முஸ்லிம் சமூகம் இருள்மயமான ஓர் எதிர்காலத்தை நோக்கித் தள்ளப்பட்டு வருகிறது. பெரும்பான்மைப் பலத்துடன் பதவிக்கு வந்த அரசாங்கம் பெரும்பான்மை மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக முஸ்லிம்களைக் குறிவைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
கொவிட் 19 ஜனாஸா நல்லடக்க உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக நடாத்திய போராட்டம் முடிவுக்கு வந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கிடையில் மேலும் பல சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.
அரசாங்கம் திடீரென முஸ்லிம்கள் மீதான பல்வேறு தடைகளை விதிக்கவும் சீர்திருத்தங்களை அமுல்படுத்தவும் முயற்சிப்பதன் காரணம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களேயாகும்.
இந்த அறிக்கையின் சிபாரிசுக்கமைய, முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவைத் தடை செய்வதற்கான முன்னெடுப்புகள் தீவிரமடைந்துள்ளன. அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கையொப்பமிட்டுள்ளார். இன்னும் ஓரிரு வாரங்களில் இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்திய பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைகள் புர்கா தடை செய்யப்படவேண்டுமென பரிந்துரைத்துள்ளன. இப்பரிந்துரையை முன்வைத்தவர்களில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் உள்ளார்கள்’’ எனவும் அமைச்சர் வீரசேகர வெளிநாட்டு செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளமையை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதே போன்று அமைச்சரவையில் இருக்கும் ஒரே முஸ்லிம் அமைச்சரான நீதியமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தில் எதிர்ப்புகளைத் தெரிவிக்கவில்லை என்றும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம் மத்ரசாக்கள் தடை செய்யப்படும் என்ற தனது கருத்து தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர நேற்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். 5–16 வயது வரையான மாணவர்களுக்கு இஸ்லாம் மற்றும் அரபு கற்பிக்கும் மத்ரசாக்களே தடை செய்யப்படும் என்றும் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான மத்ரசாக்கள் தடை செய்யப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறெனில் 5–16 வயதுக்கிடைப்பட்ட மாணவர்கள் தமது இஸ்லாமிய சமயத்தையோ அல்லது அல்குர்ஆனையோ கற்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது. குறித்த வயதில் பாடசாலைக் கல்வியைக் கைவிட்டு இஸ்லாம் மற்றும் அரபு மொழியை மாத்திரம் கற்பதையோ கற்பிப்பதையோ ஏற்க முடியாது. ஆனால் தமது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து கொண்டே மார்க்கத்தையும் பயிலுகின்ற மாணவர்களின் மத ரீதியான உரிமையைத் தடை செய்வதாகவே அமைச்சர் சரத் வீரசேகரவின் புதிய அறிவிப்பு அமைந்துள்ளது. இது ஆபத்தானதாகும்.
அமைச்சரின் அண்மைக்கால கருத்துக்களை நோக்கும்போது அவருக்கு முஸ்லிம் சமூகம் குறித்தும் இஸ்லாமிய சமயம் குறித்தும் போதிய தெளிவில்லை என்பது நன்கு புரிகிறது. அவசரப்பட்ட விதமான அவரது அறிக்கைகள் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
இந் நிலையில் அமைச்சருக்கும் ஏனைய அரசாங்க முக்கியஸ்தர்களுக்கும் புர்கா, மத்ரசா, முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளிட்ட ஏனைய சமய, சமூக விவகாரங்கள் குறித்து தெளிவுகளை வழங்க வேண்டியது யார்? நிச்சயமாக இந்தப் பொறுப்பு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 19 முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் உரியதாகும். தமது சமூகத்தைப் பற்றி, சமயத்தைப் பற்றி விளக்கமளிப்பதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்கள் அவசியமில்லை.
துரதிஷ்டவசமாக, கடந்த மார்ச் 10 ஆம் திகதியும் நேற்றைய தினமும் பாராளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்படி முஸ்லிம் எம்.பி.க்களில் கணிசமானோர் சபையில் கூட இருக்கவில்லை என்ற தகவலை அறியும் போது மிகவும் கவலையாகவுள்ளது.
குறித்த அறிக்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பல்வேறு விடயங்கள் உள்ளடங்கியுள்ள நிலையில் அவற்றுக்கு உரிய தெளிவுகளை வழங்கி அவற்றை ஹன்சார்டில் பதிய வைக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை இந்த எம்.பி.க்கள் தவறவிட்டுள்ளமை துரதிஷ்டவசமானதாகும். இதற்கும் மேலாக எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட குறித்த அறிக்கையின் பிரதிகளைக் கூட பல முஸ்லிம் எம்.பி.க்கள் புரட்டி வாசிக்கவில்லை என்பதை அறியும்போது வெட்கப்பட வேண்டியுள்ளது.
இன்றைய தினமும் இந்த அறிக்கை மீதான இறுதி நாள் விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் ஆகக்குறைந்தது முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களாவது சபையில் உரையாற்றுவதுடன் இவ்வறிக்கையின் உள்ளடக்கம் பற்றிய தமது அபிப்பிராயங்களையும் முஸ்லிம் சமூகத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்கான பதில்களையும் முன்வைப்பார்கள் என நம்புகிறோம்.- Vidivelli