இந்த வருடத்தில் மாத்திரம் ஹெரோயினுடன் தொடர்புடைய 37 ஆயிரம் பேர் கைது
430 கிலோ 508 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறுகிறது பொலிஸ்
நாடு பூராகவும் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்ட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய சுற்றி வளைப்புக்களின் போது சுமார் 430 கிலோ 508 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 37 ஆயிரத்து 304 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார் .
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், நாடு பூராகவும் உள்ளடங்கும் வகையில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய ஒக்டோபர் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் விசேட போதைப்பொருள் தடுப்பு (சாண்ட்) எனப்படும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு அமைய ஒக்டோபர் 22 ஆம் திகதியிலிருந்து நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்ட இலங்கை வரலாற்றில் இரண்டாவது தடவையாக கைப்பற்றப்பட்ட அதிக ஹெரோயின் போதைப்பொருள்தொகை உள்ளடங்கலாக 248 கிலோகிராமிற்கும் அதிக பொறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் சுமார் 6 ஆயிரத்து 202 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நாடு பூராகவும 2008 – 2018 நவம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஹெரோயின் , கொக்கையின் , மொபின் மற்றும் அபின் ஆகிய போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு குறித்த பிரதேசங்களில் அமையப்பெற்றுள்ள நீதவான் நீதிமன்றங்களில் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்படடோரில் 96 பேர் உள்ளடங்குவதுடன், அதில் 8 பேர் பெண்களாவர்.
இந்த வகையில் 275 சந்தேக நபர்கள் ஆயுள் தண்டனைக் கைதிகளாவதுடன், அதில் 34 பெண்களும் உள்ளடங்குவதாக ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.
-Vidivelli