கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ஜனாதிபதி நந்தசேன கோத்தாபய ராஜபக்ச அவர்கள், கொரோனாவால் மாண்ட முஸ்லிம்களின் உடல்களை மண்ணுக்குள் அடக்கலாம் என்று ஒரு வாரத்திற்கு முன் வர்த்தமானிமூலம் அனுமதி வழங்கியதும், அவரது நெஞ்சம் காலம் தாழ்த்தியாவது கரைந்துவிட்டதே என்று யோசித்தவர்களுக்கு, புதைப்பதற்குப் பொருத்தமான இடந்தேடி பத்து நாட்களாக நடாத்திய நாடகம் சர்வ அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி உண்மையிலேயே முஸ்லிம்கள்பால் இரங்கித்தான் அந்த வர்த்தமானியை வெளியிட்டாரா அல்லது வேறு ஒரு தேவையை நிறைவேற்ற முஸ்லிம்களை ஏமாற்றினாரா என்று எண்ணத் தோன்றினும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் வெரேணிக்கா மிச்சேல் பெச்சலெற் இலங்கையின் மனித உரிமை மீறல்களைப்பற்றிய தனது விரிவானதும் துணிவானதுமான அறிக்கையின் மூலம் ராஜபக்ச அரசுக்கு ஜெனிவாவில் வைத்த ஆப்பைக் கழற்றுவதற்காக ஜனாதிபதி நந்தசேன எடுத்த முதல் முயற்சியே அந்த வர்த்தமானி அறிக்கை. அதைத் தவிர, சில முஸ்லிம் தலைவர்கள் காணொளிகளிலும் வானொலிகளிலும் புகழ்பாடுவதுபோன்று முஸ்லிம் சமூகத்தின்மேல் அவருக்கு ஏற்பட்ட இரக்கத்தால் அல்ல. அவ்வாறு இரக்கம் இருந்திருந்தால் அவரது மனமாற்றம் எப்போதோ ஏற்பட்டிருக்கும்.
ஓர் உண்மையை மட்டும் முதலில் உணர்த்த வேண்டியுள்ளது. அதாவது, இதுவரை உலகத்தில் எங்கேயாவது (இலங்கை உட்பட), கொரோனாவால் மரணித்த மனித உடல்களை மண்ணுக்குள் புதைத்ததனால் அந்தத் தொற்று வாழும் மற்ற ஜீவன்களுக்குப் பரவியதாக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பூமியின் அடியில் உள்ள நீர் அந்த உடலுடன் கலக்குமானால் அதனால் தொற்று பரவும் என்ற ஒரு நிரூபிக்கப்படாத போலி வாதம் இலங்கையிலே மட்டும்தான் முன்வைக்கப்பட்டுள்ளது. அதை முன்வைத்தவர் தொற்றுநோய் நிபுணர் அல்லர். மாறாக ஒரு மண்ணியல் பேராசிரியர். பேராசிரியரின் இந்தப் போலி வாதமே பௌத்த பேரினவாத ஈரமிலா நெஞ்சங்களுக்கு முஸ்லிம்கள்மேல் வஞ்சம் தீர்க்கக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். இதிலே ஒரு வேடிக்கை என்னவெனில் ஜனாதிபதியின் மனமாற்றத்தின் அந்தரங்கத்தை அறியும் முன்னரே அந்தப் பேராசிரியர் சடுதியாக நிபுணர்கள் குழுவிலிருந்து இராஜினாமாச் செய்தமையாகும். அவருக்கு அது ஒரு கௌரவப் பிரச்சினையாகிவிட்டது போல் தெரிகிறது. எனினும் இப்போது (ஓட்டமாவடி தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில்) பொருத்தமான புதைவிடம் தேடி நடத்தப்படும் நாடகம் அப் பேராசிரியரின் வாதம் தொடர்ந்தும் இந்நாட்டில் செல்லுபடியாகும் என்பதையே காட்டுகிறது. அந்த வாதத்தில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டால் உடல்களை எங்கு வேண்டுமானாலும் அடக்கலாம் அல்லவா? ஆனால் அதனைத் தாங்கிப்பிடித்துக் கொண்டிருப்பதனாலேதான் இந்த மயான பூமி வேட்டை. முஸ்லிம்களின் பூத உடல்களை மாதக்கணக்கில் குளிர் அறைக்குள் பூட்டி வைத்திருந்து வர்த்தமானி வெளிவந்த பின்னரும் அடக்குவதற்குப் பொருத்தமான இடந்தேடி இழுத்தடித்ததில் அந்த ஈரமிலா நெஞ்சங்களின் உண்மை முகம் தென்படுவதை மறுக்க முடியாது.
