அரசியல்வாதியாகவன்றி சிவில் செயற்பாட்டாளராகவே போராடினேன்
- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா
2020 மார்ச் 30 ஆம் திகதி முதல் 2021 பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வரை, 333 நீண்ட துயரமான நாட்கள். அத்தோடு 333 உறக்கம் இழந்த இரவுகளாக நாங்கள் கவலையில் மூழ்கியவர்களாக அல்லல்பட்டு அழுதோம். மன்றாடினோம்.
எங்கள் 333 க்கும் மேற்பட்ட அப்பாவி சகோதர, சகோதரிகளின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாய எரிப்புக்கு ஆளாகின. நீண்ட இழுபறிகளுக்கும், பாரிய இழப்புகளுக்கும் முகம் கொடுத்து காலதாமதமாக, நாம் இழந்திருந்த ‘இறந்தவர்களை அடக்கின்ற உரிமை’ மீளப்பெறுகின்ற அறிக்கை இப்போது கிடைத்திருக்கின்றது.
இந்த கடினமான காலங்களில் எங்களுடன் தோளோடு தோள் சேர்த்து செயற்பட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்றினால் வபாத்தான முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரியும் நெருப்பிலிருந்தும் காப்பாற்றுவதற்காக ஆரம்பம் முதலே களத்தில் இறங்கிப் போராடியவர் என்ற வகையில் அவருடனான நேர்காணலினை முழுமையாக இங்கு தருகிறோம்.
நேர்காணல்: ஏ.ஆர்.ஏ. பரீல்
Q:- கொவிட் தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்களின் அடக்க உரிமைக்காக ஆரம்ப முதல் இறுதிவரை போராடியவர் என்ற வகையில் அடக்கம் செய்ய அனுமதிக்கும் தீர்மானம் வந்தபோது உங்கள் மனோநிலை எவ்வாறிருந்தது?
அல்ஹம்துலில்லாஹ். ஜனாஸாக்கள் பலவந்தமாக எரியூட்டப்பட்ட சந்தர்ப்பங்களில் எங்கள் உரிமைகளுக்காக நான் இறுதிவரை போராடுவேன் என மக்களிடம் உறுதியளித்திருந்தேன். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து 2021.02.25 ஆம் திகதிவரை அதாவது கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்யலாம் அல்லது அடக்கம் செய்யலாம் என்று விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும்வரை நாங்கள் பட்ட வேதனைகள், சிந்திய கண்ணீர் அந்த அல்லாஹ்வுக்கே தெரியும். ஓரிரு நாட்கள் அல்ல 333 நாட்கள் நாங்கள் வேதனையில் துவண்டு போயிருந்தோம். இன்று எமக்கு சற்று ஆறுதலாக இருக்கின்றது. ஜனாஸா நல்லடக்கத்துக்கு இறுதிவரை போராடியவன் என்ற வகையில் இப்போது எனக்கு நிம்மதியாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.
Q:- ஜனாஸா நல்லடக்க உரிமையை மீளப்பெறுவதற்காக நீங்கள் என்ன வகையான போராட்டங்களை மேற்கொண்டீர்கள்?
எமது நாட்டில் முதலாவது கொவிட் -19 ஜனாஸா 2020 மார்ச் மாதம் 30 ஆம் திகதி தகனம் செய்யப்பட்டது. நீர்கொழும்பைச் சேர்ந்தவரின் ஜனாஸாவே இவ்வாறு தகனம் செய்யப்பட்டது.
கொவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களின் சடலங்களை தகனம் செய்யலாம் அல்லது அடக்கம் செய்யலாம் என சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் திணைக்கள இணையத்தளம் என்பன தெரிவித்திருந்த நிலையில் நீர்கொழும்பு ஜனாஸா பலாத்காரமாக குடும்ப அங்கத்தவர்களின் அனுமதியின்றி எரிக்கப்பட்டது. நீர்கொழும்பு ஜமா அத்தார்கள் அனைவரும் அங்கு வந்து சுகாதார சேவை அதிகாரிகளிடமும் பொலிஸாரிடமும் கெஞ்சிக்கேட்டபோதும் ஜனாஸா அடக்கத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் நான் உடனடியாக அந்த இரவே சுகாதார அமைச்சர், சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உட்பட அப்போது அலிசப்ரி ஒரு அமைச்சராக இல்லாதிருந்தாலும் அவர் ஜனாதிபதியுடன் மிகவும் நெருக்கமாக உள்ளவர் என்ற வகையில் அவரிடமும் எமது முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமும் ஜனாஸா தகனம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று கோரினேன். அலிசப்ரி காலையில் பார்ப்போம் என்றார். இந்நிலையில் ஜனாஸா இரவோடிரவாக 11 மணிக்கு எரிக்கப்பட்டுவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்திலும் பழைய வர்த்தமானியில், அதாவது கொவிட் 19 தொற்று ஜனாஸாக்களை அடக்கம் செய்யலாம் என்றேயிருந்தது.
