இலங்கை வரலாற்றில் அதன் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் எந்தக் காலத்திலும் எத்தகைய பங்கமும் விளைவிக்காத முஸ்லிம் சமூகம், ஏப்ரல் 21 இல் நடைபெற்ற துன்பியல் நிகழ்வான ஈஸ்டர் ஞாயிறு படுகொலை தாக்குதல்கள் காரணமாக கிறிஸ்தவர்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட இரண்டாவது பெரிய சமூகம் என்றால் அது மிகையல்ல. ஏப்ரல் 21 இல் நடைபெற்ற கொடூரமான தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் மறைந்திருப்பதாக கருதப்படும் சூத்திரதாரிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் விடுத்துள்ள அழைப்பை முஸ்லிம்கள் வலிமையாக ஆதரிக்க வேண்டும் என முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர், மூத்த ஊடகவியலாளர் லத்தீப் பாறூக், சட்டத்தரணியும் பத்தி எழுத்தாளருமான மாஸ் எல் யூஸுப் மற்றும் சமய அறிஞர் மன்ஸூர் தஹ்லான் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளை விசாரித்து பதில்களை வழங்கத் தவறியமை பெரிய ஏமாற்றமாகும். இது குறித்து பேராயர் வெளிப்படுத்திய ஆழ்ந்த கவலையை நாட்டு மக்களுடன் நாம் பகிர்ந்து கொள்கிறோம். குறிப்பிட்ட சில இளைஞர்கள் மேற்கொண்ட தாக்குதலகள் காரணமாக நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்த படுபயங்கரமான தற்கொலைத் தாக்குதல்களின் பின்புலத்தில் உள்ள காரணங்கள் மீதான விசாரணைகள் மற்றும் மதிப்பீடுகள் துரதிஷ்டவசமாக போதுமானதாக அமையவில்லை என்பதே எமது அவதானமுமாகும்.
நாடளாவிய ரீதியில் பரவலாக பேசப்படும் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் மனைவியான புலஸ்தினி ராஜேந்திரன் எனும் ஸாரா என்பவர் படகு வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படும் பின்னணிகள் பற்றியோ அல்லது அவரை இலங்கை புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பது குறித்தோ மதிப்பீடு செய்யத் தவறியது அறிக்கையில் காணப்படும் பாரிய இடைவெளியாக உள்ளது.
2021 பெப்ரவரி 16 ஆம் திகதி அன்று நடைபெற்ற “புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு” குறித்த நேரலை பட்டறையில், சமீபத்தில் இந்திய புலனாய்வு நிறுவனங்கள் இலங்கை புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்த நபர்களை கைது செய்ததாக இந்திய உயர் ஸ்தானிகர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். அப்படி என்றால் ஏன் புலஸ்தினி கைது செய்யப்படவில்லை?.
கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் 21.07.2019 அன்று மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் புனிதப்படுத்தப்பட்ட அந்நாளில் பேராயர் நிகழ்த்திய உரை உலகளவில் பிரபல்யமானதாகும். அந்த தேவாலயம் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கிய தற்கொலை குண்டுதாரி மூலம் அழிக்கப்பட்ட தேவாலயங்களில் ஒன்றாகும். அந்நாளில் பேராயர் நிகழ்த்திய உரை குறித்து ஆறு பேர் கொண்ட ஆணைக்குழு அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் அவர்கள் நிகழ்த்திய உரை:
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு சர்வதேச சதியாகும் என்றும் அது வெறுமனே இஸ்லாமிய தீவிரவாத இளைஞர்கள் சிலர் நடாத்திய ஒரு சம்பவமாக கருத முடியாது. குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட இளைஞைர்களை சர்வதேச சதிகாரர்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். உலகளாவிய முஸ்லிம் சமூகம் சர்வதேச சதிக் கும்பல்களின் வலையில் சிக்கி பலியாகியுள்ளனர். எவ்வாறாயினும், உலகளவில் குழப்பங்களையும் நாசகார செயல்களையும் உருவாக்கும் நோக்கில் இஸ்லாமிய கோட்பாடுகளை பயன்படுத்தும் சதிகாரர்களுக்கு எதிராக உலக முஸ்லிம்கள் ஒன்று திரள வேண்டும். தங்கள் சொந்த நலன்களை அடைந்து கொள்வதற்காக இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் சக்திகளை எதிர்த்து நிற்பதற்காக அவர்கள் ஏனைய சக மத சகோதரர்களோடு இணைய வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் தலைவன் அபூபக்கர் அல்-பக்தாதி, உலக வலிமைமிக்க வல்லரசு நாடொன்றின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் ஒரு இராணுவ முகாமில் இருப்பதாக நான் அறிக்கையொன்றில் படித்தேன். நான் அந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட மாட்டேன், ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவன் இந்த வலிமையான நாட்டின் இயக்கத்தில் வழிநடாத்தப்படும் ஒரு இராணுவ முகாமில் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவான உண்மையாகும். ஐ.