-
இதுவரை 39 ஜனாஸாக்கள் அடக்கம்
-
பிரதேசத்தில் பலத்த இராணுவ பாதுகாப்பு
-
இறுக்கமான சுகாதார நடைமுறைகள்
-
அரசியல்வாதிகளுக்கும் உட்செல்ல அனுமதியில்லை
-
ஏனைய மாவட்டங்களிலும் இடம் ஒதுக்குமாறு கோரிக்கை
-
இறக்காமம், கிண்ணியா, காலியிலும் இடங்கள் தயார் நிலையில்
எஸ்.எம்.எம்.முர்ஷித்
சுமார் ஒரு வருடகாலமாக மறுக்கப்பட்டு வந்த கொவிட் தொற்றுக்குள்ளான ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமை மீளக் கிடைக்கப் பெற்றதையடுத்து இலங்கை முஸ்லிம்கள் ஆறுதலடைந்துள்ளார்கள்.
கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 5 வெள்ளிக்கிழமை முதல் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காகித நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள மஜ்மா நகரில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய நேற்று வரை அப் பகுதியில் 39 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஜனாஸா அடக்க அனுமதியும்
காணி அடையாளமும்
2020 மார்ச் 30 ஆம் திகதி சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியைத் தொடர்ந்து இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்ய மட்டுமே முடியும் என்ற கொள்கை கண்டிப்பாக பின்பற்றப்பட்டு வந்தது. எனினும் சுமார் 11 மாத கால போராட்டங்கள், சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து கொவிட் 19 இனால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யவும் முடியும் என்ற வர்த்தமானியை கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி சுகாதார அமைச்சு வெளியிட்டது. ஆனாலும் அடக்கம் செய்வதற்கான சுகாதார வழிகாட்டல்கள் தயார்படுத்தப்படாமை, அடக்கம் செய்வதற்குப் பொருத்தமான இடம் அடையாளப்படுத்தப்படாமை போன்ற காரணங்களால் வர்த்தமானி வெளிவந்து 10 நாட்களின் பின்னரே அடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பமாகின.
ஆரம்பத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைதீவிலேயே கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்தது. எனினும் இதற்கு அப் பிரதேச அரசியல்வாதிகள், மத தலைவர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ‘‘ முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் மனதார ஆதரிக்கிறோம். ஆனால் கொவிட் சடலங்களை அடக்குவதற்கு பொருத்தமான இடம் இதுவல்ல‘‘ என பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர். அதேபோன்று பல நூறு கிலோமீற்றர் தொலைவிலுள்ள தீவுப் பகுதிக்கு கொண்டு சென்று ஜனாஸாக்களை அடக்கம் செய்யவோ அதன் மூலம் அங்கு வாழும் கிறிஸ்தவ மக்களை சங்கடத்தில் ஆழ்த்தவோ முடியாது என முஸ்லிம்களும் இதற்கு மறுப்புத் தெரிவித்தனர்.
இந் நிலையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காகித நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள மஜ்மா நகரிலுள்ள சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட காணி அப் பகுதி பிரதேச சபை மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களால் அடையாளம் காணப்பட்டு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வழங்கப்பட்டது.
இராணுவம், சிவில் சமூகம்
இணைந்து பணி
மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணி பொறுப்பதிகாரி பிரிகேடியர் பிரதீப் கமகே தலைமையிலான குழுவினர் குறித்த காணியை பார்வையிட்டதுடன் உடனடியாக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர், ஓட்டமாவடி பள்ளிவாசல் நிர்வாகத்தினர், காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவன சம்மேளன பிரதிநிதிகள், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், கல்குடா ஜனாஸா நலன்புரி சங்க பிரதிநிதிகள் என பலரும் இந்தப் பணியை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புகளை வழங்கினர்.
