(றிப்தி அலி)
புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்த மாகாண சபை தேர்தல் எதிர்வரும் ஜூன் மாத நடுப் பகுதியில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அடுத்த அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் 70:30 என்ற கலப்பு அடிப்படையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று அரசாங்க மட்டத்தில் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
இதற்கமைய 70 சதவீதம் தொகுதி அடிப்படையிலும் 30 சதவீதம் விகிதாசாரத்தின் அடிப்படையிலும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான முன்மொழிவொன்றினை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு 2014ஆம் ஆண்டு காலப் பகுதியில் தயாரித்துள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது, விரைவில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலுக்கு தயாராகுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை கடந்த பெப்ரவரியில் சந்தித்து மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
எனினும் மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்தி 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா இலங்கையிடம் தொடச்சியாக வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (23) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும் இந்தியா இதனை மீண்டும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, தற்போதுள்ள மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமே இந்த தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கான தயார் நிலையில் தேர்தல் ஆணைக்குழு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கலப்பு அடிப்படையில் மாகாண சபை தேர்தல் இடபெறுமாயின் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாக மாறும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெறப்பட்டு வந்த அதிக முஸ்லிம் உறுப்பினர்களையும் இழக்க நேரிடுவதுடன் மாகாணத்தின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியும் இழக்கப்படும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.- Vidivelli