எம்.ஐ.அப்துல் நஸார்
இலங்கை அரசாங்கம் ‘தீவிர மதக் கருத்துக்களைக் கொண்டவர்கள்’ எனக் கருதப்படுபவர்களை தடுத்து வைத்துள்ளதோடு புர்காவை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இலங்கையின் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் தாங்கள் ‘இலக்கு’ வைக்கப்படுவதாகவும் தங்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறுகின்றனர் -. மேலும் அண்மைக் காலமாக அரசாங்கம் புர்கா ஆடை மீது விதிக்க எத்தனிக்கும் தடை தம்மை பாதிக்கும் தீர்மானமாகும் எனவும் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் முழுமையாக முகத்தை மூடுவது மதத் ‘தீவிரவாதம்’ என அரசாங்கம் கூறுகிறது. தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டே இது தடை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றது.
தேசிய கல்விக் கொள்கையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடசாலைகளை மூடவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய நகர்வுகள் தொடர்பில் அல்-ஜெஸீரா Inside Story நிகழ்ச்சியில் கலந்துரையாடலொன்றினை நடத்தியிருந்தது. அந்த நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், சமாதான செயற்பாட்டாளரும், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் இணைத் தாபகருமான ஷிரீன் அப்துல் சரூர் மற்றும் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். ஊடகவியலாளர் பீட்டர் டோபி நிகழ்சியினை நெறிப்படுத்தியிருந்தார்.
இக் கலந்துரையாடலில் மேற்படி அதிதிகள் மூவரினாலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை விடிவெள்ளி வாசகர்களுக்காககத் தமிழில் தருகின்றோம்.
ஆணைக்குழு அவசியமற்ற எல்லைக்குச் சென்றுள்ளது
ரவூப் ஹக்கீம்
ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட சிறு குழுவினரின் தவறான செயற்பாடு காரணமாக தேவையற்ற வகையில் முஸ்லிம் சமூகத்தின் மீது உண்மையிலேயே வலிந்து கற்பிக்கப்பட்ட களங்கம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற அபரிமதமான எதிர்வினையே இதுவாகும். யுத்தம் முடிவடைந்ததிலிருந்தே நீண்ட காலமாக ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்து வந்தது. யுத்தம் முடிந்த கையோடு அடுத்த எதிரி முஸ்லிம்கள் தான் என்ற எண்ணப்பாட்டை உருவாக்க வேண்டும் என்ற நிலை சிங்கள பெரும்பான்மை மக்களிடமும் அப்போதிருந்த அரசாங்கத்திடமும் இருந்தது. அந்த கருத்துடன் ஒருமித்த சிங்கள மக்களை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டனர். இது கையறு நிலையிலிருக்கின்ற, அனைத்து விதமான கொள்கைத் தீர்மானங்களினூடாகவும் நாளுக்கு நாள் ஓரங்கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் சமூகத்தை குற்றமிழைத்தவர்களாக காண்பிப்பதற்கும், களங்கம் கற்பிப்பதற்கும் எடுக்கப்படும் முயற்சியேயன்றி வேறு எதுவுமில்லை. இது அத்தகைய மற்றுமொரு சம்பவமாகும்.
அரசாங்கம் தொடர்ச்சியாக தனது கட்டுப்பாட்டிலுள்ள தனியார் ஊடகங்கள் மற்றும் அரசாங்க ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாமிய பீதி மனோபாவத்தை ஏற்படுத்துவதற்காக பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த சூழ்ச்சி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் ஆணைக்குழுவும் அவசியமற்ற எல்லைக்குச் சென்று சர்ச்சைக்குரிய விதமாக இதை தடைசெய்ய வேண்டும் அல்லது அதைத் தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளது. இது அரசாங்கத்தினால் நன்கு திட்டமிப்பட்ட ஊடக தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாகும். இது மிகவும் துரதிஷ்டவசமானதாகும். கத்தோலிக்க மக்கள் அல்லது வேறு எந்த மத சமூகத்திற்கும் முஸ்லிம்கள் எதிரானவர்கள் அல்லர். இந்த அரசுக்கு எதிராக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி மாற்றத்திற்காக அபரிமிதமாக வாக்களித்தது இந்த இரு சமூகங்களும்தான். அதன் காரணமாகத்தான் இவ்வாறான சதித்திட்டம் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
உண்மையில் தங்களது கருத்தோடு உடன்படுகின்ற பெரும்பான்மை சமூகங்களை ஒன்றிணைப்பதற்கு அவர்கள் தொடர்ச்சியாக கூறிவரும் கட்டுக்கதைகள் தங்களது மட்டமான அரசியல் அடையாளங்களை காட்டுவதற்கானவை என்பது வெளிப்படையானது. மதரசா பாடசாலைகளைப் பற்றி பேசும்போது, அவர்கள் தாங்கள் கூறும் விடயங்களுக்கு வலுவான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அவர்கள் வஹாபியக் கொள்கை பற்றியும் ஏனைய நம்பிக்கைகள் பற்றியும் பேசுகிறார்கள். இது நாட்டின் சகவாழ்வுக்கு பங்கம் விளைவிக்கும் விடயமாகக் காணப்படுகின்றது. மதரசா பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்திலிருந்து இது வரை அவர்கள் வலுவான ஆதாரங்களை முன்வைக்கவில்லை. மதரசாக்களின் பாடத்திட்டங்களில் மாற்றமான அல்லது ஆபத்தான விடயங்கள் இருக்கின்றன என்பதை நான் வன்மையாக மறுக்கின்றேன். மதரசா முறைமை என்பது மிக நீண்ட காலமாக செயற்படுகின்ற முறைமையாகும். நாம் எமது சமய நிறுவனங்களை மீள்கட்டமைப்பதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.
