அரசாங்கத்தினால் எந்த உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை; மூவின மக்கள்தான் உதவுகிறார்கள்

பயங்கரவாதிகளால் சுடப்பட்ட தஸ்லீம்

0 1,129

மாவ­னல்­லையில் புத்தர் சிலை தாக்­கப்­பட்டு சேதப்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வத்தின் பின்பு அப்­போ­தைய அமைச்சர் கபீர் ஹாஷிம் சி.ஐ.டி.க்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு தனது இணைப்பாளர் தஸ்­லீமை வேண்டிக் கொண்டார். தஸ்லீம் தன்னால் இயன்ற வகையில் இதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினார்.

இந்த விப­ரங்கள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு அறி­யக்­கி­டைத்­தது. சி.ஐ.டிக்கு தகவல் வழங்­கி­யதன் கார­ண­மாக சஹ்­ரா­னினால் அனுப்­பப்­பட்ட பயங்­க­ர­வா­தி­யொ­ரு­வ­ரினால் 2019 மார்ச் மாதம் 9 ஆம் திகதி தஸ்லீம் துப்­பாக்­கி­யினால் சுடப்பட்டார். எனினும் இறைவனின் உதவியால் அவர் உயிர் பிழைத்தார்.

“தான் உயிர்­பி­ழைத்துக் கொண்­டாலும் இன்று எனக்கு வீட்­டுக்­கா­வல் கைதி­ போன்றே காலத்தைக் கழிக்­க­வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது என அடிப்­ப­டை­வா­தி­களின் துப்­பாக்கி தாக்­கு­தலால் காயங்­க­ளுக்­குள்­ளாகி மாற்றுத் திற­னா­ளி­யாக மாறி­யி­ருக்கும் மாவ­னல்லை எம்.எஸ்.எம்.தஸ்லீம் தெரி­வித்தார்.

எனக்கு 24 மணி நேரமும் பொலிஸ் பாது­கா­வலின் மத்­தியில் வாழ வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது. தொழு­கைக்­காக பள்­ளி­வா­ச­லுக்கோ, சிகிச்­சை­க­ளுக்­காக வைத்­தி­ய­சா­லைக்கோ மாத்­தி­ரமே செல்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பொது விட­யங்­களில் கலந்து கொள்­வ­தற்கு நான் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை என்­கிறார் தஸ்லீம். ஒரு மனி­த­னுக்கு கிடைக்­க­வேண்­டிய சுதந்­திரம் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டும்­போது ஏற்­படும் கடு­மை­யான மான­சீக தாக்­கங்­க­ளுக்­குள்­ளாகி இருப்­ப­தா­கவும் தஸ்லீம் கூறினார்.
அவ­ர் லங்காசர இணையத்தளத்திற்கு வழங்கி நேர்­கா­ணல் வருமாறு:

சிங்­க­ளத்தில்:
சாமிந்த வாரி­ய­கொட
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்

Q: தஸ்லீம் இப்­போது நீங்கள் எப்­படி இருக்கிறீர்கள்?

