ஹக்கீம், ரிஷாட் அணிகளுக்கு எமது கட்சியில் இடமளியோம்

தனி­யாகப் போட்­டி­யிட்ட பின்னர் இணைந்து செயற்­ப­டலாம் - ஐக்­கிய மக்கள் சக்­தியின் ஊடகப் பேச்­சாளர் மரிக்கார்

0 988

நேர்­கண்­டவர்:
எஸ்.என்.எம்.சுஹைல்

ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமாகிறது. கூடுதலான தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு அக்கட்சிக்கு இருக்கின்ற நிலையில் சிறுபான்மையினர் தொடர்பான ஐ.ம.ச.வின் நிலைப்பாடு என்ன?
தமிழ், முஸ்லிம் மக்­களில் கூடு­த­லானோர் ஐக்­கிய மக்கள் சக்­திக்­குத்தான் ஆத­ர­வ­ளிக்­கின்­றனர். சிங்­கள மக்­களும் எமது கட்­சி­யு­டன்தான் இருக்­கின்­றனர். எமக்கு வாக்­க­ளிக்கும் தமிழ், முஸ்லிம் மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை சாத்­தி­யப்­ப­டுத்­து­வ­தற்கு இன்னும் அதி­க­மான சிங்­கள மக்­களின் ஆத­ரவைப் பெற்று அர­சாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். அப்­போ­துதான், தமி­ழர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் நீதியும், நியா­யமும் கிடைக்கும். உரி­மைகள் மதிக்­கப்­படும்.
ஐக்­கிய மக்கள் சக்­தி­யா­னது இன­வா­த­மில்­லாது இந்­நாட்டில் சிங்­கள, தமிழ், முஸ்­லிம்­களை ஒன்­றி­ணைத்து பய­ணிக்கும் டீ.எஸ்.சேனா­நா­யக்­கவின் கட்­சியின் கொள்­கை­யு­ட­னேயே செயற்­ப­டு­கி­றது. ஏனென்றால், இந்­நாட்டில் வாழும் சிறு­பான்மை மக்­க­ளுக்கும் சம உரிமை இருக்­கி­றது. அதையே எமது கட்­சியும் நம்­பு­கி­றது. சிறு­பான்மை மக்­களின் உரி­மைகள், கலா­சா­ரங்கள் என்­பன ஐக்­கிய மக்கள் சக்­தியின் பன்­மைத்­துவ கொள்­கை­யினால் பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை உருவாக்கம் இன்னும் நிறைவடையவில்லை. இந்நிலையில், சிறுபான்மையினர் சார்பான அரசியல் கொள்கைகளை உள்வாங்கும் வேலைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன?
ஐக்­கிய மக்கள் சக்­தியின் கொள்கை வரை­யப்­ப­டு­கி­றது. நாம் கட்­சியை ஆரம்­பித்­த­வு­ட­னேயே தேர்­த­லுக்கு முகம்­கொ­டுக்க நேரிட்­டது. கொரோனா தொற்று பிரச்­சி­னையால் நாடு முடக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில், இக்­கட்­சியின் சட்ட ரீதி­யாக உரி­மையை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் நிர்­வாக கட்­ட­மைப்பை உரு­வாக்கிக் கொள்­வ­தற்கும், தேர்தல் தொகுதி அமைப்­பா­ளர்­களை நிய­மிப்­ப­தற்கும் என்றே ஒரு வருட காலம் சென்­று­விட்­டது. அத்­துடன் ஐக்­கிய இளைஞர் சக்தி, ஐக்­கிய மகளிர் சக்தி மற்றும் தொழிற்­சங்­கங்கள் என்­ப­னவும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. தொடர்ந்தும் கொள்கை உரு­வாக்கும் வேலைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.
