5-16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு இஸ்லாம், அரபு மாத்திரம் கற்பிக்கும் மத்ரஸாவுக்கு தடை
16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிலும் மத்ரஸாக்களுக்கு தடையில்லையாம்
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஐந்து வயது தொடக்கம் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு இஸ்லாம் மதத்தையும், அரபு மொழியையும் மாத்திரம் போதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து மத்ரஸாக்களும் தடைசெய்யப்படும். என்றாலும் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் கல்வி பயிலும் மத்ரஸாக்கள் தடைசெய்யப்படமாட்டாதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்தஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் மரிக்கார் எம்.பி, மத்ரஸாக்களுக்கான தடை குறித்து தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
அனைத்து மத்ரஸா பாடசாலைகளுக்கும் தடைவிதிக்கப்படுமென நான் ஒருபோதும் கூறவில்லை. எந்தவொரு நாட்டிலும் ஒரு தேசிய கல்விக்கொள்கையுள்ளது. எமது நாட்டில் 5 – 16 வயது வரையான காலத்தில் தேசிய கல்வி கொள்கையின் கீழே அனைத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும். 5 – 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களுக்கு இஸ்லாமிய மதம் மற்றும் மொழியை மாத்திரம் கற்பிக்கும் மத்ரஸா பாடசாலைகள் இருந்தால் அவற்றை தடைசெய்வேன் என்றே கூறினேன். அதற்கு முஸ்லிம் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மதத்தை மாத்திரம் போதிக்கும் மத்ரஸா பாடசாலைகள் அதிகளவில் உள்ளன. அவற்றில் மௌலவியாக விரும்புபவர்கள் கல்வி கற்க முடியும். என்றாலும் 5 – 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் மதம் மற்றும் அரபு மொழியை மாத்திரம் போதிக்கும் பாடசாலைகள் தடைசெய்யப்படும். இவை தேசிய கல்விக்கொள்கைக்கு முரணானதாகும் என்றார்.- Vidivelli