பலவந்த ஜனாஸா எரிப்பு : மன அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆறுதலளிப்பது யார்?
எம்.பி.எம்.பைறூஸ்
”எனது மாமா உயிரிழந்து சரியாக 70 நாட்களின் பின்னரே அவரது ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டது. ஒருவர் மரணித்தால் அவருக்காகச் செய்ய வேண்டிய தொழுகை, பிரார்த்தனை, தர்மங்களைக் கூட செய்ய முடியாத நிலையில்தான் நாங்கள் இவ்வளவு நாட்களும் இருந்தோம். இக் காலப்பகுதியில் ஜனாஸாவை எரித்துவிடுவதற்கு அதிகாரிகள் முயன்றனர். அடிக்கடி எமது வீட்டுக்கு பொலிசார் வந்து எரிப்பதற்கான அனுமதியைப் பெற முயற்சித்தனர். இதனால் நாம் முகங்கொடுத்த மன உளைச்சல்களை வார்த்தைகளால் கூற முடியாது’’ என்கிறார் காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் ஜலீல் முகம்மட் அம்ஜத்.
கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 5 வெள்ளிக்கிழமை முதல் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காகித நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள மஜ்மா நகரில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் அடக்கம் செய்யப்பட்ட 9 ஜனாஸாக்களுள் அம்ஜத்தின் மாமனார் மெளலவி சித்தீக்கின் ஜனாஸாவும் ஒன்று. கடந்த 2020 டிசம்பர் 26 இல் உயிரிழந்த அவரது ஜனாஸா நீதிமன்ற உத்தரவின் பேரில் காத்தான்குடி தள வைத்தியசாலை பிரேத அறை குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டது.
அவர் உயிரிழந்த நாள் முதல் ஜனாஸாவை அடக்கம் செய்யும் வரை உடலைப் பாதுகாப்பதற்காக தாம் எடுத்த முயற்சிகளும் அதனால் முகங்கொடுத்த மன உளைச்சல்கள் பற்றியும் அம்ஜத் எம்முடன் மனந்திறந்து பேசினார்.
அடக்கம் செய்யும் வரை நிம்மதியில்லை
‘‘மரணித்தவரை அடக்கம் செய்வதை விடவும், அவரது உடலை எரிப்பதிலிருந்து பாதுகாத்து எமது பொறுப்பில் எடுத்துவிட வேண்டும் என்பதே எமது ஒரே நோக்கமாகவிருந்தது. ஜனாஸா எரிக்கப்பட்டுவிட்டதாக சிலர் வதந்திகளைப் பரப்பியமையும் எமக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியது. உங்கள் மாமாவின் ஜனாஸாவை எரித்துவிட்டார்களாமே என்று சிலர் எம்மிடம் வந்து கேட்டபோது வீட்டிலிருந்த எல்லோரும் அழத் தொடங்கிவிடுவார்கள். குறிப்பாக வீட்டிலிருந்த பெண்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். சாப்பிடமாட்டார்கள், தூங்கமாட்டார்கள், எந்த நேரமும் வாப்பாவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். வாப்பாவின் ஜனாஸா இருக்கிறதா அல்லது எரித்துவிட்டார்களா என்பது தெரியாமல் குடும்பத்தினர் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாதவை. எம்மால் எமது அன்றாட தொழில்களில் கூட கவனம் செலுத்த முடியவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் மாமாவின் ஜனாஸாவை அடக்கம் செய்த பின்னர்தான் நாம் நிம்மதியாகத் தூங்கினோம்’’ என்றும் அம்ஜத் கூறினார்.