என்­ மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்டு கடந்த 9 ஆம் திகதி இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. உங்­க­ளுக்கு ஞாப­க­மி­ருக்கும் நான் வீட்டில் உறங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது என்­மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச்­சூட்­டினால் நான் நூலி­ழையில் தப்­பினேன். பலத்த காயங்­க­ளுக்கு உள்­ளான நான் கண்டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்றேன். நான்கு மாதங்கள் கட்­டி­லி­லேயே இருந்தேன். பேசு­வ­தற்கும், எழும்­பு­வ­தற்குக் கூட முடி­யா­தி­ருந்த நான் தற்­போது ஊன்­று­கோலின் உத­வி­யுடன் மெது­வாக சிறிது நடக்­கிறேன்.
உடல்­ரீ­தி­யாக நான் குண­ம­டைந்­தாலும், இந்தச் சூட்டுச் சம்­ப­வத்தின் கார­ண­மாக எங்கள் குடும்­பத்­துக்கு ஏற்­பட்ட மான­சீக காயம் இன்னும் குண­மா­க­வில்லை.
மனைவி மீண்டும் எங்கள் வீட்­டுக்குச் செல்­வ­தற்குப் பயப்­ப­டு­கிறாள். அந்த சம்­பவ நினை­வு­களே இதற்குக் காரணம். இரண்டு பிள்­ளை­களில் மூத்த பிள்­ளைக்கே சம்­பவம் நினை­வி­ருக்­கி­றது. அவர் மாலை நேரங்­களில் அந்த வீட்­டுக்குள் எவ­ரா­வது ஒருவரின் துணை­யின்றி ஒரு அடி­கூட எடுத்­து­வைக்க மாட்டார். அந்­த­ள­வுக்கு அவர்­க­ளது மனதில் பயம் குடி­கொண்­டுள்­ளது. இன்றும் கூட கனவில் பயந்து சப்­த­மி­டு­கிறார்.

Q: இப்­போது நீங்கள் இருக்கும் இந்த வீடு யாரு­டை­யது?

எனக்கு இந்த வீட்டை டாக்டர் ஒருவர் வாங்கித் தந்தார். குறிப்­பிட்ட அளவு ஒரு தொகைப்­ப­ணத்தை அவர் இதற்கு செல­வ­ழித்­துள்ளார். அதன் பின்பு aranya.lk எனும் முகநூல் சமூக நலன்­புரி குழு­வினர் சுமார் 40 இலட்சம் ரூபாய் சேக­ரித்து இந்த வீட்டை புனர் நிர்­மாணம் செய்து தந்­தார்கள்.

Q: நீங்கள் தற்­போது வாழ்­வ­தற்கு என்ன செய்­கி­றீர்கள்? எப்­படி உழைக்­கி­றீர்கள்?

இந்தச் சம்­பவம் இடம் பெறு­வ­தற்கு முன்பு நான் சிறு வியா­பா­ர­மொன்று செய்து கொண்­டி­ருந்தேன். அது ஒரு பண்­ணை­யாகும். ஆனால் இன்று நான் அடுத்­த­வர்­களின் தயவில் வாழ்­கிறேன்.
இந்தச் சம்­பவம் இடம்­பெற்ற காலத்­தி­லி­ருந்து சிங்­க­ள­வர்கள், முஸ்­லிம்கள், தமி­ழர்கள் என அனை­வரும் எனக்கு உதவி செய்­தார்கள். தற்­போதும் ஏரா­ள­மானோர் தனிப்­பட்ட ரீதியில் எனக்கு உத­வு­கி­றார்கள். இது­வரை காலமும் என்னால் எதுவும் செய்து கொள்ள முடி­யாத நிலையில் இருந்தேன். என்­றாலும் தொடர்ந்தும் எந்­நாளும் அடுத்­த­வர்­களின் தயவில் வாழ நான் விரும்­ப­வில்லை. எதிர்­கா­லத்தில் நான் சிறி­ய­ளவில் புடவை வியா­பாரம் ஒன்று செய்­வ­தற்கு எதிர்­பார்த்திருக்­கிறேன்.

Q: உங்­க­ளுக்கு அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நிதி­யு­தவி கிடைக்­க­வில்­லையா?

இல்லை, அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து எனக்கு நிதி­யு­தவி கிடைக்­க­வில்லை. முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் வழங்கும் உத­வியைத் தவிர கடந்த அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்தும் தற்­போ­தைய அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்தும் எனக்கு எவரும் உதவி செய்­ய­வில்லை.

Q: அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் சிபா­ரிசு ஒன்று செய்­யப்­பட்­டி­ருந்­தது. அது உங்­க­ளுக்கு இங்­கி­லாந்தில் சிகிச்சை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்டும் என்­பதே அந்த சிபா­ரி­சாகும்?

