சிங்களத்தில்: ஜயதேவ உயன்கொட
தமிழில்: எம்.எச்.எம் நியாஸ்
‘சமகி ஜன பலவேகய’ கட்சியினதும் பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் உரையொன்று கடந்த வார ஊடகங்களில் முதன்மைச் செய்தியாகக் காணப்பட்டது. தாம் அதிகாரத்தைப் பெற்றால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பயங்கரவாதிகளுக்கும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் தமது அரசினால் மரண தண்டனை வழங்கப்படுமென்பதே அது. அதற்கு முன்பும் அவர் பல தடவைகள் இவ்வாறு பேசியிருந்ததை நாம் மறக்க முடியாது.
அவரது இக்கருத்து பற்றி ‘சமகி ஜனபலவேகய’ கட்சியின் உறுப்பினர்களோ எதிர்க்கட்சியினரோ அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. ஆனால் எமது நாட்டின் ஜனநாயகமும், ஜனநாயக நிர்வாக முறையும், ஜனநாயக நிர்வாக முறையின் நற்பண்புகளை உயர்வாக மதிக்கும் பிரஜைகளும் அரசியல் மற்றும் சமூக நலனுக்காக உழைப்போரும் சஜித்தின் மேற்படி கூற்றை விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும். சஜித் ஜனநாயகத்துக்கு புறம்பாக, நடைபயின்ற வண்ணம், மக்களது உள்ளங்களை மகிழ்ச்சியினால் ஊடறுத்துச்செல்லும் வலதுசாரிக் கொள்கையை அடியொட்டிய வகையில் செயல்படுவதை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது எமது கடமையாகும்.
நாம் மட்டுமன்றி ‘சமகி ஜனபலவேகயவின்’ உறுப்பினர்கள் இது பற்றி அவரிடம் பேசி அவரைத் திருத்த முயற்சிப்பது கட்டாயமாகும். அது ஒரு பாழடைந்த அரசியல் பாதை என்பதை இங்கு வலியுறுத்திக் கூற வேண்டியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றுக்கொள்வதற்காக மக்கள் மத்தியில் பிரபலமடையும் ஒரு துரும்பே இது. கடந்த காலங்களில் வலதுசாரி அதிகாரவாதிகள் மற்றும் தேர்தலின் பின்னரான ஜனநாயக அரசியல்வாதிகளின் ஒரு முயற்சியாகவே இது காணப்பட்டது. இதுபோன்று வலதுசாரி அரசியல் மாற்றுவழிகளை முன்வைத்த அரசியல்வாதிகளிடம் ஒரு பொதுப்பண்பு காணப்பட்டது. அவ்வாறானவர்கள் சம்பிரதாய ஜனநாயக அரசியல் கட்சிகளுடன் மிகக் குறைந்த அளவில் தொடர்புகொண்டிருந்தவர்களாவர் அல்லது அவற்றுக்குப் புறம்பாக அரசியலுக்குள் புகுந்தவர்களாவர். அதன் காரணமாகவே தமது தனிப்பட்ட புகழ் மற்றும் பெருமையின் காரணமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாவர். இதற்கான மூன்று உதாரணங்களை இங்கு முன்வைக்க முடியும். அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப், பிரேசிலின் கொன்ஸானாரோ மற்றும் பிலிப்பைன்ஸின் தூதர்த்தே ஆகிய அரசியல்வாதிகளே அவர்கள்.
பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி தூதர்த்தேயின் அடிச்சுவட்டைப் பின்பற்றியே சஜித் சென்று கொண்டிருப்பது நன்கு தெரிகிறது. 2016 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி தேர்தலின்போது, தூதர்த்தே நாட்டு மக்களுக்கு வழங்கிய மிக முக்கியமான வாக்குறுதியாக ‘பிலிப்பைன்ஸில் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்’ என்று காணப்பட்டது. அவர் ஏற்கனவே ‘நகரபிதாவாக’க் கடமையாற்றிய காலத்தில் குற்றங்களைத் தடுக்கும் விடயங்களில் புகழ்பெற்றிருந்த ஓர் அரசியல்வாதியாவார். அவர் தனது ஆட்சிக்காலத்தில் நாட்டின் சட்டங்களைப் புறக்கணித்துவிட்டு சட்டங்களுக்கு ‘அப்பால்’ செயல்படுவதற்கு பொலிசாருக்கு அதிகாரம் வழங்கியிருந்தார். குற்றவாளிகளைக் ‘கண்ட இடத்தில் சுட்டுத்தள்ளும்’ முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் தூதர்த்தேயாவார். எம்னஸ்டி இன்டநெஷனல் அமைப்பின் அறிக்கை ஒன்றின்படி, நீதிமன்றம் மற்றும் சட்டங்களுக்கு அப்பால் சென்ற பிலிப்பைன்ஸ் பொலிசார் சுமார் இரண்டாயிரம் பேரை சுட்டுக்கொன்றுள்ளனர். வழக்குகள் இன்றி வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாது, தனி நபர்களை ‘பச்சை’யாகவே சுட்டுக் கொல்வது மூலம் மரண தண்டனை விதிக்கும் ஒரு முறையாகும். இது குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை தடுத்தல் பற்றிய சஜித் பிரேமதாஸவின் எதிர்கால போக்கும் அரசியல் மிலேச்சத்தனத்தை நெருங்கும் ஒரு வழிமுறைதானா என்று அவரிடம் கேட்க வேண்டியேற்பட்டுள்ளது.
அது விடயம் பற்றி தெளிவுபடுத்தும்படி அவரை நிர்ப்பந்திப்பதற்கான விஷேடமான காரணம் என்ன? அதாவது பொதுமக்களது வாக்குகளால் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பொதுமக்களது உள்ளங்களை தூண்டிவிடுவது போன்று பேசுதல், அந்த அடிப்படையில் பொதுமக்களிடம் மனிதத் தன்மையற்ற மனிதாபிமானத்துக்கு எதிராக, ஜனநாயகத்தை முழுமையாக தடைசெய்யும் வகையில்தான் அந்த வழிமுறை உள்ளது. இது தற்போதைய உலகில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான புதிய அணுகுமுறையாகும்.
இதற்கான முன்மாதிரிகளை எமது அண்டை நாடான இந்தியாவில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வரான ‘யோகி ஆதித்யநாத்’ எனும் ஹிந்து மதகுரு இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடிக்குப் பின் பதவிக்கு வர முயற்சிப்பது நன்கு தெரிகிறது. கடந்த சில வருடங்களாக அதற்கான பின்னணியை அவர் உருவாக்கிக் கொண்டு வருகிறார். இந்த அரசியல் அபிலாஷையை அடைவதற்காக அவர் பயன்படுத்தும் மிக முக்கியமான ஆயுதம் “முஸ்லிம்களுக்கு எதிரான கோஷமாகும்”. ‘லவ் ஜிஹாத்’ எனும் பெயரில் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் அவர் ஆரம்பித்த முஸ்லிம்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை அவரது முயற்சியின் ஆரம்பக் கட்டமாகும். ‘ஹிந்து யுவதிகள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வது முஸ்லிம்களது ஒரு சதித்திட்டமாகும்’ என்று அவர் ஹிந்து மக்களிடையே பிரச்சாரம் செய்யலானார். அது மட்டுமன்றி அவற்றை தடுத்து நிறுத்துவதற்காக புதிய சட்டங்களையும் அவர் அறிமுகப்படுத்தியதுடன் பிரதமர் மோடியும் செய்யாத வகையில் தமது தனிப்பட்ட அரசியல் தனித்துவத்தை மேலோங்கச் செய்யும் முகமாக முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்துள்ளார். அவரது அந்த முயற்சி உத்தர பிரதேஷில் மட்டுமல்லாது வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் ஹிந்து மாநிலங்களில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற அரசியல் முயற்சிகள் மூலம் ஒரு புதிய எதிரியை உருவாக்க முடியும்.