இந் நிலையிலேயே குறித்த காணியில் மேட்டு நிலப்பகுதியாகவுள்ள சுமார் 3 ஏக்கர் காணியை அடையாளப்படுத்திய இராணுவத்தினரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் அப் பகுதியில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கினர். இதனையடுத்தே அங்கு தற்போது அடக்கம் செய்யும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
39 ஜனாஸாக்கள் அடக்கம்
இதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை 9 ஜனாஸாக்கள், சனிக்கிழமை 8 ஜனாஸாக்களும் ஞாயிற்றுக்கிழமை 7 ஜனாஸாக்களும் திங்கட்கிழமை 7 ஜனாஸாக்கள் செவ்வாய்க்கிழமை 7 ஜனாஸாக்கள் புதன் கிழமை 1 ஜனாஸா என நேற்று வரை 39 ஜனாஸாக்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய தினம் எந்தவொரு ஜனாஸாவும் அடக்கம் செய்யப்படவில்லை என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார். ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 500 க்கும் மேற்பட்ட ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இட வசதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காத்தான்குடி, ஏறாவூர், அட்டாளைச்சேனை நிட்டம்புவ எஹலியாகொடை, மட்டக்குளி, மல்வானை, ஹுனுபிட்டி, களனி, குருநாகல், திஹாரி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் மரணித்தவர்களின் ஜனாஸாக்களே இதுவரை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது அடக்கம் செய்யப்படும் ஜனாஸாக்களில் பெரும்பாலானவை இவ்வாறு பல மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலுமுள்ள வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டிருந்தவையே. எனினும் சுற்று நிருபம் வெளிவந்த பின்னர் மரணித்தவர்களின் ஜனாஸாக்களும் தற்போது அங்கு உடனுக்குடன் அடக்கம் செய்யப்படுகின்றன.
நாட்டின் பல பாகங்களிலும் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாக்கள் நல்லடக்கத்திற்காக தொடர்ந்து இங்கு வந்த வண்ணமுள்ளன. இதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்புக்களை அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் சுகாதாரப் பிரிவினரும் ஏனைய தரப்பினரும் வழங்கி வருகின்றனர் என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.நௌபர் தெரிவித்தார்.
இதனிடையே கொவிட்டினால் உயிரிழந்த கிறிஸ்தவ மக்களின் சடலங்களையும் இப் பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
சுற்று நிருபத்திற்கமையவே அடக்கம்
ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் நடவடிக்கையானது பலத்த கட்டுப்பாடுகளுடனேயே முன்னெடுக்கப்படுகிறது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திலுள்ள வழிகாட்டல்களுக்கமையவே அடக்கம் செய்யும் பணிகள் இடம்பெறுகின்றன.
வைத்தியசாலைகளில் வைத்தே ஜனாஸாக்கள் பிரேத பைகளில் சுற்றப்பட்டு, பெட்டிகளில் வைத்து இறுக்கமாக சீலிடப்பட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. ஜனாஸாக்கள் அடக்குமிடத்துக்கு கொண்டுவரப்பட்டவுடன், ஜனாஸாவை வாகனத்தில் வைத்திருந்தவாறே தொழுகை நடாத்தப்படுகிறது. உறவினர்கள் மாத்திரம் இத் தொழுகையில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. அடக்கம் செய்யும் இடத்திற்கு அருகே செல்ல ஜனாஸாவின் உறவினர்கள் இருவர் மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றனர்.
வாகனத்தை புதைகுழிக்கு அருகில் நிறுத்திவிட்டு, அதற்கென நியமிக்கப்பட்ட ஊழியர்களால் பெட்டி கீழிறக்கப்பட்டு குழியினுள் வைக்கப்படுகிறது. அத்துடன் அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மற்றும் தொண்டர்கள் அணிந்திருந்த பாதுகாப்பு ஆடைகளும் குறித்த குழியினுள் இடப்பட்டு பெக்கோ இயந்திரம் மூலம் குழி மூடப்படுகிறது.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட மிகச் சிலருக்கு மாத்திரமே இப் பகுதிக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அங்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இராணுவத்தினரால் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இராணுவத்தினர் பலத்த
பாதுகாப்பு
குறித்த காணியின் எல்லைப் புறம் முழுவதும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அப் பகுதியில் இராணுவ காவலரண் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் இராணுவத்தினரால் உடனுக்குடன் புகைப்படம், வீடியோ எடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுகின்றன.
அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடையாளக் கற்கள் இடப்படுகின்றன. சுகாதார அதிகாரிகளும் தொண்டர்களும் அடக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வரிசைப்படி இலக்கமிட்டுள்ளனர். எதிர்காலத்தில் குடும்பத்தினர் தமது உறவுகளின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை தேடி வரும்போது அவற்றை இலகுவில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப் பணியை மேலும் ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் முன்னெடுப்பதற்குத் தேவையான தொண்டர்களை நியமிக்கவும் ஓட்டமாவடி, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனங்கள் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இதற்கான நிதி சேகரிப்பு வேலைகளும் இடம்பெற்று வருகின்றன.