எந்த அளவுக்கு முஸ்லிம்கள்மேல் கஷ்டநஷ்டங்களை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவற்றை ஏற்படுத்தத் தயாராக இருக்கின்றனர் ராஜபக்ச அரசை ஆட்டுவிக்கின்ற பௌத்த பேரினவாதிகள். இந்தக் கும்பலுக்குள்ளே அரசியல் அதிகார ஆசைகொண்ட பௌத்த துறவிகளும் இடம்பெற்றிருப்பது பௌத்தம் செய்த பாவம். இந்தப் பேரினவாதக் கொள்கையே அரசாங்கத்தை ஆட்கொண்டுள்ளது. அந்தக் கொள்கையை ஆதரிக்காத எவரும் ராஜபக்ச ஆட்சியில் உயர்பதவி வகிக்க முடியாது. அதைத்தான் அரசாங்கத்தின் பொதுச் சுகாதாரத்துறை நிர்வாகத்திலும் காண்கிறோம். இந்தப் பேரினவாதிகளே கொரோனா பலியாக்கிய முஸ்லிம்களையும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விதிப்படி தகனம் செய்யவேண்டுமென விடாப்பிடியாக நிற்கின்றனர். ஆனால் சர்வதேச அழுத்தங்களை அவர்களால் முற்றாக உதாசீனம் செய்யமுடியாது. இதனாலேதான் மண்ணுக்குள் அடக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்குப் பல தடைகளை ஏற்படுத்திய வண்ணம் செயற்படுகின்றனர். இரணைதீவில் தொடங்கி ஓட்டமாவடி வரை பொருத்தமான அடக்கஸ்தலம் தேடுகின்றனர். அவர்கள் கைப்பிடித்துள்ள போலி வாதத்தைக் கைவிட்டால் எந்த ஊரிலும் எந்த மையவாடியிலும் கொரோனா ஜனாஸாக்களை அடக்கலாம். எல்லா நாடுகளிலும் அதுதான் நடைபெறுகின்றது. ஜெனிவாவில் ஐ. நா. மனித உரிமை பேரவை அமர்வு முடிவடைந்ததன் பின்னர் இந்தப் பேரினவாதிகளின் மனோநிலை மாறி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதுபோன்று மீண்டும் தகனம் கட்டாயப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இது ஒரு புறமிருக்க, முஸ்லிம் தலைவர்கள் இவ்விடயத்தில் வீரம்குன்றி நிற்பதைப்பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அவர்களுட் சிலர் ஏற்கனவே ஜனாதிபதிக்கு நன்றிகூறி அவரின் புகழ் பாட ஆரம்பித்துவிட்டனர். அவர்களுள் சிலர் ஜனாதிபதியுடன் ஜனாஸாக்களை அடக்குவதுபற்றிய ஒரு உடன்பாட்டுக்கு வந்தபின்னர்தான் இருபதாம் திருத்தப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கியதாகவும் ஒரு புதுக்கதையை இப்போது வளர்க்கத் தொடங்கியுள்ளனர். அப்படியொரு உடன்பாடு எழுத்தில் உண்டா? இருந்தால் காட்டட்டுமே. அல்லது மக்களுக்கு அரசியல்வாதிகள் மேடைகளில் நின்று வாரிவழங்கும் உறுதிமொழிபோல் இவர்களுக்கும் ராஜபக்சாக்கள் வெறும் வார்த்தைகளால் உறுதி கூறினார்களா? வெரேணிக்கா மிச்சேல் பெச்செலற் இல்லையென்றால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்காது என்பதை ஏன் வாய்திறந்து கூறத் தயங்குகிறார்கள் இந்தத் தலைவர்கள்? துதிபாடியே பழக்கப்பட்ட தலைவர்களுக்கு பழக்க தோஷம் விடவில்லை போலும்.
போராட வேண்டியது புதைப்பதற்கு இடம் கேட்டல்ல, புதைப்பதை எதிர்த்து தகனத்தை ஆமோதித்த போலி விஞ்ஞானத்தைக் கைவிடுமாறு. அதனை கைவிட்டு உலகோடு ஒத்துப்போனால் இலங்கையின் சகல மையவாடிகளிலும் கொரோனா ஜனாஸாக்களை அடக்கலாம். இதனை வலியுறுத்திப்போராட முஸ்லிம் தலைவர்களுக்குத் துணிவில்லை.