இதனையடுத்தே 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி 2170/8 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியொன்றும் வெளியிடப்பட்டது. கட்டாய தகனம் மாத்திரம் என்பதனை உள்ளடக்கியே இந்த வர்த்தமானி அமைந்திருந்தது.
இதற்கு முன்பு மருதானையில் மரணித்த மேலுமொரு சகோதரரின் ஜனாஸா 2020 ஏப்ரல் 2 ஆம் திகதி பலாத்கார தகனம் செய்யப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்திலும் நான் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸியின் இல்லத்திலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுடன் ஜனாஸா விவகாரம் தொடர்பில் கதைத்தேன். பெளஸியின் வீட்டிற்கு ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் ஆகியோரும் வந்திருந்தார்கள்.
அன்று தான் கொவிட் 19 தொற்று நோய் தடுப்பு சம்பந்தப்பட்ட செயலணியின் முதற்கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நாங்களும் செயலணியில் கலந்து கொள்வோம், பேசுவோம் என்று தீர்மானித்தோம். எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வந்திருந்தார்கள். ரணில் விக்கிரமசிங்க , சஜித் பிரேமதாச, மனோ கணேசன், அனுர குமார திஸாநாயக்க, விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோரும் சமூகமளித்திருந்தார்கள்.அலரி மாளிகை மண்டபத்தில் செயலணிக்கூட்டம் நடந்தது.
நாங்கள் ஜனாஸா விவகாரத்தை எடுத்து விளக்கினோம். ஜனாஸா தகனம் செய்யப்படுவதை அனுமதிக்க இயலாது. உலக சுகாதார ஸ்தாபனமும் உடல்களை அடக்கம் செய்யலாம் எனக்கூறியுள்ளதை எடுத்து விளக்கினோம். உடல் தகனம் செய்யப்படுவது விஞ்ஞான ரீதியானது. உடனடியாக இவ்விவகாரத்திற்கு தீர்வு கூறமுடியாது என்று செயலணிக்கூட்டத்தில் எம்மிடம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க நிபுணத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டது. தொற்றுநோய், நுண்ணுயிரியல் நிபுணர்கள் குழுவில் அடங்கியிருந்தார்கள். இவ்வாறு பல போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த போதே 2020 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி கட்டாய தகனத்தை மாத்திரம் உறுதி செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கட்டாய தகனத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் நான் வழக்குத்தாக்கல் செய்தேன். 2020.05.15. ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்தோம். வழக்கு ஜூலை 13 ஆம்திகதி, செப்டெம்பர் 9ஆம் திகதி, நவம்பர் 26 ஆம் திகதி, நவம்பர் 30ஆம் திகதி என ஒத்தி வைக்கப்பட்டு இறுதியில் வழக்கினை விசாரிக்க முடியாது என டிசம்பர் 1 ஆம் திகதி நீதிமன்றம் தெரிவித்தது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் வழக்குக்கு உதவி வழங்கியது. எனது சட்டத்தரணியாக நிசாம் காரியப்பர் ஆஜரானார். கிறிஸ்தவர்களும் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். மூன்று நீதிபதிகளில் இருவர் இவ்வழக்கினை விசாரிக்க முடியாதெனவும் ஒருவர் விசாரிக்கலாம் எனவும் தங்களது தீர்மானத்தை அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து இந்த கட்டாய, பலாத்கார எரியூட்டல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்ற கோஷத்தை உருவாக்கி வெள்ளைத்துணி அமைதிப்போராட்டமொன்றினை ஆரம்பித்தேன். இந்தப் போராட்டத்துக்கு ஏனைய சமூக சகோதரர்கள், மதப்பெரியார்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு பல சமூக மட்டத்தில் உள்ளவர்களும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கினார்கள். கனத்தயில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கபன்துணி போராட்டமாகவும் மாறியது.