ஆம், நான் இந்த விப­ரத்தை ஊடகம் மூலமே அறிந்து கொண்டேன். இது­வரை அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து எனக்கு எந்த விப­ரமும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. என்னை இது தொடர்பில் எவரும் தொடர்பு கொள்­ள­வு­மில்லை.

Q: நீங்கள் அர­சாங்­கத்­திடம் இவ்­வா­றான கோரிக்­கையை முன் வைத்­தி­ருந்­தீர்­களா?

ஆம், நான் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் சாட்­சியம் அளித்­துள்ளேன். நான் வைத்­தி­ய­சா­லையில் இருந்­த­போது என்­னிடம் வாக்கு மூலம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. நான் வைத்­தி­ய­சாலை நோயாளர் கட்­டிலில் இருந்து கொண்டு சாட்­சி­ய­ம­ளித்­த­போது விசா­ரணை அதி­கா­ரிகள் நீங்கள் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து என்ன எதிர்­பார்க்­கி­றீர்கள் என்று வின­வி­னார்கள்.
அப்­போது நான் இரண்டு கோரிக்­கை­களை முன் வைத்தேன். நான் ஏதா­வது செய்து கொள்ளும் அள­வுக்கு என்னை குண­மாக்­கிக்­கொள்ள ஐக்­கிய இராச்­சி­யத்தில் சிகிச்­சை­ பெற அர­சாங்கம் தேவை­யான நிதி­யு­த­வியை வழங்­க­வேண்டும் என்று வேண்­டினேன். அதன்­பின்பு நான் தொடர்ந்தும் வாழ்­வ­தற்கு அர­சாங்­கத்தின் அனு­ச­ரணையை பெற்­றுத் தருமாறும் கோரினேன். எனது இரு கோரிக்­கை­களில் முத­லா­வது கோரிக்­கையே விசா­ரணை ஆணைக்­குழு சிபா­ரிசு செய்­துள்­ளது. என்­றாலும் எனக்கு இது­வரை எவ்­வித உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பும் கிடைக்­க­வில்லை.
இங்கு இன்­னொரு விட­யத்தைக் குறிப்­பி­ட­வேண்டும். நான் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் மூலம் பிர­த­ம­ருக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்தேன். நான் வாழ்­வ­தற்கு தேவை­யான ஏற்­பாடு ஒன்­றினைச் செய்­யு­மாறு கடி­தத்தில் கோரி­யி­ருந்தேன். அந்தக் கடி­தத்­துக்கு பிர­த­ம­ரி­ட­மி­ருந்து எனக்கு பதில் கடிதம் கிடைத்­தது. இது தொடர்பில் நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தற்கு பொது மக்கள் பாது­காப்பு தொடர்­பான அமைச்சர் சரத் வீர­சே­க­ர­வுக்கு கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பதில் கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

Q: உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான அறிக்கை தொடர்பில் என்ன நினைக்­கி­றீர்கள்? என்ன கூறு­கி­றீர்கள்?

நான் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையைக் காண­வில்லை. என்­றாலும் ஊட­கங்­களில் தெரி­விக்­கப்­பட்­ட­வை­களை நான் கண்டேன். இந்த ஆணைக்­கு­ழுவின் மூலம் வெளி­வந்­த­வைகள் நாங்கள் அறிந்­த­வை­களே என்று நினைக்­கிறேன். என்­றாலும் இந்தத் தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­பது தொடர்­பி­லான உண்­மை­யான விப­ரங்கள் வெளி­வ­ர­வில்லை. இந்தச் சாட்­சி­யங்கள் அனைத்­தையும் பார்த்தால் சில­வேளை இதன்­பின்­ன­ணியில் இருந்­தவர் யார் என்­பதை அறிந்து கொள்ள முடியும்.
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளுக்கும் சஹ்ரான் கார­ண­மாக மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளான என் போன்­ற­வர்­க­ளுக்கும் நீதி கிடைக்க வேண்­டு­மென்றால் இந்தத் தாக்­குதல் தொடர்­பான உண்­மைகள் வெளிப்­ப­ட­வேண்டும். இவற்றை அர­சாங்­கமே வெளிப்­ப­டுத்திக் கொள்­ள­வேண்டும். இந்த நாட்டின் 69 இலட்சம் மக்கள் வாக்­கு­களை வழங்­கி­யதும் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து இவ்­வா­றான எதிர்­பார்ப்­பு­க­ளு­ட­னே­யாகும்.

