பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டி­லி­ருந்து விடு­த­லை­யான சீனி தொழிற்­சாலை அதி­காரி சுரக்மன் டீன்!

0 781

எம்.எப்.எம்.பஸீர்

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் என அறி­யப்­படும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் நடந்து 15 நாட்கள் கடந்­தி­ருந்த காலப்­ப­குதி அது. 2019 மே 7 ஆம் திகதி. மொன­ரா­கலை மாவட்டம் – புத்­தள பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பெல்­வத்தை சீனி தொழிற்­சா­லையில் பாரிய சல­ச­லப்பு.
குறித்த நிறு­வ­னத்தின் பிர­தான செயற்­பாட்டு அதி­கா­ரி­யாக அப்­போது செயற்­பட்ட சுரக்மன் டீன், அந்த தொழிற்­சா­லையில் சேவை­யாற்றும் முஸ்லிம் ஊழி­யர்­களை அழைத்து நடாத்­திய கலந்­து­ரை­யா­டல்­களே அந்த சல­ச­லப்­புக்கு கார­ண­மா­னது.

குறித்த கலந்­து­ரை­யா­டலை பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­யாக சித்­தி­ரித்து தொழிற்­சா­லையில் இருந்த பல ஊழி­யர்கள் நிறு­வ­னத்தை சுற்­றி­வ­ளைக்­கவே, நிலைமை எல்லை மீறிச் சென்­றது. இதனால் புத்­தள பொலி­ஸாரும், பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரும், இரா­ணு­வமும் பெல­் வத்த சீனி நிறு­வ­னத்தில் குவிக்­கப்­பட்டு நிலை­மையை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. எனினும் குறித்த நிறு­வ­னத்தின் பிர­தான செயற்­பாட்டு அதி­காரி, குறித்த கலந்­து­ரை­யாடல் ரமழான் மாத நட­வ­டிக்­கைகள் தொடர்­பி­லான தீர்­மா­னங்­களை எடுக்க முன்­னெ­டுக்­கப்­பட்­டது என தெரி­வித்­தி­ருந்தார்.

எவ்­வா­றா­யினும் பாரிய எதிர்ப்­புக்கள் மற்றும் கோஷங்­களைத் தொடர்ந்து வன்­மு­றைகள் பதி­வாகுவதை தடுக்க பிர­தான செயற்­பாட்டு அதி­காரி சுரக்மன் டீனும் ஏனைய முஸ்லிம் ஊழி­யர்­களும் அங்­கி­ருந்து பொலிஸ், அதி­ரடிப்படை பாது­காப்­புடன் வெளி­யேற்­றப்­பட்­டனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த பகு­தியில் பாரிய சோதனை, தேடுதல் நட­வ­டிக்­கை­களை பாது­காப்புத் தரப்­பினர் ஆரம்­பிக்­க­லா­யினர். இந் நிலையில் பெல்­வத்தை சீனி நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான கரும்புத் தோட்­டத்தில் இருந்து தேடு­த­லின்­போது பாது­காப்புத் தரப்­புடன் தொடர்­பு­டைய சில உப­க­ர­ணங்கள் இரா­ணு­வத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்­டன.

5 வோக்கி டோக்­கிகள், பிர­புக்கள் பாது­காப்பு பிரி­வி­னரின் உடையை ஒத்த மூன்று சோடி உடை, பாது­காப்பு தரப்­பினர் பயன்­ப­டுத்தும் கையு­றைகள், இரவு நேர நட­வ­டிக்­கையில் பாது­காப்பு தரப்­பினர் பயன்­ப­டுத்தும் வகையை ஒத்த மின் விளக்கு உள்­ளிட்­ட­வையே அவ்­வாறு கைப்­பற்­றப்­பட்­டன.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர், பெல்­வத்தை சீனி நிறு­வ­னத்தின் பிர­தான செயற்­பாட்டு அதி­கா­ரி­யாக செயற்­பட்ட சுரக்மன் டீனையும் மேலும் இரு­வ­ரையும், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­தனர். அத்­துடன் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக அவர்கள் புத்­தள பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டனர்.

