புனித உம்ரா யாத்திரைக்கு அனுமதி கிடைக்கவில்லை
சில முகவர்கள் ஏமாற்றுகின்றனர் என்கிறது ஹஜ் குழு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உம்ரா யாத்திரை தொடர்பில் சவூதி அரேபிய ஹஜ், உம்ரா அமைச்சு எதுவித உத்தியோகபூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை எனவும், இலங்கையில் சமூக வலைத்தளங்களில் உம்ரா யாத்திரைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தவறாக பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
பொது மக்கள் இந்த தவறான பிரசாரங்களுக்கு ஏமாந்து ஹஜ், உம்ரா முகவர் நிலையங்களில் முற்பணங்களைச் செலுத்த வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு தடவைகள் கொவிட் -19 தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களுக்கும், யாத்திரைக்கு 14 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கும் சவூதி அரேபியா ஹஜ், உம்ரா அமைச்சு யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
அத்தோடு கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களுக்கும் உம்ரா யாத்திரை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. எனினும் வெளிநாட்டு யாத்திரிகர்களை அனுமதிப்பது பற்றி இது வரை எந்த அறிவித்தலும் வரவில்லை எனவும் ஹஜ் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் ஒருசில சுயநல ஹஜ் உம்ரா முகவர் நிலையங்களே இவ்வாறான தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு யாத்திரிகர்களை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றன. எனவே அரச ஹஜ் குழு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்வரை பொது மக்கள் பொறுமையாக இருக்கவேண்டும்.
சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் எதிர்வரும் ஷவ்வால் பிறை 7 இலிலே திறக்கப்படவுள்ளன.இதனை சவூதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை அரச ஹஜ் குழு ஹஜ், உம்ரா யாத்திரை தொடர்பில் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சுடன் தொடர்ந்தும் தொடர்புகளில் உள்ளது. எனவே ஹஜ் குழுவின் உத்தியோக அறிவிப்பு கிடைக்கும் வரை மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றார்.- Vidivelli