எம்.எப்.எம்.பஸீர்
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் பேசப்பட்ட ஒருவரே முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க.
வஸீம் தாஜுதீன் படுகொலையை வாகன விபத்தாக மாற்றியதில் இவரது பங்களிப்பு அளப்பரியது. இதனாலேயே, வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் சாட்சியங்களை மாற்றியமை தொடர்பில் அனுர சேனநாயக்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் சட்ட மா அதிபரால் தண்டனை சட்டக் கோவையின் 198 ஆம் அத்தியாயத்தின் கீழ் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டது.
எது எவ்வாறாயினும், கடந்த 9 வருடங்களாக நீதிக்காக வஸீமின் குடும்பத்தார் ஏங்கும் நிலையில், வஸீமின் கொலையுடன் தொடர்புபட்டதாக அல்லது அக்கொலையை மறைக்க முயன்றதாக நம்பப்படும் இரண்டாவது நபரின் முடிவும் நம் கண் முன்னே நிகழ்ந்துள்ளது.
ஆம், கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க உயிரிழந்தார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வாய்ப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கதைக்கக் கூட முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு, ஈற்றில் கடந்த வாரம் உயிர் துறந்தார்.
இதற்கு முன்னர், வஸீம் தாஜுதீன் படுகொலையை விபத்தாக மாற்ற உதவிய, முன்னாள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவும் இதே போல் கடுமையாக நோய் வாய்ப்பட்டு உயிரிழந்திருந்தார்.
அனுர சேனநாயக்கவின் மரணத்தை தொடர்ந்து, வஸீம் தாஜுதீன் மரணத்தை விபத்தாக மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் கண் முன்னே வந்து செல்கின்றன.
கடந்த 2012 மே 17 ஆம் திகதி வஸீம் தாஜுதீனின் சடலம் அவரது காருக்குள் இருந்து மீட்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டின் பின்னர், நாரஹேன்பிட்டி பொலிஸாரிடம் இருந்து வஸீம் தாஜுதீனின் படு கொலை குறித்த விசாரணைகள் சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்ட பின்னர், கொலை விபத்தாக மாற்றப்பட்டதன் பின்னணி கண்டறியப்பட்டிருந்தது.
குறிப்பாக வஸீமின் சடலம் மீட்கப்பட்ட நாரஹேன்பிட்டி, சாலிகா மைதானத்தை அண்மித்துள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் வசிக்கும் நபர் ஒருவர், சி.ஐ.டி.க்கு அளித்திருந்த வாக்கு மூலத்தில்
‘ அன்றைய தினம் அதிகாலை 2.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பாட்டுப் படிக்கும் டி.ஐ.ஜி. அரைக் காற் சட்டையுடன் ஸ்தலத்துக்கு வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அனுர சேனநாயக்க சிங்கள பாடல்கள் பலவற்றை பாடியுள்ளவர் என்ற ரீதியில் அவரை பரவலாக ‘பாடும் டி.ஐ.ஜி’ என அழைப்பதுண்டு.
சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளில், வஸீமின் கொலை இடம்பெற்ற தினம் ஸ்தலத்திலிருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அந்த அதிகாலை வேளையிலேயே அரைக் காற் சட்டையுடன் சென்று அனுர சேனநாயக்க, பொறுப்பதிகாரி உள்ளிட்டோரை அழைத்து முன்னெடுத்த வழமைக்கு மாற்றமான நடவடிக்கைகள், பொலிஸார் பலரின் குறிப்புப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றையும் சி.ஐ.டி. சாட்சியமாக எடுத்திருந்தது.
சாதாரண வாகன விபத்தாக இருப்பின் அதுவும் அந்த அதிகாலை வேளையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் அவ்வாறு ஸ்தலத்துக்கு செல்வது நடைமுறைக்கு மாற்றமாகும். அத்துடன் அவ்வாறு அவர் நடந்து கொண்டமை அவர் மீதான சந்தேகத்தை அதிகரிக்கும் செயற்பாடாக இருந்தது.
இதனைவிட, மறு நாள், வஸீமின் குடும்பத்தாரை பொலிஸ் தலைமையகத்தில் உள்ள மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு அழைத்து, அனுர சேனநாயக்க கொடுத்த அழுத்தமும், அச்சுறுத்தலும் கூட வஸீம் படுகொலையில் அனுர சேனநாயக்க ஒரு பங்குதாரர் என்பதை சொல்லாமல் சொல்வதாக இருந்தது.
வஸீமின் கொலை இடம்பெற்ற தினத்தில் அதிகாலை வேளையில் அனுர சேனநாயக்கவுக்கும் ஜனாதிபதி செயலகத்துக்கும் இடையிலான தொலைபேசி தொடர்புகளும் வஸீமின் கொலையில் அனுர சேனநாயக்கவின் பங்களிப்பு தொடர்பில் சந்தேகம் கொள்ள மற்றுமொரு காரணமாகும். இந் நிலையிலேயே வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் அனுர சேனநாயக்க மிக முக்கிய சந்தேக நபரானார்.
அனுர சேனநாயக்க 1973 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்திருந்ததுடன், 2011 ஆம் ஆண்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தரமுயர்வு பெற்றிருந்தார். 2015 ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். அவர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மேல் மாகாணத்தில் கடமையாற்றிய 2011 முதல் 2015 வரையிலான காலப்பகுதியில், பொலிஸ் மா அதிபரை விட அதிகாரம் மிக்கவராகவே செயற்பட்டிருந்தார். அதற்கு பல சம்பவங்கள் சான்று பகரும்.
அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கத்துக்கு தேவையான அனைத்தையும் அனுர சேனநாயக்க செய்து கொடுத்திருந்தார். 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூட அனுர சேனநாயக்க, ஓய்வு பெற்றிருந்தாலும் 2015 இற்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகளை மீள ஆட்சிக்கு கொண்டுவரவும், அவர்களுக்கு எதிரான குற்ற விசாரணைகளில் எதிரான சாட்சியங்களை முன்வைக்காமல் இருக்கும் வகையிலும் பார்த்துக்கொண்டார்.
எனினும், 2020, அவர் எதிர்பார்த்த ஆட்சி அமைந்தாலும், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர் காப்பாற்றிய அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தாலும் கூட, அதனால் அனுர சேனநாயக்கவுக்கு எந்த பிரயோசனமும் கிடைக்கவில்லை. அவர்களால் அனுர சேனநாயக்கவை காப்பாற்றவும் முடியவில்லை. புற்று நோயால் வைத்தியசாலை கட்டில்களிலேயே அனுர சேனநாயக்கவின் காலம் கழிந்தது. ஒரு பொலிஸ் அதிகாரியால் சம்பாதிக்க முடியுமான அளவுக்கும் அதிகமாக சொத்து சேர்த்திருந்த அனுர சேனநாயக்கவின் சொத்துக்களும் வைத்திய செலவிலேயே அழிந்தன. ஈற்றில் தனது 68 வயதில் அனுர சேனநாயக்க இந்த உலகுக்கு விடைக் கொடுக்க நேரிட்டது.
வஸீம் தாஜுதீன் விவகரத்தில் அனுர சேனநாயக்க பெரிதும் பேசப்பட்டதால், அந்த படுகொலையின் சூத்திரதாரிகள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். எனினும், சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகள் தப்பித்தாலும் இறைவனின் பிடியிலிருந்து அவர்கள் தப்ப முடியாது. இறைவனின் பிடி மிகக் கடுமையானதாக இருக்கும்.- Vidivelli