எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற ஏற்பாடாகியுள்ள வளைகுடா ஒத்துழைப்பு சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு கட்டார் அமீர் செய்க் தமிம் பின் ஹமாட் அல் தானிக்கு சவூதி அரேபிய மன்னர் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார் என கட்டாரின் உத்தியோகபூர்வ செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
கட்டாரின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மிக ஆழமான சமிக்ஞையாக பகுப்பாய்வாளர்களினால் பார்க்கப்படும் பெற்றோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகிக் கொள்ளவுள்ளதாக கட்டாரின் அறிவிப்பை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த கூட்டத்திற்கான சவூதி அரேபிய மன்னரின் அழைப்பு கட்டார் அமீருக்கு கிடைத்துள்ளது என கட்டார் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
குறித்த அழைப்பு பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த வளைகுடா ஒத்துழைப்பு சபையின் பொதுச் செயலாளர் அப்துல் லத்தீப் பின் றசீட் அல் ஸயானியினால் கட்டாரின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுல்தான் பின் சாத் அல் முரைக்ஹியினால் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பின்போது கையளிக்கப்பட்டது.
கட்டார் அமிர் செய்க் தமீம் சவூதி அரேபியாவுக்கு செல்வாரா, இல்லையா என்பது தொடர்பில் கட்டார் செய்தி முகவரகம் எதனையும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2017 ஜூன் மாதம் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு சபையின் அங்கத்தவரல்லாத எகிப்து ஆகிய நாடுகளுடன் இணைந்து சவூதி ஆரேபியா, கட்டார் மீது தரை, வான் மற்றும் கடல் வழித் தடைகளையும் மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்தது. கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான இராஜதந்திர பிரச்சினையாக இது பார்க்கப்பட்டது.
சவூதி அரேபியா தலைமையிலான நாடுகள் கட்டார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப்பதற்கும் முயன்று வருவதாகக் குற்றம்சாட்டியிருந்தன. எனினும் இக் குற்றச்சாட்டுக்களை கட்டார் முற்றாக மறுத்துள்ளது.
இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு சபையின் உச்சி மாநாட்டிற்கு குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. பதிலாக அமைச்சர்களும், பிரதிப் பிரதமர்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
கட்டாருக்கும் சவூதி அரேபியாவின் தலைமையிலான குழுவிற்கும் இடையே தரகராகச் செயற்படும் குவைத் வளைகுடா ஒத்துழைப்பு சபையின் ஆறு அங்கத்துவ நாடுகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
-Vidivelli