எஸ்.ஐ.எஸ் தலைமையை சாதாகமாக பயன்படுத்தி இந்த வல்லரசு நாடு தமது சொந்த நலன்களை நிறைவேற்றிக் கொள்வதுதான் எமக்கு வருத்தத்தை தருகிறது. உண்மையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்து இந்த தேசம் ஏற்கனவே அறிந்திருந்ததா என நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். சில விஷம சக்திகள் சிங்கள-முஸ்லிம் கலகங்களை உருவாக்கி நம் நாட்டில் அமைதியின்மையை உருவாக்க முயற்சிக்கிறதா? என்றும் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். ஒரு சில இளைஞர்கள் ஈஸ்டர் ஞாயிறு படுகொலை தாக்குதலை மேற்கொண்டதற்கு அவர்களுடைய இஸ்லாமிய மத சித்தாந்தம் தான் காரணமாக அமைந்தது என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
பேராயர் தனது கட்டுவாபிட்டி உரையில் பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களை மேற்கோள் காட்டி பேசும் போது, அதிகரித்து வரும் ஆயுத உற்பத்திகள் காரணமாகவே உலகில் பல்வேறு பிரச்சினைகளும் மோதல்களும் நிலவுகின்றன என தெரிவித்துள்ளார். இந்த தீவிர வெளிப்பாடுகளை ஆராய ஆணைக்குழு ஏன் தவறிவிட்டது என்பது குறித்து புத்திஜீவிகள் வட்டங்களில் நியாயமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
முஸ்லிம்கள் இலங்கை மண்ணில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சக இன, மதங்களுடன் நட்புடனும் அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் இனவாத அரசியல் சக்திகள் அவர்களது அமைதியான இருப்பை ஒரு நாளில் குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இந்த நாசகார செயற்பாடுகளுக்கு மதம் ஒரு போதும் காரணமாக அமைந்தது கிடையாது.
மே 2009 இல் எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப்பட்ட பின்னர், இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்கள் மீதும் பிழையான கருத்துக்களையும் பீதியையும் கட்டியெழுப்பி வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதற்காக நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தீய பிரச்சாரம் தொடங்கியது. துரதிஷ்டவசமாக ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவனது சகாக்கள் செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் குற்றவாளிக் கூண்டில் நின்றபோது இந்த பிரசாரம் அதன் உச்சத்தை தொட்டது.
இன்று இந்த துன்பியல் நிகழ்வு நடைபெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் முன்னணி சிங்கள துறைசார் வல்லுனர்கள், மரியாதைக்குரிய பௌத்த மத குருக்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூட இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் அவர்கள் தற்கொலை தாக்குதல்களால் பயனடைந்தவர்களை நோக்கி தமது சுட்டு விரல்களை நீட்டியுமுள்ளனர். மேலும் பல பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் அந்தக் கும்பலின் தலைவன் அல்ல என்றும் அவனுக்கு மேலே சிலர் இருந்ததாகவும் வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய அனைவர்கள் மீதும் பெரும் துயரங்களை ஏற்படுத்திய இந்த கொடூரமான குற்றச் செயலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிய வேண்டுமென பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை போலவே, முஸ்லிம்களும் ஏனையவர்களும் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். முஸ்லிம்கள் மீதும் பழிவாங்கும் தாக்குதல்கள், கொலைகள், நடைபெற்றுள்ளன. அவர்களின் வீடுகள், வியாபாரஸ்தலங்கள், தொழில்துறை சார்ந்த சொத்துக்கள் யாவும் கடமையில் இருந்த காவல்துறையின் கண்ணெதிரிலேயே தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது நாட்டு மக்களை இன-மத அடிப்படையில் பிளவுபடுத்தி மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை கண்டனம் செய்த மரியாதைக்குரிய சிங்கள ஆளுமைகளை பாராட்டும் அதே வேளையில் பேராயரின் கோரிக்கையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.- Vidivelli