சிறு­பான்மை மக்­களும் இந்­நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்­த­வர்­களே. பெரும்­பான்மை மக்­க­ளுக்கு என்ன உரி­மைகள் இருக்­கின்­றதோ அத்­தனை உரி­மையும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கும் இருக்­கின்­றது என்­பதே எமது கொள்­கை­யாக அமையும். இதனை வலுப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்கள் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூ­கத்­துடன் இணைந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி, சிறுபான்மை கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது, சொந்த கட்சிக்காரர்களை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில், முஸ்லிம்கள் கூடுதலாக ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றமை கடந்த 2020 பொதுத் தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில், ஐ.ம.ச.வும் சிறுபான்மை கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்வதன் ஊடாக சொந்த கட்சிக்காரர்களுக்கு அநீதி இழைக்குமா?
ஐக்­கிய தேசியக் கட்சி செய்த பிழை­களை ஐக்­கிய மக்கள் சக்தி ஒரு­நாளும் செய்­யாது. ஹக்­கீமின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் ரிஷாட்டின் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை விற்று தேர்­தலில் பெரிய கட்­சி­களின் வாக்­கு­களில் விருப்பு வாக்கை பெற்­றுக்­கொண்டு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் பெற்­றுக்­கொண்­ட­பின்னர் சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி கட்சி மாறு­ப­வர்கள். இதனை கடந்த காலங்­களில் செய்து காட்­டி­யுள்­ளனர். இவ்­வா­றான நிலை­மைகள் எதிர்­கா­லத்தில் ஏற்­படக் கூடாது என்­பது குறித்து கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் அதி­க­மான கலந்­து­ரை­யா­டல்­களை செய்­தி­ருக்­கிறோம்.
மு.கா.வுக்கும் அ.இ.ம.கா.வுக்கும் மக்கள் பலம் இருக்­கு­மானால் தனி­யாக தேர்­தலில் போட்­டி­யிட்டு மக்கள் பலத்தை காட்டி பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­ற­பின்னர் எம்­முடன் வந்து சேர்ந்­து­கொள்ள முடியும். ஆனால், அடுத்த தேர்­தலில் எமது விருப்பு வாக்கை கொள்­ளை­ய­டித்து விலை­போகும் நிலை ஏற்­பட இட­ம­ளியோம்.