இயலாமை உணர்வு
பொதுவாகவே முஸ்லிம்களைப் பொறுத்தவரை மரணித்தவர்களை 24 மணி நேரத்தினுள் மிக விரைவாக அடக்கம் செய்வது வழக்கம். இக் காலப்பகுதியில் அவர்களுக்கான தொழுகைகள், பிரார்த்தனைகள் இடம்பெறுவதுடன் அடக்கம் செய்தது முதலே அவர்களது பெயரில் நன்மையை வேண்டி அன்னதானங்கள் செய்கின்ற பணிகளும் ஆரம்பமாகும். எனினும் கொவிட் மரணங்களைப் பொறுத்தவரை இந்த வழக்கமான கிரியைகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் இக் குடும்பங்களுக்குக் கிடைக்காமையானது மரணித்தவர்களுக்கான இறுதிக் கடமைகளைக் கூட தம்மால் செய்யமுடியாமல் போய்விட்டதே என்ற இயலாமை உணர்வை தோற்றுவித்துள்ளது.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பலவந்த எரிப்பு விவகாரம் தொடர்பில் அண்மையில் லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கை மக்கள் உரிமைகளுக்கான குழு விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இவ்வமைப்பின் பிரசார முகாமையாளர் அப்துல் பாஸிர், தமது ஆய்வுக்காக இக் குடும்பங்களைத் தொடர்பு கொண்டு பேசிய போது அவர்களது மனக் கவலைகளை தம்மால் உணர முடிந்தததாக குறிப்பிடுகிறார்.
நெருப்புக்குப் பலி கொடுத்துவிட்டோமே
‘‘தகவல் திரட்டும் நோக்கில் எரிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நாம் தொடர்பு கொண்ட போது அவர்கள் எந்தளவு தூரம் உளவியல் ரீதியான அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளார்கள் என்பதை உணர முடிந்தது. சுமார் 30 குடும்பங்களுடன் நாம் தொடர்பு கொண்டோம். அரசாங்கம் அடக்கத்திற்கு அனுமதி கொடுத்த பின்னர் இவர்களது கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன. தனது தாயோ தந்தையோ உறவினரோ அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணித்திருக்கலாமே– அநியாயமாக அவர்களை நெருப்புக்குப் பலி கொடுத்துவிட்டோமே என்று அந்தக் குடும்பங்கள் கதறுகின்றன.
இவை எல்லாவற்றையும் விட இக் குடும்பங்களில் பலரின் மன அழுத்தங்கள் அதகரிப்பதற்குக் காரணம் கொவிட் 19 தொடர்பான எந்தவித அறிகுறிகளும் அற்ற நிலையில் மரணித்த தமது உறவினர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவிட்டன என்பதேயாகும். நீண்ட காலமாக வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள், வெளித்தொடர்புகளின்றி பாதுகாப்பான முறையில் வீடுகளிலிருந்து மரணித்தும் கூட அவர்களுக்கு கொவிட் தொற்று உள்ளதாக கூறி, பரிசோதனை அறிக்கைகளைக் கூட காண்பிக்காது பலவந்தமாக எரித்தமையானது இக் குடும்பங்களை மேலும் கஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளது’’ என்றும் அப்துல் பாஸிர் குறிப்பிட்டார்.
ஏராளமான சம்பவங்கள்
குடும்பங்களை மன அழுத்தங்களுக்கும் தேவையற்ற நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கிய இவ்வாறான ஏராளமான சம்பவங்களை இங்கு உதாரணமாகக் குறிப்பிட முடியும். 44 வயதான பாத்திமா ரினோஸா 2020 மே 5 ஆம் திகதி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் மரணித்தார். எனினும் அவரது உடலை எரித்த பின்னரே அவர் மரணித்துவிட்டதாக குடும்பத்தினருக்கு வைத்தியசாலை நிர்வாகிகள் அறிவித்தனர். உடனடியாக ரினோஸாவுடன் தொடர்பிலிருந்த குடும்பத்தினர் அனைவரும் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். எனினும் மறுநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வைத்தியர் ஒருவர், ரினோஸாவின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை எனக் கண்டறிந்துள்ளதாகவும் அவர் தவறுதலாக எரிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார். இதனையடுத்து தனிமைப்படுத்தலிலிருந்து குடும்பத்தினர் மீண்டும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
‘‘எனது தந்தை இன்னும் அழுது கொண்டே இருக்கிறார். தாயாரைப் பிழையான முறையில் எரித்துவிட்டார்களே என்பதை அவரால் தாங்க முடியாதுள்ளது. எனது மனைவி மரணித்துவிட்டார் என்ற செய்தியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அவர் எரிக்கப்பட்டதை ஒருபோதும் சரிகாணமாட்டேன் என வாப்பா அடிக்கடி கூறிக்கொண்டேயிருக்கிறார்’’ என ரினோசாவின் நான்கு பிள்ளைகளில் ஒருவரான முகமட் சாஜித் குறிப்பிடுகிறார்.
