ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனைகள்
சபையில் அமைச்சர் வீரசேகர விசேட உரை
- நவ்பர் மெளலவியே ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி
- புர்கா தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
- 11 முஸ்லிம் அமைப்புகளுக்கு தடை
- பாடப் புத்தகங்களில் அடிப்படைவாத கொள்கைகள்
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஈஸ்டர் தாக்குதலை தடுக்க இலகுவான வழிமுறைகள் இருந்தும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க நல்லாட்சி அரசாங்கம் தவறிவிட்டது. தாக்குதல் நடத்தப்பட முன்னர் பல்வேறு சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ளன. அவற்றை சரியாக கண்காணித்து விசாரணைகளை நடத்தியிருந்தால் இவ்வாறான தாக்குதல் நடக்காது தடுத்திருக்க முடியும் என பொது மக்கள் சிவில் பாதுகாப்பு அமைச்சர் சரத் விரசேகர கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்தை நேற்று முன்தினம் சபையில் விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், 2018 பெப்ரவரி 6 ஆம் திகதி தொடக்கம் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்படும் வரையில் ஒன்பது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அரசாங்கம் புலனாய்வுத்துறையை பலவீனப்படுத்தியமை, தேசிய பாதுகாப்பை பூச்சியத்தில் வைத்திருந்தமை என்பவற்றின் காரணமாக தாக்குதலை தடுக்க முடியாமல் போனது. எனினும் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் துரிதமாக செயற்பட்டு குற்றவாளிகளை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
சீனாவிலிருந்து வாள்கள் கொள்வனவு
இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட 50 இற்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களையும் கைது செய்ய சர்வதேச பொலிசின் உதவியை நாடியுள்ளோம். அதுமட்டுமல்ல 2015 ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய நிறுவனம் ஒன்றினூடாக சீனாவில் இருந்து 1440 வாள்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்திடம் இருந்து வாள்களை பெற்றுக்கொண்ட நபர்கள், நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இல்ஹாம் சகோதரர்களே நிதியளித்தனர்
அதேபோல், 2018 ஆம் ஆண்டு தொடக்கம் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படும் வரையில் சஹ்ரானுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதும் தெமட்டகொட இப்ராஹீமின் புதல்வர்களான இன்ஸாப் மற்றும் இல்ஹாம் ஆகியோராகும். குறித்த காலப்பகுதியில் இவர்கள் 500 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர். அத்துடன் இவர்கள் இருவரும் ஐ.எஸ்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புபட்டு சிரியாவில் பயிற்சி பெற்ற இலங்கை பயங்கரவாதி நிலாம் என்பவரின் தந்தைக்கு 2018 நவம்பர் மாதம் 45 இலட்சம் ரூபா வழங்கியுள்ளனர். இதேபோல் மேலும் பல இலட்சம் ரூபா தாக்குதலுக்காக செலவு செய்துள்ளனர். சேவ் த பேர்ல் அமைப்பின் ஊடாகவும் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கும் இன்ஸாப் மற்றும் இல்ஹாம் ஆகியோர் பாரிய அளவிலான பணத்தை செலவு செய்துள்ளனர்.
ஜே.எம்.ஐ.க்கு ஐ.எஸ்.உடன் தொடர்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பின் தலைவரான அபூபக்கர் அல் பக்தாதி 2014 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இராச்சியத்திற்கான அழைப்பை விடுத்த பின்னர் 2015 ஆம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த 37 பேர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ் அமைப்புடன் இணைந்துள்ளனர். அத்துடன் ஐ .எஸ் அமைப்புடன் இணைய விருப்பம் தெரிவிக்கும் இலங்கை பிரஜைகள் தொடர்புகொள்ள ஜமாஅத்தே மில்லத்தே இப்ராஹீம் என அழைக்கப்படும் (ஜே.எம்.ஐ) அமைப்பு இலங்கையில் இருந்து செயற்பட்டுள்ளது என்பதும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. மத அடிப்படைவாதத்தில் இருந்து இவர்கள் பயங்கரவாததிற்கு தள்ளப்பட்டுள்ள போதிலும் மேலும் சிலர் இன்னமும் அடிப்படைவாத கொள்கையில் இருந்து வருகின்றனர்.