20 ஆம் திருத்தத்திற்கு மு.கா., அ.இ.ம.கா. கட்சிகளின் தலைமைகளை தவிர்ந்து ஏனைய பாராளுமன்ற பிரதிநிதிகள் ஆதரவளித்துள்ளனர். இது குறித்து ஐ.ம.ச. அவர்களிடம் விளக்கம் கோரியிருந்தது. இது குறித்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா?
அவர்கள் எல்­லோ­ருமே 20 க்கு ஆத­ர­வுதான். தலை­வர்கள் 20 க்கு ஆத­ர­வ­ளிக்­காமை ஒரு நாட­க­மாகும்.
கொழும்­பி­லுள்ள பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் தேசியப் பட்­டியல் உறுப்­பினர் ஒரு­வரின் வீட்­டில்தான் இந்த நாட­கத்­திற்­கான கதை எழு­தப்­பட்­டது. தலை­வர்கள் இரு­வரும் இந்த பக்­கத்தில் இருந்­து­கொண்டு ஏனைய உறுப்­பி­னர்­களை அடுத்த பக்கம் அனுப்பி வைத்­தனர். இந்த அர­சாங்­கத்­திற்கு தலை­வர்­களை எடுக்கும் தேவை இருக்­க­வில்லை. இந்த இரு கட்­சி­யி­னரும் சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களை விட்­டுக்­கொ­டுத்து, முஸ்­லிம்­களின் மானத்தை வாங்­கி­விட்­டார்கள். கடந்த காலத்தில் முஸ்­லிம்­களின் உரி­மை­களை நசுக்கி மன உளைச்­ச­லுக்கு ஆளாக்­கிய இந்த அர­சாங்­கத்­திடம் முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­களை விற்று பாரா­ளு­மன்­றுக்கு வந்த இவர்கள் இறு­தியில் எப்­படி வாக்­க­ளித்­தனர். இவர்­க­ளுக்கு கௌரவம் இருக்­கி­றதா? இவர்­களை அர­சியல் வியா­பா­ரிகள் என்­றுதான் சொல்ல வேண்டும்.
முஸ்லிம் சமு­தா­யத்­தினர் மடை­யர்கள் அல்லர். யார் எப்­படி நடந்­து­கொள்­கின்­றனர் என்று முஸ்லிம் சமூ­கத்­தினர் தெட்டத் தெளி­வாக விளங்­கிக்­கொண்­டுள்­ளனர். கோத்­தா­பய ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்ட பின்னர் ஐக்­கிய மக்கள் சக்தி எதிர்க்­கட்­சி­யில்தான் இருக்­கப்­போ­கின்­றது என்று தெரிந்தும் மொட்டு சின்­னத்­திற்கு எதி­ராக இருக்க வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான் முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு முஸ்­லிம்கள் கடந்த பொதுத் தேர்­த­லின்­போது வாக்­க­ளித்­தனர். இவ்­வாறு முஸ்­லிம்­களின் எதிர்­பார்ப்­பு­களை மீறி செயற்­பட்­ட­வர்கள் சமூ­கத்­திற்கு துரோ­க­மி­ழைத்­து­விட்­டனர்.
முஸ்லிம் எம்.பி.க்கள் 20 க்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்­லை­யென்றால் பொது­ஜன முன்­னணி அர­சாங்­கத்தால் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் போயி­ருக்கும். அப்­படி மூன்றில் இரண்டு கிடைக்­கா­தி­ருப்பின் அர­சாங்­கத்­திற்கு பெரும் தலை­யி­டி­யாக மாறி­யி­ருக்கும். சிறு­பான்­மை­யினர் தொடர்பில் காலம்­தாழ்த்­தாது நீத­மாக நடந்­து­கொள்ள வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டி­ருக்கும்.
20 க்கு ஆத­ர­வ­ளித்­த­வர்கள் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­ப­டும்­போது அதனைத் தடுக்க எந்த முயற்­சி­யையும் எடுக்­க­வில்லை. அவர்கள் 20 க்கு ஆத­ர­வ­ளித்­த­தற்­கான பலா­ப­லன்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தி­லேயே குறி­யாக இருந்­தனர்.
முஸ்லிம் கட்­சி­க­ளுக்கும் ஐக்­கிய மக்கள் சக்­திக்கும் இடையே ஒப்­பந்தம் இருக்­கி­றது. இந்­நி­லையில், குறித்த எம்.பி.க்களுக்கு எதி­ரான நட­வ­டிக்­கையை முஸ்லிம் கட்­சி­க­ளி­னால்தான் எடுக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. இத­னால்தான், ஹக்கீம் ஒரு நாட­கத்தை அரங்­கேற்­றினார். அந்த மன்­னிப்பு கோரும் நாடகம் பொய்­யா­னது.
ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்டு உரிமை மறுக்­கப்­ப­டும்­போது நாங்­கள்தான் முன்­னின்று போரா­டினோம். கொழும்பில் பாரிய எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு அர­சாங்­கத்தை தொடர்ந்தும் நெருக்­க­டிக்குள் தள்­ளியே இந்த உரி­மையை பெற பாடு­பட்டோம். பாரா­ளு­மன்­றத்­திலும் பிர­த­ம­ரி­டமும் அர­சாங்­கத்­தி­டமும் கேள்­வி­யெ­ழுப்பி அழுத்­தங்­களை கொடுத்தோம். இவர்கள் போட்டோ பிடிப்­ப­திலும் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விப்­ப­தி­லுமே முன் நின்­றனர். அடுத்த தேர்­தலில் மக்கள் இவர்­க­ளுக்கு நல்ல பாடம் புகட்­டுவர்.

