இரணைதீவில் ஜனாஸா அடக்கம்: இனமுறுகலை தோற்றுவிக்கும் இன்னுமோர் உத்தியா?
எஸ்.என்.எம்.சுஹைல்
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இரணைதீவில் அடக்கம் செய்வது குறித்து அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், புத்தளம், ஓட்டமாவடி மற்றும் மன்னார் உள்ளிட்ட 6 பகுதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரணைதீவில் அடக்கம் செய்வது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் ஏனைய இடங்களில் அடக்கம் செய்வது தொடர்பில் தற்போது ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் நீர் நிலைகளில் பிரச்சினைகள் ஏற்படாத பகுதிகளை தெரிவு செய்யுமாறு முஸ்லிம் சமூகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த செவ்வாயன்று இடம்பெற்றபோது “கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார தரப்பினரால் தெளிவுபடுத்தப்படும்’’ என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இதன் போது , ‘ இரணைமடு தீவு பகுதியில் மக்கள் வாழ்கின்றனர். கொழும்பில் உள்ளதைப் போன்று குழாய் நீர் வசதி அந்த பகுதிகளில் இல்லை. அங்குள்ள மக்கள் நிலத்தடி நீரையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறான விடயங்கள் கொவிட் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அந்த பகுதிகளில் அடக்கம் செய்வதில் தாக்கம் செலுத்துமல்லவா ? ‘ என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய , ‘ இவ்விடயம் தொடர்பில் கொவிட் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான விடயத்தை ஆராயும் நிபுணர்கள் குழுவிற்கு கொண்டு செல்வதாகவும், அக்குழுவே இதுதொடர்பாக விரிவான முறையில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும்.’ என்றும் தெரிவித்தார்.
அதேபோன்று குறித்த ஊடக மாநாட்டில் பங்கேற்ற ஊடகவியலாளர் ஒருவர், இரணைமடுவில் அடக்கம் செய்ய முடியும் என்றால் ஏன் நாட்டின் ஏனைய பாகங்களிலும் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது எனக் கேள்வியெழுப்பினார். இது பற்றியும் தான் நிபுணர் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக அமைச்சர் பதிலளித்தார்.
அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பில் எதிரணியினர் சாடியிருந்தனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் மூலம் பதிவொன்றை இட்டிருந்தார். “சடலங்கள் இரணைதீவிற்கு அனுப்பப்படவுள்ளன. இது விடயத்தில் அவர்கள் பொய்யான விளக்கமொன்றை உருவாக்கியதுடன், அவர்கள் கூறியதே சரியானது என்று தற்போது நிரூபிக்க முற்படுகின்றார்கள். எவ்வித எதிர்பார்ப்புக்களை இழந்த சமூகமொன்றை மீது மேலும் அடக்குமுறையைப் பிரயோகிப்பதனால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒரு குரூர மகிழ்ச்சிக்கு முடிவில்லாமல் போய்விட்டது. இனவெறியே தொடர்ந்தும் நிலவுகின்றது” என்று ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும்ம் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டிருந்தனர். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே இறந்த முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் “தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன விரிசலை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டமாக இரணைமடு தீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர்” என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.
“ஜனாசாக்களை வைத்து இனமுறுகலை ஏற்படுத்தும் கேவலமான அரசியல் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். “ஜனாஸாக்கள் எரிக்கப்படக்கூடாது, அவை அடக்கம் செய்யப்பட வேண்டும். கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் ஒரு தீவை தெரிவு செய்து அங்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முற்படுவது, இனவாத அரசாங்கத்தின் தந்திரமாகும். இன்னோர் இனத்தை குழப்பிவிடாது, முஸ்லிம் மக்களின் விருப்பப்படி அவர்களின் மையவாடிகளிலேயே ஜனாஸாக்களை அடக்கம் செய்யுங்கள்” என அரசாங்கத்தை சாடியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்.
இது இவ்வாறிருக்க தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சாடியிருந்தனர். “அடக்கம் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும் அரசியலுக்காக இரணைதீவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் பகைமையை உருவாக்கும் செயலே இது . எனவே, பொருத்தமான இடங்களில் சடலங்களை புதைப்பதற்கு இடமளிக்க வேண்டும். மாறாக ஒரு இடம் என அறிவித்து, இது விடயத்தில் மேலும் இழுத்தடிப்பு செய்யக்கூடாது.” வேலுகுமார் எம்.பி. தெரிவித்திருக்கின்றார்.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆளும்கட்சி அமைச்சர் ஒருவரும் எதிர்ப்பு வெளியிட்டிருக்கின்றார். “கொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை” என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இரணைதீவு கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் ஊடாக வருடந்தோறும் சுமார் 25,000 அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் இத் தீர்மானம் தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும் எனவும் எடுத்துரைத்துள்ளார்.
