தான் ஒரு பௌத்தனாக உள்ள போதிலும், இம்முறை முதன் முறையாக ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கத் தீர்மானித்துள்ளதாக வெலிகம நகர சபைத் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டரில் “நான் ஒரு பௌத்தன், நான் எனது வாழ்வில் பௌத்த தத்துவத்தை கடைப்பிடிக்க முழுமையாக முயற்சி செய்கிறேன். இதேவேளை இம்முறை நான் புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் சகோதர சகோதரிகளுடன் இணைந்து நோன்பு நோற்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். நான் நோன்பு நோற்கப் போவது இதுவே முதன்முறை’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் வெலிகம நகர சபைத் தலைவருமான ரெஹான் ஜயவிக்ரமவின் இந்த அறிவிப்பினை பலரும் வரவேற்றுள்ளனர்.
ரெஹானின் இந்த அறிவிப்பினை “முத்து தீவின் அமைதியான மற்றும் சகிப்புத்தன்மையை உணர்த்தும் நேர்த்தியான முறை. உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்” என இலங்கைக்கான துருக்கி தூதுவர் தெமட் செகர்சியோக்லு வரவேற்றுள்ளார்.
ரெஹானின் டுவிட்டர் பதிவினை வரவேற்று வாழ்த்துத் தெரிவித்துள்ள ஏராளமான முஸ்லிம்கள், அவருக்கு நோன்பு நோற்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.
“இது உங்கள் சிங்கள புதுவருட பெருநாள் காலமல்லவா? எப்படி நோன்பு நோற்கப் போகிறீர்கள்” என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “பெருநாள் சடங்குகள் முடிந்த பிறகு நான் நோன்பு நோற்பேன்’’ என அவர் பதிலளித்துள்ளார்.
இதேவேளை, தானும் நோன்பு நோற்பது குறித்து சிந்தித்து வருவதாக மதுஷான் பெரேரா என்பவர் தெரிவித்துள்ளார். எனினும் தான் இன்னும் உறுதியாக தீர்மானிக்கவில்லை என்றும் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பதுதான் கஷ்டமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரெஹான் ஜயவிக்ரம, “தண்ணீர் குடிக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் இதுபற்றி கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே நமக்கு முதல் தடவை என்பதால் முயற்சித்துப் பார்ப்போமே’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு “தண்ணீர் கூட குடிக்க முடியாது. நீங்கள் தண்ணீர் குடித்தால் அது உங்களுக்கு கஷ்டமாக அமையும். குடிக்காவிட்டால்தான் இலகுவாக இருக்கும். ஒரு நாளைக்கு தண்ணீரும் குடிக்காது முயற்சித்துப் பாருங்கள். வாழ்த்துக்கள்” என ஒருவர் பதிலளித்துள்ளார்.
வெலிகம நகர சபைத் தலைவராக பணியாற்றி வரும் இளம் அரசியல்வாதியான ரெஹான், முஸ்லிம் மக்களுடன் நெருக்கமான உறவினைப் பேணி வருவதுடன் சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli