ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் என்னை நேரடியாக விமர்சித்து வருகின்றார். நான் ஜனாதிபதியாகியிருந்தால் அரசியலமைப்பினை மீறியோ, நம்பிக்கை துரோகம் செய்தோ, யாரோ ஒரு தந்தைக்கு எழுதிய புத்தகத்தை நான் சொந்தம் கொண்டாடியிருக்க மாட்டேன் என பீல்ட் மார்ஷால் சரத் பொன்சேகா தெரிவித்தார். அமெரிக்காவில் ஜனாதிபதிக்கும் மனநிலை பரிசோதனை செய்யப்படும், அதேபோல் இலங்கையிலும் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிகழ்கால அரசியல் சூழல் குறித்து தனது கருத்தை முன்வைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் இதன்போது கூறுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னை விமர்சித்து என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். இது குறித்து ஏற்கனவே நான் சபையில் முறைப்பாடு செய்தேன். எழுத்து மூலமும் நான் அறிவித்துள்ளேன். நேற்று முன்தினமும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் என்னைப்பற்றி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நான் கடந்த 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் இவ்வாறு கட்சித்தலைவர்கள் எவரையும் வரவழைத்து பேசக்கூட இடமளித்திருக்க மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் உண்மையில் யார் வெற்றி பெற்றது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது அடியாட்களை கொண்டு தேர்தலை தன பக்கம் திருப்பியமைக்கான ஆதாரங்கள் உள்ளன.
அதேபோல் கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் நான் வெற்றிபெற்றது உறுதியாக்கப்பட்டிருந்தால் நான் இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவது போல கீழ்த்தரமாக செயற்பட்டிருக்க மாட்டேன். அரசியலமைப்பினை மீறி செயற்பட்டிருக்க மாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவில் வெற்றிபெற்று எதிரணியில் போய் அமர்ந்துகொண்டு தன்னை அதிகாரத்துக்கு கொண்டுவந்த நபரது காலைவாரும் செயலை செய்திருக்க மாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவில் ஆட்சியை அமைத்திருந்தால் இறுதிவரை ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தி ஆட்சியை கொண்டு நடத்தியிருப்பேன். அதேபோல் தேர்தல்களில் தோற்ற ஒருவரை மீண்டும் பிரதமராக நியமித்திருக்க மாட்டேன்.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அரச நிதியில் சர்வதேச நாடுகளுக்கு சென்று ஊர் சுத்தியிருக்க மாட்டேன். நான் இரண்டரை ஆண்டுகள் அமைச்சுப் பதவியில் இருந்துள்ளேன். இந்தக் காலத்தில் நான் அரச நிதியில் ஒரு சந்தர்ப்பத்தில் கூட வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டதில்லை. இரண்டு தடவைகள் இந்திய அரசாங்கத்தின் அழைப்பில் சென்றுள்ளேன். ஒருசில பயணங்களை எனது சொந்த பணத்தில் மேற்கொண்டுள்ளேன். இவ்வாறு அரச நிதியை நான் ஒருபோதும் நாசமாக்கியிருக்க மாட்டேன். அதேபோல் நான் ஜனாதிபதியாகியிருந்தால் காலையில் ஒரு கதையும் பகல் வேறு கதையும் இரவில் இன்னொரு கதையுமாக கதைத்து நடவடிக்கை எடுத்திருக்க மாட்டேன். ஒரே வாக்குறுதியில் செயற்பட்டிருப்பேன். அதேபோல் வேறு ஒருவர் எழுதிய புத்தகத்துக்கு எனது மகளின் பெயரை சூட்டி “ஜனாதிபதி தந்தை” என புத்தகம் எழுதியிருக்க மாட்டேன். யாரோ ஒரு மகள் தனது தந்தைக்கு எழுதிய புத்தகத்தை நான் சொந்தம்கொண்டாடியிருக்க மாட்டேன்.
மேலும் எனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என தெருவில் காணும் அனைவரிடமும் கூறி பொய்யாக கற்பனை செய்துகொண்டு இருக்க மாட்டேன். எனக்கு உயிர் அச்சம் ஒருபோதும் இல்லை. உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக நினைத்துக்கொள்வதும் ஒரு மனநோய். அதேபோல் எனக்கு அதிகாரத்தை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக எவரையும் விலைகொடுத்து வாங்க நினைத்திருக்க மாட்டேன். ஊழல் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் முதற்கொண்டு ஜனாதிபதி வரை அனைவரும் தடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அத்துடன் மொரகாகந்த போன்ற நீர்த்தேக்கங்களை உருவாக்கிவிட்டு அங்கு சென்று புகைப்படங்களை எடுத்து நடித்துக்கொண்டிருக்க மாட்டேன். இப்போது அந்த வயதை நாம் கடந்துவிட்டோம்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் வருடத்துக்கு ஒருமுறை மனநிலை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தலைவர் அதிகமாக ஆயுதங்களுடன், இரகசிய களஞ்சிய சாவிகளுடன் வாழ்வதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்துக்காக இவ்வாறு செய்வார்கள். அதிஷ்டவசமாக எமது நாட்டில் ஆயுதக் களஞ்சிய சாவிகள் அரச தலைவரிடம் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் முதலில் எனது பக்கமே ஆயுதங்கள் திரும்பியிருக்கும். எவ்வாறு இருப்பினும் இங்கும் அரச தலைவர்கள் தமது மனநிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டாய விதி ஒன்று அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும். சபாநாயகர் தலையிட்டேனும் அவ்வாறான ஒரு நடவடிக்கையை கொண்டுவர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli