முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்பட்ட விடயத்தில் புரளிகள் கிளப்பப்படுகின்றன. 334 பேரின் ஜனாசாக்கள் எரிக்கப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை. இதுவரை 181 ஜனாசாக்களே எரிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த ஒரு வருட காலமாக முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்பட்ட விடயத்திற்கு கடந்த 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக அனுமதி வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்த விடயத்தில் உதவி புரிந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார உட்பட பலருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக எமது நற்பெயரை களங்கப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சபையில் இருக்கின்றார்கள். எங்களை மிகவும் கேவலமாக சித்தரித்தார்கள். நாம் ஆதரவளித்ததனாலேயே ஜனாசாக்கள் எரிக்கப்படுவதாகவும் பழி சுமத்தினார்கள். பல்வேறு பொய்யான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டார்கள்.
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கூட ஜனாஸா எரிப்பு விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் எரிக்கப்பட்ட ஜனாசாக்கள் தொடர்பில் ஒரு பிழையான தகவலை கூறினார். இதுவரை கொரோனாவால் மரணித்து எரிக்கப்பட்ட 497 பேரில் 334 பேரின் ஜனாசாக்கள் முஸ்லிம்களுடையது என்றார். நிச்சயமாக அவ்வாறில்லை; எரிக்கப்பட்ட உடல்களில் 181 ஜனாசாக்களே முஸ்லிம்களுடையது. இது ஒரு கவலையான விடயம். இவ்வாறு நடந்திருக்க கூடாது. இவ்வாறான விடயங்கள் இனிமேலும் நடக்கக் கூடாதென நாம் பிரார்த்திக்கின்றோம் என்றார். – Vidivelli