Q:- ஜனாஸா அடக்க அனுமதியில் சர்வதேச அழுத்தங்கள் எவ்வளவு தூரம் பங்களித்துள்ளன?–
உலகில் 194 க்கும் அதிகமான நாடுகள் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதற்கும், தகனம் செய்யப்படுவதற்கும் அனுமதி வழங்கியுள்ளன. இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் உடல்கள் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள், மனித உரிமைகள் அமைப்பு, உலக மன்னிப்பு சபை என்பன தெரிவித்துள்ளன.
பி.பி.சி. மற்றும் அல்ஜஸீரா செய்திச் சேவை எனது டுவிட்டர் தகவல்களை மேற்கோள்காட்டி அடக்கம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளன. இந்தியாவின் ‘இந்து’ பத்திரிகையும் இலங்கையில் அடக்கம்செய்யப்படுவதை ஆதரித்து செய்தி வெளியிட்டது.
சர்வதேச ரீதியில் நிவ்யோர்க்கில், வொஷிங்டனில், கனடாவில், இந்தியாவில், சுவிட்சர்லாந்தில், இத்தாலியில், பிரித்தானியாவில், ஜேர்மனியில், மத்திய கிழக்கு நாடுகளில், மலேசியாவில் என பல நாடுகளில் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்கையில் நடக்கும் இந்த அடிப்படை மனித உரிமை மீறல் நிறுத்தப்படவேண்டும் என்ற கோஷம் உரத்துக் கூறப்பட்டு எமக்கு வலுச்சேர்க்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வமாக பல நாட்டுத் தலைவர்கள் அவர்களது தூதரகங்கள் ஊடாக இலங்கை அரசுக்கு கட்டாய எரியூட்டலை நிறுத்துங்கள் என்று கடிதங்கள் மூலமாக அறிவித்துள்ளார்கள். ஐக்கிய இராச்சிய வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்திலும் இவ்விவகாரம் குறித்து குரல் எழுப்பப்பட்டுள்ளது. கனேடிய பாராளுமன்றத்தில், அவுஸ்திரேலியாவில் மற்றும் இந்திய பாராளுமன்றத்தில் கூட இலங்கையில் கட்டாய ஜனாஸா எரிப்பு நிறுத்தப்பட வேண்டுமென குரல் எழுப்பப்பட்டுள்ளது.
Q:- ஜனாஸா எரிப்புக்கு எதிராக முஸ்லிம்கள் மாத்திரம் போராடவில்லை. எமக்காக தமிழ், சிங்கள, கிறிஸ்தவ மக்களும் குரல் கொடுத்துள்ளார்கள் இது பற்றி என்ன கூறவிரும்புகிறீர்கள்?
ஆம். பல இன மக்களும் எமது போராட்டங்களை ஆதரித்துள்ளார்கள் ஆர்ப்பாட்டங்களில் இணைந்திருந்தார்கள். எமது நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எமக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள். பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விவகாரம் தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.
Q:- கொவிட் 19 ஜனாஸாக்களை அடக்கம் செய்யலாம் என தீர்மானிப்பதற்கு வேறு ஏதும் காரணங்கள் துணையாக இருந்தனவா?
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நாம் கலந்து கொண்ட கொவிட் 19 செயலணி கூட்டத்தின்போது 2020 ஏப்ரல் 2ஆம் திகதி தொழிநுட்ப குழு அனுமதித்தால் ஜனாஸாக்களை அடக்கலாம் என்று என்னிடம் கூறினார்.
2020 டிசம்பர் 24 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் மீண்டும் ஒரு விசேட நிபுணத்துவக் குழு நியமிக்கப்பட்டது. அக் குழு விஞ்ஞானபூர்வமாக அடக்கம் செய்வதால் வைரஸ் பரவாது என நிரூபித்தால் அடக்கத்தை அனுமதிப்போம் என்றே ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் என்போர் கூறிவந்தார்கள். கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம்வரை இந்நிலைமையே இருந்தது. நிலத்தடி நீரினால் கொவிட்19 வைரஸ் பரவாது என்று உலக விஞ்ஞானிகளும், இலங்கை துறைசார் நிபுணர்களும் கூறினார்கள். புவியியல் ரீதியில் பாதிப்புகள் ஏற்படாது என்று கூறினார்கள். உலக சுகாதார ஸ்தாபனமும் இதையே கூறி வந்தது. இந்நிலைமையிலே கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களிலும் கட்டாய தகனத்தை தொடர்ந்தார்கள். நிலக்கீழ் நீரினால் கொவிட் 19 தொற்று பரவும் என உத்தியோக பூர்வமாக பொய்யான தகவல்களை சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார். நாம் இதனை விமர்சித்தோம்.
மக்கள் தொடர்ந்தும் அல்லல்பட்டு வந்த காலத்தில் தான் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டகேள்வியொன்றுக்கு பிரதமர் பதிலளிக்கையில் வெகுவிரைவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றார். அதையும் தாமதப்படுத்தினார்கள். அப்போது கூட சில எம்.பி.க்கள் அடக்கம் செய்ய வேண்டும் என்பதை கொச்சைப்படுத்தி வந்தார்கள். பெரும்பான்மை மக்கள் மத்தியில் தவறான கருத்துகளைக் கூறி காலத்தை இழுத்தார்கள்.
இந்தச் சூழ்நிலையிலேயே ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வு ஆரம்பமானது. இலங்கைக்கு மனித உரிமை பேரவையில் ஆதரவு வழங்கவுள்ள நாடுகளுக்கும் கூட போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் கடமை இலங்கை அரசுக்கு உள்ளது.
இந்நிலையில் முற்போக்கு அடிப்படையில் சிந்திக்கின்ற எல்லா சமூக, அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எமது நாட்டுக்கு மேலும் அபகீர்த்தி ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் முழு உலக நாடுகளும் கடைப்பிடிக்கின்ற கொவிட் 19 தொற்றால் இறப்பவர்களை அடக்கலாம் என்ற அடிப்படையில் கட்டாய தகனத்தை எதிர்த்தார்கள். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மத அனுஷ்டானங்களை மதித்து நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். விஞ்ஞான ரீதியாக மற்றும் அடிப்படை உரிமைகளை மதிப்பதன் மூலமும் ஏற்றுக்கொள்வதன் மூலமுமே இலங்கையின் நிலைமை சர்வதேசத்தில் மேலும் பாதிக்கப்படமாட்டாது. இலங்கை சர்வதேச குற்றவியல் மன்றத்தில் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் மூலம் முகம் கொடுத்தாக வேண்டும். முன்பு மனித உரிமைபேரவை இலங்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளது. தற்போதைய நிலையில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) செயலாளர் உட்பட அனைவரும் கட்டாய தகனத்தை மீளப்பெற்று அடக்கம் செய்ய அனுமதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
Q:- சுகாதார அமைச்சரினால் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி நியமிக்கப்பட்ட விசேட நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகள் என்ன?
இக்குழுவை சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் முனசிங்க நியமித்தார். 11 பேர் கொண்ட இக்குழுவின் தலைவராக பேராசிரியர் ஜெனிபர் பெரேரா நியமிக்கப்பட்டார். இக்குழு 15 பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
கொவிட் 19 தொற்றினால் இறப்பவர்களின் உடல் 24 மணித்தியாலங்களுக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும்.
உடல் இரட்டை அடுக்குப் பையினுள் இடப்படவேண்டும். இந்த பை 300 um கனதி கொண்டதாக இருக்கவேண்டும். இரத்தக் கசிவு ஏற்படாதிருக்க வேண்டும். நீர் வெளியிலிருந்து உறிஞ்சப்படக் கூடாததாக இருக்கவேண்டும்.
அடக்கம் செய்யப்படும்போதே ஜனாஸாவைப் பார்ப்பதற்காக குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதிக்கப்படும். ஒரு மீற்றர் தூரத்திலிருந்தே பார்வையிடமுடியும்.
