எம்.எப்.எம்.பஸீர்
அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 27 ஆம் அத்தியாயத்தின் கீழ் ஜனாதிபதியினால் கடந்த மார்ச் 12 ஆம் திகதி 2218/68 ஆம் இலக்க குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவித்தலானது, இலங்கையின் அரசியலமைப்பையும், சர்வதேச இணக்கப்பாடுகளையும் குறிப்பாக ஐ.சி.சி.பி.ஆர். எனப்படும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டினையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந் நிலையில், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என பரவலாக அறியப்படும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் நேரடி தொடர்பற்றவர்களுக்கு இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் புனர்வாழ்வளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அவ்வாறானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த புனர்வாழ்வு நடைமுறையை செயற்படுத்துவதற்காக, பயங்கரவாத தடுப்பு பிரிவு (ரி.ஐ.டி.), குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) மற்றும் தேசிய உளவுச் சேவை (எஸ்.ஐ.எஸ்.)ஆகியவற்றின் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 9 ஆம் திகதி ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்டு மார்ச் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த புனர்வாழ்வளித்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தலின் முதலாவது ஒழுங்குவிதியானது, இவ்வர்த்தமானியின் உள்ளடக்கத்தை ‘ 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (வன்முறையான மட்டு மீறிய மதக் கொள்கையைக் கொண்டிருப்பதற்கு எதிரான தீவிரமயமற்றதாக்குதல்) ஒழுங்குவிதிகள் ‘ என அறிமுகம் செய்துள்ளது.
இவ்வர்த்தமானியின் 5 ஆம் ஒழுங்குவிதியின் 4 ஆவது உப ஒழுங்கு விதியானது, ‘அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர் ஒருவர், வழக்கு விசாரணைகள் இன்றி புனர்வாழ்வுக்கு உட்படுத்த’ நீதிவான் ஒருவருக்கு அதிகாரமளிக்கின்றது. இதற்காக சட்ட மா அதிபரின் எழுத்து மூல அனுமதி மட்டுமே அவசியமாகிறது.
குறித்த ஒழுங்கு விதி பின்வருமாறு கூறுகின்றது.
‘புரியப்பட்ட தவறின் தன்மைக்கு இணங்க சரணடைந்தவர் ஒருவருக்கு அல்லது, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர் ஒருவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை தொடுப்பதற்குப் பதிலாக புனர்வாழ்வு நிலையமொன்றில் அவருக்கு புனர்வாழ்வளிக்கப்படுதல் வேண்டும் என சட்ட மா அதிபர் அபிப்பிராயப்படுமிடத்து, அத்தகைய சரணடைந்தவர் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர் சட்ட மா அதிபரின் எழுத்து மூல அங்கீகாரத்துடன் நீதிவான் ஒருவர் முன் நிறுத்தப்படுதல் வேண்டும். நீதிவான் ஒருவர், 3 ஆம் ஒழுங்குவிதியில் குறித்துரைக்கப்பட்ட தவறுகள் அல்லாத வேறு ஏதும் தவறுகளை அத்தகைய சரணடைந்த அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர் புரிந்துள்ளாரா என்பதை கருத்தில் கொண்டு ஒரு புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடத்தை விஞ்ஞாத காலப்பகுதிக்காக அவரை புனர்வாழ்வுக்காக ஆற்றுப்படுத்தி கட்டளையாக்கலாம்.’
உண்மையில் இலங்கையின் அரசியலமைப்பானது, கைது செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்கான அடிப்படை உரிமை உள்ளதாக கூறுகின்றது. அரசியலமைப்பின் 13 ஆவது உறுப்புரை இதனை மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றது. அப்படி இருக்கையில் சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவரை புனர்வாழ்வுக்கு அனுப்புவது பாரதூரமான விடயமாகும் என சட்டத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜாவிட் யூசுப் கருத்து தெரிவிக்கையில், ‘ நீதிமன்றம் ஒரு விடயம் தொடர்பில் இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்தாலும், சட்ட மா அதிபர் அவ்வாறானதொரு செயற்பாட்டில் ஈடுபடுவதில்லை. சட்ட மா அதிபர் பொலிஸாரால் கைது செய்யப்படும் சந்தேகநபர் தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து, அது தொடர்பில் அவரது தீர்மானத்தை நீதிமன்றில் முன்வைப்பார். அந்த தீர்மானம் நியாயமானதா என நீதிமன்றம் வழக்கு விசாரணையின் பின்னரேயே தீர்மானிக்கும்.
எனினும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய, சட்ட மா அதிபரின் குறித்த நிலைப்பாடு தொடர்பில் இரு தரப்பு விடயங்களை ஆராய்வது அல்லது வழக்கு விசாரணை இடம்பெறாத சூழ் நிலையையே அவதானிக்க முடிகிறது. அதன்படி அரசியல் அமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்கான அடிப்படை உரிமையை அது மீறுவதாக அமைந்துள்ளது. அத்துடன், இந்த வர்த்தமானிக்கு அமைவாக கைது செய்யப்படும் நபர்கள் புனர்வாழ்வளிக்கப்படும் முறைமை தொடர்பிலும் எந்த தெளிவுபடுத்தல்களும் இல்லாமையானது மற்றொரு பாரதூரமான விடயமாகும்.’ என தெரிவித்தார்.