அரசாங்கம் முஸ்லிம் பெண்களுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும்
ஷிரீன் அப்துல் சரூர்
முதலில் அவர்கள் எதைத் தடை செய்யப்போகிறார்கள் என்பதற்கான மிகத் தெளிவான வரையறைகளை முன்வைக்கவில்லை. சிலர் கூறுகிறார்கள் நிகாப் என்று, சிலர் புர்கா என்று கூறுகிறார்கள். இங்கு பல்வேறு வகையான முகம் மூடும் ஆடைகளும் உடலை மூடும் ஆடைகளும் காணப்படுகின்றன. இங்குள்ள முஸ்லிம்களைப் பொறுத்தவரை எனது கணிப்பீட்டின் படி ஒரு வீதமான முஸ்லிம் பெண்கள்தான் தற்போது நிகாப் அணிகிறார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், அவசரகாலச் சட்டம் காரணமாக சில பெண்கள் அதனை நீக்கினார்கள். அப்போது முகம் மூடும் ஆடை மாத்திரமல்லாது உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை காரணமாக ஹிஜாப் கூட அகற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. எமது அச்சம் என்னவென்றால் அவர்கள் எதனைத் தடை செய்ய முனைகிறார்கள் என்பதுதான். தற்போது அனைவரும் முகக் கவசம் அணிந்து முகங்களை மறைத்திருக்கின்றார்கள். தேசிய பாதுகாப்பு என்பதற்காகவாக இருந்தால் அது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். எந்த வகையிலும் ஆட்களை தற்போது அடையாளம் காணமுடியாதுள்ளது. தற்போது முஸ்லிம் பெண்களின் ஆடை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. றஊப் ஹக்கீம் கூறியதுபோல அவர்கள் குற்றமிழைத்தவர்களாக காண்பிக்கப்படுகின்றனர்.
முஸ்லிம் சமூகம் தன் சமூகத்திற்குள் என்ன தவறு நிகழ்ந்துள்ளது என்பது தொடர்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஆராய்கிறது. இலங்கை அரசாங்கம் முஸ்லிம் பெண்களுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும். முஸ்லிம் ஆண்களும் பெண்களின் ஆடைகள் தொடர்பில் அடிக்கடி பேசுகிறார்கள். பெண்கள் ஹிஜாப், அபாயா, நிக்காப் போன்றவற்றை அணிய வேண்டும் என கூறுகிறார்கள். பெண்களே தாங்கள் எதை அணிய வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம் ஆண்களும் எமக்கு அதைக் கூறக் கூடாது. ஏனென்றால் இது எங்கள் சுய கௌரவம், இது எங்கள் உடல், இது எமது உடை ஒழுங்கு.
அந்த வகையில், இலங்கை அரசாங்கம் முஸ்லிம் பெண்களுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும். குறிப்பாக புர்கா, நிகாப் அணியும் பெண்களின் இணக்கப்பாட்டையாவது பெற்றிருக்க வேண்டும். தொடர்ச்சியாக அணிந்து வரும் ஆடையை குறிப்பாக பதின்ம வயதிலிருந்து அணிந்துவரும் ஆடையொன்றினை அகற்றுமாறு கூறினால், அவர்கள் தாம் நிர்வாணமாக இருப்பதுபோலவே உணர்வார்கள்.