சஜித் பிரேமதாஸ அவர்கள் ‘யோகி ஆதித்யநாத்’ போன்ற ஒருவராக இல்லைதான். எனினும் அரசினால் வழங்கப்படும் மரண தண்டனை பற்றிய அவரது நோக்கு ஆதித்யநாத்தின் ‘லவ் ஜிஹாத்’ மற்றும் தடுத்து நிறுத்தும் முயற்சி போன்ற வலதுசாரிகளைக் கவரச் செய்யும் அரசியலின் புதிய தோற்றமொன்று எமது நாட்டில் உருவாவதற்கு இடமளிக்க முடியும். தான் கோத்தாபய ராஜபக்ஷவை விடவும் கடும் சித்தமுடைய மனோதிடமுள்ள, அசைந்து கொடுக்காத, கடுமையான முடிவுகளை எடுக்கத் தயங்காத ஒரு தலைவர் என்று மக்களுக்குக் காண்பிப்பதற்காக சஜித் முயற்சி செய்யப் பார்க்கிறார் போலும். இது போன்ற விடயங்கள் அரசியல் ரீதியாக துரதிஷ்டமானது மட்டுமன்றி அது நடைபெறக்கூடாத விடயங்களாகும். இலங்கைக்குத் தேவைப்படுவதெல்லாம் கோத்தாபய ராஜபக்ஷவைவிடவும் கடுமையான போக்கைக் கொண்ட ஒரு ஆட்சியாளர் அல்ல. ஆனால் அதுபோன்ற தலைமைத்துவத்தை வெறுக்கக்கூடியவரும் நடுநிலைப் போக்கைக் கொண்டதும், இலகு மனம் படைத்த ஜனநாயகவாதியையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர் மரண தண்டனை வழங்குவேன் என்று பெருமையுடன் பேசும் ஒரு தலைவராக இருக்கவே கூடாது. அது பற்றி வெட்கப்படக் கூடிய, அதை செவியுற்றதும் அதிர்ச்சியடையக் கூடிய அதை ரத்துச் செய்வேன் என்று வாக்குறுதியளிக்கும் அளவில் அத்தலைவர் மனிதாபிமானம் கொண்டவராகத் திகழ வேண்டும்.
தம்மிடம் இப்படியான பண்புகள்தான் இருப்பதாக சஜித் கூறுகின்றார். அவருக்கு உபதேசிப்போர் நாட்டில் மனிதாபிமான அடிப்படையில் அரசியல் கலந்துரையாடல்களை நடத்தவேண்டுமென அவரிடம் கூறிவையுங்கள்.
தற்போது இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியன்மார், தாய்லாந்து மற்றும் சீனா போன்ற நாடுகளில் அரசியல் கட்சிகளும் அரசுகளும் மனிதாபிமானமற்ற நிலையில் செயல்படுகின்றன. அந்த ஒவ்வொரு நாடுகளிலும் மனிதாபிமானமற்ற நிலை வெவ்வேறு தரங்களில், தன்மைகளில் செயல்படுத்தப்படுகின்றது. இந்த நிலையில் சீனா, மியன்மார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. இலங்கையும் ஒரு காலத்தில் அதே நிலையில் முன்னணியில் இயங்கி வந்தபின் கடந்த சில வருடங்களில் மனிதாபிமான நிலைக்கு மாறியுள்ளது. எனினும் அந்த நிலை மீண்டும் பழைய நிலைக்குச் செல்லும் மோசமான வாய்ப்பும் உண்டு. இந்த சூழ்நிலையை மாற்றியமைக்கும் தீவிர முயற்சியில் இயங்குவது எதிர்க்கட்சித் தலைவரின் கடமையாகும். அதற்காக வேண்டி முதிர்ச்சித்தன்மையுடனான ஜனநாயக அரசியல் அறிவையும் திறனையும் அவர் தம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி – அனித்தா பத்திரிகை
– Vidivelli