விரைவில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனுவில் சிறுபான்மை கட்சிகளுக்கு இடம் கிடைக்குமா?
முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு ஐக்­கிய மக்கள் சக்­தியில் இட­ம­ளிக்க முடி­யாது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களை அர­சியல் வியா­பா­ரி­க­ளுக்கு விற்றார். இவ்­வா­றான முரண்­பா­டான நிலைப்­பா­டுகள் கார­ண­மா­கத்தான் நாம் ரணில் விக்­ர­ம­சிங்­கவை விட்­டு­விட்டு தீர்க்­க­மான முடி­வு­களை மேற்­கொள்ளும் தலை­மை­யொன்றை உரு­வாக்­கினோம். 20 ஆம் திருத்­தத்­திற்கு இவர்கள் ஆத­ர­வ­ளித்த பின்னர் நாம் சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் மிக ஆழ­மாக கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கின்றோம். முஸ்லிம் சமு­தா­யத்தின் உரி­மை­களை காட்­டிக்­கொ­டுத்து அவர்­களின் பிரச்­சி­னை­களை வைத்து வியா­பாரம் நடத்­து­ப­வர்கள் தேவை­யில்லை என கட்சித் தலைமை எம்­மிடம் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றது. அவர்­க­ளுக்கு முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு இருக்­கு­மாயின் தனித்து தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெ­றட்டும். அதுவே எமது தீர்­மா­ன­மாகும்.
ஐக்­கிய மக்கள் சக்­தியில் நேர­டி­யாக எமது வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­கு­வதே சிறந்­தது என்­பது எனது கருத்­தாகும். ஒருவர் வெற்­றி­பெற்­றாலும் பர­வா­யில்லை, கிழக்கில் எமது வேட்­பா­ளர்­களை வெற்­றி­பெறச் செய்­வ­தற்கு முயற்­சிப்போம்.
கடந்த இரு ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளிலும் மைத்­தி­ரி­பா­ல­வுக்கும் சஜித்­துக்கும் முஸ்லிம் கட்­சிகள் சொல்­லித்தான் முஸ்­லிம்கள் வாக்­க­ளிக்­க­வில்லை. சரி­யான கொள்­கை­யு­டனும் திட்­டங்­க­ளு­டனும் மக்­க­ளுக்கு தலை­மைத்­துவம் வழங்­கு­மி­டத்து புதிய தலை­மை­க­ளுக்கும் மக்கள் வாக்­க­ளிப்பர். அதற்­கான வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அடுத்த மாகாண சபை தேர்­த­லிலும் பொதுத் தேர்­த­லிலும் கிழக்கில் நாம் தனித்து போட்­டி­யி­டுவோம்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் திருகோணமலை மாவட்டத்தை தவிர்ந்து ஏனைய பகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்திக்கு நேரடியான பிரதிநிதித்துவம் கிடையாது. மற்றுமொரு தேர்தலை முகம்கொடுக்கும் நிலை உருவாகிவருகின்ற சூழலில் கிழக்கில் கட்சியை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது?