எனவே, கருத்துப் பரிமாறல்கள் இடம்பெறவில்லை. ஏனைய நாடுகளிலிருந்து தவறான முன்னுதாரணங்களை இலங்கை அரசாங்கம் இரவல்பெறக் கூடாது என்றே நாம் கூறுகின்றோம். இது பன்மைத்துவ நாடு. எமது அரசியலைமைப்பு பல சமூக பல்லின அமைப்பு தொடர்பில் பேசுகின்றது. அரசியலமைப்பின் 10ஆவது அத்தியாயம் சமய சுதந்திரம் பற்றி பேசுகின்றது. அரசியலமைப்பின் 12ஆவது அத்தியாயம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கூறுகின்றது. விடயங்கள் அனைத்திலும் இலங்கை அரசாங்கம் மிக மோசமாக தோல்வி கண்டுள்ளது. இந்த சமூகத்தினை தொடர்ச்சியாக இலக்கு வைத்துச் செயற்படுகின்றது. சில வாரங்களுக்கு முன்னர் தான் நல்லடக்கம் செய்யவதற்கான உரிமை வழங்கப்பட்டது. இந்த உரிமை கொவிட் நிலைமையைக் காரணம் காட்டி அநியாயமாகப் பறிக்கப்பட்டிருந்தது. நீதியமைச்சர் ஒருவர் முஸ்லிமாக இருக்கும் நிலையிலேயே நிகாப் அகற்றப்படுகின்றது. இந்த அரசாங்கம் என்ன செய்துகொண்டிருக்கிறது. ஆண்கள் புர்கா அல்லது நிகாப் அணிவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஆண்கள். பெண்களை ஏன் தண்டிக்கிறீர்கள் எனபதே எமது கேள்வி.
இந்த அரசாங்கத்தின் கீழ் நாம் மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளோம். வெளிப்படையாகச் சொன்னால், சுதந்திர தினத்தன்று இந்த நாட்டின் தலைவர், இது ஒரு சிங்கள நாடு எனவும் தான் பௌத்தர்களுக்குரிய ஜனாதிபதி எனவும் தெரிவித்திருக்கின்றார். இது உண்மையில் சிறுபான்மையினர் இந்த நாட்டுக்கு சொந்தக்காரர்கள் அல்லர் எனக் கூறுவதாகும். அடக்கம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைளை எடுத்ததோடு நீதிமன்றங்களை நாடிய போதிலும், இறுதியாக சர்வதேச அழுத்தங்களுக்கே அரசாங்கம் அடிபணிந்தது. எனவே சர்வதேச அழுத்தமே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரேயொரு வழியாகும். எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வருகின்றது. இதில் பல முஸ்லிம் நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்த நாடுகள் அத் தீர்மானத்திற்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றொம் ஏனென்றால் அந்தத் தீர்மானத்தின் 7 ஆம் மற்றும் 8 ஆம் பந்திகள் சிறுபான்மை மக்களைப் பற்றியும் அவர்களது உரிமைகள் பற்றியும் பேசுகின்றன. இலங்கை உண்மையிலேயே நல்லிணக்கத்தை விரும்புமாக இருந்தால் சிறுபான்மை மக்கள் தொடர்பில் இவ்வாறு நடந்துகொள்ளாது. என்னைப் பொறுத்த வரை இந்த அரசாங்கம் அவ்வாறான விடயத்தினை முன்கொண்டு செல்லாது என்றே தோன்றுகின்றது.
புர்கா, மத்ரசா விவகாரங்களில் முடிவுக்கு வரமாட்டார்கள்
ஜெஹான் பெரேரா
புர்காவை தடை செய்யும் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. குறித்த முன்மொழிவு தேசிய பாதுகாப்பு அமைச்சரினால் கையொப்பமிடப்பட்டுள்ளது. எனினும் அது இதுவரை அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும். இது ஒரு சர்ச்சைக்குரிய விடயம் என்பதை அரசாங்கம் அறிந்து கொண்டுள்ளது. அவர்கள் புர்காவை தடை செய்வது மற்றும் அமைச்சில் பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக ஆயிரம் மதரசாக்களை மூடுவது ஆகியன தொடர்பில் முடிவுக்கு வரமாட்டர்கள் என்றே நான் கருதுகின்றேன். அவற்றை பதிவு செய்யுமாறு கோருபவர்கள் அவற்றை கண்காணிப்பார்கள், மாறாக அவற்றை மூடிவிடமாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். ஆனால், றஊப் ஹக்கீம் மற்றும் ஷிரீன் கூறியதுபோல, தேசியவாதம் என்ற விடயத்தைப் பொறுத்தவரை சிங்கள தேசியவாதம் மற்றும் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் என்ற அடிப்படையில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டது.