நவ்பரே பிரதான சூத்திரதாரி
மொஹம்மட் நவ்பர் என்ற நபர் தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரே இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட மிக முக்கியமான நபராவார். அபூபக்கர் அல் பக்தாதியின் கொள்கையின் பால் சஹ்ரானை இணைத்துக்கொள்ள பிரதான நபராக மொஹம்மட் நவ்பர் செயற்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டில் சஹ்ரானுடன் நெருக்கமாக செயற்பட்டு தாக்குதல் நடத்தப்படும் வரையில் சஹ்ரானை அடிப்படைவாத கொள்கையில் இயக்கியதும் மொஹம்மட் நவ்பர் தான் என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஈஸ்டர் தாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரி மொஹம்மட் நவ்பர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஹஜ்ஜுல் அக்பரும் தொடர்பு
அதேபோல் ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் பிரதானியான ஹஜ்ஜுல் அக்பரும் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையில் இருந்து செயற்பட்டுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கையாண்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மாலைதீவு நாட்டை சேர்ந்த நான்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளும் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர். இவர்கள் நால்வரையும் இலங்கையின் பயங்கரவாதிகளுடன் இணைக்க இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலிய பிரஜைகளான லுக்மான் தாலிப் மற்றும் அவரது மகனான லுக்மால் தாலிப் அஹமட் ஆகியோர் செயற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் லுக்மால் தாலிப் கட்டார் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் எமக்கு அறிவித்துள்ளனர்.
மத்ரஸாக்கள் முறையாக செயற்படவில்லை
இலங்கையில் அதிகளவிலான மதரசா பாடசாலைகள் முறையாக செயற்படவில்லை என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் பிறக்கும் சகல குழந்தைகளுக்கும் 5 வயது தொடக்கம் 16 வயது வரையில் அரச கல்வியை தொடர்வது கண்டிப்பானது எனவும் அரச கொள்கைக்கு அமைய கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை நிராகரிக்கும் சகல பாடசாலைகளையும் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் நீண்ட காலமாக முறையான கல்வியை பெற்றுக்கொடுக்கும் மதராசாக்களும் இயங்குகின்றன என்பதையும் நாம் நினைவுபடுத்துகின்றோம்.
பாடசாலை புத்தகத்தில் அடிப்படைவாதம்
பாடசாலை பாடப்புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படைவாத கருத்துக்களை நீக்கவும் இப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முதலாம் தரம் தொடக்கம் 13 ஆம் தரம் வரையிலான பாடப்புத்தகங்களில் ஏனைய மதத்தவருக்கு எதிராக செயற்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதுடன், வஹாபி, சலபி கொள்கைகள் சூட்சுமமாக பாடப்புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
11 அமைப்புகளுக்குத் தடை
மேலும் இந்த தாக்குதலுக்குஏற்ற சூழலை நேரடியாகும் மறைமுகமாகவும் உருவாக்கிக்கொடுத்த 11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை விரைவாக தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். மேலும் சஹ்ரானின் அமைப்பு உட்பட இலங்கையில் செயற்படும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த அமைப்புகளின் தலைவர்களை கைது செய்யவும் இந்த அமைப்புகளை தடைசெய்ய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். குறிப்பாக “வன் உம்மா, ஹிஸ்புத் தஹ்ரீர், முஜாஹிதீன் அல்லாஹ், சுப்பர் முஸ்லிம்” ஆகிய அமைப்புகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
புர்காவை தடை செய்ய நடவடிக்கை
அத்துடன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்கள் என்ற சிலவற்றை அடையாளம் கண்டுள்ளதுடன் அவற்றில் பிரதானமாக புர்காவை உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் சிறுவர் மற்றும் பெண்களை கருத்தில் கொண்டு சிறுவர் திருமண சட்டத்தையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாது இந்த தாக்குதலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்ட சகல நபர்களுக்கும் உயரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முஸ்லிம்கள் ஒத்துழைப்பு
இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே விரைவாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாம் இஸ்லாமிய மதத்தை கட்டுப்படுத்தவில்லை, அதில் வளரும் அடிப்படைவாதத்தையே நாம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றோம். குறிப்பாக வஹாபி கொள்கையை தடுக்கவே நாம் நடவடிக்கை எடுக்கின்றோம். இந்த செயற்பாடுகளில் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பும் எமக்கு கிடைக்கின்றது. அதேபோல் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிசீலனைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.- Vidivelli