இதனிடையே, மக்களின் கடும் எதிர்ப்பை மீறியும் இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்றோடு இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரணைதீவு பகுதியில் மக்களின் அனுமதியோ அல்லது பொது அமைப்புக்களின் ஆலோசனைகளோ இன்றி கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய கல்லறைகள் அமைக்கப்பட்டு கொடிகள் நாட்டப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், மதம் சார்ந்து அல்லாமல் ஒவ்வொரு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இரணை தீவு பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்ப்பதாகவும், அந்த மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து நேற்றுமுன்தினம் காலை 9 மணியளவில் இரணை மாதா நகர் பகுதியின் பங்குத்தந்தை மடுத்தீன் பத்தினாதர் அடிகளார் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.
குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள் மெசிடோ நிறுவனத்தினர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் , பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததுடன் அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.
குறித்த மகஜரில், இரணைதீவு வாழ் பொது மக்களான நாம், கொவிட் 19 பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடலங்களை எமது இரணைதீவு கிராமத்தில் அடக்கம் செய்ய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்தை மீள் பரிசீலித்து உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
இரணைதீவு தீவகக் கிராமமானது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட முழங்காவில், நாச்சிக்குடா ஆகிய பிரதான நிலப்பரப்பில் அமைந்துள்ள கரையோரக் கிராமங்களில் இருந்து 20 கிலோ மீற்றர்கள் தூரத்தில் மன்னார் வளைகுடாக் கடலில் அமைந்துள்ளது. இது 417 குடும்பங்களின் பூர்வீகமாகும்.
யுத்தத்தின் காரணமாக, இத் தீவைச் சார்ந்த மக்களான நாம் எமது வாழ்வாதாரச் சாதனங்களையும், கால்நடை வளர்ப்புகளையும், குடியிருப்புகளையும் விட்டு விட்டு 1997 இல் முழுமையாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நிலப்பரப்பில் அமைந்துள்ள முழங்காவில் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தோம். இலங்கைக் கடற்டையினர் இரணைதீவை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்தாலும், எமது இரணைதீவு கிராமத்துக்கு திரும்பிச்செல்ல நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. 2016 இல் நாம் எமது மீள் குடியேற்றத்தை வேண்டி ஜனநாயக ரீதியான அமைதியான போராட்டங்களையும் பரிந்துரை நடவடிக்கைகளையும் ஆரம்பித்தோம்.
இத்தீவின் மண் வளமானது. மரங்கள் நிறைந்த இத்தீவு பயிர்ச்செய்கைக்கும் கால்நடை வளர்ப்புக்கும் உகந்த இடமாகும். இந்தத் தீவை கொவிட் 19 இனால் மரணிப்பவர்களின் இடுகாடாக மாற்றுவது எமது வாழ்வை முழுமையாக சீரழித்துவிடும்.
சாதாரண வானிலையின் கீழ் முழங்காவில் கரையிலிருந்து இரணைதீவுக்கு படகில் செல்ல ஒன்றரை மணித்தியாலம் எடுக்கும். கடல் சீற்றமாக இருந்தால் அல்லது வானிலை பாதகமாக இருந்தால் கடற்பயணம் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே, வைரசினால் இறந்த ஒருவரின் உடலத்தை படகு மூலம் பாதுகாப்பாக 20 கிலோ மீற்றர்கள் கடலைக் கடந்து கொண்டு செல்வது எவ்வகையிலும் சாத்தியப்படாததாகும்.
இரணைதீவு வாழ் மக்களான நாம், எமது சக வடக்கு கிழக்கு வாழ் மக்களுடன் இணைந்து எமது சக முஸ்லிம் சமூகத்தின் நல்லடக்க உரிமைக்காகவும் கட்டாய தகனத்தை எதிர்த்தும் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகிறோம்.
எமது நாட்டின் கலாசாரத்துக்கு அமையவும் உலகளாவிய மனிதாபிமான விழுமியங்களுக்கு அமையவும் இறந்த உடலங்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம். கொவிட் தாக்கத்தினால் இறக்கும் நபர்களின் உடலங்களை இடத்துக்கு இடம் காவிச் செல்வது இறந்தவர்களின் கௌரவத்தையும் அவர்களின் குடும்பத்தினரின் கௌரவத்தையும் மீறுவதாகும்.
எனவே, கொவிட் பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் புதைகுழியாக இரணைதீவை மாற்றுவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விவேகமற்ற தீர்மானத்தை நீக்குமாறு அசராங்கத்தை வலிறுயுத்துகிறோம்.
அத்துடன், முஸ்லிம் மக்களினதும் ஏனைய சமூகங்களினதும் நல்லடக்க உரிமைக்கு உரிய கௌரவமளித்து அவர்களுக்கு பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்வதை உறுதிப்படுத்துமாறும் கோருகிறோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மகஜர் நேற்றுமுன்தினம் ற்றுமுன்தினம் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸிடம் கையளிக்கப்பட்டது.
வடக்கு மக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் கொரோனா தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை எதிர்க்கும் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றனர். அத்துடன் இரணைமடு தீவில் ஜனாஸாக்களை அடக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் சதி முயற்சி என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் அரசாங்கம் நடைமுறைச்சாத்தியமற்ற இரணைதீவு யோசனையை கைவிட்டு, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளிலேயே உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதே சுமார் ஒரு வருட காலமாக நீடிக்கும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழியாகும். – Vidivelli