ஜனாஸாவை தொடக்கூடாது. ஜனாஸாவைப் பார்க்க குடும்பத்தில் நால்வரே அனுமதிக்கப்படுவர். இருவர் வீதம் நால்வர் பார்வையிடலாம். அதிக பட்சம் 5 நிமிடம் வழங்கப்படும்.
கெளரவமான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும். உறவினர்களிடம் ஜனாஸா கையளிக்கப்படமாட்டாது. சுகாதார பணியாளர்கள் மாத்திரமே ஜனாஸாவை கையாள்வார்கள்.
பாதுகாப்பு கவசம் அணிந்திருப்பதுடன் முகக்கவசமும் அணிந்திருக்க வேண்டும். ஜனாஸாஅடக்கத்துக்கு கொண்டு செல்லும்போது வேறு தனியான வாகனத்தில் குடும்பத்தை சேர்ந்த நால்வர் செல்ல முடியும்.
ஜனாஸா தொழுகைக்கு 10 நிமிடம் வழங்கப்படும். ஒரு மதப்பிரமுகர் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் ஜனாஸா தொழுகைக்கு அனுமதிக்கப்படுவர். நிலக்கீழ் நீர் 1.5 மீற்றர் ஆழத்தில் இருக்கவேண்டும். நிலக்கீழ் நீர் மட்டத்திலும் 1.2 மீற்றருக்கு மேலே ஜனாஸா அடக்கம் செய்யப்படவேண்டும். வடிகான்கள் 10 மீற்றர் தூரத்துக்கு அப்பால் இருக்கவேண்டும். இத்தோடு கிணறுகள் கணிசமான தூரத்தில் இருக்க வேண்டும்.
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு மாவட்ட ரீதியில் அரசாங்க அதிபர், மாகாண சுகாதார பணிப்பாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர் என்போர் இடங்களை அடையாளம் காணவுள்ளனர். அவ்வாறான இடங்களில் பேராசிரியர் ஜெனிபர் பேரேராவின் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும். இது தொடர்பான அறிவிப்பு சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும்.
ஜனாஸாக்களை அடக்க முடியுமென்ற வழிமுறைகள் இருந்தாலும் அநீதியான முறையில் மறுத்து கட்டாய தகனத்தை அமுல்படுத்தியவர்கள் மீண்டும் ஜனாஸாக்களை அடக்கலாம் என்பதை அதற்கான அனுமதியை வர்த்தமானி மூலம் இப்போது அறிவித்திருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் இதனை அமுல்படுத்தும் நேரத்தில் கடும்போக்காளர்களின் எதிர்ப்புகளை சமாளிக்கும் நோக்கிலேயே வர்த்தமானியை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் தாமதமாவதாக நினைக்கிறேன்.
ஜனாஸா அடக்கத்துக்கான வர்த்தமானியை முதலில் வெளியிடுங்கள். அதன்பிறகு 2 க்கு ஆதரவாக வாக்களிக்கிறோம் எனக் கூறியிருக்க வேண்டும். கேவலம் ஜனாஸா எரிப்பை ஆக்ரோஷமாக விமர்சித்து கதறிக்கதறி நடித்து காலை வாரிவிட்டார்கள்.
Q:- நீங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிக் கொண்டமைக்கான காரணம் என்ன?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையே நான் அக்கட்சியிலிருந்தும் விலகிக் கொள்வதற்குக் காரணம். முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுத்து வெற்றி பெற்றவர்கள் அவர்கள். ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை எதிர்த்தவர்கள் அவர்கள். அரசு 2/3 பெரும்பான்மை பெற்றுக்கொள்ள அனுமதிக்கமாட்டோம் என தேர்தல் மேடைகளில் கூறினார்கள்.
ஆனால் தேர்தலில் வாக்களிப்பதற்கு விரலில் இட்ட மை காய்ந்து போவதற்கு முன்பே பல்டியடித்து விட்டார்கள்.
அரசாங்கத்திடமிருந்து உறுதிமொழி பெற்று, ஜனாஸா அடக்கத்துக்கான வர்த்தமானியை முதலில் வெளியிடுங்கள். அதன்பிறகு 20 க்கு ஆதரவாக வாக்களிக்கிறோம் எனக் கூறியிருக்கவேண்டும். கேவலம் ஜனாஸா எரிப்பை ஆக்ரோஷமாக விமர்சித்து கதறிக் கதறி நடித்து காலை வாரிவிட்டார்கள். வர்த்தமானி மாற்றப்பட்டால் மட்டுமே வாக்களிப்போம் என்றுகூறி மாற்றங்கள் செய்ததன் பின்பு வாக்களித்திருந்தால் மக்கள் அவர்களைப் போற்றியிருப்பார்கள். சமுதாயம் ஏற்றுக்கொண்டிருக்கும்.