இதனிடையே, நாட்டிலுள்ள ஏனைய பகுதிகளிலும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்குப் பொருத்தமான இடங்களை ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏனைய மாவட்டங்களிலும்
அனுமதி வழங்க கோரிக்கை
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள அறிக்கையொன்றில் “கொவிட்-19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் ஜனாஸாக்களை நிர்ணயிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அடக்கம் செய்வதற்கு வழிவகுத்தமையிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச மக்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கை இராணுவம், பொலிஸ், சுகாதார அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகள் உட்பட இதற்கு பங்களிப்புச் செய்த அனைவரும் எமது நன்றிக்குரியவர்கள். சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் உணர்வுகளை மதித்து, கொவிட் -19 தாக்கத்தினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய பொருத்தமான இன்னும் பல இடங்களும் உரிய அதிகாரிகளால் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றோம். இது கொவிட்-19 தாக்கத்தினால் இறந்து அடக்கம் செய்ய விரும்பும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கான நிர்ணயிக்கப்பட்ட இடங்களைப் பெற உதவியாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையொன்றில், கொவிட் 19 இனால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்தமைக்காக அரசாங்கத்தை பாராட்டுகின்ற அதேவேளை, கொவிட் 19 இனால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் அடக்கஸ்தலத்தை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறோம். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை முஸ்லிம் சமூகம் பின்பற்றி ஒழுகும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பின்னணியில் தற்போது அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசத்திலும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா, மகமார் கிராமத்திலும் கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று காலி மாவட்டத்திலும் 4 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் தமது சிபாரிசுகளை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். ஏலவே கொழும்பு குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியின் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அங்கும் கொவிட் ஜனாஸாக்களை அடக்கலாம் என பேராதனை பல்கலைக்கழக நிபுணர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. எனினும் இவ்விடத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதுவரை வழங்கவில்லை.
இறுதியாக வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவினரால் அடையாளப்படுத்த முடியும் என்றும் அவ்விடத்திற்கான அனுமதியை சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமிருந்து பெற்ற பின்னர் அங்கு அடக்கம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் நாட்களில் பெரும்பாலான மாவட்டங்களில் கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கான நிலம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகமானோர் வர வேண்டாம்
இதனிடையே ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ஜனாஸாவுடன் அதிகமான உறவினர்கள் வருகை தருவதானது ஜனாஸா அடக்க பணிகளை முன்னெடுப்போருக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இது அங்கு அடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் வெளி பிரதேசங்களிலிருந்து அதிகமானோர் ஓட்டமாவடிக்கு வருவதால் அங்கு கொவிட் தொற்று பரவுவதற்கான அபாயம் உள்ளதாகவும் இப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையானோர் மாத்திரம் வருவது போதுமானது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இரவு பகல் பாராது தொடரும் சேவை
இலங்கையின் நாலா பாகங்களிலிருந்தும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) நோக்கி நல்லடக்கத்துக்காக கொண்டு வரப்படும் ஜனாசாக்களை சுகாதார வழிமுறையினைப் பின்பற்றி நல்லடக்கம் செய்ய வைக்கும் பணியினை இரவு பகல் நள்ளிரவு என்று கூட பாராமல் களத்தில் நின்று சுகாதாரத்துறையினர், ஓட்டமாவடி பிரதேச சபையினர் பணியாற்றுகின்றனர்.
இதில் ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள் தங்களது உயிர்களைத் துச்சமென மதித்து சமூகத்தின் நலன் கருதியும் தங்களது சேவை மனப்பான்மையுடன் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுடன் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி, அலுவலக ஊழியர்கள், பிரதேச சபையின் செயலாளர், நிருவாக உத்தியோகத்தர், சபையின் தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்களும் தங்களது பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்களுடன் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கல்குடா ஜனாஸா நலன்புரிச்சங்கப் பிரதிநிதிகள், ஓட்டமாவடி பள்ளிவாயல் பேஷ் இமாம், இராணுவத்தினர், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் ஆகியோர் குறித்த இடத்தில் நின்று தங்களது சேவைகளைச் செய்து வருகின்றனர்.
இவர்களுடன் ஓட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகள், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்து தங்களது சேவைகளைச் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு இறைவன் தேகாரோக்கியத்தை வழங்குவதுடன், தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று இச்சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.- Vidivelli