Q: நாங்கள் அறிந்­த­வ­கையில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­போது நீங்கள் வைத்­தி­ய­சா­லை­யிலே இருந்­தீர்கள். நீங்கள் அச்­சந்­தர்ப்­பத்தில் என்ன நினைத்­தீர்கள்?

ஏப்ரல் 21 ஆம் திகதி தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது. ஏப்ரல் 22 ஆம் திகதி எனது மனைவி என்னைப் பார்க்க வந்தார். அப்­போது என்னால் பேச முடி­யாது.
‘‘சஹ்­ரா­னினால் குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­பட்டு 200 பேர் பலி­யா­கி­யி­ருக்­கி­றார்கள்’’ என்று மனைவி கட­தாசி துண்­டொன்றில் எழு­தி­யி­ருந்தார். அதை வாசித்­ததும் எனக்கு மிகவும் கவலை ஏற்­பட்­டது. நான் அழுதேன். நான் வழங்­கி­யி­ருந்த தக­வல்கள் மூலம் இந்தத் தாக்­கு­தலைத் தவிர்த்­தி­ருக்­க­லா­மென்று அழுதேன். என்­றாலும் அப்­போது இதற்கு அர­சாங்கம் ஆர்வம் கொண்­டி­ருக்­க­வில்லை.
மாவ­னல்­லையில் புத்தர் சிலை உடைப்­புடன் தொடர்­பு­டைய சாதிக் சகோ­த­ரர்கள் பற்­றிய விப­ரங்கள் மற்றும் வனாத்­த­வில்லு தோட்­டத்தில் ஆயுதக் களஞ்­சி­யத்­துடன் கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் விப­ரங்கள் மூலம் இந்த வலை­ய­மைப்பை இல­கு­வாக கண்டு பிடித்­தி­ருக்­கலாம் என நான் நினைக்­கிறேன்.
ஏனென்றால் தாக்­குதல் நடை­பெற்று 24 மணி நேரத்­துக்குள் இவர்­களை கைது செய்­வ­தற்கு தேவை­யான போதிய தக­வல்கள் பாது­காப்பு பிரி­வி­ன­ரி­ட­மி­ருந்­தது. என்­றாலும் இதை­வி­டுத்து அர­சாங்கம் பிர­தி­பொ­லிஸ்மா அதிபர் நாலக சில்­வாவின் பொய்­யான கதை­யொன்­றினை இழுத்­த­டிப்புச் செய்து கொண்டு வந்­தது. அதனால் உண்­மை­யான பிரச்­சி­னையில் எவ­ருக்கும் அக்­கறை இருக்­க­வில்லை.

Q: உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் போன்ற சம்­ப­வங்கள் இதன் பின் நடை­பெ­றா­த­ வ­கையில் பணி­யாற்­றுவோம் என்று கூறியே இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­தது. நீங்கள் இந்த அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து என்ன கேட்­கி­றீர்கள்?