இந் நிலையில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட பாது­காப்பு அமைச்சின் அனு­ம­தி­யுடன், பிர­தான செயற்­பாட்டு அதி­காரி சுரக்மன் டீன், அவ­ரது சாரதி, அந் நிறு­வ­னத்தின் ஊழியர் ஆகிய மூவரும் 54 நாட்கள் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர்.

நுகே­கொ­டையைச் சேர்ந்த தற்­போது 39 வய­தாகும் சுரக்மன் டீன் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வ­ரா­கவும், மீட்­கப்­பட்ட பாது­காப்பு தரப்­பினர் பயன்­ப­டுத்தும் உப­க­ர­ணங்­களை அவரே மறைத்து வைத்­த­தா­கவும் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அவ­ரது சார­தி­யான தற்­போது 38 வய­தாகும் உட­கன கொலனி, புத்­த­ளவைச் சேர்ந்த விக்­ர­ம­சிங்க முதி­யன்­ச­லாகே சுதத் விக்­ரம மற்றும் தற்­போது 39 வய­தாகும் படல்­கும்­புர பகு­தியைச் சேர்ந்த திஸா­நா­யக்க முதி­யன்­ச­லாகே சந்­தன அஜித் எனும் தொழிற்­சாலை ஊழியர் ஆகியோர் சுரக்மன் டீனுக்கு உதவி ஒத்­தாசை வழங்­கிய சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்­டனர்.

எவ்­வா­றா­யினும், விசா­ர­ணையின் பின்னர் கடந்த 2019 ஜூலை 5 ஆம் திகதி, வெல்­ல­வாய நீதிவான் மகேஷ் வாகிஷ்ட முன்­னி­லையில் குறித்த மூவ­ரையும் புத்­தள பொலிஸார் முன்­னி­லைப்­ப­டுத்­தினர். இதன்­போது தடுப்புக் காவல் விசா­ர­ணையின் போது அம்­மூ­வரும் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­தாக எந்த விட­யங்­களும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என பொலிஸார் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தி­ருந்­தனர். அத்­துடன் மீட்­கப்­பட்ட பாது­காப்பு தரப்­பினர் பயன்­ப­டுத்தும் பொருட்கள் தொடர்பில் மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தா­கவும் அவர்கள் நீதி­வா­னுக்கு அறி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து அன்­றைய தினம் வெல்­ல­வாய நீதிவான், குறித்த மூன்று பேரையும் தலா 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் விடு­வித்­தி­ருந்த நிலையில் வழக்கு விசா­ர­ணைகள் தொடர்ந்து இடம்­பெற்று வந்­தன.

இந் நிலையில் கடந்த 2021 மார்ச் 24 ஆம் திகதி இது குறித்த வழக்கு மீள வெல்­ல­வாய நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது இந்த வழக்கின் சந்­தேக நபர்­களை அவ்­வ­ழக்­கி­லி­ருந்து விடு­விக்­கு­மாறு, சட்ட மா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக பொலிஸார் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தனர்.

அதா­வது புத்­தள பொலிஸார் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களின் கோவைகள் சட்ட மா அதி­ப­ருக்கு மேல­திக ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்ள வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அவற்றை ஆராய்ந்­துள்ள சட்ட மா அதிபர், சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக எந்த சாட்­சி­யமும் இல்லை எனவும் அவர்­களை அவ்­வ­ழக்­கி­லி­ருந்து விடு­விக்­கு­மாறும் பொலி­சா­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். அந்த ஆலோ­சனை, நீதி­வா­னிடம் கைய­ளிக்­கப்­பட்ட பின்னர் நீதிவான் அவர்கள் மூவ­ரையும் விடு­வித்தார்.

வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, சுரக்மன் டீன் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்தார். அதன்­போது அவர் கூறி­ய­தா­வது,
‘ 2019 ஆம் ஆண்டு எனக்கு சம்­ப­வ­மொன்­றுக்கு முகம் கொடுக்க நேர்ந்­தது. பயங்­க­ர­வாத சட்டம் மற்றும் அவ­சர கால சட்­டங்­களின் கீழ் நான் அந்த சம்­ப­வங்­க­ளுக்கு முகம் கொடுக்க நேர்ந்­தது. அது தொடர்பில் என்னை கைது செய்­தார்கள். 54 நாட்கள் நான் புத்­தள பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்டேன். அவ்­வி­சா­ரணை நிறை­வ­டையும் வரை நான் பொலிஸ் தடுப்பில் இருந்தேன்.

உண்­மையில் அது எனக்கு பெரி­ய­தொரு அனு­பவம். எனினும் எனக்கு அக்­கா­லப்­ப­கு­தி­யி­லேயே வாழ்க்­கையின் மிகப் பெரும் துயர சம்­ப­வத்­துக்கும் முகம் கொடுக்க நேரிட்­டது.

அது எனது தந்­தையின் இழப்பு. நான் இந்த சம்­ப­வத்­துக்கு முகம் கொடுக்­கும்­போது, என்னை கைது செய்­யும்­போது, தந்­தையும் தாயும் அதனை நேரில் பார்த்­தார்கள். அவர்கள் அப்­போது எனது உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தி­லேயே இருந்­தனர். அந்த நொடி, ஒரே பிள்ளை என்ற ரீதியில் என்னை வெகு­வாக பாதித்­தது.

நான் பெல்­வத்தை சீனி நிறு­வ­னத்­துக்கு ஒரு கன­வு­ட­னேயே வந்தேன். எனக்கு கொடுக்­கப்­பட்ட இலக்கை பூர்த்தி செய்­யவே நான் பூரண எதிர்­பார்ப்­புடன் இங்கு வந்தேன். நான் இங்கு வந்து ஒரு மாதம் கூட ஆகும் முன்னர் இச்­சம்­ப­வத்­துக்கு முகம்­கொ­டுக்க நேரிட்­டது. புத்­தள மக்­க­ளுடன் இணைந்து நான் பாரிய வேலைத் திட்டம் ஒன்­றினை முன்­னெ­டுத்துச் சென்றேன். நான் முகம்­கொ­டுத்த இந்த துர­திஷ்­ட­வ­ச­மான சம்­ப­வத்தால் அதனை முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யாமல் போனது.

உண்­மையில் நான் அந்த ஒரு மாதமும் அதா­வது ஏப்ரல் மாதம் ஒரு விடு­முறை கூட எடுக்­காமல் நிறு­வ­னத்தில் இருந்­த­வாறு அர்ப்­ப­ணிப்­புடன் சேவை செய்தேன். குறிப்­பாக சிங்­கள – தமிழ் புத்­தாண்டு நாளில் கூட நான் விடு­முறை எடுக்­க­வில்லை.

இந்த வழக்கின் தீர்ப்பு அறி­விக்­கப்­ப­டும்­போது எனது தந்தை இருந்­தி­ருந்தால் அவர் மிகவும் சந்­தோ­ஷ­ம­டைந்­தி­ருப்பார். ( உணர்வு பூர்­வ­மாக கண்­ணீ­ருடன் தொடர்ந்தார்). எனது தந்­தையின் இழப்பு வாழ் நாளில் நான் சந்­தித்த மிகப் பெரும் கவ­லை­யாகும்.

இந்த சம்­ப­வத்தில் நான் கைது செய்­யப்­ப­டும்­போது எனது சிறிய மக­னுக்கு ஒரு வரு­டமும் 2 மாதங்­களும் மட்­டுமே பூர்த்­தி­யா­கி­யி­ருந்­தது. மனைவி தனியார் வங்­கி­யொன்றில் சேவை­யாற்றும் நிலையில் அவரும் பாரிய நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுக்க நேரிட்­டது.