இத் தாக்குதலில் ஈடுபட்ட குழுவிலிருந்த பலர் வெளிநாடுகளில் நன்கு படித்த இளைஞர்கள், அவர்களுக்கு இலங்கை முஸ்லிம்களுடன் பெருமளவு தொடர்புகள் இருக்கவில்லை. அவர்களது செயற்பாட்டிற்காக முஸ்லிம் சமூகத்தை குற்றம் கூற முடியாது. அனால் அதுதான் தற்போது நடக்கின்றது. நடைபெறுகின்ற அந்த விடயம் அநீதியானதாகும், ஏனெனில் பாரம்பரியமாக இலங்கை முஸ்லிம் சமூகம் மிகவும் அமைதியான சமூகம். இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற முப்பது வருட யுத்தத்தில் அவர்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கினர். முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக இருந்ததற்கோ வன்செயல்களில் ஈடுபட்டதற்கோ எந்தவித ஆதாரங்களும் கிடையாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னரும் அவ்வாறு அவர்கள் செயற்படவலில்லை. அரசாங்கம் முஸ்லிம்களை இவ்வாறு இலக்கு வைப்பது நியாயமானதல்ல.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக இலங்கையில் கிறிஸ்தவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் எனப் பார்க்கப்படவில்லை. ஆனால் முஸ்லிம்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இது நியாயமற்றதாகும். அவர்கள் தங்களது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதை வெளிப்படுத்த வேண்டும். மதரசாக்களில் கற்பிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கண்டுபிடித்திருந்தால் அவற்றை வெளிப்படுத்த வேண்டும். பெரும்பாலான மதரசாக்கள் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டவை. அவர்கள் மூடிவிட முனையும் மதரசாக்கள் பதிவு செய்யப்படாதிருந்தால் அவற்றை பதிவு செய்யக் கோர வேண்டும்.
இலங்கையில் பெரும்பான்மையினர் சிங்கள மக்களாவர். அவர்கள் வரலாற்று ரீதியாக தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று உணர்கின்றார்கள். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் படையெடுப்பு, 500 வருட காலனித்துவ ஆட்சி, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் ஆயுதப் போராட்டத்திற்கு இந்தியா உதவி செய்தமை, பிரச்சினையினை சர்வதேசமயப்படுத்தியமை. இவை சிங்கள மக்கள் தாம் பாதுகாப்பின்மையுடன் இருப்பதை இலகுவாக உணரச் செய்த விடயங்களாககும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இதனை உண்மையில் செய்தது. அவர்கள் பாதுகாப்பின்மை மிக மோசமாக இருப்பதை இதன் மூலம் உணர்ந்தனர். முஸ்லிம்கள் தமது எதிரிகள் என நினைக்க கள் என நினைக்க வைத்த சம்பவம் இதுவாகும். அதனை நான் மறுக்கவில்லை. மிக அண்மையில் புர்கா தடை மற்றும் மதரசா தடை என்பன பற்றிப் பேசப்படுகின்றது. நான் சமூக வலைத்தளங்களில் வாசித்த விடயங்கள் இதற்கு எதிரானதாகக் காணப்படுகின்றது. ஏனைய பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காகவே இவ்வாறு செய்யப்படுகின்றது என பலர் கூறுகின்றனர். அரசாங்கம் பல்வேறு மோசமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக பொருளாதாரப் பிரச்சினை, வெளிநாட்டு நாணயமாற்று பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு சீனாவிடமிருந்து கடன்களை கோருகின்றமை, கொவிட் பிரச்சினை இலங்கையினையும் உலகின் ஏனைய நாடுகளையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளமை, பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறிப்பாக சீனி இறக்குமதியில் ஊழல் இடம்பெற்றுள்ளமை. இவற்றை சுட்டிக்காட்டி கவனத்தை திசை திருப்புவதற்காகவே இவ்வாறு செய்யப்படுகின்றது என சமூக வலைத்தளங்களில் மக்கள் எழுதுகின்றார்கள். இன்னும் சில மாதங்களில் தேர்தலும் நடைபெறவுள்ளது.- Vidivelli