முஸ்லிம்கள் மாத்திரமன்றி கத்தோலிக்கர்களும் தமது உறவுகளை அடக்கம் செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டதை கவலையுடனேயே நினைவுபடுத்துகின்றனர். கொழும்பு ராஜகிரியவில் வசித்த ராஜேந்திரன் ரவீந்திரன் 2020 நவம்பர் 11 இல் படகு விபத்து ஒன்றில் மரணித்தார். தியவன்னா ஓயாவில் மீன் பிடிக்கச் சென்ற போது இராணுவத்தினரின் படகு ஒன்று மோதியே இவ்விபத்து நிகழ்ந்தது. எனினும் ரவீந்திரனின் சடலத்தில் கொவிட் தொற்று உள்ளதாகக் கூறி அவரது சடலத்தை எரித்துவிட்டனர். இக் குடும்பம் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை ஊடகங்கள் ஒளிபரப்பின. தமது கணவரின் உடலைத் தராது, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை கூட நடாத்தாது சடலத்தை எரித்ததை ஏற்க முடியாது அக் குடும்பம் இன்றும் மிகுந்த கவலையில் உள்ளது.
அதேபோன்று பிறந்து 20 நாட்களிலேயே மரணித்த ஷெய்க் பாஹிம் எனும் குழந்தையின் சடலம் எரிக்கப்பட்ட சம்பவம் அக் குடும்பத்தினரை மாத்திரமன்றி முழு நாட்டு மக்களையுமே பாதித்தது. அக் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்தும் எல்லோரும் தமது குழந்தையொன்றை பறிகொடுத்த உணர்வுக்குத் தள்ளப்பட்டனர் என்பதே உண்மை. இக் குழந்தை எரிக்கப்பட்ட விவகாரமே அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கக்கோரும் போராட்டத்திற்கு உணர்வுபூர்வமான உத்வேகத்தையளித்தது. ‘‘ எமது குழந்தையின் முகத்தைக் கூட பார்ப்பதற்கு எம்மை அனுமதிக்கவில்லை. தாயாருக்கு கூட குழந்தையைக் காட்டவில்லை. மாறாக உங்கள் குழந்தையின் சடலத்தை எரிக்கப் போகிறோம். தகனச்சாலைக்கு வாருங்கள் என என்னை அழைத்தார்கள். எனது பச்சிளம் குழந்தையின் உடல் எரிந்து சாம்பராகுவதை எப்படி என்னால் நேரில் பார்க்க முடியும். இன்றும்கூட குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்துப் பார்த்து நாம் எல்லோரும் அழுது கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் தந்தை பாஹிம். அவர் ஒரு முச்சக்கர வண்டி சாரதி. கொவிட் முடக்கம் காரணமாக தொழிலைக் கூட இழந்து பொருளாதார நெருக்கடியில் இருந்த நிலையில் குழந்தை மரணித்து எரிக்கப்பட்டமையானது குடும்பத்தை உள ரீதியாக கடுமையாக பாதித்துள்ளது.
