்ட இவர், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளார். மர்ஹும் பாக்கீர் மாக்கார் நாட்டின் சபாநாயகராக இருக்கும் போது நூற்றுக்கணக்கான முஸ்லிம் கிராமங்களுக்கு விஜயம் செய்த போது அவருடன் இணைந்து பயணித்து அது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அறிக்கையிட்டார். அதே போன்று மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சராக இருக்கும்போது அவருடன் நெருங்கிச் செயற்பட்டார்.
முன்னாள் அமைச்சர் அஸ்வரின் பணிகளை, எண்ணக்கருக்களை எழுத்துருவப்படுத்தியவர்களில் கலைவாதி கலீலுடன் இணைந்து பைரூஸும் செயற்பட்டார். முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சு அக்காலத்தில் வருடாவருடம் நடாத்திய தேசிய மீலாத் விழாக்களின்போது வெளியிடப்பட்ட வெளியீடுகளில் இவர்களது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
மர்ஹூம் அஸ்வர் அறிமுகப்படுத்திய ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ திட்டத்தின்கீழ் 1993இல் இவரது ஊடகப் பணிக்காக ‘சவுதுல் ஹக்’ (சத்தியத்தின் குரல்) என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
1965 இல் இலக்கியத்துறையில் பிரவேசித்த இவர், காயல்பட்டிணத்திலும் கீழக்கரையிலும் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் தினபதியின் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். கீழக்கரை மாநாட்டில் முஸ்லிம் பத்திரிகையாளர் என்ற வகையில் இவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இவர் பைரூஸியா என்ற புனைப் பெயரிலும் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார். அகில இலங்கை சமாதான நீதிவானான இவர், மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணிபுரிந்தார். இலங்கை போக்குவரத்து சபை ஆலோசனை குழு உறுப்பினராகவும் கலாசார அமைச்சின் இஸ்லாமிய நுண்குழுவின் அங்கத்தவராகவும் பணிபுரிந்துள்ளார்.
கல்முனையில் புகழுக்குரிய மூத்த தம்பி ஆலிம் குடும்பத்தில், பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் மனைவியின் சகோதரியான ஆயிஷாவை திருமணம் முடித்தார். இவர்களுக்கு பாத்திமா பர்ஹா, முஹம்மது பைஸால் என்ற இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
ஆளுமைகள் நிறைந்த அமைதியான போக்குமிக்க பைரூஸ் நேர்மைக்கு அடையாளமாகத் திகழ்ந்தார். பத்திரிகைத் துறைக்கு மேலதிகமாக விளம்பர முகவர் நிறுவனம் ஒன்றையும் நடத்தினார். விளம்பரத்தைக் கொடுக்கும் எவருக்கும் அதற்குரிய கொமிஷனை சரியாக சதம் கணக்கில் பகிந்தளிப்பது பைரூஸிடம் காணப்பட்ட சிறப்பம்சமாகும்.
67 வருடங்கள் வாழ்ந்து மறைந்த பைரூஸ் ஹாஜி, நேர்மைக்கு, கடின உழைப்புக்கு முன்மாதிரிமிக்கவராக இருந்ததோடு, பழகுபவர்களுக்கு இனிமையானவராகவும் இருந்தார்.
இப்புனித ரமழானில் அவரது மறுமைக்காக பிரார்த்திப்போம்.
என்.எம்.அமீன்
- -Vidivelli