ஆனால் தங்களது சுயதேவை, பதவி மோகம், அற்ப சுய இலாபத்திற்காக எந்தவித இதய சுத்தியான சமுதாய நலன் கருதாமல் வாக்களித்துள்ளார்கள். இவர்கள் நான் அங்கம் வகித்த கட்சியில் உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் கட்சியின் தலைவரோ, கட்சியின் உயர்பீடமோ எடுக்கவில்லை. இந்நிலையிலேயே அக்கட்சியிலிருந்து நான் விலகியுள்ளேன்.
Q:- 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் 20க்கு ஆதரவளித்ததால் தான் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்ததாக கூறுகிறார்களே?
20 ஆவது திருத்தம் கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அவர்கள் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்காது இருந்திருந்தால் நிலைமை வேறாக மாறியிருக்கும். நீதிமன்றம் மூலம் சுயாதீனமாக நாட்டில் நீதியைப் பெறக்கூடியதாக இருந்திருக்கும். அந்தவகையில் ஜனாஸா எரியூட்டலுக்கு பொறுப்புக் கூற வேண்டிவர்கள் இவர்களே. இவர்களால்தான் நாட்டில் ஜனாஸாக்களை எரியூட்டுவதற்கான பலம்,வேகம் கூடியது. இவர்களால் ஒருபோதும் தங்களது செயலை நியாயப்படுத்த முடியாது.
அடக்குமுறையூடாக, பலாத்காரமாக எமது சமூகம் தகனத்துக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை இவர்களாலே ஏற்பட்டது.
Q:- சிறுபான்மை சமூகம் குறிப்பாக முஸ்லிம்கள் இவ்வாறு அடக்கு முறைக்கு ஏன் உட்படுத்தப்படுகிறார்கள்?
நாம் இலங்கை முஸ்லிம்கள். நாட்டுப் பற்றுள்ளவர்கள். இலங்கையின் இறைமைக்கு சவால் வந்தபோதெல்லாம் நாட்டிற்கு விசுவாசமானவர்களாக நாம் இருந்திருக்கிறோம். பிரிவினைவாதத்தை எதிர்த்திருக்கிறோம். நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் நிலை நிறுத்த, நாடு சுபீட்சமடைய சகல இன மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதே முஸ்லிம்களின் இலட்சியமாகும்.
எந்த அரசாங்கம் மாறி மாறி பதவிக்கு வந்தாலும் இலங்கையின் கீர்த்தியை இறைமையை பாதுகாத்து கடமையாற்றுவது அரசின் தலையாய கடமையும் கொள்கையுமாகும்.
இடையில் அரசியல் காரணங்களுக்காக பெரும்பான்மை சமூகத்தின் அனுமதியுடன் ஆதரவுடன் மட்டுமே அரசியல் பலத்தை பாதுகாக்க முடியும். தேர்தலில் வெற்றிபெற முடியும் என்பதற்காக இவ்வாறான அடக்கு முறையை சிறுபான்மையினர் மத்தியில் கட்டவிழ்த்துவிட்டு அவர்களது அடிப்படை உரிமைகளையெல்லாம் வழங்காமல் தொடர்ந்தும் செயற்படுவது எமது நாட்டிற்கு செய்யும் துரோகமாகும். இதுவே இன்றைய நிலை.
Q:- அண்மையில் நீங்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதே?
இல்லை, இது தவறான பிரசாரம், நான் எந்தக்கட்சியிலும் இணைந்து கொள்ள வில்லை, ஜனாஸா எரிப்புக்கு எதிரான முன்னெடுப்புக்களை எந்தக் கட்சியினதும் சார்பாக இல்லாமல் எங்களது அடிப்படை உரிமை மீறல் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சிவில் சமூக செயற்பாட்டாளர்களுள் ஒருவராக நின்றே இவற்றை முன்னெடுத்தேன். – Vidivelli