உளவள சிகிச்சை பெறும் குடும்பங்கள்
கொவிட் தொற்று ஆரம்பித்து சடலங்கள் எரிக்கப்படத் தொடங்கியதிலிருந்து வாராந்தம் ஆகக் குறைந்தது 6 பேராவது தன்னைச் சந்தித்து உளவள ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டதாகவும் இந்நிலை அடக்கம் செய்ய அனுமதி கிடைக்கும் வரை தொடர்ந்ததாகவும் உளவியல் நிபுணர் கலாநிதி லுக்மானுல் ஹக்கீம் தெரிவித்தார். ‘‘மரணித்தால் நம்மையும் எரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் ‘பதகளிப்பு’ நிலைக்குச் சென்றவர்களே இவர்களில் அதிகமானோர். தமக்கு ஏற்பட்டுள்ளது மன அழுத்தம் என்பதை அறியாது அதனை மாரடைப்பு எனக் கருதி சிகிச்சைக்காக சென்ற பலர் என்னிடம் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இவர்களிடம் தூக்கக் குறைபாடு, தூக்கத்தில் அச்சத்தினால் விழித்தெழுவது போன்ற அறிகுறிகள் காணப்பட்டன. அடுத்த சாரார் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நெருங்கிய உறவினர்கள். சுமார் 8 பேர் வரை இவ்வாறு என்னிடம் சிகிச்சைக்காக வந்தார்கள். தாயின் உடலை எரித்ததால் மனச்சோர்வு நிலைக்குச் சென்ற ஒருவர் என்னிடம் வந்தார். நண்பர் ஒருவரின் உடல் எரிக்கப்பட்டதால் பதகளிப்பு நிலைக்குச் சென்ற மற்றொருவரையும் நான் சந்தித்தேன். இன்று தகனம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தாலும் ஏலவே எரிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னமும் அதன் தாக்கங்களிலிருந்து மீளவில்லை’’ என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாறு எரிக்கப்பட்ட நபர் ஒருவரின் குடும்பத்திற்கு தான் சிகிச்சையளித்த அனுபவத்தை மற்றொரு உளவளத்துணையாளரான ஹாஜரா சதாம் பகிர்ந்து கொண்டார். ‘‘அக் குடும்பத்தின் தூணாக இருந்த கணவர் மரணித்து அவரது உடல் எரிக்கப்பட்டதையடுத்து மனைவியும் மூன்று பிள்ளைகளும் மிகுந்த மன அழுத்தங்களுக்கு முகங்கொடுத்தனர். 10 வயதான இளைய பிள்ளைக்கு தனது தந்தையின் உடல் எரிக்கப்பட்ட விடயம் இதுவரை தெரியாது. அக் குழந்தை தனது அறையை விட்டு பல வாரங்களாக வெளியில் வரவே இல்லை. மற்றொரு மகள் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினாலும் தந்தையின் மரணத்தினால் ஏற்பட்ட பாதிப்பினால் அப்பரீட்சைக்கு சரிவர முகங்கொடுக்கவில்லை. தாயாரும் இந்த அதிர்ச்சியிலிந்து மீள முடியாத நிலையிலேயே இன்று வரை இருக்கிறார்’’ என்றார்.
நிறுவனமயப்பட்ட வேலைத்திட்டம் தேவை
இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான மானசீகமான ஆதரவை வழங்குவது அரசாங்கத்தினதும் தொண்டு நிறுவனங்களினதும் கடப்பாடு என்றும் உளவளத்துணையாளரான ஹாஜரா சதாம் குறிப்பிடுகிறார். இவ்வாறான குடும்பங்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய ஒரு பொறிமுறையை ஆரம்பிப்பதன் மூலமாக இவர்களை ஓரளவுக்கு பாதிப்பிலிருந்து மீட்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவர்களது மனக் கவலைகளைக் கேட்டறிவதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவது கூட அவர்களை இதிலிருந்து மீட்பதற்கான ஒரு வழி என உளவியல் நிபுணர் கலாநிதி லுக்மானுல் ஹக்கீம் கூறுகிறார்.
‘‘இதுவொரு நீண்ட பொறிமுறை. அவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் ஆன்மிக ரீதியான வழிகாட்டல்கள், ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். அடுத்தது உளவள சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். இதனை ஒரு நிறுவனமயப்பட்ட வகையில் முன்னெடுப்பதே சிறந்தது என்றார்.- Vidivelli