தடை, கைதுகளை முஸ்லிம் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?

0 2,107

முஸ்லிம் அமைப்­புகள் மீது தடை, புர்கா தடை, இஸ்­லா­மிய புத்­த­கங்­களை இறக்­கு­மதி செய்ய தடை, மத்­ர­ஸாக்­க­ளுக்கு தடை என கடந்த ஓரிரு வாரங்­க­ளாக முஸ்லிம் சமூ­கத்தை இலக்கு வைத்த தடை­களே ஊட­கங்­களின் தலைப்புச் செய்­தி­களை ஆக்­கி­ர­மித்­தி­ருக்­கின்­றன. முஸ்லிம் சமய திணைக்­க­ளத்­திற்­கென்றே பிரத்­தி­யே­க­மாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 9 மாடிக் கட்­டி­டமும் பெளத்த சாசன அமைச்­சுக்­கென சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

மறு­புறம் தீவி­ர­வாத செயல்கள் மற்றும் அது தொடர்­பான சிந்­த­னை­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­கான நிலை­யங்­களை ஸ்தாபிப்­பது தொடர்­பான வர்த்­த­மா­னியும் சில தினங்­க­ளுக்கு முன்னர் வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

இலங்கை ஜமா­அதே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் மீண்டும் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 2019 இல் கைது செய்­யப்­பட்டு 32 நாட்கள் தடுத்து வைக்­கப்­பட்டு, பின்பு குற்­ற­மற்­றவர் என விடு­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே தற்­போது கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் ஆளு­ந­ரு­மான அசாத் சாலியும் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கைது செய்­யப்­பட்­டுள்ளார். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழேயே அவரும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். 2013 ஆம் ஆண்டும் அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை மையப்­ப­டுத்­தியே ஹஜ்ஜுல் அக்­பரும் அசாத் சாலியும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவ்­வ­றிக்­கையில் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ள மேலும் பல முஸ்லிம் பிர­மு­கர்­களும் கைது செய்­யப்­ப­டு­வார்­களோ என்ற அச்­சமும் முஸ்லிம் வட்­டா­ரங்­களில் மேலோங்­கி­யுள்­ளது.

ஏலவே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­ப­டுத்தி சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் 2020 ஏப்ரல் முதலும் , கவி­ஞரும் ஜாமிஆ நளீ­மியா மாண­வ­ரு­மான அஹ்னாப் ஜெஸீம் 2020 மே முதலும் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். முகநூல் பதி­வொன்­றுக்­காக ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட எழுத்­தாளர் ரம்ஸி ராஸிக் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

எதிர்­வரும் நாட்­களும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு மிகவும் நெருக்­க­டி­யாக கால­கட்­ட­மா­கவே அமையப் போகி­றது என்­ப­தையே இந்த நிகழ்­வுகள் கூறி­நிற்­கின்­றன. அவ்­வா­றெனில் இந்த சவால்­களை எதிர்­கொள்ள முஸ்லிம் சமூகம் எந்­த­ளவு தயார்­நி­லையில் உள்­ளது என்ற கேள்வி எழு­கி­றது.

முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களில் பெரும்­பா­லானோர் அர­சாங்­கத்தின் கைப்­பிள்­ளை­க­ளாக மாறி, சமூ­கத்­திற்­காக குரல் கொடுக்க முடி­யாத கையறு நிலைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். எதி­ர­ணியில் உள்ள ஓரி­ருவர் மாத்­தி­ரமே ஓர­ளவு அறிக்­கை­க­ளை­யா­வது வெளி­யி­டு­கின்­றனர். மறு­புறம் முஸ்லிம் சிவில் அமைப்­பு­களும் வலு­வி­ழந்­துள்­ளன. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் சிவில் அமைப்­பு­களின் வீரியம் வெகு­வா­கவே குறைந்­துள்­ளது. இஸ்லாமிய அமைப்புகள் பகிரங்கமாக செயற்பட முடியாத அச்ச நிலை தோன்றியுள்ளது.

இந் நிலையில் தொட­ராக அமுல்­ப­டுத்த எத்­த­னிக்­கப்­படும் தடை­களைப் பார்த்துக் கொண்டு முஸ்லிம் சமூகம் மெளனம் காக்­கப்­போ­கி­றதா அல்­லது இந்த நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் மூலமும் சர்­வ­தேச சட்­டங்கள் மூல­மா­கவும் உரித்­தாக்­கப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மை­களைப் பாது­காக்க சட்ட ரீதி­யா­கவும் சாத்­வீக ரீதி­யா­கவும் போராடப் போகி­றதா என்ற கேள்­விக்கு உடன் விடை காணப்­பட வேண்டும்.

இவ்­வா­றான சவால்­களை தைரி­ய­மாக எதிர்­கொள்ளத் தேவை­யான அர­சியல் மற்றும் சிவில் பலத்தை இலங்கை முஸ்லிம் சமூகம் உட­ன­டி­யாக கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் உரிமைசார் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்கின்ற, அதன் மூலம் தீர்வுகளைப் பெறக் கூடிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஜனாஸா அடக்கம் மற்றும் புர்கா தடை போன்ற விவகாரங்களில் முஸ்லிம்களுக்கு சாதகமான முடிவுகளை எட்டுவதில் சர்வதேசத்தின் பங்களிப்பே பெரிதும் உதவியுள்ளது. அதேபோன்று அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள அப்பாவிகளின் கைதுகளை தடுப்பதற்கும் விரைந்து செயற்பட வேண்டும். இன்றேல் முஸ்லிம் சமூகத்தின் மீதான அடக்குமுறைகள் தொடர்கதையாவதை தடுக்க முடியாது போய்விடும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.