கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தற்பாதுகாப்புப் பெறுவதற்காக எமது நாட்டின் சுகாதார திணைக்களம் வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. அவற்றை பேணுவதுடன், இத்தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என ஜம்இய்யத்துல் உலமாவின் பதில் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஜே.அப்துல் ஹாலிக் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றிக்கொள்வது பற்றிய வழிகாட்டல்களை உலமா சபை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒருவருக்கு ஒரு நோய் ஏற்படாவிட்டாலும், அதன் தாக்கத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னெச்சரிக்கையுடன் அதற்கான தற்காப்பு விடயங்களை செய்துகொள்வதற்கு மார்க்கம் வழிகாட்டியுள்ளது.
உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு நாடும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதைப் போன்று, நம்நாடும் இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து நாட்டுமக்களை விடுவித்துக்கொள்ள பல வழிகாட்டல்களை வழங்கி வருவதுடன், நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. அவற்றில் இந்நோயிலிருந்து காத்துக்கொள்வதற்காக ஏற்றப்படும் தடுப்பூசியும் மிக முக்கிய ஒன்றாகும்.
இவ்வடிப்படையில், கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தற்பாதுகாப்புப் பெறுவதற்காக எமது நாட்டின் சுகாதார திணைக்களமும் சில வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. அவற்றை பேணுவதுடன், இத்தடுப்பூசி விடயத்தில் அனுபவமுள்ள நம்பிக்கைக்குரிய வைத்தியர்களிடம் இது பற்றிய ஆலோசனைகளைப் பெற்று, குறித்த தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என தெரிவித்துள்ளார்.- Vidivelli