இன்னுமொரு தலைவர் இந்த அரசாங்கத்துடன் சேர்ந்துதான் முஸ்லிம்கள் எதனையும் சாதிக்கலாம், சண்டித்தனத்தினால் அல்ல என்றும் கூறுகிறார். இது எட்டி உதைத்த காலையே தொட்டு நக்கும் மனப்பான்மை. இப்படிப்பட்ட பச்சோந்திகள் தலைவர்களானால் முஸ்லிம் சமூகம் சுய கௌரவம் இழந்த ஒரு சமூகமாகவே கருதப்படும். அநீதியை அநீதி என்றுகூறி நீதிக்காகப் போராடுவதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதனைச் சாதித்துக் காட்டியவரே நபி பெருமானார். எனவே இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையில் மற்றைய இனப் பிரஜைகளுடன் கைகோர்த்து உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் போராடத் தைரியமில்லாத தலைவர்கள் இருந்தென்ன இல்லாவிட்டால்தான் என்ன?
ஜெனிவாவிலே இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைச் சபை கொண்டுவரப்போகும் பிரேரணையில் கட்டாய தகனத்தைப் பற்றியும் ஓர் அம்சம் உண்டு. வர்த்தமானியை ஆதாரமாகக் காட்டி அந்த அம்சத்தை பிரேரணையிலிருந்து நீக்குமாறு இலங்கையின் பிரதிநிதிகள் வேண்டுகின்றனர். அந்த வேண்டுதலுக்கு முஸ்லிம் நாடுகளை ஆதரவு வழங்குமாறு கோர முஸ்லிம் சமூகத்திலிருந்தே சிலர் முயற்சித்து வருவதாக செய்திகள் கசிகின்றன. அது உண்மையானால் இவ்வாறானவர்களை இனங்கண்டு முஸ்லிம்கள் அவர்களை ஒதுக்க வேண்டியது கடமை. சர்வதேச அழுத்தங்கள் ஒன்றுதான் இன்று முஸ்லிம்களை இந்த நாட்டில் ஓரளவுக்காவது தன்மானத்துடனும் கலாச்சாரத் தனித்துவத்துடனும் வாழச் செய்துள்ளது. அந்த அழுத்தங்களுக்குப் பயந்துதான் இன்று ஜனாஸாக்களை பல இடைஞ்சல்களுடன் அடக்குவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. அந்த அழுத்தம் இல்லையென்றால் முஸ்லிம்கள் குற்றேவல் புரியும் ஒரு சமூகமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆகவே ஐ. நா. மனித உரிமைச் சபையின் அழுத்தங்கள் இலங்கை ஆட்சியாளர் மேல் தொடரவேண்டும். அதனைத் தடுக்க எந்த முஸ்லிம் தலைமைத்துவமும் முனைந்தால் அந்தத் தலைமைத்துவத்தை முஸ்லிம்கள் களைந்தெறிய வேண்டும். ஈரமிலா நெஞ்சங்களுக்குப் பாடம் படிப்பிக்க வீரமிலாத் தலைவர்களால் என்றுமே முடியாது.
ஜனாஸாப் பிரச்சினையால் பட்ட துயரம் ஆறுவதற்கு முன்னர் இன்னுமொரு பிரச்சினைக்கு முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பற்றி எவ்வகையான புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதை பாதுகாப்பு அமைச்சே இனிமேல் தீர்மானிக்குமாம். இறக்குமதியாகும் இஸ்லாத்தைப் பற்றிய எல்லா நூல்களும் முதலில் பாதுகாப்பு அமைச்சினால் அங்கீகரிக்கப்பட வேண்டுமாம். சீனாவிலே எப்படி சீன அரசு உய்கர் முஸ்லிம்களை மூளைச்சலவை செய்கின்றதோ அதன் முதலாவது பாடம் ஜனாதிபதியால் இங்கே ஆரம்பமாகின்றது. இதனை எதிர்த்துப் போராடக்கூடிய தலைவர்கள் முஸ்லிம்களிடையே உள்ளனரா? காலம்தான் பதில் சொல்லும்.- Vidivelli