இந்த அர­சாங்கம் இது­போன்ற சம்­ப­வங்கள் இனி ஒரு­போதும் நடை­பெ­றாத வகையில் எதிர்­கா­லத்தில் செயற்­ப­ட­வேண்டும். அனைத்து மதங்கள் தொடர்­பாக பிள்­ளை­க­ளுக்கு கற்­பிக்கும் பாடங்­களில் அடிப்­ப­டை­வா­தம்­ அல்­லது இன­வாதம் போன்ற போத­னைகள் இருப்பின் அவை பாடங்­க­ளி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். ஏனென்றால் அவ்­வா­றான போத­னைகள் மக்கள் மத்­தியில் குரோ­தங்­களை விதைக்கும்.
அத்­தோடு மக்­களின் கலா­சார அடை­யா­ளங்­களப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வேண்டும். கடந்த காலங்­களில் முஸ்லிம் ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­வதில் ஏற்­பட்­பட்­டது போன்று மக்கள் பிரி­வு­க­ளுக்­கி­டையில் உணர்ச்சி மேலீட்­டினால் ஆவேச நிலை­மைகள் உரு­வா­கலாம். இவ்­வா­றான நிலை­மைக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது.

Q: இவ்­வா­றான தியாகம் செய்த உங்­க­ளுக்கு இந்­நாட்­டி­ட­மி­ருந்து என்ன கிடைத்­தது?

இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றதன் பின்பு நான் கண்டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டேன். இங்கு விசேட வைத்­திய நிபுணர் ரஞ்சித் விக்­கி­ர­ம­சிங்க உட்­பட வைத்­தியர் குழு பாரிய முயற்­சியின் பின்பு எனது உயிரைக் காப்­பற்­றி­னார்கள். அத­னா­லேயே இன்று ஊன்று கோலின் துணை­யு­ட­னா­வது நடக்க முடி­யு­மான நிலையில் இருக்­கிறேன்.
எனக்கு இந்த விபத்து நடந்­ததன் பின்பு நான் விரைவில் குண­ம­டை­வ­தற்கு சிங்­கள மக்கள் பூஜை வழி­பா­டுகள் செய்­தார்கள். எனக்கு உத­விகள் செய்­தார்கள். கிரா­மத்தில் போன்று நாடெங்கும் முஸ்லிம் மக்கள் ஒருநாள் நோன்­பி­ருந்து, இப்தார் நடத்தி எனக்­காக துஆ பிரார்த்­த­னை­களில் ஈடு­பட்­டார்கள். அது எனக்கு பாரிய பல­மாக இருந்­தது. வீடொன்று நிர்­மா­ணித்­துக்­கொள்ள காணி­யொன்று கிடைத்­தது. வீடு நிர்­மா­ணத்­துக்கு உத­வி­களும் வழங்­கி­னார்கள்.
என்னால் மறக்­க­வி­ய­லாத மேலும் ஒரு­வ­ரைப்­பற்­றியும் கூறி­யாக வேண்டும். அவர் தற்­போது அம்­பாறை பொலிஸில் கடமை புரியும் பந்­துல சேர். அவர் நான் கண்டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­போது எனது பாது­காப்­பிற்­காக கட­மையில் இருந்­தவர். நான் பேச முடி­யாமல் இருந்­த­போது அவரே எனக்குப் பேசு­வ­தற்கு பயிற்­சி­ய­ளித்தார். அவ­ரது பயிற்­சி­யி­னாலே என்னால் விரைவில் பேச முடிந்­தது.
நான் மிகவும் கவ­லை­யுடன் ஒரு விட­யத்தைக் கூறு­கிறேன். எனக்கு வழங்­கப்­பட்ட பாது­காப்பைத் தவி­ர­வேறு எதுவும் கடந்­த­கால அர­சாங்­கத்­திலும் இந்த அர­சாங்­கத்­திலும் வழங்­கப்­ப­ட­வில்லை. கிடைக்­க­வில்லை. ஏதா­வது கிடைத்­த­தென்றால் அது இந்­நாட்டின் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­ட­மி­ருந்தே கிடைத்­தது. அது­பற்றி நான் மகிழ்­கிறேன்.

Q: என்­றாலும் நீங்கள் கடந்த அரசில் பதவி வகித்த பிர­பல அமைச்­சரும், ஐ.தே.கட்­சியின் தவி­சா­ள­ரு­மான கபீர் ஹாஷிமின் இணைப்புச் செய­லா­ள­ராக கட­மை­யாற்­றி­யவரல்லவா?