இத­னை­விட எனது மனை­வியின் பெற்றோர் சகோ­தரி உள்­ளிட்­டோரும் பாரிய நெருக்­க­டி­களை சந்­தித்­தனர்.
உண்­மையில் எனது மனை­வியின் தந்தை இரா­ணு­வத்தின் ஒரு உயர் அதி­காரி. அவர் யுத்­தத்தில் பாரிய சேவை­யாற்­றிய ஒரு வீரர். இந்த சம்­ப­வத்தால் அவ­ருக்கும் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க நேரிட்­டது.

நான் முஸ்லிம் தான். எனினும் எனது பின்­ன­ணியை பாருங்கள். நான் டி.எஸ். சேனா­நா­யக்க கல்­லூ­ரியில் கற்றேன். நான் சிங்­கள மொழி மூலம் கல்வி கற்­றவன். அனைத்து மத, இனங்­களைச் சேர்ந்த சகோ­த­ரர்­க­ளுடன் இணைந்து நான் சேவை­யாற்­றி­யவன். பெளத்த அடிப்­ப­டை­யி­லான நெருக்­கமே கூடு­த­லாக இருந்­தது. எனது நண்­பர்கள் நூற்­றுக்கு 99 வீத­மா­ன­வர்கள் பெளத்­தர்கள். பெளத்த மத அனுஷ்­டா­னங்­க­ளுக்கு கெள­ர­வ­ம­ளிப்­பவன் நான்.

நான் விகா­ரைகள், கோவில்கள், கத்­தோ­லிக்க தேவா­ல­யங்­க­ளுக்கும் சென்று வரு­பவன். அதனால் எனக்கு இன, மத ரீதி­யி­லான வேறு­பா­டுகள் விளங்­க­வில்லை.
உண்­மையில் எப்­போதும் நல்­ல­வற்­றையே செய்ய வேண்டும் என நான் நினைக்­கிறேன். உண்­மையில் அன்று நான் அந்த கலந்­து­ரை­யா­டலை நடத்­தி­யதன் நோக்கம், இந்த பகு­தியில் வசிக்கும் ஏழை எளி­ய­வர்­க­ளுக்கு உதவி செய்­வ­தற்­காகும்.

ரமழான் மாதம் வரும் நிலையில், அம்­மா­தத்தில் நாம் அதி­க­மான நன்­மை­யான விட­யங்­களை செய்வோம். அவ்­வா­றான நிலை­யி­லேயே அம்­மா­தத்தில் நல்­ல­வற்றைச் செய்­வ­தற்­காக அந்த கலந்­து­ரை­யா­டலை நான் நடத்தி இருந்தேன்.

எனினும் நாட்டில் இடம்­பெற்­றி­ருந்த துர­திஷ்­ட­வ­ச­மான சம்­பவம் கார­ண­மாக எனக்கு இவ்­வா­றான நிலைக்கு முகம்­கொ­டுக்க நேர்ந்­தது. எவ்­வா­றா­யினும் எனது மன­சாட்­சிக்கு தெரியும் நான் குற்­ற­மற்­றவன் என்று. அதனால் நான் இந்த நிலை­மையை மிக தைரி­யத்­துடன் எதிர்­கொண்டேன்.

உண்மையில் நான் எந்த பயங்கரவாத நடவடிக்கையுடனும் தொடர்புபடவில்லை என நீதிமன்றின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

நான் இந்த நாட்டை நேசிக்கிறேன். இந் நாட்டுக்காக எதிர்காலத்திலும் என்னால் இயலுமான முழுமையான பங்களிப்பினை நான் வழங்குவேன். இந் நாட்டை பாதுகாப்பாக முன்னேற்றிச் செல்ல எனது பங்களிப்பை கண்டிப்பாக வழங்குவேன். புத்தள மக்கள் எனக்கு தந்த ஆதரவையும் நான் நன்றியோடு நினைவு கூறுகிறேன். என்னை பொலிஸ் நிலையத்தில் வந்து பலரும் பார்வையிட்டார்கள். உணவு கொண்டுவந்து கொடுத்தார்கள். உண்மையில் நான் அவற்றை நன்றியோடு நினைவு கூறுகிறேன்.’ என தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.