இந் நிலையில், இந்த வர்த்தமானி தொடர்பில், பிரபல மனித உரிமைகள் குறித்த வழக்கறிஞர் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா தனது ட்விட்டர் சமூக வலைத் தளத்தில் இட்டுள்ள பதிவில், ‘இந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தனி மனித சுதந்திரம் தொடர்பில் பாரிய பிரச்சினை எழுகிறது. காரணம், ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிபதி ஒருவருக்கு குறித்த விடயம் தொடர்பில் தீர்மானமொன்றினை எடுப்பதற்கான அவகாசம் இல்லாமல் போகிறது.’ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பு குறித்த நிபுணரான பேராசிரியர் நிஹால் ஜயவிக்ரம தெரிவிக்கையில், கைது செய்யப்படும் நபர் ஒருவர் தொடர்பில் நியாயமான வழக்கு விசாரணைகள் இன்றி தீர்மானம் எடுக்கப்படுமானால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமான விடயமல்ல’ என தெரிவித்தார்.
சர்வதேச நீதிபதிகள் ஆணைக் குழுவும் ( ஐ.சி.ஜே.) இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சர்வதேச இணக்கப்பாடுகளை மீறுவதாக குறிப்பிட்டு, இந்த வர்த்தமானியின் உள்ளடக்கங்களைக் கண்டித்துள்ளது. வழக்கு விசாரணை இன்றி இரு வருடங்கள் வரை தடுத்து வைத்திருப்பதற்கான வாய்ப்பை அளிக்கும் இலங்கையின் புதிய ‘ டி – ரெடிகலைசேஷன் ‘ ஒழுங்குவிதிகளை கண்டிப்பதாக குறித்த ஆணைக் குழு தெரிவித்துள்ளது. அந்த ஒழுங்குவிதிகளானது, சிறுபான்மை மத, இன மக்களை மற்றாந் தாய் மனப்பான்மையுடன் பார்க்க வழிவகுக்கும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
பாராளுமன்றத்தின் எந்த தலையீடும் இன்றி, நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி, மக்களிடையே மத அல்லது இன முரண்பாடுகளை, வேற்றுமைகளை ஏற்படுத்தும் வண்ணம் வசனங்களை, சமிக்ஞைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களைக் கூட நியாயமான வழக்கு விசாரணைகள் இன்றி இரு வருடங்கள் வரை புனர்வாழ்வுக்கு உட்படுத்த முடியுமான விடயங்களை கொண்டுள்ளமை ஆபத்தானதாகும்.
இந் நிலையில் இது குறித்து ஐ.சி.ஜே. எனும் சர்வதேச நீதிபதிகள் ஆணைக் குழுவின் சட்டம் மற்றும் கொள்கை தொடர்பிலான பணிப்பாளர் இயன் சைடேர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது.
‘நிறைவேற்று அதிகாரம் கொண்டவரால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த கட்டளை ஊடாக, நபர்களை வழக்கு விசாரணை இன்றி சிறைப்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இது இலங்கையின் அரசியலமைப்பின் 13 ஆம் உறுப்புரை ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள அரசியலமைப்பு உறுதிப்பாட்டையும், சர்வதேச சட்டங்களுடனான பிணைப்பையும் மீறும் வகையில் அமைந்துள்ளது.
புதிய வர்த்தமானி ஒழுங்குவிதிகளை ஒரு பேரம் பேசும் விடயப் பொருளாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இங்கு கைதி ஒருவருக்கு சட்ட ரீதியிலான குற்றச்சாட்டின் கீழ் நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு பதிலாக ஓரிரு வருடங்கள் புனர்வாழ்வு பெறலாம். அல்லது கால வரையறை அற்ற தடுப்புக் காவலில் இருந்து வழக்கு நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்கலாம். இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இலங்கை உடன்பட்டுள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டின் (ஐ.சி.சி.பி.ஆர்.) 9 ஆம் உறுப்புரை ஊடாக வழங்கப்பட்டுள்ள உறுதிப்பாடுகள் பலவும் புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்படவில்லை’ என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உறுதிப்படுத்தல்கள் பிரகாரம், நிர்வாக தேவைகளுக்காக ஒருவரை தடுப்புக் காவலில் வைக்க முடியாது. அது மனித உரிமை மீறலாக பார்க்கப்படுகிறது. எனினும் இலங்கையில் இந்த புதிய வர்த்தமானி வருவதற்கு முன்பாகவே, பயங்கரவாத தடை சட்டத்தையும், சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச சட்டத்தையும் சிறுபான்மையினரை இலக்காக கொண்டதாக பயன்படுத்தும் ஒரு போக்கினையே காண முடிகிறது. சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புண்ர்வுகளை தூண்டும் எவரும் இச்சட்டங்கள் ஊடாக கைது செய்யப்படுவதாகவோ தடுத்து வைக்கப்பட்டு வழக்கு தொடுக்கப்படுவதாகவோ காண முடியவில்லை.
மாற்றாந்தாய் மனப்பான்மையை தூண்டும், வன்முறை, பகைமைக்கு வித்திடும் வெறுப்புப் பேச்சுக்களை ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரை தடை செய்கிறது. இந்த உறுப்புரையானது தற்போதும் சிறுபான்மையினரை இலக்குவைத்தே நாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு போக்கை அவதானிக்க முடிகிறது. இதற்கு ரம்ஸி ராசிக், கவிஞர் அஹ்னாப் என ஏராளமான உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவ்வாறான பின்னணியில், பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு, புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளானது, வெறுப்புப் பேச்சுக்கள் குறித்து கைதாவோரைக் கூட ஓரிரு ஆண்டுகள் நியாயமான வழக்கு விசாரணையின்றி புனர்வாழ்வுக்கு உட்படுத்த வழி ஏற்படுத்தும். இந் நிலைமை தற்போதைய நடைமுறைப் பிரகாரம் சிறுபான்மையினரையே இலக்கு வைத்ததாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இந்த புனர்வாழ்வு குறித்த ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு தற்போதைய சூழலில் நிச்சயம் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு வரமாக அன்றி சாபமாகவே அமையப்போவதாக தோன்றுகிறது.- Vidivelli