ஆம், முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் அவரால் இய­லு­மான உத­வி­களை எனக்குச் செய்தார். ஆனால் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து ஏன் உத­விகள் கிடைக்­க­வில்லை என்­பதை அமைச்­ச­ரிடம் தான் கேட்க வேண்டும்.
அர­சாங்கம் என்ற வகையில் அவர்­களால் எனக்கு உதவி செய்­வதற்கோ, நான் வழங்­கிய தக­வல்­களின் அடிப்­ப­டையில் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கோ அவர்­களால் முடி­யா­மற்­போ­னது.

Q: உங்­களால் தற்­போது வழ­மை­போன்று ஓர­ள­வா­வது சமூகத்துடன் இணைந்து பணியாற்ற முடிகிறதா?

முடி­யாது. இதனை நான் கட்­டா­ய­மாக குறிப்­பிட்­டாக வேண்டும். இன்று நான் 24 மணி நேரமும் பொலிஸ் பாது­காப்பின் கீழேயே வாழ வேண்­டி­யுள்­ளது. என்னால் வெள்­ளிக்­கி­ழமை பள்­ளி­வா­ச­லுக்கும் வைத்­திய சிகிச்­சை­க­ளுக்கும் மாத்­தி­ரமே செல்­ல­மு­டியும். பொலி­ஸாரின் அனு­ம­தி­யின்றி வேறு எங்கும் என்னால் செல்ல முடி­யாது.
எனக்கு பாது­காப்பு வழங்கும் பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரி­யினால் கூட இது­வி­ட­யத்தில் தீர்­மானம் மேற்­கொள்ள முடி­யாது. இது எனக்கு பெரிய பிரச்­சினை. இதனால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஒருவரைப்போல் இருக்க வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டுள்ளது. நான் உளரீதியில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது உறவினர்களின் ஜனாஸா வீடுகளுக்கு, திருமண வீடுகளுக்கு மற்றும் வேறு பள்ளிவாசல்களில் நடைபெறும் சமய நிகழ்வுகளில் கூட என்னால் கலந்து கொள்ள முடியாது.
நான் இருக்கும் இந்தப் பகுதியில் சில நாட்கள் தண்ணீர் வழங்கல் தடைப்படுகிறது. ஆறு, ஓடைகளில் குளிப்பதற்கு செல்வதற்கும் எனக்கு அனுமதியில்லை. எனக்கு இவ்விடயத்தில் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு நான் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கோரிக்கை விடுக்கிறேன். இது எனக்கு ஆறுதலளிக்கும் என நான் நினைக்கிறேன்.

Q: இன்று நீங்கள் வாழும் வாழ்க்கையில் உங்களது எதிர்பார்ப்பு என்ன?

முன்பு நான் பாரிய அளவில் மக்களுடன் இணைந்து அனைத்து இனமக்களுடன் அந்நியோன்யமாக வேலை செய்த ஒருவன். எனக்கென்று சிறிய விவசாயப் பண்ணையொன்றை அமைத்து வாழ்ந்தவன் நான். இன்று நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் அமைக்கப்பட்ட வீடொன்றில் மூன்று பிள்ளைகள், மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காலையில் 5 மணிக்கு எழும்புவேன். தொழுவேன். பின்பு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவேன். இவ்வாறே எனது நாட்கள் நகர்கின்றன.
இந்த வீட்டில் சிலவேலைகள் பூரணப்படுத்துப்படாது இருக்கிறது. இந்த வீட்டு வேலைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவேண்டும். அடுத்தது எனக்கு வருமானம் பெற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தகம் ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும். இந்த இரண்டு விடயங்களுக்கும் அரசாங்கமோ அல்லது வேறு எவராவது உதவிசெய்தால் அது பெரிய உதவியாக அமையும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.