கட்­சியை புன­ர­மைக்கும் வேலைகள் கிழக்கு மாகா­ணத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. வடக்­கிலும் இந் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அடுத்த பொதுத் தேர்­த­லுக்கு இன்னும் 3 வரு­டங்கள் இருக்­கின்ற நிலையில் எங்­க­ளுக்கு காலம் போது­மாக உள்­ளது. கிழக்கில் முஸ்லிம் சமூ­கத்­திற்­காக உண்­மை­யாக குரல்­கொ­டுக்கும் இளம் அர­சி­யல்­வா­தி­களை உரு­வாக்கும் தேவை இருக்­கி­றது. அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

ஜனநாயகத்தை பாதுகாக்க பலமான எதிர்க்கட்சியொன்றின் தேவையிருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி அந்த பணியை சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?
ஐக்­கிய மக்கள் சக்தி பல­மான எதிர்க்­கட்­சியா இல்­லையா என்­பதை பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் இருந்து புரிந்து கொள்ள முடியும். இன்று இந்­நாடு எமது தேவையை உணர்ந்­துள்­ளது. பொது­ஜன முன்­ன­ணியும் 54 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னேயே ஆரம்­பிக்­கப்­பட்­டது. நாமும் 54 பேருடன் இந்த கட்­சியை ஆரம்­பித்­தி­ருக்­கிறோம். அடுத்த அர­சாங்கம் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தலை­மையில் உரு­வாகும். அதன்­போது, சிறு­பான்மை மக்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­படும். அதற்­கான நம்­பிக்கை துளிர்ந்­தி­ருக்­கி­றது. பெரும்­பான்மை மக்­களின் ஆத­ரவை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வேலைத்­திட்­டத்தை நாடு பூரா­கவும் கிராம மட்­டத்தில் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.
ஐக்­கிய தேசியக் கட்­சியில் இருக்­கும்­போது இவ்­வா­றான பிர­யத்­த­னங்­களை நாம் மேற்­கொள்­ள­வில்லை. தற்­போது, ஒவ்வொரு வார இறு­தி­யிலும் ஒவ்­வொரு மாவட்­ட­மாக சென்று கிரா­மங்கள் தோறும் கட்சி புன­ர­மைப்பு வேலை­களை மேற்­கொள்­கிறோம். நாட்டின் நிலைமை குறித்து மக்­களை தெளி­வூட்­டு­கிறோம். அத்­துடன் இன்­றைய அர­சியல் போக்கு குறித்தும் தெளி­வூட்­டு­கின்றோம்.

முஸ்லிம்களையும் சிங்கள மக்களையும் தூரப்படுத்தி அரசியல் நடத்தும் துரதிஷ்டம் எமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி எல்லா சமூகத்தையும் அரவணைத்து செல்லும் கட்சி என நீங்கள் கூறுகின்றீர்கள். இந்நிலையில், சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கும் முஸ்லிம்கள் மத்தியில் சிங்கள மக்கள் பற்றிய நல்லெண்ணம் உருவாவதற்கும் ஏதும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா?
சிங்­கள மக்­க­ளையும் முஸ்­லிம்­க­ளையும் ஒன்­றி­ணைக்கும் வேலைத்­திட்டம் எங்­க­ளு­டைய பணி. அதனை நாம் கட்­டாயம் செய்வோம். இந்த நாட்டில் இன­வாதம் தலை­தூக்­கி­யி­ருந்தும் மித­வாதப் போக்­கு­டைய சிங்கள மக்கள் இன்றும் இருக்­கின்­றனர். அத­னால்தான் கொழும்பு மாவட்­டத்தில் என்னால் இரண்­டா­மி­டத்தில் வெற்­றி­பெற முடிந்­தது. எனக்கு அதி­க­மான முஸ்­லிம்கள் வாக்­க­ளித்­தனர். அதே­நேரம் சிங்­கள மக்­களும் ஓர­ளவு வாக்­க­ளித்­தனர். உரு­வாக்­கப்­பட்­டுள்ள இன­வாதம் நூறு வீத சிங்­கள மக்­க­ளி­டத்­திலும் இல்லை. நான் அதி­க­மான சிங்கள மக்கள் இருக்கும் தொகு­தி­யொன்­றுக்­குத்தான் தலை­மைத்­துவம் கொடுத்து வரு­கின்றேன். அந்த நம்­பிக்­கை­யைத்தான் நாம் உரு­வாக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. சிங்­கள மக்­க­ளி­டையே முஸ்லிம் மக்கள் தொடர்­பான சந்­தே­கங்­களை இல்­லா­ம­லாக்கி இந்த இரண்டு சமூகத்தினரையும் ஒன்றிணைக்கும் வேலை எமக்கானது. அதனை செய்ய வேண்டியது எமது கடமை. அதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.